Advertisement

சென்னை:

மதிவர்மன் அறையினுள் சென்ற புகழ்வேந்தன் அவன் அருகே அமர்ந்து, “என்ன பிளான்?” என்று வினவினார். 
மதிவர்மன், “அவர் கடை பக்கத்தில் எம்ப்டி கிரௌண்ட் இருக்குது… அதையும் வாங்கி இந்த கடையை பெருசு பண்ணி பொட்டிக் ஓபன் பண்ணனும்… இதுக்கு த்ரீ மன்த்ஸ் டைம் எடுக்கும்… அதுக்குள்ள நம்ம கார்மென்ட்ஸ் எடுத்திருக்கும் வெளி ஆர்டர்ஸ் முடிச்சிடலாம்… கவர்மென்ட் ஆர்டர்ஸ், யுனிபார்ம் ஆர்டர்ஸ் எடுத்துக்கலாம் மத்தபடி இனி நம்ம பொட்டிக்கு மட்டும் ப்ரொடக்சன் வச்சிக்கலாம்…
பொட்டிக்கு நியூ ட்ரெண்டு ட்ரெஸ் டிஸைன் பண்றதுக்காக புதுசா ட்ரெஸ் டிசைனர்ஸ் அப்பாயின்ட் பண்ணனும்… நாளைக்கு பேப்பரில் நம்ம கார்மென்ட் பெயரில் நியூ ட்ரெஸ் டிசைனர்ஸ் தேவைனு ஆட் போட சொல்லி இருக்கிறேன்… அடுத்த ரெண்டு நாளில் அவங்களை தேர்ந்தெடுத்து வேலையை ஆரம்பிக்கணும்… நம்ம பொட்டிக் ஓப்பனிங் பிரம்மாண்டமா இருக்கணும்… பொதுவா பொட்டிக்-னா லிமிட்டட் கலெக்சன் தான் இருக்கும் ஆனா நம்ம பொட்டிக்கில் பிறந்த குழந்தையில் இருந்து வயசானவங்க வரை எல்லா விதமான, இதுவரை இல்லாத புது டிஸைன் ட்ரெஸ்செஸ் இன்ட்ரோடியூஸ் பண்றோம்… அடுத்த நாலு மாசத்தில் நாம ட்ரெண்டு செட்டரா இருப்போம்” 
மகனின் தோளை தட்டி, “நைஸ் பிளான்… ப்ரோசீட் பண்ணு…” என்ற புகழ்வேந்தன் கை குலுக்கியபடி, “ஆல் தி பெஸ்ட்” என்றார்.
“தேங்க்ஸ் பா” 
“வேற என்ன பிளான்?” என்று புகழ்வேந்தன் அழுத்தத்துடன் வினவ,
அவனும் அழுத்த பார்வையுடன், “உங்க உளவாளி அதை சொல்லலையா?”
“என் மகனை உளவு பார்ப்பேன்னு நினைக்கிறியா?” என்று ஆழ்ந்த குரலில் புகழ்வேந்தன் வினவ, அந்த குரலில் சிறு வருத்தமும் கலந்திருந்தது.
அதை புரிந்துக் கொண்ட மதிவர்மன், “சாரி பா” என்றபடி அவர் கையைப் பற்ற,
அவன் கையை அழுதமாக பற்றிய புகழ்வேந்தன், “நீ சாப்ட்வேர் கம்பெனி பார்த்துக்கிறதை  போக சொந்தமா தொடங்கின இன்ஜினியரிங் அண்ட் ஆர்ட்ஸ் காலேஜ் சக்செஸ்புல்லா ரன் பண்ண ஆரம்பிச்சு, வேந்தன் குரூப் ஆப் கம்பனீஸ் ஃபுல் கண்ட்ரோல் உன் கிட்ட கொடுத்த அப்பறம் முதல் வருஷம் மட்டும் தான் உன் செயல்பாடுகளை கண்கானிச்சேன்…” என்று பேசிக் கொண்டிருந்தவர் நடுவில் பேச வந்த மதிவர்மனை கை உயர்த்தி தடுத்தபடி தொடர்ந்தார், “அதுவும் உன் கிட்ட சொல்லிட்டு தான் செய்தேன்… கடந்த ஒரு வருஷமா உன்னோட முடிவுகள் எதுலையாவது நான் தலையிட்டு இருக்கிறேனா? இன்னைக்கு சாதாரணமா விசாரிச்சப்ப இந்த விஷயம் தெரிஞ்சுது… ஏன் நான் கேட்கலைனா நீயே இதை என்னிடம் சொல்லி இருக்க மாட்டியா?”
தந்தையை அணைத்தவன், “சாரி ப்பா… நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை… சாதாரணமா தான் கேட்டேன்… அது கூட நீங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணவும் சின்ன கோபத்தில் அப்படி பேசிட்டேன்… சா…” 
அவனது பேச்சை இடையிட்ட புகழ்வேந்தன், “விடு… எத்தனை முறை சாரி கேட்ப?” என்றார்.
அவன், “ஆனா அம்மா சரி னு தான் சொல்லுவாங்க”
புகழ்வேந்தன் மென்னகையுடன், “அப்பறம் ஏன் உன்னை வாழ்த்தலை?” 
“அது… புதுசா ஆரம்பிக்கிற பிஸ்னெஸ் இப்படி ஆரம்பிக்க வேணாமேனு நினைத்து இருப்பாங்க” 
புகழ்வேந்தனின் விரிந்த புன்னகை அவனது கூற்றை ஆமோதிக்க, அவன் செல்ல முறைப்புடன், “நீங்க தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணீங்க” என்று விடாமல் கூற,
அவர் வாடாத புன்னகையுடன், “JD குரூப் என்ன பண்ணப் போற?” 
“சிம்பிள்… JD குரூப் டீலிங்ஸ் கன்செல் பண்ணியதோடு, அவங்களோட கவனக் குறைவில் நம்ம பெயர் கெட இருந்ததால் பிரேக்-அப் பண்ணதா பரவவிட்டிருக்கிறேன்… ஸோ இனி யாரும் அவன் கூட பிஸ்னெஸ் பண்ண யோசிப்பாங்க” 
மெச்சுதலான புன்னகையுடன் அவன் தோளை தட்டியபடி, “குட் நைட்” என்று கூறி விடை பெற, அவனும், “குட் நைட் பா” என்றான்.
அவர் சென்றதும் சஞ்சயை அழைத்தவன், சஞ்சய் அழைப்பை எடுத்ததும் அமைதியாக இருந்து தனது கோபத்தை வெளிபடுத்த,
சஞ்சய், “டேய் நான் வேணும்னு சொல்லலை… அங்கிள் கேட்டதும் என் வாய் தானா எல்லாத்தையும் ஒப்பிக்குது…” என்று பாவமான குரலில் கூறினான்.
மதிவர்மன் தொடர்ந்து மெளனமாக இருக்க, சஞ்சய், “JD குரூப் விஷயத்தை சொல்லலை டா” என்றவனின் மனசாட்சி, ‘அங்கிள் அதை பத்தி கேட்கலை அதனால் நீ சொல்லலை’ என்று கூற, அவன், ‘ரொம்ப முக்கியம்…. மூடிட்டு போ’ என்று அதனை விரட்டினான். 
“…” 
“எப்படியும் நீயே அங்கிள் கிட்ட சொல்லி இருப்ப தானே!” 
“…” 
சஞ்சய் கடுப்புடன், “டேய் ரொம்ப பண்ணாத டா… நீயே ஆபீஸ் விஷயம் எதையும் அங்கிள் கிட்ட மறைக்க மாட்ட தானே! அப்புறம் என்ன?” 
“…” 
“உன் பெர்சனல் விஷயத்தை மூச்சு விட்டேனா?” 
“அப்பா உன் கிட்ட எப்போ, என்ன கேட்டாங்க?” என்று மதிவர்மனின் கேள்வி கூர்மையுடன் வர,
‘அச்சோ பயபுள்ளைய மலை இறக்குறேன்னு உளறிட்டேனே!’ என்று மனதினுள் அலறிய சஞ்சய் வெளியே அறியாதவன் போல், “ஆபீஸ் எப்படி போகுதுன்னு ஜெனரல்லா கேட்டு அப்படியே JD குரூப் என்ன ப்ராப்ளம்னு கேட்டு விஷயத்தை கரந்துட்டார் டா” 
“நான் கேட்ட கேள்விக்கு பதில்” 
‘ரைட்டு நம்ம கெரகம்(கிரகம்) டிஸ்கோ ஆட ஆரம்பிச்சிடுச்சு’ என்று மனந்தினுள் கூறிக் கொண்டவன் மீண்டும் அறியாதவன் போல், “அதான் சொல்லிட்டேனே டா” என்றான்.
மீண்டும் மதிவர்மன் மௌனமாகிவிட,
‘இவன் ஒருத்தன் அமைதியா இருந்தே இம்சை பண்ணுவான்… பேசாம வீட்டுக்கு வந்தோமா கொட்டிகிட்டோமா தூங்கினோமானு இருந்து இருக்கணும்…’ என்று மனதினுள் புலம்பிய சஞ்சய், “அப்பப்ப கேட்டுட்டு தான் இருக்கிறாங்க… நீ யாரை விரும்புற, என்ன பிரச்சனை, யாரு அந்த பொண்ணு, அந்த பொண்ணு உன்னை விரும்பலையா, நாலு வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்துதுனு வித விதமா நிறைய கேட்கிறாங்க… நான் எதுவும் சொல்லலை… ஆனா கொஞ்ச நாளாவே எதுவும் கேட்கலை” 
“இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன? உன்னோட முழியே அப்பாவுக்கு பதில் தந்திருக்கும்…” என்று ஆரம்பித்து நல்ல நல்ல வார்த்தைகளில் திட்டிக் கொண்டே போக,
ஒரு கட்டத்தில் சஞ்சய், “இதுக்கு மேல ஒரு வார்த்தை சொன்ன!!!” என்று சற்று குரலை உயர்த்தி கூற,
மதிவர்மன் அலட்டிக் கொள்ளாமல், “சொன்னா?” என்று வினவினான். 
“அழுதுருவேன்!!” என்று சஞ்சய் அழும் குரலில் கூற, மதிவர்மன் மேலும் இரண்டு வார்த்தைகள் கேவலமாக திட்டிவிட்டே அழைப்பை துண்டித்தான். இவனது திட்டுக்களை தூசி போல் தட்டிவிட்ட சஞ்சய் உறங்கச் சென்றான்.
அழைப்பை துண்டித்த மதிவர்மன் மனதினுள் எழும் நினைவுகளை ஒதுக்கி நித்ராதேவியுடன் போராடி வெற்றியும் பெற்றான்.
[புகழ்வேந்தனின் வலது கை போல் இயங்கிய விசுவாசமான செயலாளர் சதீஷ் மற்றும் மித்ராணியின் நெருங்கிய தோழியான நிவேதாவின் மகன் தான் சஞ்சய். மதிவர்மன் பிறந்த ஐந்து மாதத்தில் சதீஷ் நிவேதாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்க சஞ்சய் சஞ்சனா என்று பெயரிட்டனர். சவீதா, சஞ்சய், சஞ்சனா என்று மூன்று பிள்ளைகள் அவர்களுக்கு.
பல நேரங்களில் புகழ்வேந்தனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், ஆரம்ப காலத்தில் மித்ராணி மற்றும் புகழ்வேந்தன் நடுவில் அப்பாவி ஜீவனான சதீஷ் சிக்கி சின்னாபின்னமானது போல் தற்போது மதிவர்மன் குடும்பத்தில் சஞ்சய் சிக்கி உள்ளான்.]
 

திருநெல்வேலி:

அபிசாரா எப்பொழுதும் போல் உறங்கும் முன் பெற்றோரிடம் பேசுவதற்காக தந்தையின் எண்ணிற்கு அழைத்தாள்.
அழைப்பு எடுக்கப்பட்டதும் இவள், “சாப்டாச்சா ப்பா?” என்று வினவ, மறுமுனையில் இருந்ததோ அவளது தங்கை அனன்யா.
அனன்யா, “என்னை மன்னிக்கவே மாட்டியா கா?” 
“ஹே லூஸு! என்ன பேசுற?” 
“ப்ச்… நீ என்ன சொன்னாலும் எனக்குத் தெரியும்” 
“அனு நிஜமாவே எனக்கு உன் மேல் கோபமே இல்லை டா” 
“வருத்தம் இருக்குது தானே?” 
அரை நொடி தாமதித்த அபிசாரா, “இல்லை டா… நீயா எதையாவது யோசித்து மனசைப் போட்டு குழப்பிக்காத” 
“அப்புறம் ஏன் வீட்டுக்கு வர மாட்டிக்கிற?” 
“நான் தான் சொன்னேனே, எவ்ளோ பிஸியா போயிட்டு…” என்றவளின் பேச்சை இடைமறித்த அனன்யா, “அதான் உன்னோட பிஹெச்டி(Phd) முடிச்சிட்டியே! இப்போ ப்ரீ தானே!” 
“முடிச்சு ரெண்டு நாள் தான் ஆகுது… நம்ம வீட்டுக்கு வராம எங்க போகப் போறேன்?” 
“அப்போ வா” 
“கண்டிப்பா வருவேன் டா” 
“எப்போ?” 
“செமிஸ்டர் லீவுக்கு வரேன்” 
“அதெல்லாம் இல்லை… நீ இங்க வந்து வேலை பாரு” 
“அப்பாவும் அம்மாவும் என்ன பண்றாங்க?” 
“அக்கா…” என்றவளின் பேச்சை இப்பொழுது இடைமறித்த அபிசாரா சற்று அழுத்தமான குரலில், “அனு இப்போ இந்த பேச்சை விடு” என்றாள்.
அனன்யா வருத்தமான குரலில், “அம் ரியலி சாரி க்கா… அன்னைக்கு நான்…” 
மீண்டும் அவளது பேச்சை இடைமறித்து, “எத்தனை தடவ மன்னிப்பு கேட்ப?” என்ற அபிசாரா இன்னும் அழுத்தமான குரலில், “இனி இதைப் பத்தி நீ பேசவேக் கூடாது… அதை மறந்துடு… என்ன புரியுதா?” 
“ஹ்ம்ம்” 
“இன்னொரு முறை பேசின! அது தான் நான் உன்னிடம் கடைசியா பேசுறதா இருக்கும்” 
“அக்கா!” என்று அவள் அதிர்ச்சியுடனும் வருத்தத்துடனும் அழைக்க,
அபிசாரா அதை கண்டுக் கொள்ளாமல் வரவழைத்த இயல்பு குரலில், “அப்புறம், இன்னைக்கு எப்படி போச்சு?” 
“பெருசா எதுவும் இல்லை…” என்றவள் தானும் வரவழைத்துக் கொண்ட இயல்பு குரலில், “உனக்கு எப்படி போச்சு? உன்னோட பசங்க எதுவும் கலாட்டா பண்ணாங்களா?” என்று முடித்த பொழுது உண்மையிலேயே சற்று இயல்பிற்கு திரும்பி இருந்தாள். 
“செம ரகளை… சித்தப்பா கிட்ட என்னை மாட்டிவிட்டு, நான் சித்தப்பாவை பாட்டி கிட்ட மாட்டிவிட்டுனு குதுகலமா போச்சு” 
அனன்யா புன்னகையுடன், “அப்படி என்ன நடந்துது?” என்று வினவ,
அபிசாரா, “நீ அப்பா அம்மா பக்கத்துல போய் ஸ்பீக்கர் போடு… என்னால ரீடெலிகாஸ்ட் பண்ண முடியாது” என்றாள். 
“சரி… இரு…” என்றவள் அபிசாரா சொன்னதை செய்தாள்.
“அம்மு” என்ற தந்தையின் அழைப்பையும், “அபி” என்ற அன்னையின் அழைப்பையும் கேட்டவள், “ஹாய் ப்பா… ஹாய் ம்மா… சாப்டாச்சா?” என்றாள். 
சில பொதுவான விசாரிப்புகளுக்கு பிறகு அபிசாரா இன்று நடந்ததை கூறி முடித்ததும், அனன்யா வாய்விட்டு சிரிக்க,
ப்ரனேஷ் சிரிப்புடன், “சர்வாவை டம்மி பீஸ் ஆக்குறதே உனக்கும் நேத்ராவுக்கும் வேலை” 
“அட போங்க ப்பா… சித்தப்பா வீட்டில் எப்போதுமே டம்மி தான்” 
“இரு அவன் கிட்ட சொல்றேன்…” 
“சொல்லிக்கோங்க” 
அனன்யா, “காலேஜில் யாருக்காவது சர்வேஷ் சித்தப்பா உன்னோட சித்தப்பானு தெரியுமா?” 
“தெரியாது… அப்புறம் யாரும் என்னோட இயல்பா பழக மாட்டாங்க…” 
“அப்போ மத்தவங்க சித்தப்பாவை திட்டுறதை எல்லாம் சித்தப்பா கிட்ட சொல்லுவியா?” 
“நீ வேற! காலேஜ்ஜில் அவரை பார்த்து பயப்படுற ஆட்கள் தான் இருக்காங்க…” 
“அவ்ளோ டெரர் பீஸா?” 
“அப்படி தான் ஸீன் போட்டுக்கிறார்” 
“போதும் போதும்… பாவம் அவரை விடுங்க…” என்ற இனியமலர், “அபி… சாரு பாட்டி சொன்ன மாதிரி உன் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட இனி இப்படி பண்ணக் கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிடு” 
“அதெல்லாம் சொல்லிட்டேன் மா” 
“அனு நாளைக்கு சீக்கிரம் கிளம்பணும் சொன்னியே! போய் தூங்கு” என்று இளைய மகளை பார்த்து இனியமலர் கூற,
“அக்கா கிட்ட தனியா பேசணும்னா நேரிடையாவே சொல்லுங்க மா” என்று கூறி அழகு காட்டிய அனன்யா, “பை க்கா… டேக் கேர்… குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று கூறி தமக்கையின் பதிலை பெற்றுக் கொண்டு தனது அறைக்குச் சென்றாள்.
இனியமலர் பேசும் முன் அபிசாரா, “அம்மா எனக்கு இப்போ கல்யாணம் செஞ்சுக்கிற பிளான் இல்லை” என்று சற்று இறுக்கமான குரலில் கூறினாள். 
இனியமலர் இயலாமையுடன் ப்ரனேஷை பார்க்க, கண்களை மூடி திறந்து தைரியம் தந்த ப்ரனேஷ் எழுந்து தனியாக உப்பரிகைக்கு சென்று பேச ஆரம்பித்தார்.
ப்ரனேஷ், “அம்மு அம்மா உன் கல்யாணத்தை பத்தி பேசவே இல்லையே!” என்றார்.
“அப்புறம்?” என்று அவள் நம்பாத குரலில் வினவ,
அவர், “சென்னைக்கு எப்போ வரனு கேட்க தான் வந்தா” என்றவர், “அதாவது நிரந்தரமா எப்போ வரனு கேட்க வந்தா” என்று சேர்த்து கூறினார்.
“இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே ப்பா” என்று அவள் மெல்லிய குரலில் கூற,
“என்னோட அம்மு தைரியமான பொண்ணுனு நான் நினைச்சுட்டு இருக்கிறேன்…” 
“உங்க பொண்ணு எப்பவும் தைரியமானவ தான் ப்பா… சில விஷயத்தில் இருந்து கொஞ்ச நாள் விலகி இருக்கலாம்னு நினைக்கிறேன்” 
“அந்த கொஞ்ச நாள் இன்னுமா முடியலை?” என்றவர், “நீ விலக நினைக்கும் விஷயத்தில் நானும் அம்மாவும் அடக்கமா?” 
“அப்பா!!!” என்று அவள் அதிர்ச்சியுடன் அழைக்க,
அவர் ஆழ்ந்த குரலில், “சொல்லு டா” என்றார்.
கலங்கிய விழிகளுடன், “இல்லை ப்பா” என்றாள் கலங்கிய குரலில்.
“அப்போ அப்பாக்காக இங்கே வா” 
“சரிப்பா…”
“இந்த செமஸ்டர் முடிந்ததும் சென்னை வர…” 
“ஹ்ம்ம்” என்றவள், “ப்பா…” என்று தயங்கவும்,
“நான் பால்கனியில் இருந்து தனியா தான் பேசுறேன்” என்றார்.
அப்பொழுதும் அவள் தயங்கியபடியே, “அம்மாக்கு…” என்று இழுத்து நிறுத்த,
அவர், “அம்மாவுக்கு எதுவும் தெரியாது… அம்மா உன்னை ரொம்ப மிஸ் பண்றா… அப்பாவும் அம்முவை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றவர் ‘ரொம்ப’ என்ற வார்த்தையை அழுத்திக் கூறினார்.
“நானும் உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன் ப்பா” என்று அழுகையுடன் கூற,
அவர், “என்ன டா பிறந்தநாள் அதுவுமா அழுதுட்டு இருக்க? சாரி டா… அப்பா உன்னை அழ வச்சிட்டேனா?” 
கண்களை வேகமாக துடைத்தவள், “இல்லை ப்பா, நான் அழலை… நீங்களும் கண்ணை துடைங்க” என்றாள். 
“நான்…” என்று அவர் ஆரம்பிக்க, அவள், “என் அப்பாவை எனக்கு தெரியாதா?” என்றதும் அவர் இதழில் மென்னகையுடன் வலது கன்னத்தில் வடிந்திருந்த கண்ணீரை துடைத்தார்.
அவள், “உங்களுக்கு எப்போ தெரியும்?” 
“நீ திருநெல்வேலி கிளம்புறேன்னு சொன்ன அன்னைக்கே தெரியும்” 
அவள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன், “நாலு வருஷமா இதை பத்தி பேசவே இல்லை?” 
“உனக்கான ஸ்பேஸ் உனக்கு கொடுத்தேன்…” 
“லவ் யூ ப்பா” என்று கூறி முத்தமிட, அவரும், “லவ் யூ அம்மு” என்று கூறி முத்தமிட்டார்.
“எதை பத்தியும் யோசிக்காம நல்லா தூங்கணும்… இப்போ அம்மா கிட்ட தரேன்” 
“சரிப்பா” 
தொடர்பில் வந்த இனியமலர், “அப்பாவும் பொண்ணும் என்ன ரகசியம் பேசுனீங்க?” 
“அதான் நீயே ரகசியம்னு சொல்லிட்டியே!” 
“போடி நான் அப்பா கிட்ட கேட்டுக்கிறேன்” 
“கேட்டுக்கோ” என்று இயல்பான பேச்சு சிறிது நேரம் தொடர, இரவு வணக்கம் கூறி அழைப்பைத் துண்டித்தனர்.
அழைப்பைத் துண்டித்த பின், ‘அப்பாவுக்கு எப்படி தெரிந்து இருக்கும்?’ என்று யோசித்தவள், ‘முகத் தோற்றத்தை வச்சே கண்டு பிடிச்சு இருப்பாங்க… அனு கிட்ட தான் கேட்டிருப்பாங்க… அனு என்ன சொன்னானு தெரியலையே! அனு பேசினது மட்டும் தெரியுமா இல்லை எல்லாமே தெரியுமானு தெரியலையே!’ என்று குழம்பியதின் தொடர்ச்சியாக நெஞ்சில் உறைந்த நினைவுகள் விஸ்வரூபம் எடுக்க, தனது நினைவுகளுடன் போராடி வெகு நேரம் கழித்தே கண்ணயர்ந்தாள்.
அழைப்பைத் துண்டித்ததும் இனியமலர் கேள்வியாக கணவனைப் பார்க்க, ப்ரனேஷ் மனைவியின் தோளை அணைத்தபடி, “உனக்கு தெரியாத ரகசியம் எதுவும் இல்லை…” என்று கூறிக் கொண்டிருந்த பொழுதே,
இனியமலர், “அபி யாரையும் விரும்புறாளா? அது… அது…” என்று முடிக்க முடியாமல் திணற,
அணைப்பில் அழுத்தம் கொடுத்த ப்ரனேஷ், “அம்முக்கு எந்த பிரச்சனையும் இல்லை… இந்த செமஸ்டர் முடிந்ததும் நம்ம வீட்டுக்கு வந்திடுவா…” 
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” 
“அதை அம்மு கிட்ட தான் கேட்கணும்… இங்கே வந்ததுக்கு அப்புறம் கேட்கலாம்… சீக்கிரமே அம்மு கல்யாணம் நடக்கும்… கவலைப்படாம தூங்கு” 
இனியமலர் மேலும் பேச வர, ப்ரனேஷ், “என் மேல் நம்பிக்கை இல்லையா டா?” என்றதும், எதுவும் பேசாமல் அவர் கையை இறுக்கமாக பற்றியபடி தோள் சாய்ந்தார்.
ப்ரனேஷ், “தூங்கலாமா?” 
“ஹ்ம்ம்” 
மனைவியின் முகத்தை நிமிர்த்தி மென்னகையுடன், “லவ் யூ இனியா பேபி… குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் ஸ்வீட்டி” என்று கூறி இதழில் மென்மையாக இதழ் ஒற்றி எடுத்தார்.
இனியமலர், “இந்த பேபியை நீங்க இன்னும் விட மாட்டிக்கிறீங்க” என்று சிணுங்கலுடன் சண்டையிட,
வேண்டும் என்றே மனைவியின் மனதை திசைத் திருப்ப அந்த வார்த்தையைக் கூறியவர் புன்னகையுடன், “எப்பவும் என்னோட முதல் பேபி நீ தானே ஸ்வீட்டி” என்று கூறி கன்னத்தில் இதழ் பதிக்க,
“போதும் போதும்… தூங்குங்க” என்றவர் மென்னகையுடன் படுக்க, ப்ரனேஷும் மென்னகையுடன் படுத்துக் கொண்டாலும், மகள் சென்னை வரும் முன் செய்ய வேண்டியவற்றை தீர்மானித்த பிறகே உறங்க ஆரம்பித்தார்.

நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement