Advertisement

மதுர ப்ரியம்

1௦

மதுவிற்கு, இரவு முழுவதும்.. ஷிவாவின் வார்த்தைகள்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ‘ஒரு பக்கம் அலட்சியப்படுத்தினேன்.. இன்னொரு பக்கம் தோற்றேன்.. இனி நாங்கள் யாருக்கும் தொந்திரவாக.. இருக்க மாட்டோம்’ என அவனின் வார்த்தைகள் அவளை எதோ செய்தது. 

இரவு நெடு நேரமாகியும் உறக்கம் என்பது வரவில்லை.. மதுவிற்கு. ஷிவாவிற்கும்.. தனக்கும் ஒற்றுமை இருப்பதாக அவளின் மனதிலோரு எண்ணம் தோன்றியது, இந்த இரண்டு மணி நேரத்தில். அதை யாரும் தடுப்பார் இல்லை, இந்த ஏகாந்த வேலையில்.. மனம் மூடியிருக்கும் கதவிற்கு.. சாவியாக அவனையே எண்ணிக் கொள்ள.. படக்கென அவளின் மன கதவு திறந்துக் கொண்டது, இந்த ஏகாந்த இரவில். 

நேரம் செல்ல செல்ல அசதியில் அவளின் கண்கள் மூடிக்கொண்டது.

மதுவிற்கு, காலையிலிருந்து மனது, ஷிவா.. ஷிவா.. என உருப்போட்டது. அது ஒருமாதிரி பிடித்திருந்தாலும்.. ஒரு நெருடலாகவும் இருந்தது, மதுவிற்கு. ‘இதென்ன! சம்மந்தமே இல்லாமல்.. குழந்தையின் தகப்பன் மேல்.. ஒரு சலனம்..’ என அவளுக்கு அவளே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

ஆனால், ‘என்ன சலனம்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நானும் அவரும் ஒரே போலவோன்னு தோணுது.. அவ்வளவுதான்’ என பதிலும் சொல்லி சமாளித்தாள் தனக்கு தானே. 

மதுவின் மூளை ‘ஏன் எப்படி’ என ஆராயத் தொடங்க.. மது அமைதியாக மனதோடு போராட தொடங்கினாள். நேரமும் கடந்தது.. பெரிதாக எதிலும் ஈடுபாடு இல்லாமல்.. வாய் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

மதுவின் அன்னை இவளை கவனித்தார்.. ’என்னமோ அமைதியாக இருக்காளே..’ எனத்தான். அதிகம் வேலைகள் கொடுக்காமல்.. அவளை தனியே விட்டார் அன்னை. அவருக்கு கொஞ்சம் பயம் ‘எங்கே.. ஸ்ரீயை நினைத்து மீண்டும் மருகுகிறாளோ..’ என. ‘சீக்கிரம் கல்யாணம் செய்திடணும்..’ என எண்ணிக் கொண்டே மகளின் மேலொரு கண் வைத்துக் கொண்டே வேலையை பார்த்தார்.

ஷிவா, மாலை ஆறு மணிக்குதான் மதுவிற்கு சேதி அனுப்பினான்.. ‘இரவு உணவு மட்டும் வேண்டும்’ என. அவனும் செய்தி வழியாகவே ‘எப்போது வந்தீர்கள், சாம் எப்படி இருக்கிறான்..’ என வினவி, விடை பெற்றுக் கொண்டாள். அவளின் மனதுள் பெரிய ப்ரளையமே.. நடந்துக் கொண்டிருந்தது.. ‘நான் என்ன நினைக்கிறேன்’ என. எனவே, ஷிவாவோடு பேசும் சக்தி இல்லாமல் செய்தி அனுப்பினாள் பெண்.

இரவு உணவு அனுப்பி வைத்தாள்.

அடுத்த ஒரு வாரமும் மதுவினுள் பெரிய போராட்டாம்.. தரணியோடு நேரம் செலவிடவில்லை. அப்பாவோடு அதிகமாக பேசுவதில்லை. தனியே தனிய அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.

தரணிக்கு அலுவகலகத்தில் சரியாக இருந்து வேலை.. எனவே, இரவில் அவளோடு உண்பதற்கு மட்டும் பார்த்து பேசிக் கொண்டிருந்தான். எனவே, அவனுக்கும் ஏதும் தெரியவில்லை.

மதுவின் மனது இந்த ஒரு வாரத்தில் யோசித்து யோசித்து.. தோற்று போகிற்று தன்னிடமே. தனக்கும் அவனுக்கு ஒன்றுமை உண்டு என்பதை மட்டும் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து அவளால் வெளியே வர முடியவில்லை.. ‘அவர் கஷ்ட்டப்படுகிறார்.. தனியாக அல்லாடுகிறார்..’ என வரையறுக்க முடியாத வாஞ்சை அவன் மேல் எழுந்தது. அது தவறு எனவும் புரிந்தது.

இதற்கு என்ன பொருள்.. இதன் முடிவு என்ன என்பதெல்லாம் அவளுக்கு புரிகிறது.. அதன் வீரியம் புரிகிறது. ஆனால், தானே அடைத்த மனகதவில்.. மீண்டும் தன் சாவிக் கொண்டு திறந்த ஒரே ஜீவன் ஷிவா என அவளுக்கு அளவே புரிய வைத்துக் கொண்டாள். 

‘ஏன் இந்த ஆபத்தான ஆசை..’ என அவளுக்கு அவளே கேள்வி கேட்க்க ‘ஏன் கூடாது’ என எதிர் கேள்வி கேட்டது அவளின் மனது. அவளுக்கு அவளே சமாதானம் செய்துக் கொண்ட போன வார நிலையில் மது இல்லை.. இவள் வேறு, எங்கோ தொலைத்த வெறி.. அதனால் வந்த கோவம்.. தன் போல ஒருவன் கஷ்ட்ட்படுகிறான் என்ற கரிசனை.. இதெல்லாவற்றையும் விட.. என்னை.. என்னுடைய தோல்வியை.. அவனால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும் என்ற ஒரு ஆவேசம்.. ம்.. தோற்பின் ஆவேசம். எல்லாம் சேர்ந்து மேற்சொன்ன கேள்வியை கேட்டது அவளின் மனது அவளிடமே.

மதுவின் கண்கள் கண்ணீரை சுமந்தது.. கண்களை துடைத்துக் கொண்டாள். மதியம் மணி மூன்று இன்னும் அவள் உண்ணவில்லை. சித்ரா நான்கு முறை அழைத்து பார்த்து விட்டு, உறங்க சென்று விட்டார். சித்ராவிற்கு, மதியம் சற்று உறங்க வேண்டும்.. இல்லையென்றால்.. மாலையில் வேலை ஓடாது. எனவே, சித்ரா  சற்று நேரம் கண்ணசந்தார். 

மது, தன் அன்னையின் அறையை எட்டி பார்த்தாள்.. அன்னை உறங்குவதால்.. தன் தந்தையிடம் வந்தாள் மது “அப்பா.. ப்ரெண்ட் வீடு வரை போயிட்டு வரேன்..” என்றாள்.

தண்டபாணி “என்ன மா, இந்த நேரத்தில்.. சாப்பிட்டியா.. வெய்யிலா இருக்கு..” என்றார்.

மது “இல்ல பா.. அவ இப்போதான் வந்திருக்கா.. ஊரிலிருந்து, பார்த்துட்டு வந்திடறேன்..” என்றாள்.

தந்தை “சரி… ஜாக்கிரதை” என்றார். மகள் ஆட்டோ வைத்துக் கொண்டு ஷிவாவை பார்க்க கிளம்பினாள்.

மது, வந்து சேர்ந்து விட்டாள், ஷிவாவின் வீட்டு வாசலுக்கு. இப்போதுதான்.. மனது ‘எதற்கு வந்தேன்னு கேட்டால் என்ன சொல்லுவது’ என யோசித்தது. மதுவின் முகம் வேர்க்க தொடங்கியது. மனதுக்கு எல்லாம் எளிதே.. அதை செயல் வடிவமாக்கும் போது.. இப்படிதான்.. பதட்டம் வந்து நிற்கும்.

மது அசையாமல் நின்றாள் இரண்டு நிமிடம்.. சாம்’மின் சிரிப்பு கண்முன் வந்து நின்றது.. ஏதோ சொலவாடை உண்டு.. வேலைக்காரிக்கு பிள்ளை சாக்கு என.. அதுபோல் இப்போது மதுவிற்கு.. சாம் தோன்றினான் கண்முன். கொஞ்சம் தைரியம் வந்தது.

ஒருவழியாக காலிங் பெல் அழுத்தினாள்.

இரண்டு நிமிடம் சென்று வந்தான் ஷிவா. காதில் ஹெட் செட் அணிந்துக் கொண்டு வந்து கதவை திறந்தான்.  

மதுவைப் பார்த்ததும்.. அவனிடம் ஒரு அதிசயப் புன்னகை.. அழகாக விரிந்தது.. மது, அதை பார்த்து ஸ்தம்பித்து நின்றாள். 

அவள் இந்த சிரிப்பை எதிர்பார்க்கவில்லை.. ‘ஏன் வந்தாய்’ என கேட்ப்பான் என நினைத்தவளுக்கு, அந்த புன்னகை வசீகரிக்க.. கொஞ்சம் விழி விரித்து பார்த்தாள். 

ஷிவா மெல்லியக் குரலில் ஹெட் போனில் பேசிக் கொண்டே, மதுவிடம் சைகையால் ‘வாங்க..’ என சொல்லி ஹால் சோபாவில் அமர்ந்தான்.. லாப்டாப்பில் கவனமாக.

மது, அவனின் சைகைக்கு கட்டுப்பட்டு.. உள்ளே வந்தாள். குழந்தையை காணவில்லை.. ‘சாம் எங்கே’ என கேட்க நினைக்க.. ஷிவாவோ, மடி கணினியில் மும்முறமாக.. மது விழி விரித்தாள் அவனை காண.. புது அழகவோடு அவனி இருந்தான் அவளின் முன்.. வேலையில் கவனம் போல.. சிகை கலைந்து இருந்தது அலை அலையாய்.. படர்ந்த நெற்றி.. கூர்ந்த பார்வை.. இப்போது கூட.. எதையோ தேடிக் கொண்டிருக்கிறான் போல.. அந்த லாப்டாப்பில்.. அவனின் பார்வை ஊடுருவிக் கொண்டிருந்தது.. அதில். மதுவை என்னமோ செய்தது அவனின் ஊடுருவும் பார்வை.. கொஞ்சம் அமைதிப்படுத்திக் கொண்டாள் தன்னை.

ஆனால், மீண்டும் அவனிடமே சென்றது பார்வை.. இறுகிய உதடுகள்.. எதோ கழுத்தில்.. வெள்ளையாக.. நிறமில்லாமல் மின்னியது ஸ்படிக மாலை.. அதில் மதுவிற்கு யோசனை ‘என்ன இது.. சாமியார் மாதிரி’என. ஆனால், திண்ணிய நெஞ்சன் போல.. ஒரு மஞ்சள் வண்ண டி-ஷர்ட்டில்.. நிமிர்ந்து அமர்ந்திருந்த அவனின் தோள்களும்.. நெஞ்சமும்.. அவனின் இளமையை எடுத்த கூற.. மது லேசாக சிவந்து போனாள்.. ‘என்ன மது நீ..’ என தனக்கு தானே திட்டிக் கொண்டு.. முகத்தை நேராக்கி கொண்டு, அவனை போலவே சைகையில் “எங்க சாம்’ என சைகையில் வினவினாள் பெண்.

ஷிவா, தங்களின் பெட்ரூம்’மை கை காட்டினான். மது உள்ளே சென்றாள் சட்டென..ம்.. எங்காவது, தன்னை அவன் கண்டுக் கொண்டாள். அறைக்கு வந்து.. மீண்டும் தன்னை சமன் செய்துக் கொண்டாள் பெண்.

சாம் உறங்கிக் கொண்டிருந்தான். மது கட்டிலில் அவனின் அருகில் அமர்ந்துக் கொண்டாள். மீண்டும் மனது ஷிவாவிடம், ஆனால் இந்த முறை கேள்வி கேட்டது மனது ‘ஏன் வந்தாய்.. ஏன் வந்தாய்..’ என அவளையே கேள்வியால் துளைத்தது. முகம் தடுமாற்றத்தை தத்தெடுக்க.. சாம்’மின் விரல்களை பிடித்துக் கொண்டாள்.. பெண். மனது வெற்றிடத்தால்.. நிரப்பிக் கொண்டது. தடுமாற்றம் மட்டுமே அவளிடம். அமைதியாக தன்னை தானே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

சாம்.. இப்போது சிணுங்க தொடங்கினான்.. மென்மையாக அவனின் நெஞ்சில் தட்டிக் கொடுத்தாள்.. கைகளை தூக்கி அழ இருந்தவன்.. மதுவின் மென்மையான தொடுகையில் அந்த விரல்களை பற்றி கொண்டான் குழந்தை.. விழிக்க இருந்த இமைகளும், திறக்காமல் மூடிக் கொள்ள.. உறக்கத்தில் அவனின் இதழ் கடையில் ஒரு புன்னகை வந்து போக, மது சாம் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. ‘இவனுக்ககதான் வந்தேன் போல’ என எண்ணிக் கொண்டாள்.. கண்களில் லேசாக நீர் தளும்பி நின்றது.இந்த சமாதானம் பொய் என அது சொன்னது.

ஆனால், மதுவை எதோ ஒன்று அவனை நோக்கி நகர்த்துகிறது.. அதற்கு பதில் என்ன.. பெயர் என்ன.. உருவம் என்ன அதெல்லாம் இன்னும் அவளுக்கே புரியவில்லை. இதோ இப்படிதான் எதுவுமே இல்லாமல் வந்து சேர்ந்துவிட்டாள்.

இப்போது ஷிவா, உள்ளே வந்தான்.. “மது..” என ரகசிய குரலில் அழைத்தான். மது நிமிர்ந்து பார்த்தாள்.. ஷிவா, மகன் உறங்குவதால்.. சைகையில்”வா” என அழைத்துவிட்டு வெளியே சென்றான்.

மது கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு, வெளியே வந்தாள்.

ஷிவா கிட்செனில் நின்றிருந்தான். காபி மேக்கரில் இருந்து டிக்காஷன் மணம்.. அந்த வீடு முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. மது “என்ன காபி எல்லாம் போடுவீங்களா.. அதுவும் இவ்வளோ மணமா” என்றாள், குரலில் துள்ளல் இல்லை, ஆராய்ச்சிதான் இருந்தது.

ஷிவா “ம்.. எனக்கு ப்ளாக் காபி பிடிக்கும்.. உங்களுக்கு என்ன வேண்டும்.. பால்பவுடர் இருக்கு.. போட்டு கலந்து தரேன்” என்றான்.

மது “ஐயோ.. அது திக்காவே இருக்காது.. எனக்கும் ப்ளாக் காபி போதும்” என்றாள்.

Advertisement