Advertisement

மதுர ப்ரியம்!..

18

ஷிவா, மதுவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அழைப்பு மணியை அடித்து பார்த்தான். கீழே இருந்து ஒரு நபர் வந்தார்.. ஷிவா “எங்க.. யாருமில்லயா.. மது மேடம் இருக்காங்களா” என்றான்.

அந்த நபர் ”அவங்க எல்லாம் இல்ல சர், ஹாஸ்பிட்டலில் இருக்காங்க.. இங்க யாருமில்லை..“ என்றார்.

ஷிவா “எந்த ஹாஸ்ப்பிட்டல் தெரியுமா” என்றான்.

அவர் “எதோ சிட்டி ஹாஸ்ப்பிட்டல்ன்னு நினைக்கிறேன் அவங்களை கேட்க்கிறீங்களா, சரியா தெரியலையே சர்” என்றார்.

ஷிவாவிற்கு என்னமோ போல இருந்தது..அவளுக்கு என்ன ஆனது என கூட தெரியவில்லையே.. என இங்கும் அங்கும் நடந்தான்.. பின் ”எ..என்ன ஆச்சு மதுவிற்கு, நான் அவங்க பிரெண்ட்தான், அவங்க போன் எடுக்கலை.. சொல்லுங்களேன்” என்றான்.

அந்த நபர் “சர், சாப்பாடு வடிச்ச கஞ்சியில் கை விட்டுட்டாங்க சர்.. பாவம் துடிச்சி போயிட்டாங்க” என்றார்.

ஷிவாவிற்கு கேட்டதுமே பதறியது, மீண்டும் தன் நெற்றியை தேய்த்தபடி இங்கும் அங்கும் நடந்தான்.. ஏதும் யோசனையே வரவில்லை அவனுக்கு. அந்த நபர் “சரி சர், பாருங்க” என சொல்லி வீட்டின் உள்ளே சென்றார்.

ஷிவா இப்போது ‘எப்படி அவளை பார்ப்பது, சிட்டி ஹாஸ்ப்பிட்டல்.. ம்..’ என கூகுளிள் தேட தொடங்கினான்.

அதற்குள் அவனின் தந்தை அழைத்தார்.. “டேய் எங்கிருக்க.. மகன் அழுகிறான், வந்து சேர்” என்றார்.

ஷிவா, கிளம்பி வீடு வந்து சேர்ந்தான்.

அங்கே மருத்துவமனையில்.. இரவு மதுவிற்கு உணவு கொடுக்க சொல்லினர். அப்போதுதான் மதுவிற்கு தன் போன் நினைவே, வந்தது. தன் அன்னையிடம் மது “அம்மா, தரணி எங்கம்மா” என்றாள்.

சித்ரா “வர சொல்லவா..” என்றார். அவளை ரூம்மிற்கு மாற்றி இருந்தனர்.. 

மது “இல்ல ம்மா, போன் மட்டும் எடுத்து வர சொல்லு.. ஷிவா கூப்பிட்டிருந்தார், அவர் பர்த்டேக்கு.. வரமுடியலைன்னு மெசேஜ் செய்யணும்.. எடுத்து வர சொல்லும்மா” என்றாள்.

சித்ரா வெளியே வந்து சொன்னார்.

மது நன்றாக இருந்தாள்.. கையில் மருந்து மட்டுமே போட்டிருந்தனர்.. கையை அசைக்க கூடாது. மற்றபடி அவள் நார்மல்தான். சிறு வயது.. வேறு மெடிக்கல் குறைபாடுகள் ஏதுமில்லை.. எனவே, தனி கவனிப்பு தேவையில்லை.. ஓய்வுக்காக இங்கே இருக்க சொல்லினர். 

சித்ரா வெளியே வரவும்.. தண்டபாணி, வித்யா தரணி எல்லோரும் அறையினுள் வந்தனர்.. தண்டபாணி “மதும்மா,  வலி பரவாயில்லையா” என்றார்.

மது “இப்போ ஒன்னும் தெரியலை பா..” என்றாள் பெண்.

வித்யா “என்ன பாப்பு.. இப்படி செய்துட்ட கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமில்ல..“ என்றார், மீண்டும். அவரால் தாங்கவே முடியவில்லை.

தரணி “விடும்மா… மது சாப்பிட்டியா, நல்லா சாப்பிடு, இதை சரி செய்துக்கலாம் மது” என்றான் அவளின் கையை பார்த்த வண்ணம்.

மது “ம்.. தரு போன் எடுத்து வரியா.. ஷிவா சர்க்கு மெசேஜ் போடணும்” என்றாள்.தரணியின் முகம் ஏனோ மாறிப் போனது, அதை பெண்ணவள் கவனிக்கவில்லை.

தரணி “எதுக்கு போன்.. அதெல்லாம் வேண்டாம் நல்லா ரெஸ்ட் எடு.. அப்புறம் பார்க்கலாம்” என்றான்.

மது “டேய்.. இதெல்லாம் ஓவர் டா..” என்றாள்.

தரணி “இல்ல மது, காலையில் எடுத்துக்கலாமே” என்றான்.

மது “ப்ளீஸ் டா, ஷிவாக்கு மேசெஜ் செய்யணும்” என்றாள்.

வித்யா “ஏன் டா, என்னமோ புதுசா பேசற.. யார் போனில்லாமல் இருக்கீங்க.. பாப்பா கேட்க்குது எடுத்து வந்து கொடு.. என்னை இப்போ..” என்றார் அதட்டலாக.

தண்டபாணி “நாளிக்கு மெஸ்சுக்கு லீவ் விட்டிலாம் மா மது” என்றார்.

மது “அப்பா.. நான் என்ன சின்ன பிள்ளையா.. மெஸ் எப்போதும் போல நடக்கட்டும். நீங்கள் எல்லோரும் வேலையை முடுச்சிட்டு வாங்க.. மோர்னிங் நான் மேனேஜ் செய்துப்பேன்.. அப்புறம் அம்மா மட்டும் இருக்கட்டும்.. ஒருகையில்தான் வலி, ஒன்னுமில்லப்பா.. நீங்க வேலையைப் பாருங்க.. மெனுவை சிம்பிளா போடுங்க.. நான் குரூப்பில்.. செய்தி அனுப்பிடுறேன்.. எனக்கு உடல்நலமில்லைன்னு. பார்த்துக்கலாம்..” என்றாள்.

தரணிக்கு, எதுக்கு இப்போது போன்.. அந்த ஷிவாவிடம் எதற்கு இவள் பேச வேண்டும்  தேவையே இல்லை.. எப்படியாவது அந்த ஷிவாவை, தள்ளி வைக்க வேண்டும். என்ன செய்துவிட்டு கையில் குழந்தையோடு வந்திருக்கிறாரோ.. மதுவிற்கு இளகிய மனது.. கையில் குழந்தையோடு.. கஷ்ட்டப்படுவதை பார்க்கவும்.. இவள் சகஜ்மாக பழகுவாள், அதை அவன் தவறாக எடுத்து, ஏதும்.. மதுவிடம் விளையாடி விட்டிருப்பானோ.. என தரணிக்கு முழுவதும் ஷிவா மேல் சந்தேகம். அத்தோடு மதுவின் பேச்சும், ஷிவாவின் பேச்சும்.. அவன் பதறிய நிலையும்  அவனுக்கு சந்தேகத்தை உறுதிதான் செய்தது. என்னமோ நடக்கிறது அவர்களுக்குள்.. இது எப்படி சரி வரும்.. வராது.. வரவும் வேண்டாம்.. பார்ப்பதற்கு வேண்டுமானால் அழுத்தமாக இருப்பாள்.. எல்லாம் எனக்கு தெரியும் என நடந்துக் கொள்வாள்.. ஆனால், மனதில் குழந்தை அவள்.. இந்த உலகின் வக்கிரங்கள் தெரியாது, அவளுக்கு.. என யோசித்தபடியே தன் மாமா, அம்மா இருவரையும் கூட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

தன் அம்மாவையும் மாமாவையும் விட்டு.. மதுவின் போனேடுத்துக் கொண்டு கீழே வந்தான். இவர்கள், மெஸ்சின் பாதுகாப்புக்கு என அமர்த்திய நபர் வந்து.. தரணியிடம் “ஒருவர் வந்தார்.. மது மேடமை கேட்டாங்க.. மற்றபடி யாரும் வரவில்லை.. காலையில் சீக்கிரமாக சுமதிக்காவும்.. வனஜா அக்காவும் வரேன்னு சொல்லிட்டாங்க..” என்றார்.

தரணி “பேர் ஏதாவது கேட்டீங்களா..” என்றான்

அவர் ”இல்லைங்க.. காரில் வந்தார்.. நல்லா செவந்த நிறமா உசரமா தாடியோடு இருந்தாருங்க..” என்றார்.

தரணிக்கு யாரென புரிந்தது “சரிங்க.. நீங்க கிளம்புங்க..” என்றான். அவருக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தான்.

தரணி மருத்துவமனை நோக்கி கிளம்பினான், நிதானமாக. மனதில் அவளிடம் பேசிட வேண்டும் என்ற நிதானம் வந்திருந்தது.

அதே போல, மது உணவு உண்டு, உறக்கம் வராமல் அமர்ந்திருந்தாள். சித்ரா அப்போதுதான் இன்னொரு பெட்டில் உறங்க தொடங்கியிருந்தார்.

தரணி வந்து சேர்ந்தான். மதுவிடம் போனை கொடுத்தான்.

மது, போனை வாங்கி ஷிவாவிற்கு மெசேஜ் அனுப்பினாள்.. மணி பனிரெண்டை தொட்டது. சின்ன ஆக்ஸிடன்ட் அதுதான் வரமுடியவில்லை.. என மன்னிப்பு கோரி.. மீண்டும் ஒருமுறை வாழ்த்து சொல்லி இதமான ஒரு செய்தியை அனுப்பினாள் பெண்.

அடுத்த நிமிடம் போன் செய்தான் ஷிவா.

மதுவின் கண்ணில் மந்திரப் புன்னகை.. படபடவென உள்ளே எல்லாம் விழுந்து நொறுங்கியது. தேடியிருப்பார் என எண்ணம் கொஞ்சம் இருந்தது.. ஆனால், இப்படி உடனே அழைப்பார் என எண்ணவில்லை.

மது இது என்ன பந்தம் என புரிந்துக் கொள்ள நான் விழையவில்லை, ஆனால் பிடித்திருக்கிறது. இதற்கு எதிர்காலம் இருக்கா தெரியாது.. அவனின் கடந்தக் காலம் இதற்கு காரணமா தெரியாது.. ஆனால், இந்த நிகழ்காலம் பிடிக்கிறது, எனக்கு மட்டுமாக.. வானம் பிளந்து கொட்டும் மழை போல.. இது எனக்கு மட்டுமான மழை.. எனக்கு மட்டுமான அக்கறை.. பிடிக்கிறது, நனைகிறேன்.. எதுவரை என தெரியாது.. என மனதில் மந்திர புன்னகை அவளிடம்.

அந்த அழைப்பை ஏற்றாள். தரணி முறைத்து பார்த்தபடியே “இந்த நேரத்தில் என்ன மது” என்றான்.

மது “என்ன தரு, இப்போ..” என்றாள்.

தரணிக்கு பயம் பிடித்துக் கொண்டது, அந்த அறையிலிருந்து வெளியே வந்துவிட்டான்.

அங்கே ஷிவா “மது என்னாச்சு” என்றான்.. எதையும் குரலில் காட்டக் கூடாது என இயல்பாக பேசுவது போல பேசினான். அவனுக்கு தரணி பேசியது கோவம்.. ஆனால், உண்மை. கறை படிந்தவனிடம் எப்படி பேசுவார்கள் என  தோன்றியது.

மது “அது கஞ்சியில் கையை விட்டுட்டேன்.. கை வெந்து போச்சு.. உங்க ட்ரீட் மிஸ் ஆகிபோச்சு.. கத அவ்வளவுதான்.. எதுக்கும் கொடுப்பினை இல்லை போல” என்றாள் சிரித்துக் கொண்டே.

ஷிவா “ம்.. கரெக்ட்தான் போல.. கவனமாக இருந்திருக்கலாம் மது. என்ன சொல்றாங்க டாக்டர்ஸ்” என்றான், எல்லாவற்றையும் யோசித்து..

மது, மருத்துவர்கள் சொன்னதை சொன்னாள்.

ஷிவா “டேக் கேர் மது.. ரெஸ்ட் எடுங்க, நான் அப்புறம் பேசறேன்” என்றவன் வைத்துவிட்டான்.

Advertisement