Advertisement

மது வீட்டில்..

வித்யா வந்து விட்டார், முதல்நாளே. அவருக்கு முகமெல்லாம் சந்தோஷம்.. எப்படியோ தன் மருமகளுக்கு நல்லது நடக்க போகிறது என சந்தோஷம். 

இன்றிலிருந்தே வீடு ஒரு கலகலப்போடு இருந்தது. கிட்டத்தட்ட முடிவாகிய சம்பந்தம்.. போட்டோவில் மாப்பிள்ளை பெண் இருவரும்  பார்த்துவிட்டனர்.. தங்களை. இப்போது நேரில் பார்த்து.. நிச்சயம்.. கல்யாணம் பற்றி பேசவே இந்த வருகை. 

விடுமுறை தினம் நாளை.. மெஸ்ஸில் வேலை சற்று குறைவாக இருக்கும் என தண்டபாணி.. நாளை வர சொல்லி இருக்கிறார் மாப்பிள்ளை வீட்டாரை.

தரணி வார விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தான்.. மதுவிடம் பேச முயற்சித்தான். ‘என்னமோ.. மது சரியாக இல்லை’ என அவனுக்கு புரிந்தது. 

யாரிடமும் சரியாக பேசவில்லை.. தினப்படி வேலைகளை செய்தாள்.. முகத்தில் கலையில்லை.. எப்போதும் இருக்கும் அமைதி கூட இல்லை.. என்னமோ தடுமாறுகிறாள்.. திணறுகிறாள் என தெரிகிறது.. நண்பனுக்கு.

அவளிடம் என்ன என கேட்கவும் முடியவில்லை.. அவள் தனியாக இல்லை. வேலையில் இருந்தாள்.. இல்லை பெரியவர்களோடு இருந்தாள்.. தரணி அப்போதும் “மது.. என்ன உடம்பு முடியலையா.. என்னமோ மாதிரி இருக்க.. சாப்பிட்டியா.. நீ ரெஸ்ட் எடு.. நான் பார்க்கிறேன்” என்றான்.

அதற்கும் மது “இ..ல்லை இல்ல.. நான் பார்க்கிறேன்.. என்ன இப்போ.. நீ போ.. போய் ரெஸ்ட் எடு..” என அவனை விரட்டினாள்.

மதியம் ஒய்வெடுக்கவும் இல்லை அவள். என்னமோ மனதெல்லாம்.. ‘ஏன் ஷிவா இன்னிக்கு லஞ்ச் சொல்லல.. வந்திடுவேன்னு சொன்னாரே.. ஏன் இன்னும் மெசேஜ் வரல…’ என அதை யோசித்தது. இரண்டு மனநிலையில் இருந்தால்பேன். 

அதிலும் நாளை நடக்கவிருக்கும் நிகழ்வை தொட்டு.. மனது தடுமாறிக் கொண்டிருந்தது. ‘யார் வர போறானோ.. அப்பா வேற என்ன என்னமோ சொல்றார்.. ஆண்டவா.. எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாமே.. எனக்கு யோசிக்க நேரம் கொடேன்.. எனக்கு.. என்னதான் கொடுப்ப நீயு.. இதுதான் என் தலை எழுத்துன்னா.. ஏன் ஷிவாவை.. கண்ணில் கட்டின.. எ.. என்னை தடுமாற வைச்ச, நீதான் செய்த. எனக்கு இதுதான் தலை எழுத்துன்னா.. ப்ளீஸ் டைம் கொடு.. நான் ரொம்ப தூரம் போகல.. தடுமாறிட்டேன்.. ப்ளீஸ்,  எனக்கு பதில் சொல்லிடு.. கண்ணில் காட்டிடு..’ என எண்ணிக் கொண்டே வேலைகளை செய்தாள்.

இரவு டிப்னுக்காக.. கோதுமை ரவை உப்மா.. இட்லி.. தயிர் சாதம் என இன்றைய மெனு இருக்க.. சாம்பார் தாயாராகி விட்டது. சட்னி, க்ரைண்டரில் ஓடிக் கொண்டிருந்தது.. மது அதை தள்ளி விட்டுக் கொண்டே இதை எல்லாம் எண்ணியிருந்தாள்.  மாலைமணி ஆறுதான்.

வேலை இயல்பாக சென்றது.

மறுநாள் காலையில் வீடு இன்னும் பரபரப்பானது. மது எழும் முன்னே.. அத்தையும், அன்னையும் சேர்ந்து சமையலை ஆரம்பித்திருந்தனர். காலை டிபன் வீடு வரைதானே.. எனவே, அதுவும் முடிந்திருந்தது. தரணி எழுந்து மார்கெட் சென்றிருந்தான்.

மதுவை பார்த்த அன்னை “மதும்மா.. கிளம்புடா.. இன்னும் ஒருமணி நேரத்தில் வந்திடுவாங்க.. நீ குளிச்சு வா, சீக்கிரம்” என்றார்.

மதுவிற்கு அழுகையே வந்தது. தைரியமானவள் அவள்.. சொல்லிவிட்டேன்.. அப்பாவிடம்,அவர் பெயர் காப்பாற்ற வேண்டும். அத்தோடு, இதுதான் இறைவன் சித்தம் என்றால்.. அதையும் ஏற்பேன்.. எனக்கு இத்தனை வருடம் சென்று, ஷிவாவை பிடித்திருந்தது.. அவர்தான் கண்ணில் காட்டினார்.. இப்போது இது யாரென பார்ப்போம்.. என வெடுக்கென குளிக்க சென்றாள்.

யார்மேல் கோவம் என தெரியவில்லை அவளுக்கு.. சொல்ல போனால்.. தன் மேலேதான் கோவம். மனம் போன போக்கில் போய்விட்டேனோ என கோவம். மனம் அடங்கிவிட்டால்.. இந்த உலகமே அமைதி கூடம் தானே. இது மனிதனின் இயல்பு.. ஆசை கோவம் வெறுப்பு இதெல்லாம்தான் வாழ்வின் வரங்கள்.. மது இப்போது வெறுப்பு நிலையிலிருக்கிறாள்.. எது நடக்கணுமோ நடக்கட்டும்.. ஜனித்து விட்டேன்.. வாழ்ந்துதானே ஆக வேண்டுமென்ற வெறுப்பு நிலை அவளிடம்.

தயாராகி வந்தாள்.. தன் அன்னை, தன் பிறந்த நாளுக்கு எடுத்து கொடுத்த ஒரு மெஜந்தா நிற பட்டு. சின்ன சின்ன ஜெரி கட்டங்கள்தான் அதில் சிறப்பு.. வேறு நிறமே இல்லை. புடவை முழுவதும் ஒரே மெஜந்தா நிறம் அவள் மனம் போல.. நடுவில் ஜெரி கட்டமாக.. மனதின் குழப்பங்கள்.

இரண்டு இட்லிகளை உண்டாள். முகத்தில் இயந்திர தனம்தான்.. சிரிப்பில்லை.. எப்போதும் இருக்கும் நிமிர்வான அமைதி இல்லை.. கண்கள் குழப்பத்தைக் காட்டியது.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தனர்.. பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

மது, போனை பார்த்தாள்.. ஷிவா, இன்றாவது உணவு வேண்டி செய்தி அனுப்பி இருக்கிறானா என பார்த்தாள். இல்லை, அவனிடமிருந்து ஏதும் வரவில்லை.

மதுவை அழைத்து சென்றனர் ஹாலுக்கு.. மது வணக்கம் சொல்லி அமர்ந்தாள். மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஆறு நபர்கள் வந்திருந்தனர். மாப்பிள்ளையின் பெற்றோர், அக்காவின் கணவர், அக்கா.. அவர்களின் மகன்.. மாப்பிள்ளை அருண்.

அருண் நன்றாகவே பேசினான். அவனின் அக்காவும், மதுவின் அருகில் அமர்ந்து “என்ன படிச்சிருக்க.. மெஸ் எப்படி ரன் பண்றீங்க..” பொதுவாக பேசினார்.

இதமான குடும்பம்தான்.

காபி மட்டும் குடித்தனர்.. மாப்பிள்ளை வீட்டார். நாளை இரு வீட்டாரும் சென்று ஜோசியரை பார்த்து நாள் குறிக்கலாம்.. என்றார், மாப்பிள்ளையின் தந்தை. 

மற்றபடி.. என்ன செய்வது என பேச தொடங்கினர்.. அவர்கள் மது வீட்டார் எதிர்பார்த்ததை விட திகம் கேட்டனர். சொத்தாக இடம் கேட்டனர். ‘எப்படி இருந்தாலும் வெளிநாடு போகிட போறாங்க.. நீங்க என்ன சீர் அது இதுன்னு பண்டிகைக்கு செய்யாவா போறீங்க.. காரு அது இது ஏதும் கேட்கலையே நாங்க.. நிறக்க செய்யுங்க.. எல்லாம் உங்க பெண்ணுக்குத்தானே..’ என்றார்கள்.

வித்யா, தன் தம்பியை தனயே அழைத்து பேசினார்.. அப்போதே ஸ்ரீக்கும் அழைத்து விட்டார்.. வித்யா. தரணி அண்ணைனை லைனில் வைத்துக் கொண்டே.. மாப்பிள்ளை வீட்டார் சொல்லுவதை.. எல்லோரும் கலந்து பேசினர்.

ஸ்ரீ.. “செய்யலாம் மாமா.. நாங்களும் உங்க பசங்கதான் மாமா.. தைரியமாக சம்மதம் சொல்லுங்க…” என்றான் பொறுப்பாக.

தண்டபாணியும் நிமிர்வாக சபையில் வந்து சம்மதம் என்றார். இனிப்புகள் உண்டனர் மாப்பிள்ளை வீட்டார். 

சற்று நேரம் பெண் மாப்பிள்ளையை பேச செய்யலாம் என எண்ணினான் தரணி.

மாப்பிள்ளையின் அன்னை, நிச்சயத் தேதி முடிவாகட்டும் என்றுவிட்டார்.

மாப்பிள்ளை வீட்டார் கிளம்பினர்.

மது, எந்த முகபாவனையையும் மாற்றவில்லை.. காட்டவில்லை. ஓட்ட வைத்த செயற்கை புன்னகையில்.. அமைதியாக நின்றாள்.

அவர்கள் சென்றதும்.. தன்னறைக்கு சென்றவள்தான் கதவை திறக்கவில்லை. 

தரணி சந்தோஷமாக கதவை தட்ட “தலை வலிக்குது, நான் தூங்க போறேன்.. அப்புறம் வரேன்” என்றாள் சத்தமாக.

தரணிக்கு யோசனைதான். இருந்தாலும் “சரி” என்றான்.

இதுதான் வாழ்க்கை என்றால்.. அதை ஏற்க.. அவளுக்கும் நேரம் வேண்டுமே.. எனவே, அழுது அரற்றிக் கொண்டிருந்தாள் பெண்.

மதியம் மணி மூன்று மது இன்னும் உண்ண வரவில்லை.. எல்லோரிடமும் தான் அவளோடு உண்பதாக சொல்லி பெரியவர்களை உண்ண வைத்தான். பெரியவர்களுக்கு, பேசி மாளவில்லை.. மாப்பிள்ளையின் பெருமையை பேசி தீர்த்தனர். அதனால் மதுவின் செய்கை தெரியவில்லை. மேலும் தரணி இருப்பதால்.. பெரிதாக இவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை.

இப்படி தரணி இங்கே போராடிக் கொண்டிருக்க.. மது, குழம்பி.. முட்டி மோதி.. அழுது தீர்த்து.. அடங்கி படுத்திருந்தாள்.. உறங்க முடியாமல்.

சற்று நேரத்தில், அவளுக்கு ஒரு செய்தி வந்தது. அசால்ட்டாக அதை பார்க்க ஷிவாவிடமிருந்து வந்திருந்தது செய்தி. அப்போதும் அவளின் வெறுமை அதிகமாகியது.’எதுக்கு மீண்டும்..’ என தோன்ற.. அதை பார்த்தாள்.

ஷிவா “சாரி ங்க.. எப்படி இருக்கீங்க…” என வந்தது ஒரு செய்தி. அவனின் குரலில் என்னமோ புரியாத பாவம்.. அடுத்த செய்தியையும் கேட்க தூண்டியது இவளை.

அதனை தொடர்ந்து ஒரு வாய்ஸ் மெசேஜ் “நேற்றே பேசனும்ன்னு நினைச்சேன்..அம்மா அப்பா கிட்ட இருந்ததில் பிசி. நாங்க நேற்றே வந்துட்டோம்.. அப்பா அம்மா வந்திருக்காங்க.. அம்மா சமையல் இன்னிக்கு ரொம்ப வருஷம் கழிச்சி… நீ.. நீங்க வீட்டுக்கு வரீங்களா.. ப்ரீயாக இருந்தால் வாங்க.. உங்களை அவங்களுக்கு இன்ட்ரோ கொடுக்கணும் நான். ப்ளீஸ் வாங்களேன்.” என அவனின் குரலில் என்னமோ ஒரு ஆசை.. உருக்கம்.. தெளிவு.. யாசகம்.. என எல்லாம் கலந்து இருந்தது. இது என்ன என புரிந்துக் கொள்ளும் முன்னே.. போனை ஆப் செய்து.. தூக்கி போட்டாள் பெட்டில்.

இந்த செய்தியை கேட்டவளுக்கு.. முன்னமே திக்கற்று திணறிய மனது.. கல்லாகியது இப்போது.. கண்ணில் முன்பு வந்துக் கொண்டிருந்த.. கண்ணீர், இப்போது எட்டிக் கூட பார்க்கவில்லை கண்களை.

இது எல்லா பெண்களுக்கும் நேர கூடிய ஊமை வலி.. ஒரு இனுக்கு கூட வெளியே தெரியாது.. ஏன் அவளின் மூச்சு காற்றுக்கு கூட தெரியாது சிலசமயம்.. இது ரகசியத்தையும் தாண்டிய ஒன்று. இப்படி பட்ட.. அன்பை, ஆசையை வெளியே சொன்னால்.. அதற்கு இந்த ஊர் வேறு பெயர் வைத்திடும்.. இது எங்கள் இனத்தின் சாபம்.. தனியேதான் சுமப்போம்.. இன்று மதுவும் அப்படியே.. தனியேதான் சுமந்தாள். 

நீண்ட பெருமூச்சு வந்தது. முதுகு வரை படந்திருந்த முடியை.. இழுத்து இறுக்கிக் கொண்டாள் உச்சியில்.. ‘நிராசை.. காயம்.. தழும்புகள்.. வடுக்கள்..  எல்லாம் எனக்கு புதிதல்ல.. இது என் சம்மந்தப்பட்டது.. சொல்ல கூட தகுதியில்லா வலி.. அவ்வளவுதானே.. நடக்கட்டும்..’ என மனதுள் சொல்லிக் கொண்டே உண்பதற்கு கதவை திறந்தாள்.

“புல்லாங்குழலே பூங்குழலே..

நீயும் நானும் ஒருஜாதி…

உள்ளே உறங்கும் ஏக்கத்திலே..

உனக்கும் எனக்கும் சரிபாதி..”

Advertisement