Advertisement

திருநெல்வேலி:

குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கு அமைதியாக இருந்த அந்த இறுதி ஆண்டு வகுப்பறையினுள் ஆச்சரியத்துடன் அபிசாரா காலடி எடுத்து வைத்த நொடி, ‘டப்’ ‘டப்’ என்ற சத்தத்துடன் வண்ண வண்ண காகித தூள்கள் பறக்க, மாணவர்கள் “ஹாப்பி பர்த் டே மேம்” என்று கூச்சலிட்டனர்.
இன்ப அதிர்ச்சியுடன் “தன்க் யூ” என்ற அபிசாரா, அங்கே வகுப்பின் நடுவே சிறு மேஜையின் மீது அவளுக்கு பிடித்த பிஸ்தா கேக் இருந்ததை பார்த்து செல்ல முறைப்புடன், “என்ன டா இதெல்லாம்?” என்றாள்.
“இதான் மேம் எங்களுக்கு கடைசி வருஷம்… அதான்” என்று ஒரு மாணவி கூற, 
“எங்க அபி மேம் பர்த்டே… காலேஜ்ஜே சும்மா அதிர வேணாமா!” என்று ஒரு மாணவன் கூற,
“அதானே! தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேணாமா! போட்றா பாட்டை” என்று மற்றொரு மாணவன் கூற,
“ஷீ இஸ் அ பேன்டசி… ஷினா-நன் நானா ஒ ஓ…
ஸ்வீட் அஸ் அ ஹார்மொனி… ஷினா-நன் நானா ஒ ஓ…
நோபடி நோஸ் ஷீ’ஸ் அ மிஸ்டரி… ஷினா-நன் நானா ஒ ஓ…
பில்ஸ் யுவர் ஹார்ட் வித் எஸ்டஸி… வாவூ வாவூ ஹேஹி ஹே ஹே
ல லாலா லல லாலா… லல ல லா லாஆஆ…
ல லாலா லல லாலா… லல ல லா லாஆஆ…
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே…என்றப் பாடல் ஒலிபெற,
அபிசாரா, “டேய்!!” என்று உண்மையாகவே மிரட்டினாள்.
அவளது மிரட்டலை பொருட்படுத்தாமல் பாடல் தொடர்ந்து ஒலிக்க, ஒரு மாணவன், “கேக் கட் பண்ணுங்க மேம்” என்றபடி கத்தியை அவளிடம் நீட்ட,
அபிசாரா, “பாட்ட நிறுத்துங்க டா” என்று சற்று குரலை உயர்த்தி கூறவும், பாட்டை நிறுத்தினர்.
அவள் அவர்களை முறைக்க, மாணவனோ, “கேக் கட் பண்ணிட்டு நிதானமா முறைங்க மேம்” என்று அசால்ட்டாக கூறினான்.
அவள் இன்னும் முறைத்தபடியே நிற்க, மற்றொரு மாணவன், “மேம்… எவ்ளோ நேரம் தான் பார்த்துட்டே இருக்குறது? சீக்கிரம் கேக்கை வெட்டி சாப்பிட தாங்க மேம்” என்று கூற,
“அடேய் தீனிக்கு பொறந்தவனே!” என்று யாரோ கூற, அபிசாரா சிரித்துவிட்டாள்.
அதன் பிறகு கூச்சல்களுக்கு நடுவே அவள் கேக்கை வெட்ட, மாணவர்கள் முதல் துண்டை அவளை சாப்பிட வைத்தனர். அதன் பிறகு கேக்கை மாணவர்கள் உண்டதை விட முகத்தில் பூசிக் கொண்டது தான் அதிகம். ஓடிப்பிடித்து விளையாடி முகத்தில் கேக்கை பூசியதில் பாதி தரையில் விழுந்திருக்க, அடுத்த பத்து நிமிடத்தில் வகுப்பறை அலங்கோலமாக காட்சியளித்தது.
முதலில் மாணவர்களை கட்டுபடுத்த முயற்சித்த அபிசாரா பிறகு அமைதியான மென்னகையுடன் அவர்களது கலாட்டாவை ரசித்துக் கொண்டிருக்க, “வாட் தி ஹெல் இஸ் கோயிங் ஆன்?” என்ற கடுமையான குரலில் அனைவரும் அமைதியாகி, அப்படி அப்படியே இருந்த நிலையில் சிலையாகினர்.
கோபத்துடன் வகுப்பறையினுள் வந்த சேர்மன் சர்வேஷ், “பதினைஞ்சு நிமிஷத்தில் கிளாஸ் ரூம் பழையபடி திரும்பி இருக்கணும்… க்ளீன் இட்” என்று கர்ஜிக்க, மாணவர்கள் வேக வேகமாக அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.
அபிசாரா சிறு பதற்றத்துடன் நிற்பது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் சாதாரணமாக தான் இருந்தாள்.
சர்வேஷ் அபிசாராவை முறைத்தபடி, “மீட் மீ இன் மை ரூம் ஆஃப்ட்டர் திஸ் ஹவர்” என்று கூறிவிட்டு செல்ல,
மாணவர்கள், “சாரி மேம்” என்று சோகமாக ஒருமித்த குரலில் கூறினார்கள்.
அவளோ புன்னகையுடன், “நோ ப்ராப்ளம்… ப்ரீயா விடுங்க” என்றாள்.
அவர்கள் அமைதியாக இருக்கவும், அவள், “திட்டு வாங்கப் போற நானே கவலைப்படலை…” என்று முடிக்கும் முன் சில மாணவர்கள், “அதான் மேம் பீல் பண்றோம்… எங்களை திட்டினா, துடைச்சு போடுட்டு போயிட்டே இருப்போம்… எங்களால் உங்களுக்கு திட்டு கிடைக்கும் போது… அதுவும் உங்க பர்த்-டே அன்னைக்கு…” என்று இழுத்து நிறுத்த,
அவள் மென்னகையுடன், “எவ்வளவோ பார்த்துட்டோம்! இத பார்க்க மாட்டோமா!” என்றாள். 
அவர்கள் முகம் தெளியாததை பார்த்து அவள், “சேர்மன் சார் அவர் ஸ்டைலில் என்னை விஷ் பண்ணப் போறார்.. அவ்ளோ தான்… சீர்-அப் கய்ஸ்… என் பர்த்-டே அதுவுமா இப்படி வயலின் வாசிக்காதீங்க..” என்றாள். 
அப்பொழுதும், “ஓகே மேம்” என்று சுருதி இறங்கிய குரலில் தான் கூறினர்.
“புதன்கிழமை ஹிட்லர் பதினொரு மணிக்கு தானே நம்ம காலேஜ் வருவாருன்னு கொஞ்சம் கத்திட்டோம்…” என்று ஒரு மாணவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே,
அபிசாரா கண்ணை உருட்டியபடி, “கொஞ்சமாவா சத்தம் போட்டீங்க?” என்றாள்.
அந்த மாணவன் சிறிது அசடு வழிந்தபடி, “கொஞ்சம் சத்தமா சத்தம் போட்டோம்” என்றான்.
“சரி விடுங்க” என்றவள்  அறையை சுத்தம் செய்யும் வேலையில் இறங்க,
மாணவர்கள் அவசரமாக, “நாங்க கிளீன் பண்றோம் மேம்” என்று அவளை தடுத்து அறையை சுத்தம் செய்ய தொடங்கினர். அடுத்த பதினைந்து நிமிடத்தில் அறை பழைய நிலையை எட்டியது.
மாணவர்கள் சார்பாக மாணவன் ஒருவனும், மாணவிகள் சார்பாக மாணவி ஒருத்தியும் பரிசுகளை அபிசாராவிடம் கொடுக்க, அவள் முறைப்புடன் வாங்க மறுத்தாள். அனைவரும் சேர்ந்து கெஞ்சி வாங்க வைத்தனர்.
அதன் பிறகு அவள், “மனோ இன்னும் பிப்டீன் மினிட்ஸ் இருக்குது… செமினார் எடு” என்றாள்.
ஒரு மாணவன், “உங்க பிறந்தநாளை முன்னிட்டு…” 
“நீ செமினார் எடுக்க போறியா?” என்று அபிசாரா முடிக்க, அவன், “மேம்..!” என்று அலறினான்.
“பாய்ஸ், பன்ஸ் அப்பார்ட்… பார்ட்டி டைம் ஓவர்” என்று மென்னகையுடன் கூறிய அபிசாரா அந்த மாணவியை பார்த்து தலை அசைக்க, அந்த மாணவி மேடை ஏறி நடத்த ஆரம்பித்தாள். அபிசாராவிற்காக மாணவர்களும் ஒழுங்காக கவனிக்க ஆரம்பித்தனர்.
அந்த மாணவி நடத்தி முடித்து இடத்தில் அமர்ந்ததும் ஒரு மாணவன், “மேம் எனக்கு ஒரு டவுட்” என்றான். 
“என்ன?” என்று அபிசாரா வினவ,
அந்த மாணவன் அருகே இருந்த இன்னொரு மாணவன், ‘நீ அவ்ளோ அறிவாளியா?’ என்பது போல் பார்க்க, இவன், “டவுட் பாடத்தில் இல்லை” என்றான். 
அபிசாரா வாடாத புன்னகையுடன், “கேளு” என்றாள்.
“இந்த செம் ஏன் நிறைய செமினாரா தரீங்க?” 
“ஏன்?” 
“உங்க டீச்சிங் ஸ்கில் பத்தி எங்களுக்கு தெரியும்.. இருந்தாலும்…” என்று அவன் இழுக்க,
அபிசாரா, “ஏன் ஓப்பி அடிக்கிறேன்னு கேட்கிறியா?” என்று கேட்டாள். 
அந்த மாணவன் அசடு வழியவும், அவள், “நான் நடத்தினா மட்டும் கவனிப்பியா?” 
“கண்டிப்பா மேம்” 
அவள் பார்த்த பார்வையில் அவன் சிறு திணறலுடன், “கவனிப்பேன் மேம்” என்றான்.
அவள், “இது ஒரு மானேஜ்மென்ட் தியரி பேப்பர்… முக்கியமான கான்செப்ட் நான் நடத்திட்டேன்… மத்தபடி இதில் நடத்த பெருசா எதுவும் இல்லை… அண்ட் இது உங்களுக்கு லாஸ்ட் செம், நீங்க செமினார் எடுத்தா உங்களுக்கு  எக்ஸ்பிரியன்ஸ் கிடைக்கும், கிளாஸ்சும் கொஞ்சம் ஜாலியா போகும்…” 
அதை கேட்டு ஒரு மாணவன் கைதட்டியபடி, “செம மேம்” என்றான்.
அபிசாரா, “ஸ்ப்பா மிடில(முடியலை) டா” என்றாள்.
அப்பொழுது வகுப்பு முடிந்ததின் அறிகுறியாக மணி அடிக்கவும், “தன்க் யூ பிரெண்ட்ஸ்” என்றபடி வெளியேறினாள்.
ஆசிரியர் அறைக்கு சென்றவள் பரிசு பொருட்களை தனது இடத்தில் வைத்துவிட்டு சேர்மேன் சர்வேஷைப் பார்க்கச் சென்றாள்.
அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே சென்றவளைக் கடுமையாக முறைத்த சர்வேஷ், “உங்க மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கிறீங்க? இது காலேஜ்… கூத்தடிக்க உங்க வீடு இல்லை” 
“சாரி சார்” 
“சாரி! அ வொர்ட் ஆஃப் எஸ்கேபிஸம்” என்று கோபத்துடன் கூறி திட்ட ஆரம்பிக்க, அவள் பார்வையைச் சற்று தாழ்த்தியபடி அமைதியானாள்.
இடைவிடாது திட்டிய சர்வேஷ், “எனக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம்…” என்று பேசவும்,
சட்டென்று தீர்க்கமான பார்வையுடன் நிமிர்ந்து பார்த்தவள், “ஒழுக்கத்திற்கு பங்கம் வரது போல் எதுவும் நடந்ததா எனக்கு தெரியலை சார்” என்றாள். 
“ஒழுக்கம்னு டிஸ்சிலிப்லினை மீன் பண்றேன்” 
“அதையும் சேர்த்துத் தான் சார் சொல்றேன்… அவங்களுக்கு இது கடைசி செம்… இன்னைக்கு என் பிறந்த நாள்… ஸோ சின்னதா ஒரு என்ஜாய்மென்ட்… அது கூட பத்து நிமிஷம் தான். அதுக்கு அப்பறமா எல்லா நாளையும் மாதிரி கிளாஸ் நார்மல்லா தான் போச்சு… இன்னைக்கு முடிக்க வேண்டிய டாபிக் முடிச்சாச்சு… இந்த வயசில் என்ஜாய் பண்ணாம, வேற எப்போ பண்ணுவாங்க? அவங்க ரோபோவோ, கடிவாளம் கட்டிய குதிரையோ இல்லை. இதுக்கும் அந்த கிளாஸ்ஸில் எண்பது சதவிதம் பேருக்கு வேலை கிடைச்சிருச்சு… எல்லோரும் பொறுப்பான பசங்க தான்” என்று நீளமாக பேசி முடித்தாள்.
மனதினுள், ‘அப்படியே அம்மா மாதிரி’ என்று நினைத்த சர்வேஷ் வெளியே முறைப்புடனே, “யூ மே கோ” என்றதும்,
அவள், “தன்க் யூ சார்” என்றுவிட்டு வெளியேறினாள்.

நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement