Advertisement

ஷிவா, ஊரிலில்லை. ஷிவா, பாலாஜியின் குழந்தையை பார்க்க சென்றிருந்தான். நேற்றுதான் சென்றான். நாளை காலையில் வந்திடுவான்.. மதுவிடம் உணவு வேண்டாம் என செய்தி அனுப்பித்தான் சென்றான். மதுவும் பதில் அனுப்பினாள். 

தன்னறைக்கு வந்த மதுவிற்கு, இப்போது என்னமோ அழுகையாக வந்தது.. பெயரில்லா உரிமையில்லா உறவில் ஏன் நான் இவ்வளவு நம்பிக்கை வைக்கிறேன் என எண்ணிக் கொண்டே ஷிவாவிற்கு அழைக்க போனை எடுத்தாள்.

அழைக்கவில்லை பெண். இது என்ன உணர்வு என தெரியாதவனை அழைக்க தயங்கி அமைதியாகிவிட்டாள் மது.

ஷிவா நேற்று இரவு கிளம்பி தனது காரிலேயே சென்றுவிட்டான் பாலாஜியின் ஊருக்கு. ஐந்துமணி நேர பயணம். விடியலை நெருங்கும் வேலையில் அங்கு சென்றுவிட்டான். ஹோட்டலில் அறை எடுத்துக் கொண்டான். பாலாஜி தன் வீட்டிற்கு வரத்தான் சொன்னான். ஆனால், ஷிவா ‘அவன் வீட்டில் எல்லோரும் இருப்பர்.. தான் சென்று, அவர்களை தொந்திரவு செய்ய கூடாது.. இப்போது சின்ன குழந்தை வேறு இருக்கிறது..’ என எண்ணி வெளியில் தங்கிக் கொண்டான்.

குளித்து மகனை கிளப்பிக் கொண்டு பாலாஜி வீடு சென்றான்.

பாலாஜி இவனை மட்டுமே அழைத்திருந்தான். மற்றபடி தன் பெற்றோர்.. தன் மனைவியின் பெற்றோர்.. ஷிவாவிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பது போல.. ஷிவாவின் பெற்றோரை அழைத்திருந்தான்.  அது ஷிவாவிற்கு தெரியாது.

எனவே, ஷிவா, பாலாஜியின் வீடு சென்றான். சாம் புது மக்களை பார்க்கவும் அழத் தொடங்கினான். அவனால் சட்டென பழக முடியவில்லை.. பால் குடித்தான்.. உணவு ஊட்ட.. சரியான உண்ணவில்லை சாம். அதுவேறு அழுகை அதிகமாகியது அவனுக்கு. 

ஷிவா, மகனை கையில் வைத்தபடியே நின்றான். பாலாஜியின் மகன் மனைவியை பார்த்து நலம் விசாரித்தான்.. தான் வாங்கி வந்த சின்ன மோதிரத்தையும் அந்த பிஞ்சு விரலில் அணிவித்தான்.. இயல்பாக பிஞ்சு குழந்தையை கையில் எடுத்துக் கொண்டான் ஷிவா.

பாலாஜி “டேய், அசால்டா தூக்கிட்ட.. “ என ஆச்சர்யமாக கேட்டான்.

ஷிவா முறைத்தான் நண்பனை. தன் மகனை நானேதானே வளர்த்தேன்.. எப்படி, இப்படி நீ கேட்கலாம் என பார்த்தான் இவன். பாலாஜி “இல்ல டா..” என சமாளித்தான், ஷிவாவின் பார்வையை உணர்ந்து. 

சாம் அப்போதெல்லாம் ஒரே அழுகை.. குழந்தையை அவனிடம் காட்ட.. சற்று நேரம் பார்த்தான்.. பின் நிமிர்ந்து பாலாஜியின் மனைவியை பார்த்து அழுகை. பாலாஜிதான் சற்று நேரம் சாம்’மை கையில் வைத்திருந்தான்.

நேரம் சென்றது.. பேர் வைக்க என எல்லோரும் ரெடி ஆகினர். குழந்தைக்கு “மகிழன்” என பேர் வைத்தனர். மதிய உணவு நடந்துக் கொண்டிருந்தது.  

ஷிவா உண்டு கிளம்புவதாக சொன்னான். பாலாஜி யாரையோ எதிர்பார்த்ததால்.. “இருடா.. சாம் தூங்கிடுவான், ஈவ்னிங் போகலாம் ப்ளீஸ்” என சொல்லி.. ஷிவா முன் நிற்காமல் சென்றுவிட்டான்.

சற்று நேரத்தில் ஷிவா உண்டு.. கீழே வர.. பாலாஜி ஷிவாவை அழைத்துக் கொண்டு தன் குழந்தை இருக்கும் அறைக்கு சென்றான். அங்கே பாலாஜியின் மகனை கையில் வைத்துக் கொண்டு தன் பெற்றோர் இருப்பதை பார்த்தான் ஷிவா.. கையில் தன் மகனோடு கண்டான் இந்த காட்சியை.

ஊன் உருக.. ஊயிர் உருக.. நின்றுவிட்டான் ஒரு நிமிடம்.. சுயநினைவு பெற்றவன்.. அந்த அறையிலிருந்து வெளியே வந்துவிட்டான் சட்டென.

மனம், எங்காவது போயிடு.. எப்படி பார்ப்பாய் இவங்களை.. வேண்டாம் பாவத்தை சேர்க்காதே.. உனக்கு தேவை எனும் போது அவங்க காலில் விழுவியா என மனது சொல்ல.. அடித்து பிடித்து.. வெளியே வந்தான்.

பாலாஜி பின்னாடியே வந்தான்.. ஷிவாவை கைபிடித்து இழுத்து வந்தான்.. இடையில் சாம்’மை கையில் வாங்கிக் கொண்டான். 

ஷிவா, எல்லோரும் இருக்கிறார்களே என எண்ணி.. ஒன்றும் செய்ய முடியாமல் பாலாஜியோடு வந்தான்.

இப்போது அந்த அறையில் பாலாஜியின் மனைவி சுவாதியும்.. மகன் மகிழனும் இல்லை.

பாலாஜி “டேய்.. தப்பு யார்தான் செய்யலை.. அப்படிதான் போனியே நல்லாவது இருந்திருக்கலாம் நீ.. இப்படி அடிபட்டு.. மிதிபட்டு.. ஒண்ணுமே இல்லாமல் நிற்கும் போது.. வாழ்க்கையின் வலி அதிகமா இருக்கும் டா.. நீ தனியா நிற்பதை என்னால் பார்க்க முடியலை.. அப்பா அம்மாகிட்ட என்ன டா மான அவமானம்.. போ பேசு.. எல்லாம் சரியாகிடும் பேசு டா..” என்றவன், கதவை சாற்றிக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

ஷிவா அப்படியே நின்றான்.. கோதை அப்போதே அழ தொடங்கிவிட்டார்.. இப்போது இன்னும் அழுதார். மூவரும் பேசவில்லை. பார்த்து பார்த்து செய்தவர்களை ஏமாற்றி.. சொல்லாமல் கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்டவன் இப்போது குழந்தையோடுப் பிழைக்க தெரியாமல் நிற்கிறான்.

அவனின் தந்தை கணேசன், மனைவியை தேற்றவும் இல்லை.. மகனை பார்க்கவும் இல்லை.. ஷிவா என்ன செய்வது எப்படி அழைப்பது என தெரியாமல்.. அன்னையின் காலடியில் அமர்ந்து “அம்மா… மன்னிச்சிடும்மா” என நான்கு முறை சொல்லி அமர்ந்திருந்தான்.

அன்னை கோதைக்கு இரக்கமே இல்லை.. அவனை பார்க்கவே இல்லை.. திட்டமிட்டு.. மகனை வளர்த்து.. பார்த்து பார்த்து படிப்பினை சொல்லி.. இடம் பார்த்து சேர்த்துவிட்டு.. எங்கே, இங்கே  இருந்தால் கஷ்ட்டபடுவானோ.. வெளிநாடு சென்றால்.. அவனின் உழைப்புக்கு ஊதியம் கிடைக்குமோ.. சொகுசாக இருப்பானோ.. என வழி சொல்லி.. அன்பையே கண்டிப்பாக மாற்றி.. மனதை கல்லாக்கிக் கொண்டு.. ஊர் விட்டு அனுப்பி.. படிக்க வைத்து.. சரி இப்படிதான் பிழைக்கணும்.. ஊர்விட்டு போ.. கண்டம் தாண்டு.. நன்றாக இரு.. என வேலைக்கு அனுப்பினால், மகன் அங்கிருந்தே கண்ணாமூச்சு ஆடினான் அன்னையிடம். அந்த அன்னையின் மனம் பூகம்பம் கொள்ளுமே என மறந்தவன்.. இப்போது, மன்னிப்பு கேட்கிறான்..

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எங்கிருக்கிறான் மகன்! என தெரியாத நிலையிலிருந்தனர் பெற்றோர் இருவரும்.. மனது இன்னமும் இலகவில்லை அவர்களுக்கு.

ஷிவா “அப்பா… என்னை மனிச்சிடுங்க பா…” என்றான்.

கணேசன் உடைந்து போனார்.. “ஏன் டா… இப்படி செய்த.. எதுவாக இருந்தாலும் இங்கே கூட்டி வந்திருக்கலாமில்ல.. பாலாஜி எல்லாம் சொன்னான்.. இப்படி தனியே நிற்கிறேயே டா” என்றார்.

மகன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அன்னையின் காலடியிலேயே நின்றான்.

கணேசன் “கோத.. பிள்ளையை பாரு ம்மா.. போனது போகட்டும் இதுமட்டும் இங்கே வந்தானேன்னு சந்தோஷப்படு.. கோத..” என்றார் சாமாதானம் செய்யும் நோக்கில்.

கோதை “எனக்கு வேண்டாங்க.. எனக்கு சக்தியில்ல.. அப்படியே போயிட சொல்லுங்க அவனை” என.. மகன் பிடித்திருந்த கால்களை நகர்த்திக் கொண்டார்.

ஷிவா “அம்மா…” என்றான் யாசகமான குரலில்.

அந்த குரல் கோதையை என்னமோ செய்ய.. மகனை கன்னம் கன்னமாக அறைந்தார் நான்கு அடி. ஷிவா “அம்மா..” என எழ எழ, கோதை மயக்கத்தில் சாய்ந்தார்.. கணவனின் தோளில்.

ஷிவா “அம்மா என்னாச்சு..” என்றான் தந்தையை பார்த்து..” பதறித்தான் கேட்டான்.

தந்தை பதறவேயில்லை ”லோ BP டா… அந்த தண்ணியை எடு” என்றார்.

அருகில் இருந்த தண்ணிரை எடுத்துக் கொண்டான் மகன்.. தந்தை அதை கையில் சிறிதாக கொட்டி கோதையின் கண்களில் துடைத்து “கோத… கோதம்மா.. “ என கன்னம் தட்டினார்.. ஷிவா ஒன்றும் புரியாதவனாக பார்த்துக் கொண்டிருந்தான் இதை.

கோதை கணவனின் அழைப்பில் எழுந்து கண்களை துடைத்துக் கொண்டார்.. “போலாங்க.. எ..எனக்கு சாப்பாடு வேண்டாம்.. இந்த பாலா பையன் ஏன் இப்படி செய்துட்டான்.. வேண்டாங்க” என சொல்ல சொல்ல மீண்டும் அழுகை வந்தது.

கணேசன் “கோத… பெத்தவங்க எதுக்கு இருக்கோம்.. மன்னிக்கதானே.. எப்படி நிமிர்ந்து நின்ன பையன் இப்படி கெஞ்சி.. நம்மை பார்க்கவே கூசி நிற்கிறான்.. அவன்கிட்ட போய்.. கோவத்தை காட்டி என்ன செய்ய போற.. அவனை தண்டிக்க முடியுமா உன்னால.. அமைதியா அவனை பாரு கோத.. பாரு” என்றார்.

கோதை “முடியலையே ங்க.. என்னால்” என சொல்ல சொல்ல.

ஷிவா “அம்மா.. மன்னிக்கமாட்டியா ம்மா” என்றான்.

கோதை அழுதார்.

கணேசன் அமைதியாகவே இருந்தார்.

ஷிவா “அம்மா.. தப்புதான்.. அதுக்கு தண்டைனையும் நிறைய அனுபவிச்சிட்டேன் ம்மா.. அதனால்தான் உன்னை பார்க்க வரலை.. நீ என்னை பார்த்து சங்கடபடுவேன்னு வரலைம்மா.. உனக்கு ஒரே பொண்ணு மட்டும் போதும்ன்னு விட்டுட்டேன் ம்மா.. என்னை மன்னிச்சிடும்மா” என்றான்.

கோதை அழுதார் பேசவில்லை.

ஷிவா “பேசும்மா” என்றான். அதற்கும் அழுதார் மகனை பார்க்கவில்லை..

மீண்டும் கணேசன் சத்தம் போட்டார். 

அப்போதுதான் கோதை தன்னருகில் அமர்ந்திருந்த மகனை பார்த்து “எப்படி எல்லாம் உன் கல்யாணத்தை நடத்த ஆசைப்பட்டேன்.. பொண்ணு கூட பார்த்தேனே.. எல்லாத்தையும் ஏமாத்திட்டு.. நீயும் ஏமாந்து நிற்கிறியே டா” என்றார்.

ஷிவா ”உன்னை எமாத்தினேன் அதான், எனக்கு தண்டனைம்மா..” என்றான்.

தந்தை “டேய்.. போதும் அப்படி சொல்லாத.. எங்க உன் மகன்” என்றார்.

ஷிவா அன்னையை பார்த்தான்.

தந்தை ”எல்லாம் அவளுக்கு தெரியும்.. பாலாஜி போட்டோ அனுப்பினான்.. போ… தூக்கி வா..” என்றார்.

எழுந்தான் ஷிவா, அன்னையிடம் “ம்மா.. “ என சொல்லி தன் அன்னையை இறுக கட்டிக் கொண்டான்.. சின்ன குரலில் ”என்னை மன்னிச்சிடும்மா… ம்மா… ம்மா…” என்றான் குரல் கரகரக்க.

கோதை மகனின் அணைப்பில் திடமானார், அவனை இப்போது தானும் கட்டிக் கொண்டார்.. மகன், அன்னையை வருடினான். மகனின் முகத்தை நிமிர்ந்தி நெற்றியில் வைத்தார் கோதை.. பிறவிப்பிணி தீர்ந்தது ஷிவாவிற்கு.

தானும் பதிலுக்கு அன்னைக்கு முத்தம் தந்தான்.. அன்னையின் கண்களை துடைத்து விட்டான்.. தன் தந்தையிடம் “ப்பா..” என அவரையும் தழுவினான்.

அவர் “எல்லாம் சரியாகிடும்.. போ பா..” என்றார் வாஞ்சையாய்.

ஷிவா சற்று நேரம் கீழே அமர்ந்து.. அன்னையின் மடியில் தலை சாய்த்துக் கொண்டான். ஏதும் பேசவில்லை இருவரும்.

“அம்மா எனும் மந்திரமே.. 

அகிலம் முழுதும் ஆள்கிறதே..”

கணேசன் எழுந்து வெளியே சென்றார்.. இருவரும் தனிமையில் இருக்கட்டும் என எண்ணி.

Advertisement