Advertisement

மதுர ப்ரியம்!

12

மது, அடுத்த இரண்டு நாட்களும், தன் அறையிலிருந்து வெளியே வரவில்லை.. அப்படி இருப்பது அவளின் வேலைக்கு சரியும் இல்லை.. ஆனால், அவளின் மனது சரியில்லை.. ஷிவாவின் வாழ்க்கை அவளை காயப்படுத்தி இருந்தது.. ‘அவன் திருமணம் ஆனவன் என தெரியும்.. ஆனால், அவனின் வாழ்க்கை முறையை அவன் சொல்ல சொல்ல தான் கேட்பது.. இவ்வளவு கொடுமையானதாக இருக்கும்’ என வீடு வந்து சேர்ந்ததும் தான் புரிந்தது அவளுக்கு. அவனின் காதல்.. அதனால் அவன் செய்த தவறு.. என எல்லாம் அவளின் எண்ணத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.

எனவே, தரணியிடம், மது “எனக்கு முடியலை.. முதுகு வலிக்குது.. நீ பாருடா” என சொல்லிவிட்டாள். முதல் நாள் அவன் விடுமுறை எடுத்து பாக்கிங் வேலையை பார்த்தான். மறுநாளுக்கு தேவையான காய்கறி எல்லாம் வாங்கி வந்து சேர்ந்தான்.. இப்படி அன்று அவன் இருந்தான்.

மறுநாள் தான் பார்ப்பதாக மது வந்து நின்றாள்.. அப்போதும் அவள் சரியாக இல்லை என சித்ரா “நீ போய் உட்கார்.. பாக் செய்யும் போது கூப்பிடுறேன்” என அனுப்பி விட்டார். மதுவும் பதில் பேசாமல் சென்று தனதறையில் முடங்கிக் கொண்டாள். ஆனால், முடிவு.. தெளிவு.. என அவளுக்கு எதும் பிடிபடவில்லை. 

அடுத்தடுத்த நாட்களில் தன்னை தானே சீர் செய்துக் கொண்டாள். வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினாள். சாம் நினைவு வந்தது..  கஞ்சிமாவு கொடுத்து வந்தோமே.. என்ன ஆகிற்று என விசாரிக்கவும் தோன்றியது.. ஆனால், ஷிவாவிற்கு அழைக்கவில்லை பெண். 

‘பேசு எப்போதும் போல கேளு.. நீ ஏன் தயங்கற.. உனக்கு என்ன’ என மூளை சொன்னாலும்.. மனது ஒதுங்கிக் கொண்டது.. பேசவில்லை ஷிவாவிடம். கோவமோ.. வருத்தமோ.. பகிர முடியாத உணர்வில் மது.. அமைதியாகிவிட்டாள்.

அப்படியே நாட்கள் சென்றது.

பெரிதாக எந்த மாற்றமுமில்லை.. தரணியிடம் வம்பு வளர்ப்பது.. வெளியில் செல்வது என ஏதும் இல்லாமல் போனது.. ஷ்ரவனிடம், தரணி சொல்லி இருப்பான் போல.. மதுவின் நிலையை,  ஷ்ரவன் போனில் தன் அக்காவிடம் பேசினான் “என்ன அக்கா.. ஏன் டல்லா இருக்கியாம்.. சிரிக்கவே யோசிக்கிறீயாம்.. என்ன ஆச்சு.. உன் பிஸினெஸ் நல்லாதானே போகுது.. வேற என்னாச்சு” என்றான் அக்கறையாக.

மது “டேய், தரணி சொன்னானா?. அவன் பிசி டா, ஆபீஸ்சில், இதில் என்னை சொல்றானா.. அவன் ஒரு புளுகுமூட்டை.. தீபாவளிக்கு எப்போ வர..” என்றாள்.

ஷ்ரவன் “அக்கா… மது.. யாரு புளுகுறா..  கல்யாணத்தை பத்தி பேசினதும்.. நீ இப்படி ஆகிட்டேன்னு சொல்றான்.. தரணி. உண்மையை சொல்லு.. என்ன நினைக்கிற” என்றான்.

மது “டேய் நான் ஒன்னும் நினைக்கலைடா, என்னை விட்டுடு.. எத்தனை மாசம் ஆச்சு நீ இங்க வந்து, வா.. வெளியே போகலாம்” என்றாள்.

ஷ்ரவன் “கண்டிப்பா போலாம் க்கா… உன் பர்த்டேக்கு நான் அங்க இருப்பேன்” என்றான்.

மது “ஆமாம் இப்போது பர்த்டே ரொ…ம்..ப… முக்கியம்… எப்போவோ வா..” என்றாள்.

ஷ்ரவன் “மது என்ன சலிப்பு.. இந்த வருஷம் உன் போட்டோ போட்டு கேக்.. அடுத்த வருஷம் எங்க.. எப்படி இருப்பியோ.. என்னை எல்லாம் அடையாளம் தெரியோமோ தெரியாதோ..” என்றான் சிரித்துக் கொண்டே

மது “டேய்.. போடா.. நான் வைக்கிறேன் அப்புறம் பேசறேன்” என போனை வைத்துவிட்டாள். போனை வைத்தவளுக்கு அழுகையாக வந்தது.. ஏனென்றேத் தெரியவில்லை.. தேம்பி தேம்பி அழுதாள், பெண்.

ஷிவாவிற்கு, மதுவிடம்.. தன் வாழ்கையை பகிரும் போது இருந்த நல்ல எண்ணம்.. இந்த நாட்களில் மாறி போகிற்று. ம்.. ஷிவா மனதளவில் அவளை தேடினான். ‘ஏன் இன்னும் பேசலை அவள்.. ஏன் வீட்டிற்கு வரவில்லை.. சாம்’மை பார்க்க கூட ஏன் வரவில்லை.. நா.. நான் என்ன அவ்வளவு கொடுமைக்காரனா.. என்ன நினைக்கிறா.. அவள், என்னை பற்றி நல்லாதாக ஏதும் இல்லையோ.. ச்ச.. நான் எதையும் பேசியிருக்க கூடாது..’ என மனது கண்டதையும் யோசித்தது.

ஆனாலும் ‘அவள் விலகி இருக்கிறாள்.. அது அவளுக்கு நல்லதுதான்’ என ஆயிரம் தரம் தனக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொண்டான். ‘இதுதான் சரி’ என தன்னை தானே தேற்றிக் கொண்டான். ஆனாலும் எதோ ஒன்றை சத்தமில்லாமல் இழந்தது புரிந்தது அவனுக்கு. 

ஷிவா ’பாலாஜியின் பையனை போய் பார்த்துட்டு வரணும்..’ என எண்ணிக் கொண்டான். தன்னை நேராக்கி கொள்ள எண்ணினான். அது ஒன்றும் கடினமானதாக இருக்கவில்லை அவனுக்கு. வேலை மகன் என இரு பெரும் ஆயுதம் இருக்கையில் ஏதும் ஷிவாவிற்கு கடினமில்லையே.

கூடியவரை.. மதுவை அழைக்க கூடாது என எண்ணினான்.. கஞ்சியை செய்துக் கொடுக்கும் போது சில சந்தேகம் எழுந்தது.. அதையெல்லாம் கேட்க்க மதுவை அழைக்க வேண்டும் என எண்ணினான். ஆனால், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

ஜெயாம்மா வந்து உதவினார்.. கஞ்சி வைப்பதற்கு.. பின் அவரிடம் கேட்டு தானே செய்து கொடுக்க தொடங்கிவிட்டான்.

பின் ஷிவா.. மெஸ்க்கு என இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் .. கஞ்சி பற்றி நல்ல கருத்துகளை பகிர்ந்தான். மது அதனை பார்த்தாள்.. நன்றி என பதிலும் அதிலேயே சொல்லி இருந்தாள். ஷிவா பகிர்ந்ததன் மூலம் ரெண்டு மூன்று கஞ்சி மாவு அர்டர்களும் வந்தது மதுவிற்கு.

ஆக, இருவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் விலகியும் சேர்ந்தும் பயணிக்க எண்ணினார். அதை நடைமுறை படுத்தவும் செய்தனர்.

இன்று மதுவின் பிறந்தநாள்..

ஷ்ரவன் வந்துவிட்டான் முதல்நாள் இரவே.. தரணி, ஷ்ரவன் இருவரும் சென்று கேக் ஆர்டர் செய்து வந்தனர். மது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.. இது பழக்கம்தான், இந்த மூன்று பிள்ளைகளில் யாரின் பிறந்தநாள் என்றாலும்.. இப்படி ஆர்டர் செய்வர்.. இரவு பனிரெண்டு மணிக்கு கேக் வெட்டுவர் மூவரும் ஒன்று சேர்ந்து. தங்களுக்குளே ஒரு கொண்டாட்டமாக நீண்ட நேரம் அமர்ந்து அரட்டை.. பின் தோன்று போது உறக்கம் என அவர்களுக்குள் செய்துக் கொள்வர்.. இதுதான் முறை. எனவே அதன்படி இப்போதும் மதுவிற்கு கேக் ஆர்டர் செய்து வந்தனர்.

மெஸ் வேலை முடிந்தது.. பாத்திரங்கள் எல்லாம் கழுவி ஆகிற்று. மது, நாளைக்கு என்ன சமையல் என அன்னையிடம் படித்துக் கொண்டிருந்தாள்.

மது “உருண்டை மோர் குழம்பு.. சேனை வறுவல்.. தக்காளி ரசம்..  துவையள்..” என மது சொல்லவும், சித்ரா “பருப்பு பத்தாது மது வாங்கிடு.. எத்தனை சாப்பாடு நாளை” என கணக்கு கேட்டுக் கொண்டிருந்தார்.

ஷ்ரவன் “மது அக்கா.. டி… வா, கடைக்கு போலாம்.. நீ இன்னும் ட்ரெஸ் எடுக்கவே இல்லையாம், தரணி இப்போதான் சொன்னான்.. வா போலாம்.. கிளம்பு மணியாச்சு.. இங்கே இருக்கிற மேக்ஸ் போலாம்.. மணியாச்சு கிளம்பு” என்றான்.

மது “டேய்.. எனக்கு வேலை இருக்கு, நானும் அப்பாவும் மார்கெட் போறோம்.. நாளைக்கு வாங்கிக்கலாம்.. இப்போது சாப்பிட்டு படுங்க..” என்றாள் கடுப்பானக் குரலில்.

தண்டபாணி “ஏன் ம்மா.. நீ இன்னும் ட்ரெஸ் எடுக்கலையா.. நாளைக்கு எப்போ எடுத்து.. எப்போ போடுறது.. நீ போடா, நான் மட்டும் போயிட்டு வரேன்.. எப்போதும் போற கடைக்குதானே போறேன்.. சொன்னால் அவனே கட்டி தருவான்.. நீ போடா ம்மா..” என்றார் பொறுமையான குரலில்.

மது “இல்ல பா… நாளைக்கு போறேன்.. பா, வாங்க போலாம்” என்றாள்.

தண்டபாணி அந்த பழைய tvs5௦ தான் வைத்திருக்கிறார்.. அதை எடுத்தார்.. அதுதான் சாமான் வாங்க சரியாக இருப்பதாக அவரின் எண்ணம். எல்லா சாமான்களும் மொத்தமாக பெரிய கடையில் வாங்கிவிடுவார். சில சமயம் தினபடி சாமான்கள் எப்படியும் தேவைப்படும்.. அத்தோடு காய்கறிகள் தினமும் வாங்க, ஒரு கடையில் மொத்தமாக சொல்லி வைத்திருப்பார்.. அவர்கள் எடுத்து வைத்ததை வாங்கி வருவர். இது தினபடி வழக்கம். இப்போதும் கிளம்பினர் அதற்காக.

மது பின்னால் அமர்ந்துக் கொண்டாள் தன் தந்தையோடு.. தண்டபாணி வண்டி எடுத்தார்.

தரணி அப்போதே மேலே போய்விட்டான்.. இவள் ‘வரமாட்டேன்’ என சொல்லவும். ஷ்ரவன், இப்போதுதான் தந்தையோடு அக்காவை வழி அனுப்பி “அம்மா, அவ வந்ததும் சொல்லு சாப்பிட வரோம்” என அன்னையிடம் கூறி மேலே சென்றான்.

மும்மூர்த்திகள் இவர்கள். ஒருவரை விட்டு ஒருவர் அதிகம் இருந்ததில்லை.. ஷ்ரவன் இப்போதுதான், இந்த ஆறுமாதமாக பெங்களூர் வாசம். படிப்பு எல்லாம் அவனுக்கு இங்கேதானே, அதனால்.. ஒன்றாகவே இருப்பர் மூவரும். என்னமோ மதுதான் இப்போது யாரிடமும் பேசாமல் இந்த பதினைந்து நாளாக தனிமையில் இருக்கிறாள். ஆனாலும், தரணியும் ஷ்ரவனும் விடாமல் இருக்கிறனர், அவர்களின் எண்ணம் ‘இந்த பிறந்த நாளில் இருந்து திருமணத்திற்கு பார்ப்போம்’ என சொல்லியதால் அவள் கோவமாக இருக்கிறாள் என எண்ணம்.. அதனால் அவளை தாங்கியே நிற்கின்றனர்.. அவளின் கோவத்தை ஏற்கின்றனர். அந்த கோவத்தை காத்தும் பொருத்தும் நிற்கின்றனர்.. அழகாக.

நட்பு என்ற வார்த்தையே மிகுந்த அர்த்தம் கொண்டது.. அதிக பொசசிவ் கொண்டது போல.. என்.. எனது.. என்ற தன்நிலையிலிருந்து விலகி.. நாங்கள்.. எங்கள்.. என பன்மையை  கொண்டது.. தன் தோழமைகளை விட்டே கொடுப்பதில்லையே.

மது வந்தாள்.. மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.. தரணி கேலி பேசினான் “மெஸ்சியம்மாவிற்கு.. இப்போவெல்லாம் புடவைதான் பிடிக்குது போல.. நாளைக்கு குமரன் சில்க் போலாமா மெஸ்சியம்மா..” என்றான்.

மது முறைத்தாள்.

Advertisement