Advertisement

ஏழு வருடங்கள் கழித்து…
சதீஷின் குலதெய்வ கோவிலில் சஞ்சய் ஆதிராவின் செல்ல மகள் தியாவிற்கு மொட்டைப் போட்டு காத்து குத்த அனைவரும் வந்திருந்தனர்.
பெண்கள் இருந்த பக்கம் சதீஷின் அன்னை ஏதோ அலப்பறையைக் கூட்டி கொண்டிருந்தார்.
“இங்க என்ன சத்தம்?” என்று கேட்டபடி சஞ்சயின் தாய்மாமன் வெற்றிவேல் வரவும் சதீஷின் அன்னை கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டார்.
ஆதிரா, “பேசிட்டு இருந்தோம் சித்தப்பா” என்று வடிவேல் போல் கூற, அனைவரும் சிரித்தனர்.
புன்னகையுடன், “நீ இங்க இருந்துமா சத்தம் வந்துது?” என்ற வெற்றிவேல் சதீஷின் அன்னையை ஓரப்பார்வை பார்க்க, அவர் விட்டால் போதும் என்பது போல் அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டார்.
ஆதிரா, “சத்தம் கேட்டு இப்போ தான் சித்தப்பா வந்தேன்” என்றாள்.
“அதானே பார்த்தேன்” என்றார்.
அதன் பிறகு மதிவர்மன் மடியில் வைத்து தியாவிற்கு மொட்டைப் போட்டு, காது குத்தினர்.
மதிவர்மன் மற்றும் அபிசாராவின் ஆறு வயது மகன் ‘அதிரூப வேந்தன்’ ப்ரனேஷை கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தான்.
“பாப்பாக்கு எதுக்கு காதுல குத்துறாங்க?
எதுக்கு தோடு போடணும்?
எதுக்கு மொட்டைப் போடுறாங்க?
எனக்கும் இப்படி தான் பண்ணீங்களா?
நானும் இப்படி அழுதேனா?
நான் கொஞ்சம் கூட அழலையா?
எனக்கு கூட தோடு போட்டீங்களா? பாய்ஸ் தோடு போட மாட்டாங்களே!” என்ற அவனது கேள்விகள் அனைத்திற்கும் ப்ரனேஷ்,
“பாப்பாக்கு தோடு போட காது குத்துறாங்க…
தோடு போட்டா தான் பாப்பா அழகா இருப்பா…
மொட்டைப் போட்டா தான் முடி நல்ல வளரும்…
ஆமா… அதான் உனக்கு முடி நல்ல வளர்ந்து இருக்குது…
ரூபன் பிரேவ் பாய் ஆச்சே! அதான் அழலை…
காது குத்தும் போது மட்டும் லைட்டா அழுத…
காதுல அந்த பாயிண்ட்டில் நிறைய நர்வ்ஸ் ஜாயின் ஆகுது… ஸோ அங்க அக்குபன்ச்சர் பண்ற மாதிரி காது குத்துறப்ப பிரைன் நல்ல டெவலப் ஆகும்” என்று பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்க, புகழ்வேந்தன் புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில் குழந்தை அதிகமாக அழவும் அதிரூப வேந்தன், “அங்கிள் பாப்பாக்கு வலிக்காம பண்ணத் தெரியாதா?” என்று காது குத்துபவரிடம் கோபமாக சண்டையிட்டான்.
 
சஞ்சய், “பாப்பா இப்போ அழுகையை நிறுத்திடுவா” என்று அவனை சமாதானம் செய்ய,
அவனோ, “பாப்பா அழுறா… அந்த அங்கிளைத் திட்டாம என்னைக் கன்வின்ஸ் பண்றீங்க!” என்று கோபத்துடன் கூறிவிட்டு குழந்தையிடம் சென்றான்.
சற்று தள்ளி இருந்த ஆதிராவை சஞ்சய் பாவமாக பார்க்க, அவளோ அழும் மகளை சமாதானம் செய்ய போராடிக் கொண்டிருந்தாள்.
மித்ராணி, நிவேதா, இனியமலர் என்று ஒவ்வொருவராக சமாதானம் செய்ய முயற்சிக்க குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை என்பதோடு உச்சஸ்தானத்தில் அழுதுக் கொண்டிருந்தது
அதிரூப வேந்தன் அங்கிருந்தே சஞ்சயை முறைக்க, சஞ்சய் மதிவர்மனிடம், “உன்னை விட உன் மகன் என்னை ரொம்ப மிரட்டுறான் டா” என்றான்.
மதிவர்மன் சிரிக்கவும், சஞ்சய், “அப்பனும் மகனும் ரொம்ப பண்ணீங்க! பொண்ணு தர மாட்டேன் பார்த்துக்கோ” என்றான்.
மதிவர்மன் அலட்டிக் கொள்ளாமல், “உன் கிட்ட யாரு கேட்டா! என் மகன் தூக்கிட்டு போய் தாலி கட்டுவான் டா” என்றான்.
அப்பொழுது அங்கே வந்த அனன்யா ‘காப்பரிசி’ என்று அழைக்கபடும் இனிப்பை இருவருக்கும் கொடுத்தாள். சஞ்சய் மென்னகையுடன் எடுத்துக்கொள்ள, மதிவர்மன் அமைதியாக எடுத்துக் கொண்டதும் அனன்யா விட்டால் போதுமென்று ஓடிவிட்டாள்.
இத்தனை வருடங்கள் கடந்தும் அனன்யா மீதான மதிவர்மனின் கோபம் குறையாமல் இருக்க, அனன்யாவிற்கு அவனை கண்டாலே பயம் என்று தான் சொல்ல வேண்டும். சில வருடங்கள் கழிந்த நிலையிலும் அனன்யா மீதான மதிவர்மனின் கோபம் குறையாமல் இருக்கவும், அவனது கோபத்தைக் குறைக்க முதலில் போராடிய அபிசாரா, அவன், “என்ன தான் இப்போ அவ திருந்தி வருந்தினாலும், என்னால் அவளை மன்னிக்க முடியாது… மன்னிப்பு கூட ஒரு வகையில் தண்டனை மாதிரி தான்… அதனால தான் நீ அவளை மன்னிச்சதுக்கு நான் ஒன்னும் சொல்லலை… ஆனா, என்னால் அது முடியாது… விட்டிரு” என்று தீர்க்காமாக கூறிய பிறகு அவன் போக்கிலேயே விட்டுவிட்டாள்.
அபிசாரா குழந்தையை வாங்கி தோளில் போட்டு முதுகை லேசாக தட்டிக் கொடுத்தபடி,
“அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி” என்று மெல்லிய குரலில் பாடவும், அவளது குரலுக்கு கட்டுப்பட்டது போல் தியா குட்டி அழுகையை நிறுத்தி மெல்ல உறங்கினாள். அதன் பிறகே அதிரூப வேந்தன் முகத்தில் மென்னகை மலர்ந்தது.
அதிரூப வேந்தன், “மம்மி உன்னோட வாயிஸ் ஸோ ஸ்வீட்… பாப்பா உடனே தூங்கிட்டா” என்று குதூகலித்தான்.
சிறிது நேரம் கழித்து சஞ்சயிடம் சென்ற அதிரூப வேந்தன், “பாப்பாக்கு யாரு தியானு பெயர் வச்சது?” என்று கேட்டான்.
சஞ்சய் பெருமையுடன், “நான் தான் வச்சேன்… நல்லா இருக்கா?” என்று கேட்டான்.
சிறுவனோ, “உங்களுக்கு கொஞ்சமாது சென்ஸ் இருக்கா மாமா?” என்று கேட்டான்.
சஞ்சய், “ஏன் டா?” என்று பாவமாக கேட்க,
அவன், “தியாவே குட்டி பெயரா தான் இருக்குது… நான் எப்படி சுருக்கி கூப்பிட?” என்று கேட்டான்.
சஞ்சய் பதில் சொல்வதறியாது முழிக்க, அங்கே வந்த ஆதிரா, “உனக்கு பிடிச்ச நிக் நேம் வச்சு கூப்பிடு” என்றாள்.
ஒரு நொடி யோசித்தவன், “பாப்புனு கூப்பிடவா?” என்று கேட்டான்.
ஆதிரா புன்னகையுடன் தலையாட்டவும், அவன் தீவிர குரலில், “மாமாக்கு எதுவுமே தெரியலை… எப்படி அத்தை மாமாவைக் கல்யாணம் பண்ணீங்க?” என்று கேட்டுவிட்டு ஓடினான்.
ஆதிரா, ‘சின்ன பையனை சமாளிக்க தெரியலை!’ என்பது போல் சஞ்சயைப் பார்க்க, சஞ்சய் பரிதாபமாக நண்பனை பார்க்க, அவனோ வாய்விட்டு சிரித்தான்.
அப்பொழுது தியாவை தூக்கியபடி அங்கே வந்த அபிசாரா, “என்னாச்சு அண்ணா?” என்று கேட்டாள்.
சஞ்சய், “எப்பொழுதும் போல குடும்பமே சேர்ந்து என்னை டேமேஜ் பண்ணுது” என்றான்.
“உன்னை டேமேஜ் பண்ண தனியா ஒரு ஆள் வேணுமா என்ன?” என்றபடி புகழ்வேந்தன் வர,
சஞ்சய், “மாமா வேணாம்…. அழுதுருவேன்” என்றதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.
விழா இனிதே முடியவும் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
அன்று இரவு குழந்தையை ஆதிரா தூங்க வைத்த பிறகு சஞ்சய் அவளை நெருங்க, அவளோ, “சின்ன பையனை சமாளிக்க முடியலை… மானத்தை வாங்குற…” என்று திட்டினாள்.
அவனோ, “என்னால ஒரு வர்மாவையே சமாளிக்க முடியாது… இதுல அவன் வர்மாவையும் உன் அப்பாவையும் சேர்த்த கலவையா இருக்கான்” என்றான்.
“என் கிட்ட மட்டும் நல்ல பேசு” என்று திட்ட ஆரம்பிக்க,
 
“இது பேசுற நேரமாடி” என்றபடி அவளை அணைக்க, அவள் அவன் கையைத் தட்டிவிட்டாள்.
அவளை கொஞ்சி கெஞ்சி தாஜா பண்ணி சரிகட்டி அணைக்கவும் அவனது செல்ல மகள் சிணுங்க ஆரம்பித்தாள்.
அவன் பரிதாபத்துடன் பார்க்க, அவள் குழந்தையைத் தூக்கி சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.
 
குழந்தையின் அழுகையில் அவன், “இதுவரை இப்படி அழுதது இல்லையே! என்னாச்சு? அம்மாவை எழுப்பவா?” என்று பதறினான்.
அவள், “பயப்படாத… ஒன்னுமில்லை… இன்னைக்கு கொஞ்சம் பயந்து அழுதாலும் அழுவானு அம்மா சொன்னாங்க” என்றாள்.
குழந்தை பயத்தில் அழுது கொண்டே இருக்கவும் அவன், “நான் அம்மாவை எழுப்புறேன்” என்றபடி கதவை திறக்க போக,
அவள், “என் செல்லை எடு” என்றாள்.
அவன் அதை எடுத்து கொடுத்தபடி, “அத்தையை எழுப்புறதுக்கு அம்மாவை எழுப்பலாமே!” என்றான்.
“அத்தை டயர்டா தூங்கிட்டு இருப்பாங்க… எழுப்புறேன்னு துள்ளாம என் செல்லில் அண்ணியோட பாட்டு ரெக்கார்ட் பண்ணதை ப்ளே பண்ணு” என்றாள்.
இன்று கோவிலில் அபிசாரா பாடியதை ஒலிக்கவிடவும் இரண்டே நிமிடத்தில் குழந்தை உறங்கியது.
புகழ்வேந்தன் வீட்டில், இரவு உணவை முடித்ததும், கலைவாணி அனைவருக்கும் சுத்திப் போட்ட பிறகே கமலாவுடன் படுக்கச் சென்றனர்.
அப்பொழுது அதிரூப வேந்தன், “மம்மி நான் இன்னைக்கு பாட்டி தாத்தா கூட படுக்கப் போறேன்… ரெண்டு பேரும் சூப்பர் ஸ்டோரி சொல்வாங்கனு டாடி சொன்னாங்க” என்றதும் அபிசாரா மதிவர்மனை முறைக்க,
அவனோ மனதினுள், ‘போட்டு கொடுத்துட்டியே ரூபா!’ என்று கூறிக் கொண்டு மனைவியைப் பார்த்து வசீகர புன்னகையுடன் கண்ணடித்தான்.
புகழ்வேந்தன் புன்னகையுடன், “ரூபன் வா நாம படுக்கப் போகலாம்” என்று அழைக்க,
அவன், “பாட்டி அதுக்குள்ள தூங்கிட்டாங்களா தாத்தா?” என்று கேட்டான்.
“பாட்டி நமக்கு பெட் செட் பண்ணிட்டு இருக்காங்க”
 
“சூப்பர்… அப்போ நீங்க சூப்பர் ஹீரோ கதைச் சொல்லுங்க… பாட்டி பெரிய பெரிய ப்ளையிங் டைனோ கதைச் சொல்லுவாங்க” என்றபடி துள்ளிக் குதித்துக் கொண்டு சென்றான்.
அவன் உள்ளே சென்றதும் அவனைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்ட மித்ராணி, “ரூபன் கண்ணாக்கு என்ன கதை வேணும் இன்னைக்கு?” என்று கேட்டார்.
“பெரிய பெரிய ப்ளையிங் டைனோ கதை”
 
“ஓகே…” என்று கூறி அவனைப் படுக்க வைத்து, “ஒரு பாரெஸ்ட்டில்…” என்று கதைச் சொல்ல ஆரம்பிக்க, அவனோ ‘ஹ்ம்ம்’ கொட்டியபடி கேட்க ஆரம்பித்தான்.
தங்கள் அறைக்குள் சென்றதும் மதிவர்மன் பின்னால் இருந்து அபிசாராவை அணைக்க,
அவளோ அவனது கையை விலக்க முயற்சித்தபடி, “ஏன் இப்படி பண்ற? அத்தையும் மாமாவும் என்ன நினைப்பாங்க?”
 
அணைப்பை இறுக்கியபடி, “ஒன்னும் நினைக்க மாட்டாங்க… ரூபனுக்கு ஆறு வயசாகிடுச்சு… தங்கச்சி பாப்பா ரெடி பண்ண வேண்டாமா?” என்றான்.
 
“மதி” என்று அவள் சிணுங்க,
அவளது காது மடலை இதழால் உரசியபடி, “சில்கி சொல்லுடி” என்று கிறக்கத்துடன் கிசிகிசுத்தான்.
அவளும் கிறக்கத்துடன் கண்களை மூடியபடி, “சில்கி பையா” என்று கொஞ்சலாக அழைத்தாள். அது அவனுக்கு போதையூட்ட, அவளை கைகளில் ஏந்தி அவளது இதழ்களை தன் இதழ் கொண்டு சிறை செய்தபடி அவளை மஞ்சத்தில் கிடத்தி அவள் மீது படர்ந்தான்.
அதன் பிறகு இருவரும் மற்றொரு காவியம் படைத்து காதலெனும் ஆழ்கடலினுள் மூழ்கி முத்தெடுத்தனர்.

இதே காதலுடன் இவர்கள் இனிதே வாழ வாழ்த்தி விடைபெறுவோம்

Advertisement