Advertisement

மதுவிற்கு, இந்த பேச்சு என்னமோ போலிருக்க “அடிமைன்னா ட்ரீட் கேட்க்கமாட்டோம்ன்னு சொன்னீங்களா.. சாம் பர்த்டேக்கும் ட்ரீட் தரலை. .உங்க பர்த்டேக்கும் அப்படியே ஏமாத்திட்லாம்ன்னு பார்க்குகீங்களா, அடிமைன்னாலும் ட்ரீட் வேண்டும்” என்றாள்.

ஷிவா “எஜமானியின் உத்தரவுபடியே.. நைட் 7’o க்ளோக் ப்ரீ செய்துக்கோங்க.. டின்னெர் போகலாம்” என்றான் பெருந்தன்மையான குரலில்.

மதுவிற்கு வெளியே செல்ல வேண்டும் போல இருந்தது, இப்படி கேட்டதும் சரி என்கவும் அவளுக்கும் ‘போலாமே’ என்தான் தோன்றியது.. மது “நானும் தரணியும்” என்றாள்.

ஷிவா, ஏனோ மௌனமாக புன்னகைத்தான்.. இருவருக்கும் அந்த நொடி எதோ உறுத்தியது.. சட்டென. 

“இலை மேலே பனித்துளி போல்

இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்..

காற்றடித்தால் சிதறுகின்றோம்..

பொன்னே பூந்தேனே..”

ஷிவா “கண்டிப்பா பிரெண்ட்ஸ்சோடுதான்.. பாலாஜி பாமிலி, தினேஷ் பாமிலி” என்றான்.

மது தலையசைத்தாள்.

மது “பை..” என்றாள்.

ஷிவா ஏதும் சொல்லாமல் தனது அழைப்பை துண்டித்தான். எப்படியும் இந்த பிரிவுதானே நிரந்தரம்.. இந்த தூரம்தானே உண்மை என அவனுள் தோன்றியது.

அங்கே மது போனை வைத்து திரும்பி பார்க்க.. தரணி கைகட்டிக் கொண்டு ஆராய்ச்சியாய் அவளை பார்த்தபடியே நின்றிருந்தான்.

மது தடுமாறி “எ.. எப்போ வந்த தரு” என்றாள்.

தரணி “என்ன நடக்குது மது” என்றான்.

மது “என்ன நடக்குது..” என்றாள் அவளும் கோவமாக. முந்தைய நொடிவரை அவளின் முகத்தில்  இருந்த புன்னகை இப்போது காணாமல் போக.. தரணியை வெறுமையாக பார்த்து நின்றாள், பெண்.

தரணி “என்ன வீடியோ கால் எல்லாம்.. எல்லோர் கிட்டயும் இப்படிதான் பேசுவீயா, இல்லையில்ல.. அதான் கேட்க்கிறேன். நீ கொஞ்ச நாளாக சரியில்லை மது.. என்ன நடக்குது” என்றான்.

மது ”என்ன, சரியில்லை.. எல்லாம் சரியாதான் இருக்கேன். உன்னையும் என்னையும் டின்னருக்கு கூப்பிட்டார், ஷிவா. இன்னிக்கு அவர் பிறந்த நாளாம்.. விஷ் செய்தேன் அவ்வளவுதான்..” என்றாள் அதே கோவமான குரலில்.

தரணி விடுவதாக இல்லை.. மேலும் மேலும் பேசினான் “இல்லையே நீ இப்படி இருந்ததில்லையே.. யார்கிட்டயும் இப்படி நீ பேசியதில்லையே” என பேசினான்.

மது “இவ்வளவுநாள் பேசலை, இப்போ தானே பேசறேன்.. இதிலென்ன இருக்கு” என அவளும் வாதிட்டாள்.

ஒரு இருபது நிமிடம் தரணி விடாமல் கேள்வியாய் கேட்க, மது “உனக்கு என்னதாண்ட பிரச்சனை.. ஏன் டா.. ஏன்.. இப்படி கேட்க்கிற. ஆமாம் நான் சரியில்லைதான், என்ன செய்ய போற.. எனக்கே நான் ஏன் சரியில்லைன்னு தெரியலை.. என்னையே எனக்கு பிடிக்கலை.. என்ன செய்ய போற நீ. போடா.. போய் வேலையை பாரு” என்றவள், நிற்காமல் கோவமாக எழுந்து சென்றுவிட்டாள்.

தரணிக்கு, சந்தேகம்தான் இருந்தது.. இதுவரை. ஏன் என்னிடம் அதிகம் பேசுவதில்லை.. கலகலப்பாக இல்லை அவள்.. வெளியே அழைத்தாலும் வருவதில்லை.. திருமணம் எனவும் பயமோ என சந்தேகம். அவ்வளவுதான்.

இப்போது இவளின் பேச்சில்.. அழுத்தத்தில்.. என்ன உறுதியானதோ.. என்ன புரிந்ததோ தெரியவில்லை.. தரணி ஸ்தம்பித்து நின்றான். ஆக, ‘ஷிவா..’ ஷிவாதான் காரணம்… எதோ நடக்குது. மது எதை மறைக்கிற.. இல்லை, மனதில் நினைக்கிறாயோ.. என சரியான பாதையில் அவனின் சிந்தனை தொடர்ந்தது. 

மது கீழே சென்றாள். ஆனால், வேலை ஒடவில்லை.. தரணி கேள்வி கேட்டது மனதிலோடிக் கொண்டே இருந்தது.. அவனிடம் கூட என்னால் பேச முடியவில்லை. அவனுக்கே புரிந்திருக்கு.. ஐயோ மது  உன்னை என்ன நினைப்பான்.. திருமணம் பேசிகிட்டு இருக்காங்க, என அவள் மனதில் தோன்றியது. போதும் விளையாடாத.. பார்க்காதே பேசாதே ஷிவா சாம் ரெண்டு பேரும் உனக்கு சம்பந்தபம் இல்லாதவர்கள் இன்றிலிருந்து.. எனவும் தோன்றியது. இப்படியே இவள் மறுகிக் கொண்டிருக்க…

மெஸில், சாதம் வடித்து கஞ்சியை ஒரு அண்டாவில் வைத்திருந்தனர்.. எப்போதும், ஏதாவது தேவைக்கு எடுத்துக் கொண்டது போக.. மற்றதை மாடு கன்றுக்கு கொடுப்பார்.. அப்படி இல்லை என்றால் ஆறியவுடன் கொட்டி விடுவார்.

அப்படியே.. இன்றும், மது பழகிய கை வேளையில் பொறியலுக்கு உப்பு பார்த்துவிட்டு.. எதோ ஞாபகத்தில், ‘அரிசி ஊருகிறது.. உலையில் போட வேண்டும்’ என எண்ணி.. அந்த வடித்த கஞ்சியில் கையை விட்டுவிட்டாள் மது. 

பெண்.. ”அம்மா…” என்ற அலறலில்.. அந்த இடமே பதறி பார்க்க.. மதுவின், வலது கை மணிக்கட்டுக்கு மேல்.. சிவப்பு நிறத்தில் தோல் தெரிய.. மது “ஆஆஆஆ..” என அலறும் சத்தம் அந்த இடத்தையே ஆட்டி வைத்து.

சித்ரா, வித்யா என அங்கேயே நின்றிருந்த யாருக்குமே ஏதும் புரியவில்லை. இரண்டு பெண்மணிகளும் ”ஐயோ மது… பாப்பா” என அழைத்து அவளின் அருகே சென்று அவளின் கையை பிடிக்க.. அங்கே வேலை செய்பவர்கள்.. “மது..” என அருகே வந்தனர். சிலர் அந்த கஞ்சி அண்டாவை நகர்த்தினர்.

தண்டபாணி சத்தம் கேட்டு உள்ளேவர.. பெண்ணின் கை, கண்ணில்பட்டது.. எல்லோரையும் அதட்டி “தள்ளுங்க..” என்றார்.. பின் பைப்பைத் திறந்து.. தண்ணீரை அவள் கையில் ஊற்றினார்.

பெண் அலறினாள் ”ப்பா.. வேண்டாம்ப்பா” என அலறினாள்.. கண்கள்  தாரை தாரையாக கொட்டியது.. உணர்விழக்கத் தொடங்கினாள் பெண். தந்தை பிடித்துக் கொண்டார் அவளை. 

சரியாக, தரணி, மேலிருந்து சத்தம் கேட்டு கீழே வந்தான். அவளை பார்த்தவன்.. அதிர்ந்து “மது “ என அவனும் அலறினான்.

தண்டபாணி “காரெடு டா” என அதட்டினார். 

காரெடுத்து.. மதுவை அழைத்துக் கொண்டு, சித்ரா தண்டபாணியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

வித்யா, மெஸ் வேலையை பார்க்கும் படி பணித்து சென்றனர். வேலையாட்கள் எல்லோருக்கும் சங்கடமாக இருந்தது. ஆனால், வேலை கண்முன் நிற்கவும் எல்லோரும் பேசியபடியே வேலையை பார்த்தனர்.

மதுவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் தரணி. உடனே எமர்ஜெஞ்சி வார்டில் சேர்த்து சிகிச்சையைத் தொடங்கினர் மருத்துவர்கள்.

மாலையில்தான் மதுவை பார்க்கவே அனுமதித்தனர். தோல் மிகவும் பாதிக்கப்படிருப்பதாக மருத்துவர்கள் சொல்லினர்.. கொஞ்சம் விட்டிருந்தால் நரம்புகள் பாதித்திருக்கும்.. என்றனர். எரிச்சல் இருக்கும். இரண்டுநாள் ஆகட்டும் சொல்லலாம்.. தோலை பரிசோதித்துத்தான் என்னவென சொல்ல வேண்டும்.. அதற்கு புண் ஆற வேண்டும்.. எப்படியும் அவளின் தோலை வேறு இடத்திலிருந்து எடுத்து.. இங்கே பொருத்தலாம் என்றனர். 

மது மயக்கத்தில் இருந்தாள். கை சிவந்து விரல்கள் எல்லாம் நிலைகுலைந்து இருந்தது.. பார்க்கவே சித்ராவிற்கு தாங்கவில்லை.. அழுகையோ அழுகை “உனக்கு கண்ணே இல்லையா ஆண்டவா.. கல்யாணம் ஆக வேண்டிய நேரத்தில்.. என்ன இப்படீ என் பெண்ணுக்கு” என கடவுளிடம் முறையிட தொடங்கினார். 

வித்யா மருத்துவமனை வந்தார்.. மூன்று பெரியவர்களும் இரவு உணவு சமைக்ககூடிய நிலையிலில்லை. வேலையாட்களை பார்த்துக் கொள்ள சொல்லினர்.

மது கண்விழித்தாள், தன் கையை பார்க்கவே பயமாக இருந்தது அவளுக்கு. என்னதான் திடமான மனது என்றாலும்.. சிவந்து தோலுரிந்த  கையும்..  லேசாக வடிவம் மாறியிருந்த தன் விரல்களையும் பார்த்த மது தன்னை அறியாமல் அழுகத் தொடங்கினாள்.

யாராலும் தேற்ற முடியவில்லை.. தண்டபாணியும் வித்யாவும்.. மதுவை தேற்ற, சித்ரா வெளியே சென்றுவிட்டார்.

மருத்துவர் வந்து பார்த்தனர். “அழ கூடாது.. சரி செய்துக்கலாம்.. இப்போது வலி தெரியாமல் இருக்க.. மருந்து கொடுத்திருக்கிறேன்.. டேக் கேர்” என ஆறுதலாக கூறி சென்றார்.

அங்கே, ஷிவா மாலையில், தயாராகினான். பாலாஜிக்கு தினேஷ்க்கு என எல்லோருக்கும் அழைத்து சொல்லிவிட்டான். எல்லோரும் வருவதாக சொல்லவும்.. பெரிய ஹோட்டலில் டேபிளிலும் புக் செய்துவிட்டான் ஷிவா.

மாலையில் சொல்லிய நேரத்திற்கு முன்.. பின்.. என எல்லோரும் வந்து சேர்ந்தனர். ஹோட்டலில், ஷிவா.. மகன், பெற்றோர் என எல்லோரும் இருந்தனர்.

மது வந்து சேரவில்லை. ஷிவா, அனைவரையும் வரவேற்றான்.. உணவுகள் ஆர்டர் கொடுக்கவும் தொடங்கியாகிவிட்டது. ஷிவா, மதுவை போனில் அழைக்கத் தொடங்கினான்.

போனை அவள் எடுக்கவில்லை. 

அங்கே, அது அவளின் அறையில் இருந்தது. இவள் மருத்துவமனையில் இருக்கிறாள்.

ஹோட்டலில் உண்ணத் தொடங்கிவிட்டனர் எல்லோரும்.. ஷிவாவும் நண்பர்களோடு பேச்சில் கலந்துக் கொண்டான்.. ஆனால், உண்ண முடியவில்லை அவனால். மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டே அவளுக்கு அழைத்துக் கொண்டும் இருந்தான்.

பலனில்லை. அவள் ஏன் வரவில்லை.. தெரியாமல் தலை வலிக்கத் தொடங்கியது அவனுக்கு. அவள்தான் ஆரம்பித்தாள்.. வருகிறேன் என்றும் சொன்னாள்.. ஏன் வரவில்லை. என்னமோ ஆகியிருக்குமோ எனவும் யோசித்தான்.. வீட்டில் இருக்கிறாள்.. என்ன ஆகும்.. உறங்கி இருப்பாளோ.. ஏதேனும் அவசமாக இருக்குமோ.. என ஆயிரம் யோசனை.. ஏதும் தெரியாமல் மண்டை காய்ந்தது அவனுக்கு. 

டின்னர் முடிந்து.. எல்லோரும் வெளியே வரும் போது பாலாஜியிடம், தரணியின் எண் வாங்கிக் கொண்டான் ஷிவா.

எல்லோரையும் பேசி.. வழியனுப்பி.. என இவர்கள் வீடு வரவே மணி பதினொன்றை தொட்டது.

ஷிவா, வீடு வந்ததும் முதலில் தரணிக்குதான் அழைத்தான்.

தரணி யாரென தெரியாமல் போனை எடுத்து பேச தொடங்கினான்.

ஷிவா “தரணி, நான் ஷிவா.” என்றான்.

தரணி “சொல்லுங்க” என்றான், எல்லா கோவத்தையும் அடக்கிக் கொண்ட குரலில். 

ஷிவா “தரணி.. மது அங்க இருக்காங்களா.. நான் போன் செய்தேன்.. எடுக்கவேயில்லை.. அதான் கேட்க்க்லாம்ன்னு” என்றான்.

தரணி பொங்கினான் “எதுக்கு ஷிவா, அவளுக்கு நீங்க போன் செய்யறீங்க.. அவளுக்கு எதுக்கு இந்த நேரத்தில் பேசறீங்க நீங்க..சர், என்ன விஷயம் சொல்லுங்க” என்றான் அமர்த்தலான குரலில்.

ஷிவா “தரணி.. நீங்க தானே. தரணிதானே நீ. என்னை தெரியாதா தரணி. நான் ஜஸ்ட் பிரெண்ட். ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க.. அவங்களை என் பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிட்டிருந்தேன்.. உங்களை கூட்டிட்டு வரேன்னு சொன்னா.. அவள்.” என்றான் பொறுமையாக. என்னமோ தரணியின் குரல் சரியில்லை.. மரியாதையாகத்தான் பேசுவான்.. இன்று எதோ எங்களை தவறாக நினைத்திருக்கிறான்.. போல என எண்ணி விளக்கினான் ஷிவா.

தரணி “அதான் எதுக்கு சர், நீங்க அவள்கிட்ட பேசறீங்க.. இனி அவள் உங்ககிட்ட பேச மாட்டா.. நீங்களும் கூப்பிடாதீங்க, எதோ சரியில்லை நீங்க.. என்னை பேச வைக்காதீங்க.. ப்ளீஸ்.. புரிஞ்சிக்கோங்க..” என்றவன் அழைப்பை துண்டித்தான்.

ஷிவாவிற்கு என்னவென புரியவில்லை, ஆனால் மதுவை ஏதேனும் செய்திருப்பார்களோ என்ற எண்ணம் வலுபெற்றது அவனிடம்.. கிளம்பினான், அவள் வீடு நோக்கி.

Advertisement