Advertisement

ஷ்ரவன் “ஓ.. மதுவிற்கு இந்த பேர் நல்லா இருக்கே.. அக்கா, இப்போவெல்லாம்.. கல்யாணம் ஆனாலும் ஸ்கர்ட் டாப்.. ஜீன் எல்லாம் போடலாம்.. அதனால் நீ பயப்படாதே.. நான் உனக்கு நாலு டாப்ஸ் எடுத்து தரேன்.. காசு மட்டும் அவன் கொடுப்பான்” என்றான் தரணியை கைகாட்டி.

தரணி “டேய்.. அவளுக்கும் வயது ஆகுதுல்ல.. அதனால் இந்த ஜீன் எல்லாம் பிடிக்கலை போலடா.. இல்லைன்னா? நாம் போலாம் சொல்றதுக்கு முன்னாடி.. எப்படி ரெடியா இருப்பா.. வயசாகிடுச்சிடா.. விடுடா.. அவளும் பெண்தானே.. அவளுக்கும் இருக்குமல்லவா அச்சம் நாணம் பயிர்ப்பு” என்றான்.

மது “யாருக்குடா வயசாகிடுச்சி.. அடிச்சிடுவேன் பார்த்துக்க.. இப்போ தாண்டா காலேஜ் முடிச்சேன் ஜஸ்ட் த்ரீ இயர்ஸ்தான் ஆகுது. சும்மா ஏதாவது பேசாத.. நாளைக்கு இருக்குடா உனக்கு.. நீ எனை வெளியேவும் கூட்டிபோகலையில்ல.. செத்த டா மவனே நீ” என்றாள்.

ஷ்ரவன் “அப்பா டா, நான் இன்னும் சம்பாதிக்கல்ல.. தப்பிச்சேன்” என்றான்.

மது “தம்பி இன்னும் ஒரு நாலு மாசம்தான்.. வேலைக்கு நீ போயி ஆகணும்.. அப்போ.. இந்த இருபத்தி ஐந்து வருஷ கணக்கையும் செட்டில் பண்ணனும் நீயு.. பார்த்து பேசு” என்றாள்.

ஷ்ரவன் “யக்கா… இதென்ன கணக்கு.. அவன் மட்டும் அப்போ அப்போ தானே வாங்கி கொடுத்தான்.. நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்.. நீ தப்பு கணக்கு போடுறே..” என்றான்.

தரணி “டேய், அவள் எல்லாம் சரியாதான் சொல்றா.. தம்பின்னா சும்மாவா.. நீதான் எல்லாம் செய்யனும்.. பாரு, அவ ப்ரெண்ட் எனக்கும் சேர்த்து எடுத்து செய்யனும் பார்த்துக்க.. நான் உனக்கும் அவளுக்கும் சேர்த்து தானே எடுத்தேன் போன பர்த்டேக்கு” என கணக்கு பேசினான்.

ஷ்ரவன் “இதென்ன டா, மிட் நைட் தெஃப்ட்டா இருக்கு.. டேய், நான் எப்போ டா எடுத்துகிறது.. போங்கடா.. நான் சம்பாதிக்கவே இல்லை டா.. நானும் ஸ்ரீ மாமாம்ஸ் மாதிரி போயிடுறேன், அவன்தான் தப்பிச்சிட்டான்” என்றான்.. விளையாட்டாய்.

அதுவரை சிரித்துக் கொண்டிருந்த மது எதற்கு ஸ்ரீ பேச்சு என்பதாக அமைதியாகிவிட்டாள்.

தரணி அதை கவனித்து சட்டென “கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்.. என்ன மது, நாமலே துரத்தி விட்டுடலாம்” என கூறி அவள் முன் கையை நீட்டினான்.. ஹய்ஃப்வ் அடிக்க..

மதுவும் தன் அமைதியை விடுத்து, தரணியை சார்ந்தது “அப்படி சொல்லுடா.. ஸ்ரீ மாதிரி போவானாமே போடா டேய்..” என்றவள் தரணிக்கு ஹய்ஃப்வ் கொடுத்தாள்.

ஷ்ரவன் “ஹேய், அஹ… அ.. அது சும்மா சொன்னேன்.. விளையாட்டுக்கு சொன்னேன்.. என் வேலை இங்கேதான், பயப்படாதீங்க, நான் நிறைய செய்வேன்.. என்ன இப்போ.. உனக்குத் தானே தரணி வாங்கி தரேன்.. வாங்கி தந்து தொலையறேன்.. அஹ.. இல்ல, சந்தோஷமா வாங்கி தரேன்” என்றான் சிரித்துக் கொண்டே ஒருவித சந்தோஷம் கலந்த கிண்டலில் பேசினான் தம்பி.

அதன் பின்னே இருவரும் “அது.. அப்படி வா வழிக்கு..” என்றனர்.. அதன்பின்னும், அவர்களின் பேச்சு தொடர்ந்தது.

மது ”டேய் நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்.. ப்ளீஸ்..” என்றவள், எழுந்து சென்றாள் உறங்க.

இரவு பனிரெண்டு மணிக்கு மதுவை எழுப்பினர் இருவரும். பெரியவர்கள் இருவரும் எழவில்லை.. பாவம் காலையில் வேலையிருக்கும், அவர்களை தொந்திரவு செய்யவில்லை பிள்ளைகள்.

மொட்டைமாடியில் சின்ன டேபிளில், இவளின் பிறந்தநாள் கேக்  தயாராக இருந்தது.. மது ஆசையாகவே பார்த்தாள்.. இருவரையும் பார்த்து “அழகா இருக்கு கேக்.. தேங்க்ஸ்” என்றாள்.

தரணி, கத்தி எடுத்து தர.. அந்த சின்ன மெழுகுவத்தியை ஊதி விட்டு நிமிர்ந்தாள்.. ஆண்கள் இருவரும் சின்ன குரலில், ராகமே இல்லாமல் “ஹாப்பி பர்த்டே..” என பாட.. மது கேக் வெட்டினாள். தன் நண்பர்கள் இருவருக்கும் கேக் ஊட்டினாள். அப்படியே இருவரும் அவளுக்கு ஊட்டினார், ஆங்காங்கே அவளின் முகத்தில் தடவினர் இருவரும். மதுவும் அவர்கள் முகத்தில் தடவினாள்.

அடுத்து மதுவிற்கு பிடித்த சாட் ஐட்டம்ஸ் வாங்கி வைத்திருந்தனர் இருவரும்.. அதை மூவரும் பங்கு போட்டு உண்டனர்.. பின் ஷ்ரவன் ஐஸ் கிரீம் எடுத்து வந்தான்.. அதனையும் உண்டனர்.. அப்படியே தரணி “சொல்லு மது இந்த வருஷம் உன் பிளான் என்ன“ என்றான்.

மது “ம்.. நம்ம கஞ்சி மாவு போட்டோமில்ல.. அது நல்லா போகுது.. எல்லோரும் கேட்க்கிறாங்க, அதனால.. அதேபோல பொடி வகை.. சத்துமாவுன்னு செய்யனும்ன்னு நினைக்கிறேன்.. எப்படி.. ஸ்டாக் போட்டுக்கலாம்..” என்றாள் ஆசையாக கண்கள் மின்ன பேசினாள் பெண்.

ஷ்ரவன் “அக்கா, கல்யாணம் பத்தி என்ன சொல்லு..” என்றான்.

தரணி “டேய் விடு டா.. சரி மது உன் விருப்பபடி.. பிஸினெஸ்ச செய்யறோம்.. ஆல் தி பெஸ்ட்.. எப்போதும் போல நாங்க சப்போர்ட் பண்றோம்” என்றான் சிரித்த முகமாக உள்ளார்ந்த அன்போடு.

ஷ்ரவன் “ம்.. இது சத்தியம்” என்றபடி அக்காவை அணைத்தான்.

மது, தரணியையும் சேர்த்துக் கொண்டாள்.. ஷ்ரவன் “இரு ஒரு செல்பி எடுக்கலாம்” என தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்தான்.. செல்பி எடுத்தான்.. மும்மூர்த்திகள் சிரித்தபடியே போஸ் கொடுத்தனர். அடுத்து மது கண் மூடிக் கொள்ள, தரணி காதுகளை மூடிக் கொள்ள.. ஷ்ரவன் வாய் மூடிக்கொள்ள.. இப்போது ஒரு செல்பி.. அதன் பின் மதுவின் தலையில் இரு ஆண்களும் கொம்பு வைக்க.. மது இருவரின் காதுகளையும் பிடிப்பது போல ஒரு செல்பி.. புகைப்படம் எடுத்து முடித்து மீண்டும் ஏதேதோ பேச தொடங்கினர்.. அதன்பிறகே உறங்க சென்றனர்.

காலையில் எப்போதும் போல நான்கு மணிக்கு எழுந்துவிட்டாள் மது. அன்னையின் கூடவே நின்றுக் கொண்டாள். வேலைக்கு வந்தவர்கள் எல்லோருக்கும் ஸ்வீட் செய்து கொடுத்தாள் மது. எல்லோரும் வாழ்த்தினர். நேரம் சென்றது.

அத்தையிடமிருந்து அழைப்பு வந்தது மதுவிற்கு. மது போனை எடுத்து ஆசையாக பேசினாள்.. முன்போல.. அத்தையிடம் ஒதுக்கம் காட்டவில்லை.. இயல்பாக பேசினாள். வித்யாவும் “அடுத்த வருஷம் ஜோடியா நிக்கணும்..” என மனம் நிறைந்து ஆசீர்வாதம் செய்தார். 

அதன்பின் அபர்ணாவிடம் கொடுத்தார் வித்யா. மதுவும் பேசினாள். அபர்ணாவிடம் அவ்வப்போது இரண்டொரு வார்த்தைகள் பேசுவாள். எனவே இப்போதும் அப்படியே பேசினாள்.. உடல்நிலை குறித்து விசாரித்தாள்.. “சாரி கன்சீவ் ஆனதும் பேசனும்ன்னு நினைச்சேன்.. இவங்கெல்லாம் வந்ததில், நான் கொஞ்சம் வேலையில் மறந்துட்டேன்.. செக்கப் போறீங்களா.. வாமிட் ஏதாவது இருக்கா.. இந்த முறை ஷ்ரவன் வரும் போது அவன் கையில் இஞ்சி புளி செய்து கொடுத்து விடுறேன்.. வேற ஏதாவது வேணுமா” என்றாள்.

அபர்ணா “இல்ல, நீங்க இது மட்டும் கொடுங்க போதும்.. அத்தை இருக்காங்களே.. அவங்களே எல்லாம் செய்யறாங்க, என்னால்தான் சாப்பிடவே முடியவில்லை..” என்றாள்.

இன்னும் எதோ பேசி வைத்தனர். 

மது பேசி முடித்து வந்து.. தன் அன்னை கொடுத்த பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டாள்.. பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கினாள்.. இந்த முறை தந்தை “மதும்மா.. என்ன டா சொல்ற.. நீ கேட்ட டைம் கொடுத்துட்டோம்.. சொல்லுடா, உன் ஜாதகத்தை நல்ல இடத்தில் கேட்கறாங்க.. கொடுக்கட்டுமா” என்றார், தன்மையாக மகளின் தலையை வருடி கேட்டார்.

மறுக்க முடியவில்லை மகளால்.. ‘தான் நினைப்பது எதுவும் சாத்தியம் ஆகபோவதில்லை.. அதை நின்று.. கேட்டு.. அடம்பிடித்து.. வாங்கிக் கொள்ளும் தைரியமும் இல்லை..’ எனவே, மகளின் தலை தன்போல அசைந்து “நீங்க சொல்றபடி பண்ணலாம் ப்பா” என்றாள் பெண்.

தரணிக்கு அலுவலகம் இருந்ததால் அவன் கோவிலுக்கு வரவில்லை. ஷ்ரவனும் மதுவும் கோவிலுக்கு சென்று வந்தனர்.

மதுவிற்கு, அவளின் மெஸ் குரூப்பில் வாழ்த்துக்கள் வந்தவண்ணம் இருந்தது. மதுவும் பதில் அனுப்பிக் கொண்டிருந்தாள். ஷிவாவும் அதில் ஒரு மெஸ்சேஜ் அனுப்பி வைத்தான். அழைத்து பேச மனது விழைந்தது. ஆனால், ‘வேண்டாமே’ என எண்ணி அமைதியாக இருந்தான்.

மது, அவனின் வாழ்த்திற்கும் பதில் அனுப்பி வைத்தாள். அவளின் மனதிலும் அந்த வாழ்த்தை பார்த்ததும் ஒரு சலனம்.. ’தெரியாதவர்கள் போல.. குரூப்பில் மெஸ்சேஜ்.. ம்.. சரிதான்’ என எண்ணிக் கொண்டாள். ஆனால், சாம்.. முகம் மனத்தில் வந்து நிறத்து.. ஆலிவ் நிற விழியும்.. லேசாக முடி வளர்ந்த தலையும்.. புதிதாக பற்கள் கொண்ட முகமும் அவள் கண்ணில் வந்து போனது. ‘எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்..’ என எண்ணிக் கொண்டாள் பெண்.

அவ்வளவுதான் மது வேலையில் அமர்ந்தாள்.. மதியம் லஞ்ச் பாக் செய்ய அமர்ந்தாள்.. இன்று ஷ்ரவனும் இருந்ததால்.. இருவரும் பேசிய படியே வேலையை செய்தனர்.

மாலையில் தரணி நேரமாக வந்தான்.. வந்தவன் கையில் சாம் இருந்தான்.. மது, சாம்’மை பார்த்ததும் வாயில் கைவைத்து அசந்துதான் போனாள்.. “டே…ய்… சாம்குட்டி..” என்றாள் ஹஸ்கி குரலில்.. சத்தம் வரவில்லை.. சுத்தமாக குழந்தையை எதிர்பார்க்கவில்லை அவள்.

சாம், தன் அன்பை தன் கைகால்களை அசைத்து.. “ம்.. மா..” என அழைத்து வெளிப்படுத்தினான். மது குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

இப்போது தண்டபாணி “வாங்க சர்.. வாங்க” என வரவேற்கும் சத்தம் கேட்க்க.. தரணியின் பின்னால் பார்த்தவளுக்கு ஷிவா வந்து நிற்பது தெரிந்தது. மது இன்னும் அசந்து “வாங்க ஷிவா” என்றாள் பூரித்த முகமாக.

ஷிவா “ஹாப்பி பர்த்டே..” என வாழ்த்தினான்.

மது ”தேங்க்ஸ் மேல வாங்க” என்றாள். எல்லோரும் மேலே சென்றனர்.

தரணி பெரியவர்களுக்கு ஷிவாவை அறிமுகம் செய்தான். ஷிவா அமர்ந்தான். சித்ரா காபி கொண்டு வந்தார். மது சாம்’மோடு பேசிக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஷ்ரவன் தரணி இருவரும் ஷிவாவோடு பேசத் தொடங்கினர்.. தண்டபாணி “மது, சர்க்கு கேக் கொடு..” என்றார்.

ஷிவா, திங்க்ஸ் கொண்டு வந்த பேக்கில் இருந்து பரிசு பொருளை எடுத்து, கேக் கொண்டு வந்த மதுவிடம் கொடுத்தான்.. “சாம் கிப்ட்..” என்றான்.

மது வாங்கிக் கொண்டாள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.. ஷிவா அவ்வபோது மதுவை பார்த்தான்.. ஒப்பனையே இல்லாமல்.. அழகாக இருந்தாள்.. ஒரு சாதரண சல்வார்.. தூக்கி கொண்டையாக கிளிப் செய்த முடி.. நெற்றியில் சின்ன பொட்டு.. குழந்தையோடு பேசிக் கொண்டே இருந்தாள்.. குழந்தையும் சிரித்துக் கொண்டே இருந்தது.. இருவர் சிரிப்பும் இன்னிசையாய் கேட்டது ஷிவாவிற்கு.. தன்னை தொலைக்காமல்.. அவளை ரசித்தான்.. ‘ஏன் என் கண்ணில் பட்டால் இவள்.. ஏன் என் மனம் அவளிடம் மட்டும் தள்ளி நிற்க வேண்டுகிறது.. யாரிவள்..’ என மனது அடித்துக் கொண்டது உள்ளே.

மூளை ‘பார்க்காதே.. வேண்டாம்.. அவள் தெளிவாக இருக்கிறாள்..’ என எடுத்து சொன்னது. ஷிவா தடுமாறியபடியே சாந்தமாக தரணி பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஏய் எந்தப் பக்கம் நிற்கின்றாயோ

அந்தபக்கம் கண்கள் போகும்..

முன்னும் பின்னும் நீ நடந்தாள்

ஊஞ்சள் ஆகும்..”

இரவு உணவை இப்போதே எடுத்துக் கொண்டான் ஷிவா. பிரியாவிடை பெற்றுக் கிளம்பினான் சாம். மது கவனமாக ஷிவாவை பார்ப்பதை தவிர்த்து.. குழந்தையை வழியனுப்பினாள். 

Advertisement