Advertisement

மதுர ப்ரியம்!..

17

ஷிவாவிற்கு அடுத்த நான்கு நாட்களும் எதோ மனது பாரமாகவே இருந்தது.. மீண்டுமொரு ஆசை கனவு உனக்கு தேவையா என அவனுக்கு அவனே கேள்வி கேட்டுக் கொண்டாலும்.. அவள் உருத்தினாள்.. அவனுள்ளே.

அந்த வாரத்தில் ஒருநாள் தானே மதுவை அழைத்தான் ஷிவா. தன் அன்னை ஊரிலிருந்து வந்துவிட்டார் என்றான்.

ஏதும் பேசவில்லை அவள். மதுவிற்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

ஷிவா,அன்று கேட்க் நினைத்ததை இன்று கேட்டான் “ஏன் மது இன்னும் கல்யாணம் செய்துக்கலை நீ” என்றான்.

மது “அஹ அப்படீல்லாம் இல்லையே.. இ.. இப்போது பார்க்கிறாங்களே..” என்றாள்.

ஷிவா ”அதான், ஏன் இவ்வளோ லேட்” என்றான்.

மது “அப்படியா, லேட்டா… இப்போ என்ன? கல்யாணம் தானே யாரை செய்துகிட்டா என்ன? எப்போ செய்துகிட்டா என்ன?..” என சலித்தபடியே தான் பதில் சொன்னாள் பெண்.

ஷிவா “மது… “ என்றான் கேள்வியாக.

மது “விடுங்க ஷிவா, பேச ஒன்னுமில்லை. சரி, உங்க அட்வான்ஸ் திருப்பி அனுப்பிட்டு மெசேஜ் செய்கிறேன்..” என்றாள்.

ஷிவா “அம்மா அப்பா எப்போது வேண்டுமானாலும் போவாங்க வருவாங்க.. அதனால், நான் உங்கள் ரெகுலர் கஸ்ட்டமர் மது.. அப்படீல்லாம் செய்திடாதீங்க..” என்றான் கலகலப்பான குரலில்.

மதுவின் மனம் சமாதானம் ஆனது.

அதன்பின் இருவரும் சற்று பேசத் தொடங்கினர்.. இரண்டு நாட்களுக்கு ஒருதரம் கண்டிப்பாக இருவரும் பேசுவர். சாம், தன் தாத்தா பாட்டியோடு வாக்கிங் செல்லாத நாட்களில்..  வீடியோ காலில் மதுவோடு பேசத் தொடங்கினான். என்னமோ அவர்களுக்கான புது உலகம் அது. மூவரும் பேசும் நேரம் வாரத்தில் ஒருமுறை வாய்த்தாலும்.. பெரியவர்கள் இருவரும் அதை எதிர்பார்க்கத் தொடங்கினர்.

ஷிவா, வீடியோ காலில் மகனோடு அமர்ந்து பேசும் போது “என்ன மது, சாம்க்கு பிடிச்ச ஜிமிக்கையை காணோம்..” என்பான். மதுவும் அவசரமாக சென்று அணிந்துக் கொண்டு வருவாள். ஷிவா, அதனை உள்ளுக்குள் ரசித்தாலும்.. வெளியில் காட்டமாட்டான். மதுவிற்கு ‘எப்படி இருக்கு’ என கேட்க ஆவல்தான். ஆனால், அந்த உரிமை தனக்கில்லை என அமைதியாகிடுவாள்.

ஷிவாவின் அன்னை தந்தை வந்து, அடுத்த இரண்டு நாளில், ஜெயம்மாவும் சென்னை வந்திருந்தார். 

ஜெயம்மா, ஷிவா வீட்டிற்கு சாம்’மை பார்க்க வந்த போது இரண்டு தாய்மார்களும் பேசத் தொடங்கினர்.

இருவருக்கும், தங்களின் பிள்ளைகள் குறித்த கவலை.. பேசி தீரவில்லை. ஜெயாம்மாவிற்கு, ஷிவாவின் நிலை தெரிந்ததும்.. அவனை திட்டாமல் இருக்க முடியவில்லை, அந்த அன்னைக்கு. இப்படி கஷ்ட்டத்தை விலைகொடுத்து வாங்கி வந்திருக்கிறானே உங்கள் மகன் என கோதையிடமே திட்டி தீர்த்தார்.

இப்படியாக இரண்டு குடும்பமும் குழந்தையின் மூலம் நெருங்கி பழகத் தொடங்கியது. அவர்களின் நிலையை பேசியும்.. குழந்தையை கவனித்தும் தீர்த்துக் கொண்டனர். கோதையின் கவனிப்பில், சாம் கொஞ்சம் தேறத் தொடங்கினான்.

ஷிவா, குழந்தையின் வேலைகளை கவனிப்பதிலிருந்து தள்ளி நின்றான். உணவு ஊட்டுவது.. குளிக்க வைப்பது விளையாடுவது என எல்லாம் தன்னுடைய அன்னையும் தந்தையும் பார்த்துக் கொள்வதால், இவன் வேலையில் கவனம் செலுத்தினான். 

சாம், நன்றாக பொருந்திப் போனான். உறங்க மட்டும் தந்தையை தேடினான். ஷிவாவும், மகனை அரவணைத்து உறங்க வைத்தான். ஆனால், ஷிவாவின் இரவு பழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை.. அவன் தேடும் உறக்கமும் வருவதில்லை. எதிர்காலம்.. மது.. சாம் என அவனின் மனது எதை எதையோ சுற்றுவதால்.. இரவு கண்டிப்பாக அவன் திரவ வடிவிலான மதுவை தேடுகிறான்.

அவனின் தந்தை அன்று ஒருநாள் கண்டுக்கொண்டு, மகனை கண்டிக்கவும் செய்தார்.. ஷிவா “முடியலை பா.. உங்களுக்கு இது புரியாது.. நான் நாலு மணி நேரமாவது தூங்கினால்தான், வேலையை பார்க்க முடியும்.. அதுக்கு, இது வேண்டும் ப்பா ப்ளீஸ்.. இதை பெருசுப் படுத்தாதீங்க..” என அவரின் முகம் பார்க்காமல் பேசி சென்றுவிட்டான்.

கோதை அதற்கும் அழத் தொடங்கினார்.. மகனுக்கு இதுதான் தலையெழுத்தா.. இப்படி இந்த வயதில் கையில் குழந்தையுடன் தனியே நிற்க வேண்டுமா.. என தன் கணவரிடம் அழுது தீர்த்தார். அவர்கள் இருவருக்கும் அடுத்து என்ன எப்படி என்ற வரையறையே தெரியவில்லை.  கண்ணெதிரே மகன் தனியே நிற்பதை பார்த்து மறுகினர் இருவரும்.

ஷிவாவின் பிறந்தநாள் ஒருமுறை.. அன்று அன்னை தந்தைமகன் என எல்லோரோடும் கோவிலுக்கு சென்று வந்திருந்தான். ஒரு நிறைவான மனநிலையில் இருந்தான். தன் தோல்வியின் நிலை புரிந்தும் அன்னை தந்தை கூடவே இருந்து எல்லாம் செய்வதை அவன் வரமாக உணரத் தொடங்கினான். எனவே, தன் அன்னை, தனக்கும் மகனுக்கும் ஒரேமாதிரி  எடுத்த வேட்டி சட்டையில் நால்வரும் கோவில் சென்று வந்தனர்.

கோதை இனிப்பு செய்திருந்தார். ஜெயம்மா ஊருக்கு சென்றுவிட்டார். எனவே, தேன்மொழிக்கு, தானும் தன் பேரனும் சென்று இனிப்பு கொடுத்து வந்தனர்.

அந்த நேரத்தில், சட்டென மதுவிற்கு அழைத்துவிட்டான் ஷிவா., அதுவும் வீடியோ காலில். மது, மெஸ்சில் இருந்தாள். வீடியோ காலில் அழைப்பு வரவும் என்னவென தெரியாமல் தனதறைக்கு வந்தாள், அவசரமாக.

அவசர அவசரமாக உள்ளே வந்து.. அந்த அழைப்பை எடுத்தாள். ஷிவா என்றுமில்லாமல் இன்று  சிரித்த முகமாக நின்றிருந்தான். எப்போது இப்படி வீடியோ காலில் வந்தாலும், தன் மகனைத்தான் காட்டுவான், தான் அவளின் திரையில் தெரியா வண்ணம்.. அமர்ந்திருப்பான். இன்று இவனே திரை முழுவதும் தெரிந்தான்.

மது இன்பமாக அதிர்ந்தாள்.. மனம் குறுகுறுக்க.. அவனை பார்த்தாள்.   இது நேசமில்லை.. இது உறுதியில்லாதது.. என தனக்கு தானே நிறைய சமாதானம் செய்துக் கொண்டாலும்.. பெண்ணவளுக்கு.. அவனை திரையில் கண்டதும்.. எல்லாம் பொய்யாய் போனதாய் எண்ணம்.. புன்னகையோடு “என்ன அதிசியம்..” என்றாள் சின்ன குரலில்.

ஷிவாவிற்கு, சங்கடமாக போனது.. ‘அய்யோ ஆர்வத்தில் மகனை மறந்துட்டோமோ..’ என தோன்ற, ஷிவா “இரு” என சொல்லி போனை வைத்துவிட்டு வெளியே வந்தான். தன் அன்னை தினேஷ் வீட்டிற்கு சென்று வந்திருந்தார். எனவே, மகனை கையிலெடுத்துக் கொண்டு வந்தான் 

சாம் “ப்பா.. பாத்தி..” என அழத் தொடங்கினான்.

ஷிவா, குழந்தையை போனில் காட்டினான். சாம் அழுகையை நிறுத்தி “ம்.. மவு..” என்றான். 

மது “சாம் குட்டி” என்றாள்.

ஷிவா மகனை முழு உடையில் காட்டினான். நீலவண்ண சட்டை.. வெள்ளை வேட்டி.. என சாம் அழுகையிலிருந்து புன்னகை முகத்தை காட்டி மது என அழைக்கவும் மது இன்னும் நிலையிழந்து போனாள்..

ஷிவா, அவளை படிக்க முயன்றுக் கொண்டிருந்தான்.. அது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை.. அவளின் கண்கள் மனதை சொல்லியது.. மெல்லிய நீர்கோடாக கண்ணீர் நிற்க.. மது “சாம் குட்டி, அழகா இருக்கானே..” என்றாள்.

சாம் கைகளை தட்டி சிரித்தான். பின் ஓரிடத்தில் நிற்கவில்லை அவன், கட்டிலிருந்து கீழே இறங்கினான்.. இப்போதெல்லாம் நடை கொஞ்சம் இலகுவாக வருகிறது அவனிற்கு. எனவே, இறங்கி எதோ விளையாட்டு பொருளை எடுத்து மதுவிடம் காட்டினான்.. மது “சூப்பர்.. என்ன இது” என பேசத் தொடங்கினாள். இருவரும் கொஞ்ச நேரம் அனைத்தையும் மறந்து உரையாடினர்.

சாம் எதோ மழலையில் மிழற்றினான். மது கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஷிவா, அவளின் விழி விரிப்பிலும்.. சின்ன குரலிலும்.. தங்களை அவள் தேடியிருக்கிறாள் என உணர்ந்தான். அது அவனுக்கு பிடித்தது.. இதற்கு தானே சிறுபையன் போல, சத்தமில்லாமல் வந்து, அவளுக்கு அழைத்தது. என பார்த்துக் கொண்டே இருந்தான் இருவரின் உரையாடலையும்.

சற்று நேரத்ததில் சாம், வெளியே சென்றுவிட்டான்.

மது புன்னகை முகமாக மீண்டும் ஷி/*-வாவின் முகம் திரையில் தெரிய.. “என்ன அதிசயம்ன்னு கேட்டேன்” என்றாள் விழிவிரித்து.

ஷிவா, தன் தொண்டையை சரி செய்துக் கொண்டு ஒன்றுமில்லாத குரலில் “அது.. அடியேனின் பிறந்தநாள்.. அதான், தங்களை காண வேண்டி” என்றான் அவள் விழிகளை இன்னும் விரிய வைக்கும் நோக்கில் 

மதுவும் அவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் விழி விரித்து “ஓ… எஜமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..”  என்றாள். அவன் அடிமையென சொன்னதால்.. இவள் எஜமான் என்றாள்.

ஷிவா “நன்றி நன்றி.. ஆனால், திருத்தம்.. பெண்கள்தான் எப்போதும் எஜமானர்கள்” என்றான் வாதிடும் குரலில்.

Advertisement