Advertisement

அழைப்பை எடுத்த ப்ரனேஷ், “சொல்லு புகழ்” 
“பங்ஷன் ஏற்பாடெல்லாம் எப்படி போயிட்டு இருக்குது?” 
“பைன்… பெருசா வேலை எதுவும் இல்லை…” 
“கெஸ்ட் எல்லோரும் வந்தாச்சா?” 
“சர்வா பாமிலி அண்ட் இனியா சிஸ்டர் அவந்தியும் அவந்தியோட பொண்ணும் வந்திருக்காங்க… நீ போன் பண்ண விஷயத்தை சொல்லு… கமலாமாவும் கலை அத்தையும் பேத்தியை பார்க்கணும்னு சொல்றாங்களா? இப்போ வரலாமானு கேட்க தான் இந்த விசாரணையா?” 
புகழ்வேந்தன் சிரிக்கவும், ப்ரனேஷ், “ஸோ, அதான் விஷயம்!” 
“எஸ்” 
“எப்போ வரீங்க?” 
“இன்னும் ஒரு மணி நேரத்தில் வரோம்… ஜஸ்ட்  அ பிரெண்ட்லி விசிட் மாதிரி தான்… நாங்க வரதுக்குள்ள மலர் கிட்ட விஷயத்தை சொல்லிடு…” 
“சரி வாங்க…” என்றவர், “வர்மா கிட்ட எப்போ பேசப் போற?” 
“இன்னைக்கு நைட் பேசுறேன்” 
“சரி வீட்டில் பார்க்கலாம்… பை” 
“ஓகே… பை” என்று கூறி இருவரும் அழைப்பைத் துண்டித்தனர்.

 

ப்ரனேஷ், “இனியா குடிக்க பால் கொண்டு வா” என்றுவிட்டு அறைக்குச் செல்ல,
அன்பரசி இனியமலரிடம், “கூட்டத்தில் தனியா ரோமன்ஸ் பண்றதுக்கு மாம்ஸ் கிட்ட ட்ரைனிங் எடுக்கணும்” என்றார். 
தோழியின் கையில் அடி போட்ட இனியமலர், “கல்யாண வயசில் பொண்ணை வச்சுகிட்டு என்ன பேச்சுடி இது?” 
“பொண்ணுக்கு கல்யாண வயசுனா என்ன! நமக்குன்னு தனி ஸ்பேஸ் வேணும்… ஏன் நீ மாம்ஸ் கூட ரோமன்ஸ் பண்ணாமயா இருக்கிற?” என்று கண்ணடித்து வினவ,
இனியமலர் வெக்கத்தை மறைத்தபடி, “போடி” என்றபடி சூடு பண்ண பாலை குவளையில் ஊற்றினார்.
அன்பரசி புன்னகையுடன், “இப்படியே போய் மாம்ஸ் முன்னாடி நில்லு, மாம்ஸ் அவ்ளோ தான்” என்று மேலும் கிண்டல் செய்ய,
இனியமலர் வரவழைத்த முறைப்புடன், “இந்த பங்ஷன் அலைச்சலில் தலை வலி வந்திருக்கும்… நீ எதையாவது சொல்லாத” என்றுவிட்டு செல்ல,
“நம்பிட்டேன்” என்ற அன்பரசியின் கிண்டல் அவரைத் தொடர்ந்தது.
தங்கள் அறையினுள் சென்ற இனியமலர் கணவரின் முகத்தைப் பார்த்தே, “என்ன விஷயம்ங்க?” என்று கேட்டபடி பாலைக் கொடுத்தார்.
பாலை வாங்கிய ப்ரனேஷ், “அம்மு பத்தி பேசணும் டா” 
“என்னங்க?” 
“அம்முக்கு நல்ல வரன் வந்திருக்குது… இரு நான் சொல்லி முடிச்சுக்கிறேன்… அனு பிரெண்ட் ஆதியோட அண்ணன் மதிவர்மனுக்கு நம்ம அம்முவை கேட்கிறாங்க… இந்த வரனை அம்மு வேணாம்னு சொல்ல மாட்டா… ஏன்னா… அம்முவும் வர்மாவும் விரும்புறாங்க” 
“அன்னைக்கே நான் கேட்டேன் தானே!” என்று சிறு கோபத்துடன் கூறினார். ‘நான் கேட்டும் மறைச்சுடீங்களே!’ என்ற கோபம் அது.
பால் குவளையை அருகில் இருந்த சிறு மேசையில் வைத்த ப்ரனேஷ் மனைவியின் கையை பற்றியபடி, “அப்போ எனக்கும் உறுதியா எதுவும் தெரியாது டா… ஒரு யூகம் தான் இருந்துது… அம்மு சென்னை வந்ததுக்கு அப்பறம் பேசிக்கலாம்னு  நினைச்சேன்… ஆனா இப்போ புகழ் பேசினான்… பெரியவங்க அம்முவை பார்க்கணும்னு விரும்புறாங்க போல, அதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம வீட்டுக்கு வரேன்னு சொன்னான்” 
இனியமலர் முறைக்கவும், அவர், “என்ன டா?” 
“அப்போ நீங்க சம்பந்தி கிட்ட கொஞ்ச நாளாவே பேசிட்டு தான் இருக்கிறீங்க! என்ன பார்க்கிறீங்க! நீங்க ஒருமையில் பேசுறதில் இருந்தே தெரியுதே” என்றார் காரமாக,
ப்ரனேஷ் மென்னகையுடன், “நீ இவ்ளோ புத்திசாலியா இருந்திருக்க வேண்டாம்” என்றார்.
இனியமலர் இன்னும் முறைக்கவும், ப்ரனேஷ், “புகழ் தான் என்னை நம்ம ஹாஸ்பிடல் வந்து பார்த்தான்… அம்மு சென்னை வந்ததுக்கு அப்பறம் பேசிக்கலாம்னு நினைச்சதுக்கு முக்கிய காரணம்…” என்று அரை நொடி இடைவெளி விட்டவர், “அம்முவும் வர்மாவும் காதலிக்கிறாங்க தான் ஆனா இப்போ பிரிஞ்சு இருக்கிறாங்க… அவங்களுக்குள்ள ஏதோ சின்ன சண்டை” என்றார். 
கோபம் மறந்தவராக, “என்னங்க சொல்றீங்க?” என்று இனியமலர் பதறினார்.
ப்ரனேஷ், “இதுக்காகத் தான் உன் கிட்ட முன்னாடியே சொல்லலை… கவலைப்படாத, கல்யாணத்துக்கு அப்பறம் சரி ஆகிடும்… இப்போ இதை விடு… புகழ் வீட்டில் வரதைப் பத்தி எல்லார்கிட்டயும் சொல்லலாம் வா” 
“யாருலாம் வராங்க?” 
“புகழ், புகழோட வைஃப் மித்ராணி, புகழோட அம்மா அண்ட் புகழோட மாமியார்” என்றவர் புகழ்வேந்தன் குடும்பத்தை பற்றி சுருக்கமாகக் கூறினார்.
பின் ப்ரனேஷ், “இப்பவே அம்மு கிட்ட சொல்ல வேணாம்” 
“ஏன்?” 
“சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்” 
“சரி” 
இருவரும் வெளியே சென்று அபிசாராவை பெண் பார்க்க வரதாக மட்டும் கூறினார்கள்.

 

சொன்னது போல் ஒரு மணி நேரத்தில் புகழ்வேந்தன் மனைவி அன்னை மற்றும் மாமியாருடன் வந்தார்.
புகழ்வேந்தன் மகிழுந்து வீட்டினுள் நுழைந்ததுமே இனியமலர் அபிசாரா அறைக்கு சென்றார். அபிசாராவிடம் முகத்தை திருத்திக் கொண்டு வர சொல்லிவிட்டு அவர் கீழே வரவும் புகழ்வேந்தன் குடும்பம் உள்ளே நுழைந்தனர்.
கலைவாணி தாம்பாளத்தில் பழங்கள், மல்லிப்பூ, வெற்றிலை, பாக்கு மற்றும் பட்டு புடவையை எடுத்து வந்திருந்தார்.
இவர்கள் வந்த இரண்டே நிமிடத்தில் ஆதிராவுடன் உள்ளே வந்த மதிவர்மன் தாம்பாளத்தட்டை பார்த்ததும் விஷயத்தைப் புரிந்துக் கொண்டான்.
மதிவர்மனின் திடீர் வரவை எதிர் பார்க்காத பெரியவர்கள் மனதினுள் சிறு பதற்றம் உதித்தது தான் இருப்பினும் யாரும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
மதிவர்மன் தன் வீட்டாரிடம் எதுவும் பேசாமல் நேராக ப்ரனேஷிடம், “அங்கிள் நான் சா… அபிசாரா கிட்ட தனியா பேசணும்” என்றான்.
ப்ரனேஷின் பார்வை அரை நொடி புகழ்வேந்தனை தொட்டு மீள, அவன் அழுத்தமான குரலில், “அங்கிள் நான் உங்களிடம் தான் கேட்டேன்” என்றான்.
சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்த ப்ரனேஷ், “மாடியில் ரைட் சைட் செகண்ட் ரூம்” என்றார்.
அடுத்த நொடி அபிசாராவின் அறைக்கு சென்ற மதிவர்மன் அப்படி ஒரு வரவேற்பை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
தான் கேட்க விரும்பிய அந்த மூன்று வார்த்தைகளை தனது மனம் கவர்ந்தவளின் வாயில் இருந்து கேட்ட நொடி குளிர் மதியாக நின்றவன், அவளது முத்தத்தில் உறையும் நிலைக்கு செல்ல இருந்தவன், அடுத்த நொடியே அவளை இறுதியாக சந்தித்த பொழுது அவள் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வரவும் சுட்டெரிக்கும் வர்மனாக மாறியிருந்தான்.
நான்கு வருடங்களாக பார்க்க ஏங்கிய தனது மதி முகத்தை எதிர்பாராமல் தனது அறை வாயிலில் கண்ட போது கனவா நிஜமா என்று குழம்பிப் போனாள் அபிசாரா.
அப்பொழுது தோழியுடன் பேசி முடித்துவிட்டு உள்ளே வந்த நேத்ரா மதிவர்மனை கண்டு, “யாரு க்கா இந்த ஹன்ட்சம் துர்வாசகர்?” என்று மெல்லிய குரலில் அபிசாராவின் காதில் தான் முணுமுணுத்தாள் ஆனால் அவள் வினவியது மதிவர்மனின் கூர் செவிகளில் இருந்து தப்பவில்லை.
நேத்ராவின் கேள்வியில் அவள் பக்கம் அபிசாரா திரும்பி இருந்தாலும், கைகளை கட்டியபடி நின்றிருந்த மதிவர்மனின் கூர்விழிகள் தன்னை அழுத்தமான பார்வையுடன் நோக்குவதை உணர்ந்து பதில் சொல்வதறியாது திணறினாள்.
அபிசாரா மீது டன் கணக்கில் கோபம் இருந்த நிலையிலும் அவள் திணறுவதை பொறுக்க முடியாமல், “நான் யாருன்னு கீழ போய் உன் பெரியப்பா கிட்ட கேளு…” என்றவனது பார்வை அபிசாராவிடம் தான் இருந்தது.
மதிவர்மனின் கம்பீர குரல் அபிசாராவை ஆட்கொள்ள, அவனது அழுத்தமான பார்வையில் சிறு படபடப்பு கலந்த தவிப்புடன் நின்றிருந்தாள்.
மதிவர்மனின் இயல்பான ஒருமை விழிப்பில் ஆச்சரியமடைந்த நேத்ரா, “என்னை உங்களுக்கு தெரியுமா?” என்றாள்.
“நேத்ரா நான் உன் அக்கா கூட தனியா பேச வந்திருக்கிறேன்” என்றவனது பார்வை இம்மியளவு கூட அபிசாராவை விட்டு அகலவில்லை.
இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த நேத்ரா அமைதியாக வெளியேறினாள்.
மதிவர்மனை கடைசியாக சந்தித்த நாளில் தான் பேசிய பேச்சை நினைக்கையில் மனதை பிசையும் உணர்வில் கண்கள் கலங்குவது போல் இருக்க, அபிசாரா சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டாள். பேசிய தனக்கே இவ்வளவு வலி என்றால், கேட்ட அவனிற்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கையில் அவளது வலி கூடியது. இன்னமும் தனது வார்த்தைகள் முள்ளாக அவனது இதயத்தை குத்தி கிழித்துக் கொண்டு தான் இருக்கும் என்பதை அறிந்தவளுக்கு அவனிடம் மன்னிப்பு கேட்கும் தைரியம் வரவில்லை. தைரியம் வரவில்லை என்பதை விட, மன்னிப்பு கேட்க கூட தனக்கு தகுதி இல்லை என்று நினைத்தாள். அவனது வலியை பற்றியே மருகிக் கொண்டிருந்தவள் தற்போது அவன் எதற்காக வந்தான்? எப்படி வந்தான்? என்று யோசிக்கவே இல்லை.
“இப்போ மட்டும் இந்த பொறுப்பில்லாத பொம்பளை பொறுக்கியை கல்யாணம் செய்துக்க எப்படி சம்மதித்த?” என்று இறுகிய குரலில் மதிவர்மன் வினவ, அவள் துடிதுடித்தபடி கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டாள்.
அவளது கலங்கிய விழிகளை கண்டதும் அவனது கோபம் கட்டுக்கடங்காமல் போக, கடித்த பற்களிடையே, “இந்த கல்யாணத்தை நிறுத்திடு… அதான் உனக்கு நல்லது” என்று கூறிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.
இப்பொழுது அவன் கொட்டிவிட்டு சென்ற சொற்கள் தான் பேசியது இல்லை என்றாலும், அன்று தான் பேசிய வார்த்தைகளின் மறைபொருளை அவன் கூற கேட்கையில் எரிமலை குழம்பை கொட்டியது போல் துடித்தாள். கதறி அழத் துடித்த மனதை அடக்கியபடி கண்ணீர் சிந்தியபடி அமர்ந்துவிட்டாள்.
சிறிது நேரம் கழித்தே அவன் கூறியதை முழுதாக யோசித்து பார்த்தவள் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தாள். ‘என்ன சொன்னான்? கல்யாணமா! எனக்கும் அவனுக்கும் கல்யாணம்னா சொன்னான்?’ என்று மகிழ்ந்த மனம் அடுத்த நொடியே அவன் கோபத்தையும் வெறுப்பையும் நினைத்து வாடியது. அவனை கல்யாணம் செய்துக்கிற தகுதி தனக்கு இல்லை என்று நினைத்தும் மருகினாள்.
அபிசாராவிடம் பேசிவிட்டு கீழே சென்றவன் யார் முகத்தையும் பார்க்காமல் வெளியேறி தனது மகிழுந்தை அதி வேகத்தில் செலுத்தினான். அவனது இறுகிய முகத்தையும், நடையின் வேகத்தையும் வைத்தே அவனது கோபத்தின் அளவை அவனது குடும்பத்தினர் அறிந்துக் கொண்டனர்.
அவனது குடும்பத்தில் ஆதிரா மட்டுமே நடப்பது புரியாமல் அமர்ந்திருந்தாள். அந்த குழப்பத்திலும் அனன்யாவின் உணர்வுகளை அவள் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். மதிவர்மன் அபிசாராவுடன் பேச சென்றதும் எதிர்பார்ப்பும் சிறு மகிழ்ச்சியும் கலந்த தவிப்புடன் அமர்ந்திருந்த அனன்யாவின் முகம் அவன் வெளியே சென்ற வேகத்தை கண்டதும் அணிச்சம் பூவாக சுருங்கி வாடியது.
புகழ்வேந்தன் ப்ரனேஷின் கையைப் பற்றி, “அம் சாரி…” என்று ஆரம்பிக்க,
ப்ரனேஷ், “நீ ஏன் சாரி கேட்கிற? வர்மா மனதின் காயம் இப்படி நடந்துக்க வைக்குது… இதை விடு… அடுத்து என்ன செய்யலாம்?” 
“கல்யாண ஏற்பாட்டைக் கவனிக்கலாம்… ஜோசியரைப் பார்த்து அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்ற புகழ்வேந்தன் அன்னையையும் மாமியாரையும் பார்த்து, “நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்.
“அப்படியே செய்யலாம் தம்பி” என்று கமலாவும்,
“நம்ம சைட் ஓகே… அபி வீட்டில் என்ன நினைக்கிறாங்கனு முதல்ல கேளு” என்ற கலைவாணி அமுதா பக்கம் திரும்பி, “நீங்க என்ன மா நினைக்கிறீங்க?” என்றார்.
அமுதா ஆனந்தனைப் பார்க்க, அவர் சம்மதமாக தலை அசைக்கவும், ப்ரனேஷ் மற்றும் இனியமலரின் முகத்தைப் பார்த்தவர் கலைவாணியிடம், “எங்களுக்கு சம்மதம்… அபி கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்” என்றார்.
கலைவாணி மற்றும் கமலா, “இப்பவே கேட்டுடலாமே” என்றனர்.
நேத்ரா, “நான் போய் அக்காவை கூட்டிட்டு வரேன்” என்றபடி எழ, 
புகழ்வேந்தன், “இல்லை… எங்க முன்னாடி கேட்டு போர்ஸ் பண்ணதா இருக்க வேண்டாம்… அபி ரூமுக்கு போய் கேளுங்களேன்” என்று கூற,
புகழ்வேந்தனின் புரிதலில் நன்றி பார்வை பார்த்த ப்ரனேஷ், “நான் போய் கேட்டுட்டு வரேன்” என்றார். பின் மனைவியிடம் தலையசைத்து மகள் அறைக்குச் சென்றார்.
யான்விஸ்ரீ, “ஹை! அபி அக்காக்கு கல்யாணமா! இப்போ கோபமா போன மாமா தான் வர்மா மாமா வா? அவங்க தான் அபி அக்காவை கல்யாணம் செய்துக்கப் போறாங்களா? ஆனா மாமா ஏன் கோபமா இருக்காங்க?” என்று கேள்விகளை அடுக்கினாள்.
அவந்திகா, “ஸ்ரீ அமைதியா இரு” என்று மகளைக் கண்டிக்க,
“சின்ன பொண்ணு தானே! விடு மா” என்ற கலைவாணி, “இங்கே வா” என்று சிறுமியை அழைத்து தன் பக்கத்தில் அமர செய்து பேச ஆரம்பித்தார். அவர்கள் பேச்சில் கமலா மற்றும் அமுதா இணைத்துக் கொண்டனர்.
சாரதா மெல்லிய குரலில் அன்பரசியை அழைத்து சமையலறைக்கு சென்று காப்பி தயாரிப்பதில் இறங்கினார். அவந்திகாவும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டார்.
புகழ்வேந்தன் சர்வேஷ் மற்றும் ஆனந்தனுடன் பேச ஆரம்பிக்க,
நேத்ரா ஆதிராவிடம், “ஹாய்… அம் நேத்ரா” என்று பேச ஆரம்பித்தாள். அனன்யா தோழியிடம் தனியாக பேச முடியாமல் தவிப்புடன் அமர்ந்திருந்தாள். அதை புரிந்துக் கொண்ட ஆதிரா நேத்ராவுடன் சிரித்து பேசினாலும் தோழியின் கையை பற்றிக் கொண்டாள். 
தவிப்பும் கவலையுமாக அமர்ந்திருந்த இனியமலரின் மனதை புரிந்துக் கொண்ட மித்ராணி அவர் கையை பற்றி, “கவலைப் படாதீங்க… அபியை என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன்” என்றார்.
இனியமலர், “அது இல்லை… மாப்பிள்ளை…” என்று தயங்கி நிறுத்த,
மித்ராணி, “இந்த கோபத்திலும் கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி அவன் சொல்லலை… என்ன தான் அபி மேல் அவனுக்கு கோபம் இருந்தாலும், அவளைத் தவிர வேறு யாரையும் அவனால் மனைவியாக நினைத்துக் கூட பார்க்க முடியாது… நாம நம்ம கடமையை செய்வோம்… அவங்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனையை அவங்க தான் தீர்த்துக்கணும்… தீர்த்துப்பாங்க… கவலைப்படாம கல்யாண வேலையை தொடங்குவோம்” என்றார். 
“ஹ்ம்ம்… நல்லதே நடக்கும்னு நம்புவோம்” என்ற இனியமலரின் மனதினுள் மகளின் வாழ்வை எண்ணி கவலை இருக்கத் தான் செய்தது.

நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement