Advertisement

தனது வருகையைக் கூட உணராது கலங்கிய நிலையில் அமர்ந்திருந்த மகளைக் கண்டு ப்ரனேஷின் மனம் வெகுவாக வருந்தியது. இருப்பினும் மகளுக்காக அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “அம்மு” என்று அழைத்தபடி அவளது தலையை வருடினார்.
தந்தையின் அழைப்பில் தனது சிந்தனையில் இருந்து வெளியேறியவள் அவரது தோள் சாய்ந்து கண்ணீர் சிந்தினாள்.
ப்ரனேஷ் அவளை அணைத்தபடி, “எல்லாம் சரியாகும் டா… அழக் கூடாது… அம்மு எப்போதுமே தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்த பொண்ணு”  என்றார்.
அவள், “ஏன் ப்பா ஏன்? ஏன் இந்த பொண்ணு பார்க்கிறதை அரேஞ் பண்ணீங்க? முன்னாடி அவன் என்னை வெறுக்கணும்னு தான் அப்படி பண்ணேன்… கஷ்டப்பட்டு அவனை காயப் படுத்தும் வார்த்தைகளை பேசிட்டு வந்தேன், ஆனா இப்போ அவனோட வெறுப்பை என்னால தாங்க முடியலையே ப்பா” என்று கதறினாள்.
மகளின் முதுகை தடவிக் கொடுத்த ப்ரனேஷ், “வர்மா உன்னை உண்மையா காதலிக்கிறாரா இல்லை சும்மா ஜஸ்ட் லைக் தட் காதலித்தாரா?” 
அந்த நிலையிலும் கண்ணீர் நிறைந்த விழிகளுடன் தந்தையை அவள் முறைக்க, அவர் மென்னகையுடன் அவளது கன்னத்தை தட்டி, “உண்மையான காதலில் என்னைக்குமே வெறுப்பு வராது டா… அவரே நினைத்தாலும் அவரால் உன்னை வெறுக்க முடியாது” 
மறுப்பாக தலை அசைத்தவள், “அவன் இந்த கல்யாணத்தை நிறுத்தச் சொல்லிட்டு போய்ட்டான்” என்றாள்.
அதைக் கேட்டு ப்ரனேஷ் ஒரு நொடி அதிர்ந்தாலும், அதை சிறிதும் வெளியே காட்டிக்கொள்ளாமல், “நீ அதை செய்ய மாட்டனு அவருக்குத் தெரியும், அதான் தைரியமா சொல்லிட்டு போயிருக்கார்” 
அவள் நம்பிக்கை இன்றி பார்க்கவும், அவர், “உண்மையை தான் டா சொல்றேன்… உன் மேல் இருக்கும் கோபத்தை அவர் இப்படி வெளிபடுத்தி இருக்கலாம்… உனக்கே தெரியும், வர்மாவை கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது… இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைனா அதை திடமா எங்க கிட்ட தான் சொல்லி இருப்பார்… ஆனா அவர் எங்க கிட்ட மறுத்து எதுவும் சொல்லலை” 
அபிசாராவின் விழிகளில் நம்பிக்கையின் சாயலை கண்டவர், “அப்போ அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருந்த நீ, அப்படி ஒரு முடிவை எடுத்து பேசிட்ட… வர்மா கிட்ட உன்னோட சூழ்நிலையை எடுத்து சொன்னா புரிஞ்சுப்பார் டா” 
‘இல்லை பா… அவனோட வலி பெருசு… உண்மை தெரிந்ததுக்கு அப்புறமும் அவன் என்னை மன்னிக்கிறது கஷ்டம் தான்… அவனோட இடத்தில் இருந்து யோசிச்சா, எந்த நிலையிலும் யாருக்காகவும் நான் அவனை விட்டுக் கொடுத்து இருக்கக் கூடாது… அது சரியும் கூட… அவன் என்னை மன்னிக்கிறது ரொம்ப கஷ்டம்’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள் வெளியே அமைதியாக இருந்தாள்.
அவளது முகத்தை கண்டே, எதையோ நினைத்து மருகுகிறாள் என்பதை புரிந்து கொண்ட ப்ரனேஷ், “அப்பாவை நம்புற தானே டா?” என்று கேட்டார். 
அவள் அமைதியாக ‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தாள்.
ப்ரனேஷ், “வர்மாக்கு நிச்சயம் உன் மேல் வெறுப்பு இருக்காது, ஆனா கோபம் இருக்கும்… காயத்தை ஏற்படுத்திய நீ தானே மருந்து போடணும்! அவரோட கோபத்தை தாங்கிகிட்டு, உன்னோட அன்பால் உங்க காதலை உயிர்பிக்க உன்னால் முடியாதா?” 
சட்டென்று அவளுள் ஒரு திடம் பிறக்க, நம்பிக்கையுடன், “முடியும் ப்பா” என்று உறுதியான குரலில் கூறினாள்.
ப்ரனேஷ் புன்னகையுடன், “தட்’ஸ் மை கர்ள்” என்றபடி அவளது நெற்றியில் முத்தமிட்டார்.
அவளும் புன்னகையுடன், “தேங்க்ஸ் ப்பா” என்று கூறி அவரை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
ப்ரனேஷ் அதே புன்னகையுடன், “சீக்கிரம் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா… வர்மா பரென்ட்ஸ், பாட்டி எல்லோரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிறாங்க” 
அவள் தனது புடவையை ஆராய, அவர், “இதே நல்லா தான் டா இருக்குது… ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைக்கக் கூடாது… சீக்கிரம் ரெப்ரெஷ் ஆகிட்டு வா” என்றார். 
“சரி ப்பா” என்று கூறி குளியலறையினுள் சென்றாள்.
மகிழுந்தை வேகமாக ஓடிக் கொண்டிருந்த மதிவர்மன், ‘நோ… எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ள,
அவனது மனசாட்சி, ‘இதை அங்கேயே சொல்லிட்டு வந்திருக்க வேண்டியது தானே!’ என்று நக்கல் செய்தது.
அவன், ‘சொல்லி இருப்பேன் தான்… என் கோபத்தை கட்டுப்படுத்த முடியாம வார்த்தையை விட்டுறக் கூடாதேனு தான் வந்துட்டேன்’ 
‘இந்த கட்டுப்படுத்த முடியாத கோபம் எதனால் வந்தது? வாழ்க்கை முழுவதும் சந்தோஷமா வச்சுக்க நினைத்த உன்னவளின் கண்ணீரை துடைக்கவோ, தடுக்கவோ முடியலையே என்றதால் வந்த கோபம்’ 
‘அவ ஒன்னும் என்னவள் இல்லை’ 
‘சரி அவளே வேணாம்னா, அவ அப்பா கிட்ட கோபத்தில் தப்பா பேசினா தான் என்ன? நின்னு பேசிட்டு வந்திருக்க வேண்டியது தானே? உண்மை என்னனா உன் கோபம் எல்லாம் அவளை பார்க்கிற வரை தான்’ 
‘உளறாத’ 
‘உளறல் இல்லை… நிஜம்’ 
‘நோ’ 
‘என்னை உன்னால் ஏமாத்த முடியாது…’ 
‘நோஓஓ’ என்று வாய்விட்டு சொல்லியபடி வண்டியை நிறுத்தி இருந்தான்.
அவனது மனசாட்சியோ, ‘கத்தினாலும் அது தான் உண்மை’ என்றது.
 ‘இல்லை… நான் அவ கிட்ட கோபமா தானே பேசிட்டு வந்தேன்!’ 
‘அவ அழுகையை பார்க்க முடியாம வேகமா வந்துட்ட’ 
‘அவ கண்ணீரை பார்த்ததுக்கு அப்புறம் தான் இந்த கல்யாணத்தை நிறுத்தச் சொன்னேன்’ 
‘அவ அதை செய்ய மாட்டாங்கிற தைரியத்தில் தானே சொல்லிட்டு வந்திருக்க?’ 
‘ஏன் செய்ய மாட்டா? நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் வேண்டாம்னு போனவ தானே!’ என்று கோபமாக கூறிக் கொண்டான்.
‘உன்னால் அவளை வெறுக்க முடியாது… இன்னமும் உன் மனதில் அவள் இருக்கிறாள்… அதான் சாரானு கூப்பிட வந்து அபிசாரானு சொன்ன’ 
அவனது மனசாட்சி தொடர்ந்து, ’அவள் இல்லாமல் உன்னால் இருக்க முடியுமா?’ என்று வினவ,
அவன் கோபமாக, ‘முடியும்… என் மனதிலோ வாழ்விலோ இன்னொருத்திக்கு இடம் இல்லை தான்… ஆனா என் வாழ்வில் அவள் முடிந்துப் போன அத்தியாயம் தான்… என் காதலை கொச்சைப் படுத்தி, என்னை வேணாம்னு தூக்கி போட்டுட்டு போனவ எனக்கு வேணாம்…’ என்றான். 
என்ன தான் அபிசாராவை முடிந்துப் போன அத்தியாயம் என்று அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டாலும், அவளது நினைவுகள் என்றும் போல் இன்றும் துரத்த, அதை விரட்டும் முயற்சியாக சஞ்சயை கைபேசியில் அழைத்தான்.
சஞ்சய் அழைப்பை எடுத்ததும், “உடனே கிளம்பி கெஸ்ட் ஹௌஸ் வா” என்று கூறியவன் அவனது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்து வண்டியை கிளப்பினான்.
வண்டியை முன்பை விட வேகமாக செலுத்தியவன் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் விருந்தினர் மாளிகையில் இருந்தான்.
இவன் அழைப்பை துண்டித்ததும், சஞ்சய், ‘என்னாச்சு இவனுக்கு? எவ்ளோ வேலை இருக்குது! இவன் குரலே சரியில்லையே!’ என்று நினைத்தான். 
பிறகு, ‘அந்த குரங்கு எதுவும் சொல்லி இருக்குமோ?’ என்று யோசித்தான்.
ஆனால் அடுத்த நொடியே, “ச… ச… இவன் குரலோட டெசிபெல் வச்சு பார்த்தா அப்படி தெரியலை… ஒருவேளை வீட்டுக்கு போனப்ப அங்கிள் அபிசாரா பத்தி எதுவும் கேட்டு இருப்பாங்களோ? ஆத்தி! நல்லா இருந்தாலே நம்மளை வச்சு செய்வானே! இப்போ!!!’ என்று அலறியவன், ‘இப்போ என்ன பண்ண? போகலைனாலும் பொங்கல் வைப்பானே!!!’ என்று புலம்பினான்.
சில நொடிகளில், ‘ஹ்ம்ம்… இந்த பிரம்மா என் தலை எழுத்தை எழுதும் போது இவனுக்கு இடி தாங்கியா இருக்கும்படி எழுதிட்டார் போல!’ என்று பெருமூச்சை வெளியிட்டவன், ‘சிங்கத்துக்கிட்ட சிங்கிள்ளா போய் சிக்குறதைத் தவிர வேற வழி இல்லை!’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்.
அவனது மனசாட்சியோ, ‘என்னோவோ எப்போதும் கூட்டத்தோட போற மாதிரி தான்!!’ என்று கூற,
அவன், ‘சிங்கத்தோட நண்பன் சிங்கம் தானே! அதான் சிங்கிள்ளா போறேன்’ என்று கூற, அவனது மனசாட்சியே காறித்துப்ப,
‘ரைட்டு விடு’ என்று அதை துடைத்துப் போட்டுவிட்டு கிளம்பினான்.
அபிசாரா கீழே வந்ததும் இனியமலர் மகள் அருகே செல்ல, அவள் மனதின் படபடப்பை மறைத்தபடி அன்னையை பார்த்து புன்னகைத்தாள். இனியமலரும் புன்னகைத்தபடி அவளது கையைப் பற்றி, பிடியில் சிறு அழுத்தம் கொடுத்து தைரியம் கொடுக்கவும், அவளது படப்படப்பு சற்று குறைந்தது. ப்ரனேஷ் புகழ்வேந்தன் அருகில் அமர்ந்துக் கொண்டார்.
சமையலறையில் இருந்து வெளியே வந்த சாரதா காப்பி குவளைகள் அடங்கிய தட்டுடன் அபிசாராவை நோக்கிச் செல்ல,
“இந்த பார்மாலிடீஸ் எதுக்கு? நீங்களே எல்லோருக்கும் குடுத்துருங்கமா…” என்ற மித்ராணி அபிசாராவைப் பார்த்து, “அபி… இங்க வந்து உட்காரு” என்றார்.
அபிசாரா அன்னையைப் பார்க்க, அவர், “அத்தைப் பக்கத்தில் உட்காரு டா” என்றார்.
அபிசாரா மித்ராணி மற்றும் கலைவாணி நடுவில் அமர்ந்தாள்.
மித்ராணி புன்னகையுடன் அவளது கையை பற்றியபடி, “ரிலாக்ஸ் அபி… ஜஸ்ட் அ பாமிலி கெட்-டு-கதர்னு நினைச்சுக்கோ” என்றார்.
சாரதாவிடமிருந்து தட்டை வாங்கிய அன்பரசி அனைவருக்கும் காப்பியைக் கொடுத்தார்.
மித்ராணி, “அபி… வர்மாவை கல்யாணம் செய்துக்க சம்மதமா?” என்று வினவ,
அவள் நெஞ்சின் படபடப்பை மறைத்து புன்னகைக்க முயற்சித்தபடி மெல்லிய குரலில், “மதிக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்” என்றாள்.
மித்ராணி, “உன் விருப்பத்தை தான் நான் கேட்டேன்” என்று சற்று அழுத்தத்துடன் வினவ, அவள் சற்று திணறியபடி ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
கலைவாணி, “புகழ் இந்த தாம்பாளத்தை சம்பந்தி கிட்ட குடு… ஆதி அண்ணி தலையில் இந்த பூவை வச்சு விடு” என்றார்.
புகழ்வேந்தன் புன்னகையுடன் புடவை, பழங்கள், வெற்றிலைப் பாக்கு அடங்கிய தாம்பாளத்தை ப்ரனேஷிடம் கொடுக்க, ப்ரனேஷும் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டார்.
நேத்ரா இந்த நிகழ்வை கைபேசியில் புகைப்படம் எடுக்க, அவளது அறிவுரைப் படி யான்விஸ்ரீ கைத் தட்ட, பெரியவர்களும் மகிழ்ச்சியுடன் கைத் தட்டினர்.

Advertisement