Advertisement

மது, புன்னகை முகமாகவே தரணியை தேடி வெளியே வந்தாள்.

தரணி, யோசனையோடே அந்த வராண்டாவில் நடந்துக் கொண்டிருந்தான்.

மது வந்து நின்றாள் அவன்முன் “ஏன் டா, என்னாச்சு.. நீ என்னமோ நினைக்கிற..” என்றாள்.

தரணி நேரடியாக “மது இந்த நேரத்தில் அந்த ஷிவா எதுக்கு கூப்பிடுறார். காலையில் வீடியோ கால்.. இதெல்லாம் உனக்கே சரியாக இருக்கிறதா” என்றான்.

மது “என்ன தரு சொல்ற.. அவர் பர்த்டே அதான் இன்வைட் செய்தார்.. இப்போதானே, மெசேஜ் செய்தேன், அதான்.. கூப்பிட்டார்.. அங்கே தேடியிருப்பாங்கல்ல..” என்றாள்.

தரணி “உனக்கு நான் சொல்லி ஏதும் புரிய வேண்டாம். வேண்டாமே இந்த ஷிவாவின் நட்பு. இது நட்பா மது” என்றான் முதலில் கேள்வியாக.

மது அமைதியாக இருந்தாள்.

தரணி “என்னமோ சரியாக படலை எனக்கு. உங்களுக்கு சிறுவயதில்லை.. இந்த சமூகத்தை தெரியும்.. எல்லா எல்லைகளும் தெரியும்.. கல்யாணத்திற்கு பார்க்கும் நேரத்தில்.. என்னமோ சரியில்லாத மாதிரி இருக்கு.” என்றான்.

மதுவிற்கும் தெரியுமே தன் நிலை.. சமூக கோட்பாடும் தெரியும். அத்தோடு தன் குடும்பம்.. ஷிவா.. என எல்லோரின் நிலையம் தெரியுமே.. எந்த காலத்திலும் ஒரு குழந்தையின் தகப்பனை நம் வீட்டில் எனக்கு வரனாக ஏற்கவே மாட்டார்கள் என தெரியும் அவளுக்கு. 

ஆனால், மனது இந்த அனுமானங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. மேலும் திருமணம் என்பது பற்றி,  தெரியவில்லையே.. ஷிவாவின் நிலை என்னவென தெரியாதே.. எங்களால் பொருந்த முடியுமா? தெரியவில்லையே, அந்த அளவிற்கா நாங்கள் பேசுகிறோம்.. பழகுகிறோம். ஆனால், ஆசையாக இருக்கிறது. என யோசித்த படியே தரணியோடு நடந்தாள்.

தரணி “என்ன மது ஏதாவது சொல்லு.. நா..நான் பேசியது ஏதும் தப்பா” என்றான்.

மது “எனக்கே தெரியாத நிலை தரணி. நான் குழம்பித்தான் இருக்கேன். ஷிவா சாம் இரண்டுபேரையும் என்னால் த…தள்ளி வைக்க முடியலை, ஆனால், க..கல்யாணம்.. தெரியலையே தரணி. முதலில் என்னை அவர் புரிஞ்சிக்கனுமே..” என்றாள், தன் மனத்தில் உள்ள எல்லா குழப்பத்தையும் சொல்லி.

தரணி “ஏன்டி, நான் இதெல்லாம் கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ என்கிட்டையே யோசனை கேட்க்கிற.. இனிமேல் ஜாதகம் பொருத்தம் ஏதும்  பார்க்காமல், நல்ல இடமாக பார்த்து முடித்திடனும்.. உன்கிட்ட பேசி ப்ரயோசனம் இல்லை, மாமாகிட்ட பேசிக்கிறேன்” என்றவன் வெடு வெடுவென சென்று அந்த வராண்டா சேரில் அமர்ந்துக் கொண்டான்.

மது பொறுமையாக நடந்து அருகில் வந்தாள் “ஏன், ஷிவா பத்தி என்ன நினைக்கிற” என்றாள்.

தரணி ”நீ முன்னாடியே என்கிட்ட கேட்டிருந்தால் பரவாயில்ல, நான் சொல்லி இருப்பேன். இப்போ கேட்க்கிற.. இது சரியில்லை, விட்டுடு, நடக்காது.. கூடாது, விட்டுடு.” என்றான், தன் தலையை தானே, இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு. சும்மா இருந்தவளை நானே, உசுப்பி விட்டுவிட்டேனோ.. அவளை அப்படியே விட்டிருந்தால்.. மாப்பிள்ளை அது இது என அவளே, அதன் போக்கில் சென்றிருப்பாலோ.. எனதான் அவனின் யோசனை.

மதுவிற்கும், தரணியின்  மேல் கோவம் வர உள்ளே சென்றுவிட்டாள். மதுவிற்கு உறக்கம் வரவில்லை.. குழப்பங்கள் நீங்கி.. தரணிக்கு எல்லாம் தெரியும் என்பதே.. அவளுக்கு எதோ ஒருபாட்டில் பூஸ்ட் குடித்த தெம்பை தந்தது. அவனின் கேள்விகள், அவளுள் இதுவரை வந்திராத ஒரு சுகந்த மழையின் மண் வாசம். ஆரம்பகால மழையின் மண் வாசம்.. தான்.. ஷிவா.. சாம்.. இன்று காலையில் அவர்கள் கட்டியிந்த வேட்டியில் சிரித்த முகமாக நிற்க…. தானும் உடன் நிற்பதாக ஒரு பிம்பம் மெல்ல எழுந்தது அவளுள். கண்கள் தாமாக அந்த கற்பனையில் நெகிழத் தொடங்கியது.

தரணிக்கு விடிய விடிய உறக்கமில்லை. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக, வீடு சென்றவன் தன் மாமாவிடம் “மாமா.. அவர்ளுக்கு சீக்கிரம் வர்ண பாருங்க.. இந்த பொருத்தம் ஜாதகம் எல்லாம் இப்போ யார் பார்க்கிறாங்க.. நல்ல வரனாக பாருங்க.. சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கணும். அத்தைகிட்ட சொல்லி புரிய வைங்க” என்றான் படபடவென.

தண்டபாணி “டேய், அப்படீல்லாம் அவசரபட முடியாது டா, அவ ஜாதகத்தில் திருமணம் என்பதே பெரிய போராட்டம்ன்னு இருக்கு.. பார்த்து பொறுமையா தேடனும். ஒரே தோஷமா செய்யணும்.. எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.. நீ எல்லாத்துக்கும் அவசரப்படாத ப்பா” என்றார்.

தரணி புரியவே மாட்டேங்குது இவர்களுக்கு என தன்னை நொந்துக் கொண்டு மேலே சென்றான். சித்ராவும் வீடு வந்துவிட்டார். மது தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டாள்.

தரணி குளித்து கிளம்பினான் மருத்துவமனைக்கு. மாமாவோடு சென்று, அவரை மருத்தவமனையில் விட்டு விட்டு,  அவளுக்கு உணவு கொடுத்துவிட்டு, அலுவலகம் செல்லவதாக ஏற்பாடு.

இப்போது மருத்துவமனையில் ஷிவா, வந்திருந்தான். காலையிலேயே, மதுவிடம் எந்த மருத்தவமனை என விவரம் கேட்டுக் கொண்டு வந்து சேர்ந்தான்.

மது தலையை ஒதுக்கிக் கொண்டு.. நேற்று போட்டிருந்த அதே பழைய ஆரேஞ்சு நீலமும் கலந்த சுடியில் அமர்ந்திருந்தாள்.  நேற்று வரையில் ஏதேதோ யோசனையில் இருந்தவள்.. முகம் வாடி இருக்கும்.. யோசனையிலிருக்கும்.. ஆனால், இப்போது அவனை காண போகிறோமென்ற ஆவல் முகத்தில் சுடர் விட அமைதியாக அமர்ந்திருந்தாள்.

ஷிவா, அவள் அறையின் கதைவை தட்டி உள்ளே வந்து சேர்ந்தான். மதுவின் கண்கள் மருத்துவமனையிலும் ஒளிர்ந்தது.. மது “வாங்க ஷிவா” என்றாள்.

ஷிவா அமைதியாக அவளின் கையை பார்த்தான்.. “என்ன மது இது சின்ன பிள்ளை மாதிரி..” என்றான். 

ஷிவா இப்போதுதான் மதுவை நிமிர்ந்து பார்த்து “வலி இருக்கா மது.. ப்பா.. எப்படி ஆகியிருக்கு கை..” என்றான்.

மது “அஹ.. நானும் சாம் கலரில் இருக்கேனில்ல” என்றாள் லேசாக புன்னகைக்க முயன்று.

ஷிவா அதட்டினான் “மது..” என.

மது திடமாகிய குரலில் “ம்.. நைட் எல்லாம் வலி தெரியலை.. விடியற்காலையில் இருந்து எரிச்சல்தான். நீங்க உட்காருங்க” என்றாள்.

ஷிவா, அவளின் அருகில் சேர் நகர்த்திப் போட்டுக் கொண்டு அமர்ந்தான். அவனுக்கு என்னமோ அவளின் கையிலிருந்து பார்வையை எடுக்க முடியவில்லை.. மனது அவளின் வெந்த விரல்களை நீவி.. நேராக்க நினைத்தது.. தலையை கோதி, நேற்று தரணி பேசியதை மனதில் கொண்டு வந்தான்.

மது “சாம் கூட்டி வரலையா” என்றாள்.

ஷிவா “இல்ல, ஹாஸ்ப்பிட்டல்.. அதான், அம்மா வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க.. நான் வீடியோ காலில் பேச வைக்கிறேன்” என்றான் அவசரமாக.

மது அமைதியாக இருந்தாள்.. இருவருக்கும் இருவேறு மனநிலை.. தரணி நேற்று பேசியது.. ஷிவாவின் மனதில் பதிந்து.. உண்மை அவளிடம் நெருங்காதே என சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால், மதுவின் நிலை தரணி பேசியதில்.. திடம் கொண்டிருந்தது.. ஒருவேளை வீட்டில் ஒத்துக் கொள்வார்களோ.. நாங்கள் இணையலாமா.. நடக்குமா.. என அடுத்த நிலைக்கு சென்றிருந்தது. எனவே இருவருக்கும் அமைதி.

மதுவே பேச்சை தொடர்ந்தாள் “பர்த்டே எல்லாம் எப்படி போச்சு” என்றாள்.

ஷிவாவிற்கு  தொண்டை வரை வந்தது.. பெருசா இல்லை.. நீயில்லாமல் என. ஆனாலும் “ம்.. நல்லா போச்சு.. நீ..தான்.. விடு, கவனமா இருந்திருக்கலாம்.. சாப்பிட்டியா..” என்றான்.

மது அவனின் பாதி விழுங்கிய பேச்சிலேயே முகம் மலர்ந்தாள்.. அவனை இமைக்காமல் பார்த்தாள்.. எதையோ அவனிடமிருந்து க்ரகிக்க முற்பட்டாள், ஆனால் அவளின் கண்ணில் பட்டது அவனின் அயர்ந்த தோற்றமே “என்ன ஷிவா நைட் எல்லாம் தூங்கலையா கண் எல்லாம் வீங்கி இருக்கு” என்றாள்.

ஷிவா தடுமாறினான்.. தன் தலையை கோதிக் கொண்டான். வேண்டாமே இந்த கவனிப்பு.. நான் கறை படிந்தவன்.. என எண்ணிக் கொண்டான்.

எப்போதும் அவன் உறங்கும் நேரம்.. தாமதமாகும் அத்தோடு அந்த போதை வேறு.. வேண்டும். நேற்று.. மதுவின் நினைவிலும் தரணியின் பேச்சிலும்.. உழன்றவனுக்கு, என்ன போதை ஏறியும் உறக்கம் வரவில்லை. கண் இமைக்காமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

இப்போது அதை அவள் நேரில் பார்த்தவள் போல கேட்க்கவும்.. தடுமாறினான். ஷிவா “மது ஒரு ஆஃப்பர் வந்திருக்கு.. நாளைக்கு நான் பெங்களூர் போறேன்.. டூ டேஸ். சாம் இங்கதான் இருப்பான்..” என்றான்.

மது அவசரமாக “இல்ல, ஷிவா, சாம்’மை கூட்டிபோயிடுங்க.. உங்க அம்மாவையும் துணைக்கு கூட்டி போங்க.. அவன் தாங்க மாட்டான், வேண்டாமே, குழந்தை ஏங்கிடுவான்.. என்ன இப்போ, ரூம் எடுத்துக்கோங்க.. கூட்டி போயிடுங்க” என்றாள், வேறு எதையும் யோசிக்காமல்.

ஷிவா “இல்ல, அது ஓகே ஆச்சுன்னா..  நான் ரெகுலரா ஆபீஸ் போகனும்.. அ.. அவன் அதுக்கு பழகணும்ன்னு” என்றான்.

மது “ஓ… ஆனால், இப்போவேவா.. நீ..நீங்க, முதலில் அடென்ட் பன்னுங்க, பையனையும் கூட்டி போங்க.. மத்தத அப்புறம் பார்க்கலாம் ஷிவா” என்றாள்.

ஷிவா ஏதும் மறுத்து பேசவில்லை.. அமைதியாக அமர்ந்திருந்தான். நேரமாகிற்று ஷிவா விடைபெற வேண்டும். எழுந்தான்.. அவளின் பாதிக்கப்பட்ட கை பெட்டில் இருக்கவும்.. தன் ஒருவிரல் கொண்டு.. அவளின் சுட்டு விரலை வருடினான்.. அவளின் அந்த விரல்கள் நடுங்கியது. இவனிற்கும், எங்கே அழுத்தம் கொடுத்தால்.. தன் விரலோடு அந்த சதை வந்துவிடுமோ என தோன்ற தன் கையை எடுத்துக் கொண்டான். மதுவிற்கு எரிச்சல் அதிமாக்கியது.. கண்கள் கசிந்தது.

ஷிவா “மது பெங்களூர் ஷிப்ட் ஆனாலும் ஆகிடுவேன்.. க…கல்யாணம், மேரேஜ் அப்படின்னா இன்விட்டேஷன் அனுப்புங்க, கவனமா இருங்க.. “ என அவன் சொல்ல சொல்ல…

மது “ம்கூம்.. அப்.. அப்படி எல்லாம் வேண்டாமே, க்கும்.. சாம், இப்போ தான் செட் ஆகியிருக்கான்..” என்றாள்.

ஷிவா “சரி வராது மது..  தெளிவா முடிவெடுத்து இருக்கேன்.. “ என்றான் சின்ன குரலில்.

மது “அப்போ நானும், என்னோட மெஸ் பிரான்ச்சா அங்க ஓபன் செய்ய வேண்டி இருக்கும்” என்றாள்.. வீம்பான குரலில்.

ஷிவா இய்லாமையாய் ஒரு புன்னகை செய்தான்..

மது “என்ன சிரிப்பு” என்றாள்.

ஷிவா “என் கறை தீராது மது.. அது உன்னையும் பாதிக்கும்.. இ..இன்னொரு ஆசையெல்லாம் இ…இல்லை மது.. அது கூடாதில்ல..” என்றான் என்கோ பார்த்துக் கொண்டு..

மதுவின் முகம் வாடித்தான் போகிற்று ”ஏன்.. க்கும்.. சரி, இங்க ஏதாவது வேலை இருந்தால் பாருங்க ஷிவா..” என்றாள் அவனிடம் முகம் காட்டாமல்.. தன்னை நேராக்கிக் கொண்டு, சுருண்டு படுத்துக் கொண்டாள், அவனை பார்க்காமல்.

ஷிவா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஏதும் சொல்லாமல் கிளம்பினான்.

மதுவின் கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்தது…

“வா.. வந்து என்னை சேர்ந்திடு..

என் தோள்களில் தேய்ந்திடு..

சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்..

வரும் திசை பார்த்து இருப்பேன்..

நாட்கள் போனாலும்”

Advertisement