Advertisement

சென்னை:

இரவு உணவை ஒன்றாக உண்ண வேண்டும் என்பது புகழ்வேந்தன் வீட்டில் எழுதப்படாத சட்டம். கலைவாணி, கமலா, புகழ்வேந்தன், மித்ராணி, மதிவர்மன் மற்றும் கடைக்குட்டி ஆதிரா ஒன்றாக அமர்ந்து உணவை உட்கொள்ள ஆரம்பித்தனர்.
சக்கரை நோயாளியான கலைவாணியின் பார்வை இனிப்பு பக்கம் செல்ல, மித்ராணி பார்த்த ஒற்றை பார்வையில் ஆசையை அடக்கியவராக தனது தட்டில் கவனத்தை செலுத்தினார்.
அடுத்து உணவை பரிமாறிக் கொண்டிருந்த சமையல் செய்பவரை மித்ராணி பார்த்த பார்வையில் அவர் மெல்லிய குரலில், “தம்பி தான்…” என்று ஆரம்பித்த போது,
மதிவர்மன் தனது கம்பீர குரலில், “நாம புதுசா ட்ரெஸ் ஷாப் ஆரம்பிக்க போறோம்… அதை கொண்டாட தான் இந்த ஸ்வீட்” என்றதும்,
கலைவாணி மற்றும் கமலா, “வாழ்த்துக்கள் ராஜா” என்று வாழ்த்த, அவன் மென்னகையுடன், “தேங்க்ஸ் பாட்டீஸ்” என்றான்.
ஆதிரா, “சூப்பர் அண்ணா… கலக்குறியே! என்னோட வாழ்த்துக்களையும் வச்சுக்கோ” என்றபடி கையை நீட்ட, அவன், “தேங்க்ஸ் டா” என்றபடி கை குலுக்கினான்.
பெற்றவர்களின் அமைதியின் காரணம் புரிந்து மதிவர்மன் அமைதியாக இருக்க, ஆதிரா, “என்ன பா நீங்களும் அம்மாவும் ஒன்னும் சொல்லலை?” என்றாள்.
புகழ்வேந்தன் மகனை அழுத்தமாக பார்த்தபடி, “சாப்டுட்டு இதைப் பத்தி பேசிக்கலாம்” என்று கூற,
ஆதிரா ஏதோ கூற வர, “ஆதி அதான் அப்பா சொல்றாங்களே” என்று மித்ராணியின் குரல் அழுத்தத்துடன் வரவும் அவள் சிறு தோள் குலுக்கலுடன் உணவில் கவனம் செலுத்தினாள்.
மதிவர்மன் கலைவாணியை பார்த்து, “இன்னைக்கு ஒரு நாள் கொஞ்சமே கொஞ்சம் ஸ்வீட் சாப்பிடலாம் பாட்டி” என்று கூறி அரை தேக்கரண்டி பாதாம் அல்வாவை அவருக்கு ஊட்டினான்.
அதை ரசித்து உண்டவர், “கொஞ்சம்னு சொல்லிட்டு தம்மா துண்டு தர!” என்று சிணுங்கலாக குறைப்பட,
அவன், “இதுக்கு மேல குடுத்தேன்! இதே கரண்டியால் அம்மா என்னை அடிப்பாங்க”
“அதான் வீட்டுலேயே ஒரு டாக்டர் இருக்காளே!” என்று அவர் விடாமல் கூற,
மதிவர்மன் உதட்டோர மென்னகையுடன், “இது இன்னும் ரிஸ்க் பாட்டி…” என்றான்.
ஆதிரா, “டேய் அண்ணா வேணாம்” என்று கையில் முள்கரண்டியை வைத்தபடி மிரட்ட,
“அய்யோ பயமா இருக்குதே!” என்று அவன் போலியாக கூற, அவள் முறைத்தாள்.
மித்ராணி, “சரி… சரி… சாப்பிடுங்க” என்றதும் ஆதிரா தமையனுக்கு அழகு காட்டிவிட்டு உண்ண ஆரம்பிக்க, மதிவர்மன் உதட்டோரம் அடக்கிய மென்னகையுடன் உணவை உண்ண ஆரம்பித்தான்.
அனைவரும் உணவை முடித்த பிறகு, கமலா மதிவர்மனிடம், “உன்னோட தொழில் வளர்ச்சியில் எங்களுக்கு மகிழ்ச்சி தான், இருந்தாலும் நீ கல்யாணத்துக்கு சம்மதித்தால் நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்” என்றார். 
தனது இறுக்கத்தை தன்னுள் மறைத்தவன், “நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்குது பாட்டி” என்றான். 
“உன் அப்பாவும் அம்மாவும் கல்யாணத்துக்கு அப்பறம் சாதிக்கலையா?” 
இப்பொழுது வெளிப்படையாகவே இறுகிய குரலில், “நான் எனக்குன்னு தனி அடையாளத்தை உருவாக்கணும்… அப்பறம் வேணா நீங்க சொல்றதை யோசிச்சு பார்க்கிறேன்” 
கலைவாணி, “இப்பவே வேந்தன் குரூப் னா உன் பெயரை தானே சொல்றாங்க! இன்னும் என்ன?” என்று கூற,
கமலா, “அப்பவும் யோசிக்க தான் செய்வியா?” என்றார். 
“பாட்டி இந்த பேச்சை விடுங்க…” என்றவனது குரல் ‘இதற்கு மேல் இதைப் பற்றி பேசினால் என்னிடம் பதில் கிடைக்காது’ என்பதை உணர்த்த கமலா பாவமாக கலைவாணியை பார்க்க, இருவரும் பெருமூச்சை வெளியிட்டபடி அமைதியானர்.
சமையல் செய்பவர் வந்து, “வேலையை முடிச்சுட்டேன் மா… கிளம்புறேன்” என்று கூற,
மித்ராணி, “வீட்டுக்கு சிக்கன் எடுத்துக்கிட்டீங்களா?” என்று வினவ,
“எடுத்துட்டேன் மா” என்று கூறி கிளம்பினார்.
வீட்டு ஆட்கள் மட்டும் இருக்கவும் புகழ்வேந்தன் மதிவர்மனை அழுத்தத்துடன் பார்க்க, அவன் அலட்டிக் கொல்லாமல், “டாட் நான் பாவ மன்னிப்பு கொடுக்க பாதரோ, கோபப் படாம இருக்க புத்தரோ இல்லை” என்றான். 
“பாவ மன்னிப்பு கொடுக்க சொல்லலை, பாவம் சேர்த்துக்காதனு தான் சொல்றேன்” 
“பாவம் சேர்கிற மாதிரி நான் ஒன்னும் அவரோட சொத்தை பிடுங்கிக்கலை… சொல்லப் போனா, நான் உதவி தான் செய்றேன்… நஷ்டத்தில் ஓடிட்டு இருக்கிற கடையை தான் நான் வாங்குறேன்… அதுவும் பெரிய தொகையை கொடுத்து…” என்று கோபக் குரலில் கூற,
புகழ்வேந்தன், “என் கடை நஷ்டத்தில் போகுது… அதை வாங்கி எனக்கு உதவி பண்ணுங்கனு உன்னிடம் வந்து அவர் கேட்டாரா?” 
“அவன் செய்ததுக்கு அவனை தண்டிக்காம உதவி தான் செய்து இருக்கிறேன்… நான் இப்படி தான் டாட்” என்றவன் எழுந்து தனது அறைக்கு சென்றுவிட்டான்.
மித்ராணி, “இந்த வயசில் நீங்களும் இப்படி தானே இருந்தீங்க!” என்று சமாதானம் செய்ய,
புகழ்வேந்தன், “நீ எப்படி இருந்தியாம்?” 
“இப்பவும் நான் அப்படியே தான் இருக்கிறேன்… வர்மா செய்தது தப்புன்னு நான் சொல்லலை, அதே நேரத்தில் புதுசா ஆரம்பிக்கிற தொழிலை இப்படி ஆரம்பிக்கிறதில் எனக்கு உடன்பாடு இல்லை” 
ஆதிரா, “என்னாச்சு பா?” 
புகழ்வேந்தன் நடந்ததை கூற, கலைவாணி, “உங்க ரெண்டு பேரோட கலவையா இருக்கிறவன் இப்படி செய்யலைனா தான் ஆச்சரியப்படணும்” என்று கூற, கமலாவும் அதை ஆமோதித்தார்.
ஆதிரா, “என்னை கேட்டால் மூணு பேருமே உங்க அங்கிளில் கரெக்ட்டுன்னு தான் தோணுது” 
“சரி படுக்கலாம்” என்றபடி புகழ்வேந்தன் எழ மற்றவர்கள் தங்கள் அறைக்குச் செல்ல, புகழ்வேந்தன் மித்ராணியிடம் விழிமொழியில் பேசிவிட்டு மதிவர்மன் அறைக்குச் சென்றார்.
மகனின் அறைக் கதவை தட்டிய புகழ்வேந்தன், “உள்ள வாங்க டாட்” என்ற மகனின் குரலில் மென்னகையுடன் உள்ளே சென்றார். தான் வருவேன் என்பதை உணர்ந்திருந்த மகனின் புரிதல் கொடுத்த புன்னகை அது.

குறிப்பு: அரளிப்பூ அடுத்த மாதம் ஆரம்பிக்கிறேன் தோழமைகளே!!! அதுவரை இந்த re-run.. உடம்பு சரி இல்லாம இருந்து, இப்போ தான் ஓகே ஆகி இருக்கிறேன்.. இனி தான் அரளிப்பூ எழுத ஆரம்பிக்கனும்..

நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥ 

Advertisement