Advertisement

மறுப்பாக தலையசைத்தபடி அவளது கையை விலக்கியவன், “உண்மையான காதலுக்குள் ஈகோ வரக் கூடாது…” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“உன்னோடது உண்மையான காதல் தான்… உன் அளவு நான் உன்னைக் காதலிக்கலைனு தான் சொல்லுவேன்…” என்றவளின் பேச்சை இப்பொழுது அவன் இடைமறித்தான்.
“நீயும் என் அளவுக்கு என்னை ஆழமா தான் காதலிக்கிற… அதை என்னால் உணர முடியுது… என்ன! இந்த புரிதல் அப்போ நமக்கு இல்லை… காதல் இருந்தாலும் நல்ல புரிதல் இல்லை… அதுக்குள்ளே பிரிஞ்சுட்டோம்” என்றவன், “ஆனா ஒன்னு மட்டும் உறுதி… என்ன தான் எனக்கு ஈகோ இருந்திருந்தாலும் உங்க வீட்டில் உனக்கு மாப்பிள்ளைப் பார்த்து இருந்தாலோ, எங்க வீட்டில் கல்யாணத்துக்கு என்னை ரொம்ப போர்ஸ் பண்ணி இருந்தாலோ, நிச்சயம் உன்னைத் தேடி வந்திருப்பேன்” என்றவனின் பிடி இறுகியது.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, அவன், “அனு ப்ரொபோஸ் பண்ணப்ப என்னுள் இருந்த கேள்விகளுக்கு விடை கிடைச்சதோடு உன் மேல ரொம்ப கோபம் வந்துது… நீ தகுதி பத்தி பேசி என் தன்மானத்தைத் தாக்கி அவமானப்படுத்தியதை விட என் காதலை நீ நிராகரித்த விதம் தான் என்னை ரொம்ப காயபடுத்துச்சு… ‘அது எப்படி நீ என்னை விட்டுக் கொடுக்கலாம்?’, ‘அப்படி பேசிட்டு போய்ட்டா நான் உன்னை வெறுத்துருவேனா? என்னோட காதலை இப்படி லேசா நினைச்சுட்டியே! என்ன இருந்தாலும் நீ அப்படி எப்படி பேசலாம்? நான் என்ன வுமனைசரா?’, ‘ஒன்னு இல்லைனா இன்னொன்னு னு நினைப்பவனா நான்? எப்போதுமே ஒன்றில் நிலைத்து நிற்பவன் இந்த வர்மா’ னு உன் மேல செம கோபம்… ஆனா இப்போ யோசிச்சு பார்க்கிறப்ப தான் புரியுது… நாம பழகிகிட்ட அந்த கொஞ்ச நாட்களில் நம்ம குணத்தை பத்தியோ, காதலோட ஆழத்தை பத்தியோ நமக்கு எப்படி தெரியும்?” என்றான்.
அவள் அவனை அமைதியாக பார்க்கவும் அவன், “என்ன டா?” என்று கனிவாக கேட்டு அவள் கன்னத்தில் கை வைத்தான்.
அவன் கண்களைப் பார்த்தபடி உணர்ச்சியற்ற குரலில், “இப்போ திடீர்னு மாமாவும் அத்தமாவும் உன்னோட அப்பா அம்மா இல்லைனு சொன்னா என்ன செய்வ? உனக்கு எப்படி இருக்கும்?” என்று கேட்டாள்.
அவன் யோசனையுடன், “என்ன சொல்ற?” என்று கேட்டான்.
கட்டுப்படுத்த முடியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடியவும், அவன் சட்டென்று அவளை இழுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்தான்.
அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு நெஞ்சில் முகம் புதைத்தவள், “எஸ்… நான் ஒரு அனாதையாம் மதி…” என்று கதறினாள்.
அவளது கூற்றில் பெரிதும் அதிர்ந்தவன் அவளது முதுகை வருடியபடி, “இல்லைடா அப்படி இருக்காது… நீ சரியா தெரியாம…” என்றவனின் பேச்சை கதறலுடனே மறுப்பாக தலையாட்டி மறுத்த்தாள்.
அவன் அணைப்பை இறுக்கியபடி, “இல்லைடா… நீ அனாதை இல்லை… உனக்கு நான் இருக்கிறேன்” என்றான்.
அவள் அழுது கொண்டே இருக்க,
அவன், “நான் உனக்கு இருக்கிறேன் டா”, “எப்பவுமே நான் உன் கூட தான் இருப்பேன் டா… அழாத சாரா… அழாத டா”, “நீயே வலியோடு இருக்கும் போது நான் வேற உன்னை வறுத்திட்டேனே… என்னை மன்னிச்சுரு டா… சாரி டா… இனி எப்போதுமே உன் கூட தான் இருப்பேன்… அழாத சாரா ப்ளீஸ்” என்று அவனும் கண்கள் கலங்கியபடி பேசிக் கொண்டே இருந்தான்.
மெல்ல அவளது அழுகை தேம்பலாக மாறி நின்றது.
அவளது கன்னங்களையும் கண்களையும் துடைத்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு, “லவ் யூ டா” என்றான்.
“மீ டூ லவ் யூ” என்று கூறி அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
அவள் முதுகை வருடியபடி, “அன்னைக்கு என்னாச்சு?” என்று அவன் கேட்டதும்,
அவனது நெஞ்சில் குத்தியபடி, “இதை இப்போ தான் உனக்கு கேட்க தோணுச்சாடா?” என்று வலியுடனும் வேதனையுடனும் கோபத்துடனும் கேட்டாள்.
அவளது அடிகளை பெற்றுக் கொண்டவன், “சாரி டா… என்னை மன்னிச்சுரு…” என்றான்.
அடிப்பதை நிறுத்தியவள், “நானும் சாரி… என்ன இருந்தாலும் நான் அப்படி பேசி இருக்கக் கூடாது”
 
“அதை விடு… என்ன நடந்ததுனு சொல்லு” என்றான்.
“நீ ப்ரொபோஸ் தான் பண்ணப் போறன்னு கெஸ் பண்ணிட்டேன்… நெஞ்சு படபடப்பா இருந்தாலும் ஒரு விதமா புதுசா ஒரு உணர்ச்சியை பீல் பண்ணேன்… நம்ம சந்திப்புக்களை, உன்னோட பேச்சுகளை, பார்வையை நினைத்து ரகசியமா சிரிச்சுகிட்டேன்… உன்னோட வாட்ஸ்-அப் ப்ரோபைல் பிக்சர் பார்த்து தனியா பேசினேன்… உனக்கு ஏதாவது கிப்ட் வாங்கலாம்னு நினைத்து அன்னைக்கு சீக்கிரமாவே உன்னைப் பார்க்க ஆசையா கிளம்பினேன்… அனு என் கிட்ட ஏதோ தனியா பேசணும்னு சொல்லி என் கூடவே வந்தா… அவளுக்கு நான் உன்னை காதலிக்கிறது எப்படி தெரிஞ்சுதுனு தெரியலை… அங்க போனதும்…” என்று ஆரம்பித்தவளின் மனகண்ணில் அன்றைய நிகழ்வு படமாக ஓடியது…
முன்தினம் இரவு உறக்கம் வரமால் மெத்தையில் புரண்டுக் கொண்டிருந்த அனன்யா தன் மனதினுள் புதிதாக மலர்ந்திருந்த காதலைப் பற்றி பேச அபிசாரா அறைக்குச் சென்றாள். (மதிவர்மன் மீதான ஈர்ப்பை காதல் என்று நினைத்துக் கொண்டாள்.)  அப்பொழுது அபிசாரா தனது கைபேசியில் மதிவர்மனின் புகைப்படத்தைப் பார்த்து பேசிய காதல் மொழிகளைக் கேட்டு பெரிதும் அதிர்ந்தவள் வந்த சுவடு தெரியாமல் தனது அறைக்கு திரும்பிவிட்டாள். இரவெல்லாம் உறக்கமின்றி யோசித்தவள் அபிசாராவிடம் காதலை விட்டுத்தர கேட்கும் முடிவை எடுத்தாள். 

அடுத்த நாள் அபிசாரா பேரங்காடிக்கு கிளம்பியபோது அனன்யாவும் அவளுடன் கிளம்பினாள்.
பேரங்காடிக்கு சென்று உணவகங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அமர்ந்ததும் அனன்யா, “அக்கா எனக்காக வர்மாவை விட்டுத் தருவியா?” என்று நேரிடையாக கேட்டாள்.
அபிசாரா அதிர்ச்சியுடன் பார்க்க, அனன்யா, “ப்ளீஸ் கா” என்று கெஞ்சினாள்.
 
அபிசாரா அமைதியான குரலில், “நீ மட்டும் விரும்பினா போதுமா? மதி உன்னை விரும்ப வேண்டாமா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் விரும்புவார்… ப்ளீஸ் கா நீ எனக்காக விட்டுக் கொடேன்… இத்தனை வருஷம் அம்மா அப்பாவை உனக்காக நான் விட்டு கொடுத்தேன் தானே… நீ வர்மாவை எனக்காக விட்டு கொடு கா ப்ளீஸ்” என்று மீண்டும் கெஞ்சினாள்.
 
“என்னடி உளறுற?”
 
“என்ன கா?”
 
“இப்போ என்ன சொன்ன?”
 
“வர்மாவை விட்டு…” என்றவளின் பேச்சை இடையிட்ட அபிசாரா,
“ப்ச்… அது இல்லை… ஏதோ அப்பா அம்மாவை விட்டு கொடுத்ததா சொன்ன!”
 
அனன்யா அதிர்ச்சியுடன் திருதிருக்கவும்,
அபிசாரா சிறு கோபத்துடன், “தேவை இல்லாம எதுக்கு அப்பா அம்மாவை இழுக்குற? மதியை எதை வச்சு விரும்புறேன்னு சொல்ற? ஈர்ப்பா கூட இருக்கலாமே?”
 
“ஏன் உனக்கு கூட தான் ஈர்ப்பா இருக்கலாம்” என்று அனன்யா கோபத்துடன் கூறினாள்.
அபிசாரா கோபத்தை கைவிட்டவளாக, “அனு… உன்னோட வயசு…” என்று ஆரம்பிக்க,
அவளது பேச்சை இடையிட்ட அனன்யா கோபத்துடன், “நீ என்னை விட நாலு வயசு தான் பெரியவ… என் காதலைப் பத்தி பேசாத… விட்டுத் தர முடியுமா முடியாதா?”
 
“புரியாம பேசாத அனு… மதி உன்னை…” என்றவளின் பேச்சை மீண்டும் இடையிட்ட அனன்யா கோபத்துடன் மீண்டும் வார்த்தையை விட்டாள்.
அனன்யா, “கொஞ்சமாவது உனக்கு நன்றி இருக்கா?” என்று கோபத்துடன் கேட்டாள்.
அபிசாரா, “என்னடி உளறுற?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.
அனன்யா கோபத்துடனே, “நான் ஒன்னும் உளறலை… உண்மையைத் தான் சொல்றேன்… நீ என்னோட சொந்த அக்கா கிடையாது… அம்மாவும் அப்பாவும் உன்னைத் தத்தெடுதாங்க” என்றதும் அதிர்ச்சியில் அபிசாரா சில நொடிகள் உறைந்து போனாள்.
அபிசாரா, “நீ… நீ… சொல்…றது… உண்…மையா?” என்று திணறலுடன் கேட்டாள்.
“அம்மா அப்பா மேல சத்தியமா உண்மை” என்ற அனன்யா அடுத்து பேசியது எதுவும் அபிசாரா காதில் விழவில்லை.
அனன்யா, “அக்கா” என்று அபிசாரவை உலுக்கவும் சுயம் பெற்றவள் உணர்ச்சியற்ற பார்வையுடன், “மதி…வர்மன் உனக்கு தான்… நீ கிளம்பு” என்றாள்.
“தன்க் யூ” என்று குதூகலித்தவள் அடுத்த நொடி தாழ்ந்த குரலில் குற்ற உணர்ச்சியுடன், “சாரி கா… இந்த உண்மையை நான் பர்பஸ்ஸா சொல்லணும்னு சொல்லலை… நான்…” என்றவளின் பேச்சை கை நீட்டி நிறுத்திய அபிசாரா அவளைக் கிளம்புமாறு செய்கைச் செய்தாள்.
அனன்யா, “அக்கா நீ” என்று தயங்கியபடி நிற்க,
‘கத்தியால் குத்தி கிழிச்சுட்டு அக்கறை என்ன வேண்டியிருக்குது!’ என்று மனதினுள் நினைத்த அபிசாரா அமைதியான குரலில், “மதிவர்மன் கிட்ட பேசிட்டு வரேன்… என் மேல் நம்பிக்கை இருந்தா கிளம்பு” என்றாள்.
“சாரி கா”
 
“உன்னைக் கிளம்ப சொன்னேன்” என்று அவள் இறுகிய குரலில் சொல்லவும், அவளை திரும்பி பார்த்தபடி அனன்யா சென்றாள்.
(அடுத்து அபிசாரா ஊருக்கு கிளம்பிய அன்று அனன்யாவிடம், “உன்னோட அப்பா அம்மாவை உன் கிட்டயே கொடுத்துட்டு போறேன்… அண்ட் நீ கேட்டத்தையும் செஞ்சுட்டேன்” என்று கூறிவிட்டே கிளம்ப, பெற்றோரைப் பற்றிய அவளது வார்த்தைகள் அனன்யாவை சாட்டை அடியாக தாக்கி பெரும் குற்ற உணர்ச்சியில் தள்ளியது. ஆனால் அந்த நேரத்தில் அவளது குற்ற உணர்ச்சி பெற்றோர் விஷயத்தில் மட்டுமே இருந்தது.)
நிகழ் காலத்திற்கு திரும்பிய அபிசாரா, “அப்போ இருந்த அதிர்ச்சியில் என்ன செய்றதுனு தெரியாம தப்பா முடிவெடுத்து உன்னைக் காயபடுத்திட்டேன்… என்னை மன்னி…” என்றவளின் மன்னிப்பு அவனது இதழினுள் புதைந்தது.

Advertisement