Advertisement

சென்னை:

தங்கள் அறையை ஒட்டி இருந்த உப்பரிகையில் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்த மித்ராணி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவன் புகழ்வேந்தன் புறம் திரும்பி புருவம் உயர்த்தவும்,
புகழ்வேந்தன், “வயசானாலும் உன்னோட அழகு அப்படியே இருக்குது… லவ் யூ டி அல்லிராணி” என்று கண்சிமிட்டளுடன் கூறி இதழ் குவித்து முத்தத்தைப் பறக்க விட,
மித்ராணி வெட்கத்தை மறைத்தபடி, “நான் சொல்ல வேண்டிய டயலாக் இது… எப்போதும் என்னை வசியம் செய்யும் வசீகரன் நீ தான்” 
“யாரு யாரை வசியம் செய்றானு பார்த்துருவோமா?” என்று விஷம புன்னகையுடன் வினவ,
மித்ராணி, “போதும்… போதும்… கல்யாண வயசில் பையனையும் பொண்ணையும் வச்சுகிட்டு…” 
“நம்ம பேரன் பேத்திக்கே கல்யாண வயசு வந்த பிறகும் நான் இப்படி தான் இருப்பேன்” என்று கூறி கண்சிமிட்ட, அதை மனதினுள் ரசித்தாலும் மித்ராணி வெளியே முறைத்தார்.
வாய்விட்டு சிரித்த புகழ்வேந்தன், “உன்னோட முறைப்பில் காரமே இல்லை அல்லிராணி” என்றார். 
மித்ராணி கண்ணில் குறும்புடன், “காரம் தானே! கஞ்சியில் அதிகமா போட்டு தரேன்” என்று கூற, இருவர் முகத்திலும் ரசனையான காதல் புன்னகை அரும்பியது. அவர்களின் கடந்த காலம் கொடுத்த ரகசிய புன்னகை அது.
ஆம் புகழ்வேந்தன் மித்ராணி மீதான காதலை உணராமல் குடும்ப பகையை தீர்த்துக்கொள்ள மித்ராணியை கட்டாய கல்யாணம் செய்து, பின் தன் காதலை உணர்ந்து மித்ராணி கொடுத்த தண்டனைகளை ஏற்று, போராடி தன் காதலை புரிய வைத்து மித்ராணியையும் தன்னை காதலிக்க வைத்தார். ஆடை தொழிற்சாலை, நூற்பாலை, கட்டுமானத் தொழில், மென்பொருள் நிறுவனம், எஃகு தொழிற்சாலை(steel industry), தானுந்து தொழிற்சாலை(automobile industry), உல்லாச விடுதி(resort) என்று இன்னும் நிறைய தொழில்களை ‘வேந்தன் குரூப் ஆஃப் கம்பனீஸ்’ என்ற பெயரில் நடத்தி தொழில் சாம்ராஜியத்தின் முதல் இடத்தில் இருப்பவர் புகழ்வேந்தன். மதிவர்மன் வந்த பிறகு தொழில் மேலும் விரிவடைந்துள்ளது.   (புகழ்வேந்தன் மித்ராணி கதையை அறியாதவர்கள் எனது ‘ஏன்டி உன்னை பிடிக்குது!!’ கதையை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.)
புகழ்வேந்தன் மித்ராணி தம்பதியர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் மதிவர்மன், இளையவள் ஆதிரா மருத்துவம் இளங்கலை(MBBS) இறுதி ஆண்டில்(இன்டர்ன்ஷிப்-internship) இருக்கிறாள். புகழ்வேந்தன் மித்ராணி இருவருமே சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்கள். புகழ்வேந்தனின் வற்புறுத்தலில் மித்ராணியின் அன்னை கமலாவும்  இவர்களுடன் தான் இருக்கிறார். புகழ்வேந்தன் அன்னை கலைவாணியும் கமலாவும் சகோதரிகள் போலவே பழகுவர்.

 

புகழ்வேந்தன், “ஹ்ம்ம்… நேத்து தான் அம்மாவை ராஜமாதானு சொல்லி நீ நம்ம வீட்டுக்குள்ள வந்த மாதிரி இருக்குது அதுக்குள்ள உன்னை ராஜமாதானு சொல்ற நேரம் வந்துருச்சு” 
“எங்க! வர்மா தான் நழுவுற மீனா இருக்கிறானே!” 
“பார்க்கலாம்” என்ற புகழ்வேந்தன் மனதினுள் ஒரு கணக்கு இருக்க, “ஹ்ம்ம்… பார்க்கலாம்” என்ற மித்ராணி மனதினிலும் ஒரு கணக்கு இருக்க, இவர்களின் புதல்வன் மதிவர்மன் மனதினுள் என்ன கணக்கு இருக்கிறதோ!!!
 

திருநெல்வேலி:

மாலையில் சர்வேஷ் வீட்டிற்கு சென்ற போது முறைப்புடன் தன்னை வரவேற்ற குடும்பத்தினரை கண்டுக் கொள்ளாமல் தனது அறை நோக்கி செல்ல,
சர்வேஷின் அன்னை சாரதா, “டேய் நில்லு டா” என்றார்.
“பாட்டி… சித்தப்பா ரெப்ரெஷ் ஆகிட்டு வரட்டும்” என்ற அபிசாராவை முறைத்தபடி சர்வேஷ், “பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுறியா?” என்றார்.
சாரதா, “காலேஜ்ஜில் திட்டினது பத்தாதுன்னு இங்கே வேற திட்டுறியா? அதுவும் பிறந்தநாள் அதுவுமா! பிள்ளை முகமே வாடிப் போச்சு” என்று சிறு கோபத்துடன் ஆரம்பித்தவர் அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு விடாமல் திட்ட,
“ஹ்ம்ம்.. விடாத பாட்டி”, “அப்படி தான் நல்ல கேளு” என்று சர்வேஷின் மகள் நேத்ரா எடுத்து கொடுக்க, அபிசாரா நமட்டு சிரிப்புடன் சர்வேஷை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பொறுமை இழந்து கையை உயர்த்தி நிறுத்துமாறு செய்கை செய்த சர்வேஷ், “சாருமா எங்க போச்சு உன்னோட நீதி, நேர்மை, கண்டிப்பு எல்லாம்?” என்று வினவ,
சாரதா, “அது இருக்க போய் தானே உன்னை கேள்வி கேட்டுட்டு இருக்கிறேன்” என்றார். 
“கேள்வி கேட்டுட்டு இல்லை, திட்டிட்டு இருக்கிறீங்க” 
“பாட்டி இன்னும் திட்டவே ஆரம்பிக்கலை பா” என்ற நேத்ராவை முறைத்துவிட்டு, அன்னையை பார்த்து, “நான் திட்டினதை சொன்ன இந்த வாலு அவ என்ன செஞ்சானு சொன்னாளா?” 
சாரதா அசராமல், “பசங்க கொண்டாடினா இவ என்னடா செய்வா?” என்றார். 
சர்வேஷ் போலியான அதிர்ச்சியுடன் அன்னையை பார்த்து நிற்க, அப்பொழுது புன்னகையுடன் அங்கே வந்த சர்வேஷின் மனைவி அன்பரசி அவரிடம் காபியை கொடுத்தபடி, “ஸீன் போடாம காபியை குடிங்க” என்றார்.
மனைவியை செல்லமாக முறைத்தபடி காபியை வாங்கியவர் அன்னையை பார்த்து, “இவ ஒன்னும் செய்ய முடியாது தான், ஆனா அவங்களை திட்டி கண்ட்ரோல் பண்ணாம இவளும் சேர்ந்து கூத்தடிச்சிட்டு இருக்கிறா” என்றவர் முடிக்கும் போது உண்மையான முறைப்புடன் அபிசாராவை பார்த்தார்.
அபிசாராவும் முறைப்புடன், “நான் அவன்களை கண்ட்ரோல் பண்ணதால் தான் சத்தம் கம்மியா வந்துது… அந்த கொண்டாட்டம் பத்து நிமிஷம் தான்… அப்பறம் கிளாஸ் கிளீன் பண்ணிட்டு கிளாஸ் ஒழுங்கா நடந்துது… சும்மா தாம் தூம்னு குதிச்சது மட்டுமில்லாம ஒழுக்கம் இல்லை… நான் அவங்களை கெடுக்கிறேன்னு திட்டுறார்… நீங்களே சொல்லுங்க பாட்டி… இதில் ஒழுக்கக் கேடு எங்க வந்தது?” என்று சாரதாவிடம் முறையிட்டாள். 
நேத்ரா, “அப்பாக்கு உன் மேல பொறமை (அக்)கா” என்றாள்.
“எனக்கு பொறாமை?” என்று சர்வேஷ் ஒருமாதிரி குரலில் வினவ,
நேத்ரா, “ஆமா… உங்களை யாரும் இப்படி கொண்டாடலைனு பொறாமை… அபி (அக்)கா மாதிரி வர முடியுமா?” 
“அப்டிங்களா மேடம்!” என்று சர்வேஷ் நக்கலாக கூறவும்,
நேத்ரா சிலிர்த்துக் கொண்டு, “ஆமா… ஸ்கூல் காலேஜ்னு எல்லா இடத்திலும் ஸ்டாப்ஸ் ஸ்டுடென்ட்ஸ்னு எல்லார் கிட்டயும் டெரர்னு பெயரெடுத்த நீங்க எங்க! சிரித்த முகமா சட்டுன்னு எல்லார் மனசுலையும் இடம் பிடித்து எப்போதும் சென்ட் பெர்சென்ட் ரிசல்ட் தரும் அபி கா எங்க!” என்றாள். 
சர்வேஷ் மனைவியை பார்த்து கிண்டலான குரலில், “நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது… லாலலாலா… னு பாட்டு கேட்குதா அரசி!” என்றார்.
நேத்ரா தந்தையை முறைக்க, அன்பரசி மென்னகையுடன், “சின்ன பிள்ளைங்க கூட என்ன மல்லுகட்டிட்டு இருக்கிறீங்க!” என்றார்.
நேத்ரா, “அம்மா அப்பா என்னை கிண்டல் பண்றார், நீ சிரிக்கிற!” என்று சண்டைக்கு வந்தாள்.
அபிசாரா, “தரு சித்தப்பா ட்ராக் மாத்துறாங்க” என்று கூற,
“என்ன தான் நீ பேச்சை மாத்தினாலும், அபியை திட்டினதுக்கு உனக்கு தண்டனை உண்டு… அபி சொல்றதை நீ கேட்கணும்” என்று தீர்ப்பு வழங்கிய சாரதா அபிசாராவை பார்த்து, “நீயும் இனி இது போல் பண்ணக் கூடாதுன்னு உன் ஸ்டுடென்ட்ஸ்கு அட்வைஸ் பண்ணு” என்றார்.
“சொல்லிட்டேன் பாட்டி” என்று அபிசாரா கூற,
அபிசாராவை அறிந்தவராக சர்வேஷ் மென்னகையுடன், “சொல்லு டா… சித்தப்பா என்ன செய்யணும்?” என்று கேட்டார்.
மென்னகையுடனும் சிறு தோள் குலுக்களுடனும், “பெருசா ஒன்னுமில்லை…” என்று ஆரம்பித்த அபிசாரா, “தரு கேட்ட டைமண்ட் நெக்லஸ்சை அவளுக்கு வாங்கி கொடுத்துடுங்க” என்றாள்.
சர்வேஷ் அதே மென்னகையுடன், “இது இப்படி தான் முடியும்னு தெரியும்… உனக்கு என்ன வேணும்?” 
“அதான்…” 
“உனக்கு என்ன வேணும்னு கேட்டேன்” என்று சற்று அழுத்தத்துடன் சர்வேஷ் வினவ, 
அபிசாரா, “உங்க அன்பு” என்று புன்னகையுடன் தலை சரித்து கூற,
நேத்ரா கையை தேய்த்தபடி, “ஸ்ப்பா… புல்லரிக்குது” என்றாள்.
அபிசாரா, “பார்த்து… மாடு ஏதும் மேஞ்சிட போகுது” என்று கூற,
நேத்ரா அலட்டிக் கொள்ளாமல், “அப்பா எதுக்கு இருக்காங்க?” என்றாள். 
அபிசாரா சர்வேஷை ஓரப்பார்வை பார்த்தபடி, “எதுக்கு?” 
நேத்ராவும் சர்வேஷை ஓரப்பார்வை பார்த்தபடி மென்னகையுடன், “மாட்டை விரட்டி மேய்க்கிறதுக்கு தான்” என்று கூற,
சர்வேஷ், “அடிங்க” என்றபடி அடிக்க வர, சகோதரிகள் எழுந்து ஓட, சர்வேஷ் சில நொடிகள் துரத்திவிட்டு களைப்புடன் சோபாவில் அமர, நேத்ரா தந்தைக்கு பழிப்பு காட்டியபடி எதிரில் அமர, அபிசாராவும் புன்னகையுடன் அமர்ந்தாள்.
இது எப்பொழுதும் நடப்பது என்பதால் பெரியவர்கள் முகத்தில் புன்னகை அரும்பியது.
அபிசாரா சர்வேஷின் அண்ணன் ப்ரனேஷின் மூத்த மகள். அண்ணன் என்றால் உடன் பிறந்த அண்ணன் இல்லை. சாரதாவின் அக்கா அமுதாவின் மகன் தான் ப்ரனேஷ்.
அபிசாராவின் குடும்பம்:- தந்தை ப்ரனேஷ், தாய் இனியமலர், தங்கை அனன்யா. தந்தை வழி தாத்தா ஆனந்தன், பாட்டி அமுதா.
கடந்த நான்கு வருடங்களாக அபிசாரா திருநெல்வேலியில் சர்வேஷ் வீட்டில் இருக்கிறாள். சென்னையில் M.E படித்து முடித்துவிட்டு சர்வேஷின் கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டே மேல் படிப்பை தொடர்வதற்காக இங்கே வந்தவள் தற்போது Phd முடித்திருக்கிறாள்.
அபிசாராவின் பெற்றோர் ப்ரனேஷ் இனியமலர் பற்றி அறியாதவர்களுக்கு அவர்களை பற்றி சிறு குறிப்பு:
ப்ரனேஷ் புகழ் பெற்ற சிறந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர். சென்னையில் இருக்கும் பிரபலமான ‘Healthy Life’ மருத்துவமனையின் உரிமையாளர். ப்ரனேஷின் தந்தை ஆனந்தன் சிறந்த மனநல மருத்துவர்.
இனியமலர் சிறு வயதில் இருந்து தந்தையின் அரவணைப்பும் பாசமுமின்றி சித்தி கொடுமைகளை அனுபவித்து, விதி மற்றும் சித்தியின் சதியால் காதலை பரிமாறிக் கொள்ளும் முன் ப்ரனேஷை பிரிந்து வேறு ஒருவனுக்கு மனைவியாகி லண்டன் சென்று அவனது சைக்கோதனத்தில் இருந்து விடுபட்டு அரை உயிராய் இந்தியா திரும்பி, தோழியின் உதவியுடன் உயிர்த்தெழுந்தாள்.
காதல் தோல்வியில் மனமுடைந்த ப்ரனேஷ் தந்தையின் ஆலோசனைகளில் ஓரளவிற்கு தேறினாலும் முழுமையாக வெளிவர முடியாமல் மேல் படிப்பிற்காக லண்டன் செல்பவன் தாயகம் திரும்பாமல் 7 ஆண்டுகளை கடத்துவான். பின் அவனுக்கு கிடைத்த சில செய்திகளை வைத்து தனது காதலி இனியமலரை தேடி தாயகம் திரும்பி, அவளைத் தேடி கண்டுபிடித்து, அவள் மனதை கரைத்து திருமணம் செய்துக் கொள்வான். ப்ரனேஷ் இனியமலர் இருவருக்குமே அபிசாரா என்றால் உயிர். (இவர்களின் கதையை அறிய விரும்புவோர் எனது கதை ‘இதழ் திறவாய்!!’ படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்)

Advertisement