Advertisement

ஷிவா வீடு வரவே மணி பத்திற்கு மேல்.. வரும் வழியில் மகன் உறங்கிவிட்டான். ஷிவாவிற்கு பசி வயிற்றை கிள்ளியது. இனி சென்று என்ன உண்பது வீட்டில், ஒன்றுமில்லையே.. அங்கு, என எண்ணி.. காரில் உறங்கும் மகனை வைத்துக்கொண்டு அமர்ந்தான். செக்யூரிட்டியிடம் பணம் கொடுத்து ஏதேனும் உணவு வாங்கி வர சொன்னான்.

காலையில் இவன் மருத்துவமனை சென்ற நேரம் மங்காக்கா வந்து பார்த்துவிட்டு, ஷிவா இல்லை எனவும, அடுத்த வீட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

ஷிவா, வீட்டின் கதவை திறந்ததும்.. சாம் எடுத்த வாமிட்டின் நெடி.. குழந்தையின் உடை.. அவனை துடைத்த துண்டு என எல்லாம் அப்படியே இருந்தது. 

ஷிவா மகனை பெட்ரூமில்விட்டு வந்தான். உண்ணும் எண்ணமே போகிற்று.. கோவமாக வந்தது.. வெறி வந்தது.. என்ன வாழ்க்கை என ஆதங்கம் வந்தது.

வேக வேகமாக எல்லாவற்றையும்.. பாத்ரூம் கொண்டு சென்றான்.. மங்காக்காவிற்கு அழைத்தான்.. ”தம்பி வேற வீட்டுக்கு வந்துட்டேன்.. மாலையில் வரேன் தம்பி” என்றார்.

ஷிவா, தன்னை தானே அமைதிப்படுத்திக் கொண்டான். சாம் நிறைய முறை இப்படி உடல்நலமில்லாமல் இருந்திருக்கிறான்.. தந்தையும் நிறைய செய்திருக்கிறான்.

ஆனால்,இன்று முடியவில்லை.. நேற்று இரவு நெடுநேரம் வரை மீட்டிங்.. உறக்கம் குறைந்து போகிற்று. காலையில்  பதினோரு மணிக்கு மீண்டும் மீட்டிங்.. அதற்குள் எல்லா வேலையும் முடித்தாக வேண்டும்.. அது மனதில் ஓட.. ஷிவாவிற்கு என்னமோ வெறியாக வந்தது.

ஷிவா, ஷார்ட்ஸ்க்கு மாறிவிட்டு துணிகளை அலசி.. மிஷினில்தனியாக போட்டான். பின் தான் குளித்து வந்தான்.. மணி பதினொன்றுக்கு மேல் என காட்டியது. அவசர அவசரமாக.. கட்டிக்கொண்டிருந்த டவலோடு.. மீட்டிங்கில் ’சாரி’ கேட்டு ஜாயின் செய்துக் கொண்டான். பசி போன இடமே தெரியவில்லை.

வீடு இன்னும் ஒருமாதிரி நெடியாக இருக்க.. துடைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தான்.. ஷிவா. 

மகன் சிணுங்கினான். ஷிவா ‘ஐயோ, அதுக்குள் எழுந்துக் கொண்டானா..’ என மீட்டிங் கால்ஸ்சை.. மியூட்டில் போட்டு.. மகனை பார்த்தான். மகனை அப்படியே எடுத்து மடியில் போட்டுக் கொண்டு.. கால்ஸ் பேசினான். சாமாதாம் ஆகி, தந்தையின் பேச்சில் உறங்கி போனான் மீண்டும்.

நீண்ட நேரம் சென்று.. வாசலில் அழைப்பு மணி அழைத்தது. மகன் நல்ல உறக்கத்திற்கு சென்றிருந்தான். அவனை மெதுவாக எடுத்து.. பெட்டில் விட்டு.. லாப்போடு சென்று கதவை திறந்தான்.

மது நின்றிருந்தாள்.

ஷிவா, கண்ணில் கருனையோடு.. இமைகளை மூடி திறந்து வாவென உள்ளே அழைத்தான். அப்பா டா சப்பாட்டிற்கு கவலை இல்லை ஏன்தான் முதலில் தோன்றியது அவனுக்கு.

மது சிரித்தபடியே உள்ளே வந்தாள். ஷிவா சாம் தூங்குகிறான் என அந்த அறைபக்கம் கைகாட்டி சைகையில் சொன்னான். 

மது அவன் மீட்டிங்கில் இருப்பது புரிய.. தன் கையில் கொண்டு வந்திருந்த.. சாம்’மிற்கான உணவு,மற்றும் பிரசாதம் இவற்றை..கிட்சசென் சென்று வைத்தாள். 

அங்கே பிரிக்கப்படாத உணவு பொட்டலங்கள்.. வீடும், என்னமோ போல இருந்தது. விளையாட்டு சாமான்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.. குழந்தையின் உடை.. ஷிவாவும் அப்படியே கட்டியிருந்த டவல்லோடு லாப்பில் அமர்ந்திருந்த கோலம்… வீட்டில் வீசிய நெடி என எல்லாம் மதுவை என்னமோ என உணர செய்ய.. மது யோசனையோடு சாம் பார்த்து வந்தாள்.

ஷிவா, அவசரமாக வேறு அறைக்கு சென்று.. டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்து வந்து அமர்ந்தான்.

மது “என்னாச்சு.. உடம்பு சரியில்லையா சாம்க்கு..” என்றாள்.

மீண்டும் ஷிவா மியூட்டில் போட்டு.. சின்னதாக விவரம் சொன்னான். 

பின் ஷிவா “இன்னும் ட்வென்டி மினிட்ஸ் ஆகும் மது. வெயிட் பண்றீங்களா.. வேலை இருக்கா..” என்றான் தயக்கமான குரலில்.

மது “இல்லை.. வேலையில்ல.. நீ…நீங்க வாங்க..” என்றாள்.

ஷிவா “நீங்க சாம் கிட்ட இருங்க.. வந்து, வீடு துடைச்சிட்டு.. கூப்பிடுறேன்..” என்றான் லாப் பார்த்துக் கொண்டே.

மது, இப்போது பாவமாக ஷிவாவை பார்த்தாள். மெதுவாக சென்று, பால்கனியிலிருந்த துடைப்பம் கொண்டு வீடு பெருக்க தொடங்கினாள். கடகடவென வேலை நடக்க.. பார்த்த ஷிவா “மது.. வைங்க.. நான் பார்த்துக்கிறேன் மது” என்றான் அலறலாக.

மது “நான் பார்த்துக்கிறேன்..” என்றவள், உன் பேச்சைக் கேட்கமாட்டேன் என்ற பாவனையில் அவனை பொருட்படுத்தாமல் தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

ஷிவா, ஒன்றும் செய்ய முடியாமல் தன் வேலையை பார்க்கத் தொடங்கினான்.

மது, குழந்தை உறங்கும் அறை முடித்து, ஹால் துடைக்க தொடங்க.. சாம் அழத் தொடங்கினான்.

ஷிவா, மீட்டிங் முடித்தான். மதுவிடமிருந்து மாப் வாங்கிக் கொண்டவன் “போங்க மது… சாம் பாருங்க” என அனுப்பினான்.

மது ஒன்றும் சொல்லாமல், குழந்தையை பார்க்க சென்றாள்.. சாம் எழுந்து அமர்ந்துக் கொண்டு சிரித்தான் மதுவை பார்த்து.

மது, சாம்மோடு வெளியே வந்தாள் ”ஏன் மங்காக்கா வரலையா.. சாம்.. என்ன சாப்பிட்டான் காலையில்.” என்றாள்.

ஷிவா “கஞ்சிதான் குடிச்சான். அதை வாமிட்.. எடுத்தார் சார்.. அப்புறம் ஹாஸ்ப்பிட்டல் போயிட்டோம். அங்கே ஒன்னும் சாப்பிடலை.. அங்கேயே மெடிசன் கொடுத்துதான் கூட்டி வந்தேன்.. காரில் வரும் போதே தூக்கம்.. ஒன்னும் சாப்பிடலை.. சாதம் வைக்கணும்” என்றான் ஷிவா.

மது ”நான் சாம்க்கு பருப்பு சாதம் கொண்டு வந்திருக்கேன்.. நீங்க சாப்பிட்டீங்களா” என்றாள்.. கிட்சசென் சென்றுக் கொண்டே.

மதுவின் கண்ணில், அங்கேதான் உணவு அப்படியே இருந்தததே.. அதை இப்போது பார்த்த மது “ஷிவாஇன்னும் சாப்பிடலையா” என்றவள், குக்கர் எடுத்து.. “அரிசி எங்கே இருக்கு” என்றாள்.

மணி ஒன்று.. 

ஷிவா, பாத்ரூமில் நின்றான்.

மது எல்லாவற்றையும் திறந்து அரிசியை எடுத்தாள். பிரிட்ஜ் திறந்த என்ன காய் இருக்கு என பார்த்தாள். தாக்காளி உருளை இருந்தது.

சாம் பாவமாக மதுவை பார்க்க.. மது, சாம்க்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள். சாம் கொஞ்சம் தெளிந்தான்.. “ம…தூ…ஊ…” என பேசத் தொடங்கினான்.

மது, அவனை கீழே அமர வைத்தாள்.. தக்காளி வெங்காயத்தை எடுத்துக் கொண்டு தானும் அமர்ந்தாள்.

ஷிவா, பாத்ரூம் வேலைகளை முடித்து வெளியே வந்தான்.. எங்கே இவர்கள் என பார்க்க.. மதுவும் சாம்’மும் அமர்ந்திருந்த காட்சி.. அவனுள் சங்கடத்தைதான் தந்தது. ‘வேண்டாமே இவள்.. இங்கே..’ என எண்ணினான்.

ஆனால், அந்த இடமும் நேரமும் அவனுக்கு உயிர்ப்புடன் இருந்தது.. இப்போது. ஏதும் பேசி.. அவர்களை தொந்திரவு செய்ய  தோன்றாதவனாக.. சோபாவில் அமர்ந்தான். கண்மூடிக் கொண்டான்.. மதுவின் பேச்சுக் குரல்.. “சாம் வேண்டாம் தொடாதே.. எறும்பு இருக்கு.. கடிச்சிடும்” என இவள் ஏதோ சொல்ல..

சாம் “உ… அம்.. பாஆ..” என எதோ கேட்டான் மகன். மீண்டும் மதுவின் குரல் ”ம்.. தொடாத… மம் மம் சாப்பிடலாமா” என கேட்டது. மகனின் “ஆ… மம்… மா..” என ராகம் இசைத்தது.. ஷிவாவின் மனது கசியத் தொடங்கியது.

மது எழுந்து  குக்கரில் எதோ தாளிக்க தொடங்கினாள்.. பொருட்களை எடுப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்ட்டமாக இல்லை அவளுக்கு.. எடுத்துக் கொண்டாள்.

மது சற்று நேரத்தில் சாம்க்கு உணவு ஊட்டத் தொடங்கினாள்.

ஷிவா, போன் பார்த்துக் கொண்டிருந்தான். குக்கர் மூன்று விசில் வந்ததும், தானே காஸ் ஆப் செய்து வந்தான்.

மது சாம்க்கு ஊட்டி முடித்திருந்தாள்.. “ஷிவா, சாப்பிடுங்க.. “ என்றாள்.

ஷிவா ஒன்றும் பேசாமல் இருந்தான்.

மது “ஷிவா, போங்க.. சாப்பிங்க… நான் சாப்பிட்டுதான் வந்தேன்.. போங்க ஷிவா…” என்றாள். தட்ட முடியாமல் உண்பதற்கு சென்றான்.

மது “சாம்க்கு மெடிசன் எங்கிருக்கு” என்றாள்.

ஷிவா இடம் சொன்னான்.

ஷிவா, டேபிளில் அமர்ந்து உண்ணத் தொடங்கினான். பசி, உணவு எப்படி இருக்கிறது என ஆராயவில்லை அவன்.

மது, அதற்குள் சாம்மோடு.. விளையாட தொடங்கிவிட்டாள்.. பெட்ரூமில்.

உண்டு முடித்தான் ஷிவா. அங்கே அவர்களிருக்கும் அறைக்கு செல்லவில்லை அவன்.. லாப் எடுத்து அமர்ந்துக் கொண்டான். ஆனால், அவர்கள் விளையாடும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

சற்று நேரம் சென்று மது வெளியே வந்தால் சாம் உறங்கி இருந்தான்.

மது “நான் கிளம்பறேன் ஷிவா.. நாளைக்கு சாப்பாடு வந்திடும்.. நைட் பார்த்துக்கோங்க.. சாம்க்கு பக்கத்து வீட்டில் சொல்லிடுங்க.. இல்லைன்னா, வந்து வாங்கிக்கோங்க.. பார்த்துக்கங்க” என்றாள் அக்கறையாக.

ஷிவா அப்படியே பார்த்திருந்தான் அவளை ‘உண்டு இல்லை’ என பதிலில்லா பார்வையாக பார்த்திருந்தான் அவளை. மது “பை..” என்றாள்.

ஷிவா “சாரி மது.. பட் தேங்க்ஸ் எல்லாத்துக்கும்… நான் உ.. உங்களை ரொம்ப தொந்திரவு செய்கிறேன்னு நினைக்கிறேன்.. அதான் சாரி” என்றான்.

மது “ஜஸ்ட் சின்ன ஹெல்ப் ஷிவா.. நாங்க கோவிலுக்கு போயிட்டு வந்த பிரசாதம் அங்கிருக்கு.. அதை கொடுக்கத்தான் வந்தேன்.. அம்மா இருப்பாங்கன்னு நினைச்சி வந்தேன்.. வரும் போது சொல்லுங்க வரேன்.. அப்புறம் தங்கச்சி என்ன சொன்னாங்க” என்றாள்.

ஷிவா இன்னும் இன்னும் அவளையே இமைக்காமல் பார்த்தான்.. 

மது லேசாக தடுமாறினாள் “ஷிவா, மணியாச்சு… பை” என்றாள்.

ஷிவா “இருங்க டாக்ஸி புக் செய்யறேன்” என்றான்.

மது அமர்ந்தாள்.

ஷிவா, டாக்ஸி புக் செய்தான். பின் “ஹரிணி அவ பேரு.. என்ன கொஞ்சம் அசிங்கமா பேசினா.. எனக்கு அதெல்லாம் புதுசா என்ன… இப்போது சமாதானப்படுத்திட்டேன்.  பைன்… நீங்க என்ன மெஸ்க்கு லீவ்..” என்றான்.

மது “அ..அது.. எனக்கு கல்யாணம் தள்ளி போகுதுல்ல… அதான், பரிகாரம் செய்ய போனோம்.“ என்றாள் சங்கடமான குரலில்.

ஷிவா அந்த பதிலை கேட்டு.. நெற்றி சுருக்கினான்.. ‘மதுவிற்கு கல்யாணமா..’ என்தான் தோன்றியது அவனுக்கு.

ஷிவாவின் அமைதியில் மது “டாக்ஸி வந்துடுச்சா..” என்றாள்.

ஷிவா போன் பார்த்துவிட்டு “ம்.. கீழ போங்க…” என்றான்.. சட்டென பன்மைக்கு மாறி.

மது அமைதியாக கிளம்பினாள்.. ஷிவா ஒன்றும் சொல்லாமல் அவளோடு, தானும் லிப்ட் வரை சென்றான்.. ஏன் என இருவருக்கும் தெரியவில்லை.. மது லிப்டிலேறி.. ஷிவாவை நிமிர்ந்து பார்த்தாள்.. ஷிவா ”ப்ரீ ஆகிட்டு கூப்பிடு மது..” என்றான்.

மது தலையசைத்து விடைபெற்றாள்.

சற்று நேரம் லிப்ட்டையே பார்த்திருந்தான் ஷிவா.

“இன்னும் கொஞ்சம் நீளவேண்டும்…

இந்த நொடி இந்த நொடி..

எத்தனையோ காலம் தள்ளி..

நெஞ்சோரம் பனித்துளி..”

மதுவிற்கு, பெற்றோரின் நிலைக் கவலையை கொடுத்தது. திருமணத்திற்கான வலைதளத்தில் பதிவு செய்தனர் மதுவின் பெற்றோர். தினம் விடிந்ததும், தரணியை வைத்து.. ஒருமுறை தேடினர்.. எது சரியாக இருக்கும் என குறித்து வைத்து.. தாங்களே இந்த ஜாதகம் ஒத்து வருமா? வரதா?.. என பார்ப்பது. அதை எல்லாம் வாரத்தில் ஒருமுறை எடுத்துக் கொண்டு.. ஜோதிடரிடம் செல்வது.. ஏதாவது சரியாக இருந்தால்.. போனில் அழைத்து பேசுவது என திவீரமாக வரன் தேடினர்.

மது உள்ளுக்குள் பயந்து போனாலும், அவளின் நேரம் ஒன்றும் சரியாக அமையவில்லை. எனவே ஆராய்ந்தனர் தீவிரமாக.

 

Advertisement