Advertisement

மதுரை வீரன் பொம்மி 2

எந்த பேச்சை வீட்டில் எப்போதும், யாரும் எடுக்கவே கூடாது என்று ஜனகன் கட்டுப்படுத்தி வைத்திருந்தானோ அது இன்று நடந்தேவிட்டது. காரணம் அவன் அப்பா, அம்மா.

ஜனகன் பிறந்த போதே அவர்களுக்கு வயது ஏறியிருந்தது. முதல் பேத்திக்கும் மகனுக்கும் நான்கு வயது தான் இடைவெளி எனும் நிலை. மூத்துவிட்டோம், தாங்கள் நல்ல படியே இருக்கும் போதே மகனுக்கு திருமணம் செய்துவிட  வேண்டும் என்று தான் ஜாதகத்தை கையில் எடுத்தனர்.

ஜனகனின் நேரம், அவனின் இருபத்தைந்து வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால்  இருபத்தி ஒன்பது வயதில் தான் திருமணம் நடக்கும் என்றுவிட்டார் ஜோசியர். ஜனகனுக்கு இருபத்தி ஏழு வயது திருமணத்திற்கு சரியாக இருக்கும் என்பது எண்ணம். ஆனால் பெற்றவர்கள் அவர்கள் பக்கம் சொல்லி வேண்டி நிற்கும் போது மறுக்க முடியவில்லை.

‘என் கல்யாணத்துல என் அப்பா, அம்மா ஓடியாடி இருக்கணும்’ என்ற ஆசை அவனுக்கும் உண்டு. இப்போதே ராஜலக்ஷ்மிக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், மூட்டு வலி எல்லாம் உண்டு. தந்தை உடலில் வலு குறைகிறது என்பதும் மகனுக்கு புரியாமல் இல்லை.  சரி என்றுவிட்டான்.

பெற்றவர்கள் மனதில் பேத்தி தான் முதலில் வந்தாள். பேத்தி இருக்கும் போது நாம் ஏன் வெளியே பார்க்க வேண்டும் என்று மகனிடம் கேட்க, அவனோ மறுத்துவிட்டான்.

“அவ இப்போ தான் படிச்சுட்டு இருக்கா, சின்ன பொண்ணு, நாலு அக்கா, அவங்க பிள்ளைங்கனு நம்ம குடும்ப பாரம் பெருசுப்பா, நம்ம அவசரத்துக்கு அவளை கஷ்டப்படுத்த கூடாது, அதோட நம்மளை விட மாமா குடும்பம் வசதியில கூட, என்ன எதிர்பார்ப்பாங்க தெரியாது, நாம கேட்டு அவங்களை சங்கடப்படுத்த கூடாது..” என்றான் மகன்.

“மாப்பிள்ளை அப்படி வசதியை பார்க்கிறவர் கிடையாது அப்பு, நான் சும்மா நமக்குள்ள மட்டும் கேட்டு..”

“ப்பா.. மாமாவை பத்தி எனக்கு தெரியும், ஆனா.. ம்ம்.. இது வேண்டாம்ப்பா, விட்டுடுங்க..”  ஜனகன் உறுதியாக மறுத்துவிட்டான்.  அதற்கு மேல் மகனை கட்டாயப்படுத்த முடியவில்லை.

அசலில் வரன் இருக்க, சொந்தத்தில் எடுப்போம் என்று வேலய்யனின்  ஒன்றுவிட்ட தங்கை மகளை கேட்டனர். ஜனகனுக்கு பேங்க் வேலை, கொஞ்சம் சொத்தும் உண்டு. பெண் வீட்டில் மறுக்க காரணமில்லை. சம்மதம் சொல்லிவிட்டனர்.

உறுதி வைக்க நாள் குறித்து, நிலம் விவகாரத்தில் சம்மந்தம் முறிந்துவிட்டது. பொம்மி வைத்து கொண்டு வெளியே சம்மந்தமா என்று முணுமுணுத்து கொண்டிருந்த வீட்டு பெண்கள், மாப்பிள்ளைகள் இது தான் வாய்ப்பு என்று உடனே இந்த பேச்சை ஆரம்பித்து வைத்துவிட்டனர். தேவேந்திரனும் பெண்ணை கொடுக்கிறேன் என்று மாமனாரிடம் கேட்டுவிட்டார்.

‘எதுக்கு இவர் உடனே அவசரப்பட்டு கேட்கணும்..? இப்போ இந்த பேச்சு தேவையா..?’

அக்கா மகள் மேல் தாய்மாமனுக்கு இல்லாத உரிமையா..? இது தான் எப்போதும், யாரிடமும். தலை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான்.

அவனின் அக்கா மகளுக்கு திடீரென இப்படி ஒரு எண்ணம் எங்கிருந்து வந்ததாம்..? அது வேறு மண்டைய குடைந்தது. அவர் வேலையாக இருக்குமோ..? அக்கா கணவர் தேவேந்திரன், அவர் மேல் பெரிய சந்தேகம் என்பதை தாண்டி முடிவுக்கே வந்துவிட்டான்.

‘நிச்சயம் அவர் தான் ஏதாவது பேசியிருப்பார்..? இல்லன்னா இவ இப்படி எல்லாம் பேசுற ஆள் கிடையாது, கிடைச்ச கேப்ல எதுவோ பண்ணிட்டார்.. இவரை..’ பல்லை கடித்து வெளியே வர, தேவேந்திரன் மீசைக்குள் நெளிவு. யோவ் சிரிக்கிறியா..? முறைத்து பார்த்தான். தந்தையும், மற்ற மருமகன்களும்  இருப்பதால் இந்த முறைப்பு, இல்லயென்றால் மேலே பாய்ந்திருப்பான்.

“எதுக்குய்யா இவ்வளவு கோவம்..? பொறுமையா இருப்பு பேசுவோம்..” ராஜலக்ஷ்மி மகன் கை பிடித்து சொல்ல,

“இனி பேச என்ன இருக்கு அத்தை..? அதான் அண்ணா பொண்ணு கொடுக்கிறேன் சொல்லிட்டாரே, இதுக்கு அப்புறமும் மச்சான் மறுத்து பேசினா தப்பாயுறும்னு அவருக்கு தெரியாதா..?” என்றார் இரண்டாம் மருமகன் விவகாரமாக.

“உங்களுக்கு ஏன் மாமா இவ்வளவு ஆர்வம் இதுல..?” ஜனகன் இடையில் கை வைத்து கேட்க,

“சுயநலம் தான் மச்சான், யாரோ இந்த வீட்டு மருமகளா வரதுக்கு எங்க பொண்ணு வந்தா எங்களுக்கு நல்லது தானே..” என்றார் அவர் சிரிப்புடன்.

“அப்படி சொல்லுங்கண்ணா.. நமக்கும் கடைசிவரை மாமியார் வீடு இருக்கும் இல்லை..” என்று மற்ற இரண்டு மருமகன்களும் உடனே கூட்டணி அமைக்க,  இதுக்கு மட்டும் ஒன்னு  சேர்ந்துக்குவாங்களே.. விவரம் தான்.. என்று பார்த்தனர் வீட்டு பெண்கள்.

மற்ற நேரங்களில் எல்லாம் அது சரி இல்லை, அவருக்கு மரியாதை அதிகம், என்னை அப்படி கவனிக்கலை, இப்படி கூப்பிடல என்று ஆயிரம் பஞ்சாயத்து தானே..!

வேலய்யனுக்கோ மகன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் எதுவும் வார்த்தை விட்டுவிட கூடாது என்பதில் மிக கவனம், உடன் பெரிய மகளின் அமைதியையும் குறிப்பெடுக்க தவறவில்லை. தேவேந்திரன் தான் இதுவரை பேசியிருக்கிறார். மகள் வாயை திறக்கவில்லையே. வீட்டின் பெரியவராக அவர் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.

மருமகன் கேட்டதுக்கு பதில் சொல்ல வேண்டி தொண்டையை செருமி கொண்ட வேலய்யன், “மாப்பிள்ளை.. இது உடனே முடிவெடுக்கிற விஷயம் இல்லை, வீட்ல கலந்து பேசுங்க, உங்க அப்பா, அம்மா, கூட பிறந்தவங்ககிட்ட பேசணும், நாமும் இங்க வீட்ல பேசிட்டு என்ன எதுன்னு பண்ணலாம்..” என்றார்.

“சரிதான் மாமா.. நான் கேட்டது என் ஆசையை, நடக்க வேண்டியது பார்த்து பண்ணிக்கலாம்..” என்றுவிட்டார் தேவேந்திரனும். தொடர்ந்து சில நிமிட அமைதி நிலவ, ஜனகன் ரூம் செல்ல பார்த்தான்.

“ஏய்யா இருப்பு சாப்பிட்டு போலாம், இன்னும் வீட்டு மாப்பிள்ளைங்க யாரும் சாப்பிடல..” என்றார் ராஜலக்ஷ்மி.

“சாரி மாமா.. எல்லாம் வாங்க சாப்பிடலாம், க்கா சாப்பாடு எடுத்து வை..” என்ற ஜனகன், வீட்டு மகனாய் அவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

இளையவர்கள் முதலிலே உண்டு தூங்க சென்றிருக்க, ‘கீர்த்தனா எனும் பொம்மி’ மட்டும் நகம் கடித்து அறையில் அமர்ந்திருந்தாள். இன்னும் உள்ளங்கைகள் வேர்த்து கொண்டே இருந்தது அவளுக்கு.

தொண்டை வறண்டிருக்க தண்ணீர் குடிக்க கூட வெளியே செல்லாமல் அமர்ந்திருந்தாள். நிச்சயம் மாமன் கண்ணில் பட்டால் கொட்டியே ஒரு அடி குறைத்துவிடுவான் என்று தெரியாதா..? சாப்பாடு அறையில் பேச்சு சத்தம் கேட்க, அரைகுறையாக சாப்பிட்டது  எங்கோ சென்றிருந்தது.

வெளியே ஆண்கள் பொதுவான பேச்சுடன் உணவை முடித்து எழுந்தனர். அடுத்து பெண்கள் உண்ண அமர, ஜனகன் அமைதியாக ரூம் சென்றுவிட்டான். நின்று பேசினால் அதுவே தான் தொடரும், எதற்கு வம்பு என்று ஓடிவிட்டான்.

தேவேந்திரன் செல்லும் அவனை பார்த்து மீசைக்குள் சிரித்தவர், தங்களுக்கான அறைக்கு சென்றார். மகள் அமர்ந்திருக்க, “என்ன கண்ணு..?” என்றார் தந்தை.

“தண்ணீர் வேணும்ப்பா.. பசிக்குது..” என்றாள் மகள். தேவேந்திரன் மனைவிக்கு குரல் கொடுத்து, உணவும், தண்ணீரும் எடுத்து வர செய்தார்.

பானுமதி அறைக்கு வந்தவர்  மகளிடம் ஏதோ கோவமாக பேச வர, “இப்போ எதுவும் பேசாத பானு, அவ சாப்பிட்டு தூங்கட்டும்..” என்றார் உடனே தேவேந்திரன். பானுமதி இருவரையும் முறைத்து வெளியே சென்றுவிட்டார்.

அந்த இரவு அந்த குடும்பத்தில் அமைதியில் முடிய, பக்கத்துக்கு வீட்டிற்கு கார் வந்து  நின்றது. பசுபதி இந்த வீட்டை பார்த்துக்கொண்டே தங்கை வீட்டிற்குள் சென்றான்.

“வாங்கண்ணா..” என்று தங்கை வரவேற்க,

“என்ன ஆச்சு..?” என்றார் அவர் விசாரணையாக.

“முடிஞ்சு போச்சு..” என்றார் பெண்ணை பெற்ற ஆறுமுகம் பெரு மூச்சுடன்.

“நல்லது..” பசுபதி முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி.

‘நல்லதா..?’ ஆறுமுகத்திற்கு கோவம் தான், திருமண சம்மந்தம் முறிவு என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதுவும் இவர்களாகவே முறித்திருக்க, எவ்வளவு பேச்சுக்களை கடக்க வேண்டி வருமோ, பெண் வாழ்க்கை, அவர் கவலை அவருக்கு, சீறலான மூச்சை இழுத்துவிட்டார் ஆறுமுகம்.

“மாப்பிள்ளை கோப்படாதீங்க.. நாம என்ன வேணும்ன்னா அவங்க சம்மந்தத்தை வெட்டிவிட்டோம், நம்ம பொண்ணை விட, அந்த நிலத்துக்கு அவங்க அவ்வளவு முக்கியத்துவம்  கொடுக்கிறாங்கன்னு போது இது எப்படி சரியா வரும் சொல்லுங்க,  அப்படி என்ன அங்க நம்ம பிள்ளையை அங்க கொடுத்தே ஆகணும்ன்னு, இவனை விட்டா வேற மாப்பிள்ளை இல்லையா என்ன..?” என்றார் பசுபதி வினயமாக.

முடிந்துவிட்டது, இனி அதை பற்றி பேசி மட்டும் என்ன ஆக போகிறது என்று பார்த்தார் ஆறுமுகம்.

“நீங்க கொஞ்ச நாள் இதை இப்டியே விடுங்க மாமா, நானே முன்ன  நின்னு என் தங்கச்சி மகளுக்கு சம்மந்தம் பார்த்து கட்டி வைக்கிறேன்.. இவன் என்ன பேங்க் வேலை, நாம லட்சத்துல சம்பாதனை பண்ற மாப்பிள்ளை பார்ப்போம்..” சமாதானமாக பேசி, வெளியே வந்தார்.

உடன் வந்த தங்கையிடம், “உன் பொண்ணை கொஞ்சம் பார்த்துக்கோ, அவ அழுகை எனக்கு சரியா படலை..” என்றார் பசுபதி எச்சரித்து.

“என்ன அழுது என்ன பண்ண, ஜனகன் தான் வேணா சொல்லிட்டு போய்ட்டானே, அப்போ அது அவ்வளவு தான்..” என்றார் அவர்.

“அவன் சொல்லிட்டான்னா சரி தான்.. நான் கிளம்புறேன்..” என்று பசுபதி கிளம்ப போக,

“ண்ணா.. நீ எதுக்கும் அந்த நிலம் விஷயத்தில கொஞ்சம் உஷரா இருந்தா நல்லதோன்னு தோணுது..” என்றார் தங்கை.

“நான் ஏன் கவலை பட போறேன்..? அந்த நிலம் எனக்காக இல்லை, சேர ஆளு, விஷயம் எல்லாம் ரொம்ப பெருசு, இவங்க போய் அந்த மனுஷன்கிட்ட என்ன செஞ்சிட முடியும், வேலையை பாரு நீ..” என்று கிளம்பிவிட்டார்.

மறுநாள் காலையில் ஜனகனின் வீட்டில் அக்காக்கள் குடும்பம் கிளம்ப ஆயத்தமாகினர். வந்த வேலை முடிந்தது, வேலையை பார்க்க வேண்டுமே. காலை உணவு முடிய, ஜனகன் பேங்க் செல்ல கிளம்பி வந்தான்.

ராஜலக்ஷ்மி கீழே அமர்ந்திருந்தவர் மகனுக்கு உணவு வைக்க எழ, “நீங்க இருங்கம்மா..” என்ற மகன், “பானு க்கா..” என்று கூப்பிட்டு அமர்ந்தான்.

பானுமதி வந்தவர், தம்பிக்கு இட்லி வைக்க, “மாமா சாப்பிட்டாரா..?” என்று கேட்டான்.

“எல்லாம் ஆச்சு..” என்று சட்னி வைக்க,

“இப்போ என்ன ஆச்சுன்னு என் மூஞ்சி பார்க்க மாட்டேங்கிற நீ..?” தம்பி அடிக்குரலில் கேட்டான்.

“சாப்பிட்டு எழுந்து போ..” பானுமதியும் அடிக்குரலில் சொல்ல,

“நான் ஒன்னும் இப்போவே உன் மக கழுத்துல தாலி கட்டிடலை, பேச்சு தான்..” என்றான் தம்பி.

“நீ தாலியே கட்டிட்டாலும் எனக்கு ஒன்னுமில்லை, என்னை யாரும் கேட்கவும் இல்லை, நான் பெத்த கழுதை கூட..” என்றார் வெளியே வந்த மகளை பார்த்து கொண்டே. ஜனகனும் அவளை பார்க்க, அப்படியே பேக் அடித்து ரூமுக்கு ஓடிவிட்டாள் கீர்த்தனா.

“அடேயப்பா அவ்வளவு பயந்தவளா உன் மக..” ஜனகன் கேலியாக கேட்க, பானுமதி முகத்தில் கவலையே.

“என்னக்கா..?” தம்பி அவள் கை பிடித்து கேட்க,

“நீ சாப்பிடுடா.. எல்லாம் கிளம்ப காத்திருக்காங்க, உனக்கும்  நேரமாச்சு..” பானுமதி சொல்ல, ஜனகன் பிறகு பேசி கொள்ளலாம் என்று உணவை முடித்து எழுந்தான்.

தேவேந்திரன் போன் பேசி கொண்டிருக்க, மற்ற அக்காக்கள் சொல்லி கொண்டு கிளம்பினர். தேவேந்திரன் பேசி முடித்து வந்தவர், “எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு, முடிச்சுட்டு வந்து உங்களை கூப்பிட்டுகிறேன்..” என்று மனைவி, மகளிடம் சொன்னவர், “கிளம்புறேன் மாமா..” என்றார்.

ஜனகன் கை கட்டி அவரை பார்த்து நின்றிருக்க, “வரேன் மச்சான்.. ம்ம்ம்.. இப்படி இல்லை,  வரேன் மாப்பிள்ளை..” என்றார். ஜனகன் அப்பா இருப்பதால் வாய் மூடி நிற்க, “ஈவினிங் பார்க்கலாம் மாப்பிள்ளை.. வரேன்..” தேவேந்திரன் திரும்ப அழுத்தி சொல்லி  சென்றார்.

‘ரொம்ப சீண்டுறார்..’ ஜனகன் காரில் ஏறி செல்பவரை பார்த்து நின்றான்.

கீர்த்தனா அப்பா கிளம்பவும் மெல்ல நழுவி அறைக்கு ஓட, “பொம்மா..” என்றான் ஜனகன்.

கூப்பிட்டுட்டார்.. அவள் திரும்பி நிற்க, “எப்போ லீவ் முடியுது..?” என்றான் விசாரணையாக.

“இன்னும் ஒரு மாசம் இருக்கு மாமா..” என்றாள் பெண்.

“மாமா, உன் அப்பா என்ன பேசினார் உன்கிட்ட..?” என்று கேட்க,

“அப்பா.. அவர் என்ன பேசினார், ஒன்னும் இல்லை மாமா..” என்றாள்.

“பொம்மா.. சரியா சொல்லு, அவர் பேசாம நீ இப்படி பேச மாட்ட..? என்ன விஷயம்..?” கூர்மையாக கேட்க,

“நீங்க நான் சொல்றதை நம்பலைன்னா அப்பாகிட்டே கேட்டுக்கோங்க மாமா..” என்றாள் பெண் ரோஷத்துடன்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, ஒழுங்கா படிக்கிறதுல கவனத்தை வை..” என்றான் அதட்டலாக.

“படிக்கிறது நான் படிச்சுப்பேன் மாமா.. இப்போ எதுக்கு அது..? நீங்க வேணும்ன்னே அதை வைச்சு என்னை பேசுறீங்க..” என்றாள்.

“ஆமா.. அப்படி தான்..”

“ஏன் அக்கா மகளை கட்டிக்க உங்களுக்கு என்ன கஷ்டம், இவ்வளவு பண்றீங்க..?”

“அடிங்க.. என்ன பேச்சுடி இது, தொலைச்சிடுவேன்.. இன்னும் வளரவே இல்லை, அதுக்குள்ள கல்யாணம்..”

 

“நீங்க முதல்ல வளருங்க மாமா, சும்மா சும்மா என்னை மிரட்டிட்டு இருக்கலாம் நினைக்காதீங்க.. அக்கா மகன்னு பாசம் இல்லாம, ரொம்ப தான் அரட்டல்.. க்கும்..” என்று கழுத்தை நொடித்து சென்றாள் பெண்.

Advertisement