Advertisement

நாட்கள் மெல்ல நகர்ந்தது. அபிசாராவின் குறும்புகளில் மதிவர்மன் தன்னை தொலைத்துக் கொண்டிருக்க, அபிசாராவோ அவன் தன்னை மனமொன்றி நெருங்க காத்துக் கொண்டிருக்கிறாள்.
அபிசாரா அவளது விருப்பம் போல் சாதாரண பேராரிசியராக மட்டுமே அவர்கள் பொறியியல் கல்லூரியில் வேலைப் பார்த்து வருகிறாள். இங்கேயும் மாணவர்களின் மனதைக் கவர்ந்து அவர்களின் ஆதார்ச குருவாக மாறி இருந்தாள்.
அபிசாரா கல்லூரியில் எப்பொழுதும் இன்முகத்துடன் இருந்தாலும், பேராசிரியருக்கே உரியதான நிமிர்வு சிறிதும் குறையாமல் கம்பீரத்துடன் இருந்தாள். மாணவர்களை அவர்கள் வழியிலே சென்று அன்புடன் அடக்குவது, சுவாரசியமான எளிய முறையில் பாடம் நடத்துவது, கல்லூரியில் மதிவர்மனை சிறிதும் சலனமின்றி கல்லூரி நிறுவனராக மட்டும் அணுகும் மனதிடம் என்று அவளது பேராரிசியர் பரிமாணத்தை கண்டு மதிவர்மன் பிரம்மித்தான்.
வீட்டிலோ அதற்கு நேர் எதிராக இருந்தாள். மதிவர்மன் பல நேரத்தில் அவளது அடாவடியில் திணறித் தான் போனான். மனதை தடுமாற விடக் கூடாது என்று அவன் தனிமையில் அவளைத் தொடவோ, அருகில் செல்லவோ மாட்டான்.
அதை உடைக்க என்றே ஒரு நாள் காலையில் அவன் குளிக்க கிளம்பும் போது அவள் அவனை இடிப்பது போல் குளியறை உள்ளே செல்லப் பார்க்க,
அவன் சட்டென்று விலகி நின்றபடி, “சாரா விளையாடாத… இன்னைக்கு நான் சீக்கிரம் போகணும்… முக்கியமான மீட்டிங் இருக்குது சொன்னேனே!” என்றான்.
அவள் குளியலறைக் கதவை திறந்தபடி அவனைப் பார்த்து, “எனக்கும் தான் சீக்கிரம் போகணும்… இன்னைக்கு லேப் செட் பண்ணனும்” என்றாள்.
“ப்ச்.. விளையாடாத சாரா… தள்ளு”
 
அவள் குறும்பு பார்வையுடன், “டைம் சேவ் பண்ண ஒன்னு பண்ணலாமா? சேர்ந்து குளிச்சா டைம் சேவ் ஆகும்” என்று கூறி கண் சிமிட்ட, அவன் அதிர்ந்தான்.
அவனுள் ஹார்மோன்கள் ஹார்மோனியம் வாசிக்க, தன்னைக் கட்டுப்படுத்த வெகுவாக போராடியவன், “தள்ளிப் போடி” என்று அவளை சற்று தள்ளிவிட்டுவிட்டு குளியலறையினுள் புகுந்துக் கொண்டான்.
உள்ளே சென்ற பிறகும் அவனது உணர்வுகள் அடங்க சில நிமிடங்கள் ஆனது.
அவளுமே படபடப்புடன் தான் இருந்தாள். அவனைச் சீண்ட என்று கலாட்டா செய்ய ஆரம்பித்தவள் கடைசி வாக்கியத்தை பேசிய பிறகே அதன் அர்த்தத்தின் முழு வீரியத்தை உணர்ந்தாள். அவளது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. ‘இப்படி பேசிட்டேனே!’ என்ற படபடப்பும், ‘மதி என்னைத் தப்பா நினைச்சிருப்பானோ!’ என்ற தவிப்பும் அவளை ஆட்கொள்ள அப்படியே மெத்தையின் மீது அமர்ந்துவிட்டாள்.
குளித்து முடித்து வெளியே வந்தவன் அவள் அமர்ந்திருந்த நிலையை வைத்தே அவளது மனதை புரிந்துக் கொண்டான்.
அவன், “டைம் ஆகுது சொன்ன! குளிக்க போகலையா?” என்று எதுவும் நடக்காதது போல் இயல்பான குரலில் கேட்டான்.
அதன் பிறகே சற்று ஆசுவாசமானவள் அமைதியாக எழுந்து குளிக்கச் சென்றாள்.
 
 
இன்னொரு நாள் காலையில் மதிவர்மன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பொழுது உள்ளே சென்று அமர்ந்தாள்.
முதலில் அமைதியாக உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த மதிவர்மனின் மனம் அவளது ரசனையும் காதலும் இழையோடிய விழி வீச்சில் சிதற ஆரம்பித்தது.
அவளைக் கிளப்பும் நோக்கத்துடன், “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று கேட்டான்.
அவள் மந்திர புன்னகையுடன், “நீ உன் வேலையைப் பாரு, நான் உன்னைப் பார்க்கிறேன்” என்று கூறி கண் சிமிட்டினாள்.
அவளது பதிலை உள்ளுக்குள் வெகுவாக ரசித்தவன் வெளியே செல்ல முறைப்புடன், “எதுக்கு? அப்பறம் அங்க காட்டினேன் இங்க காட்டினேன்னு ‘மிஸ்டர் சில்க்’னு சொல்றதுக்கா? நீ ஆணியே பிடுங்க வேணாம், கிளம்பு” என்றான்.
அவள் விரிந்த புன்னகையுடன், “நீ செம உஷார் சில்கி பையா” என்றாள்.
 
“அப்படி கூப்பிடாத”
“நீ மட்டும் என்னை குள்ளச்சினு கூப்பிடுற?”
 
அவன் முறைப்புடன், “அதுவும் இதுவும் ஒன்னா?” என்று கேட்க,
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “எனக்கு ஒன்னு தான்” என்றாள்.
“அப்போ நான் குள்ளச்சினு கூப்பிடலைனா இப்படி கூப்பிட மாட்டியா?” என்று கேட்டவனின் மனம் அவளது ‘சில்கி… சில்கி பையா’ என்ற அழைப்புகளை ரசிக்கத் தான் செய்தது.
“ஹ்ம்ம்.. யோசிப்பேன்”
 
அவன் அவளை முறைக்க, அவளோ, “சரி… எனக்கும் வொர்க்-அவுட் பண்ண சொல்லித் தா” என்றாள்.
‘என்னது!!!’ என்று மனதினுள் அலறியவன் அவளிடம், “உனக்கு எங்கேயும் ஊளைச் சதை இல்லை… உனக்கு வொர்க் அவுட் தேவை இல்லை… நீ கிளம்பு… என்னை வொர்க் அவுட் செய்ய விடு…” என்றான்.
 
“நானா உன்னை வொர்க் அவுட் செய்ய விடாம தடுக்கிறேன்? நான் அமைதியா தானே உட்கார்ந்து இருக்கிறேன்!”
 
“யாரு நீ அமைதியா உட்கார்ந்து இருக்கிறியா?”
 
அவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டினாள்.
“இம்சை பண்ணாம கிளம்புடி”
 
“ஏன்?”
 
“சாரா”
 
“ஹ்ம்ம்”
 
“ப்ளீஸ்” என்று அவன் கெஞ்சவும், “சரி… பொழச்சுப் போ” என்று கூறிவிட்டு வெளியேறினாள்.
“ஊப்ஸ்” என்றபடி வாயினால் மூச்சை வெளியிட்டவன் ரகசிய புன்னகையுடன் உடற்பயிற்சியை தொடர்ந்தான்.
இப்படியே அபிசாராவின் கலாட்டாக்களுக்கும் சீண்டல்களுக்கும் நடுவே நாட்கள் நகர்ந்தது.
ஒரு நாள் இரவு அவர்கள் அறையில் மெத்தையில் கால் நீட்டி அமர்ந்தபடி அவன் மடிகணினியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் அருகில் தானும் கால் நீட்டி அமர்ந்திருந்தவள் கையில் பாட புத்தகத்தை வைத்திருந்தாலும், அவளது கவனமும் பார்வையும் அவனிடமே இருந்தது.
அவளை நிமிர்ந்து பார்க்காமல் அவன், “சைட் அடிக்காம நோட்ஸ் எடு” என்றான்.
“என் கண்ணு… என் புருஷன்… நான் அப்படி தான் சைட் அடிப்பேன்” என்றாள்.
 
சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன், “நான் ஆபீஸ் ரூம் போய்டுவேன்” என்று மிரட்ட,
அவளோ, “போ… நானும் அங்கே வந்து உட்கார்ந்து சைட் அடிப்பேன்” என்றாள்.
தலையை இருபக்கமும் ஆட்டிக் கொண்டவன் கவனத்தை மடிகணினியில் திருப்பினான்.
“எப்போ நீ என்ன பாப(பார்ப்ப)
எப்போ என் பேச்ச கேப்ப
எப்போ நான் பேச சில்கி பையா
எப்போ டா கோவம் கொறையும்
எப்போ டா பாசம் தெரியும்
எப்போ நான் பேச சில்கி பையா…” என்ற ‘காளை’ திரைப்படப் பாடலை பாடினாள். (பாடலில் ‘கெட்ட பையா’ என்று வரும் இடத்தில் ‘சில்கி பையா’ என்று மாற்றி பாடினாள்)
அவளது குரலில் எப்பொழுதுமே அவன் தன்னை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான். அதிலும் அவள் தேர்ந்தெடுத்த பாடல் வரிகள் அவன் மனதை பிசைந்தது.
‘சில்கி பையா’ என்ற வார்த்தையில் அவன் அவளை முறைக்க, அவளோ அதை கண்டுக் கொள்ளாமல் பாடலைத் தொடர்ந்து பாடினாள்.
“நிழலாக உந்தன் பின்னால்
நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால்
தடுமாருறேன்” என்று பாட,
‘யாரு நீயா தடுமாருற! நான் தான்டி தடுமாருறேன்’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன் பார்வையை அவள் பக்கம் திருப்பவில்லை.
“உன் துணைத் தேடி
நான் வந்தேன்
துரத்தாத டா
உன் கோபம் கூட நியாயம் என்று
ரசித்தேனே டா” என்று பாடிய போது சட்டென்று மடிகணினியை மூடியவன்,
“நானாடி உன்னை துரத்தினேன்?” என்று சிறு கோபத்துடன் கேட்டான்.
 
“அப்போ நான் துரத்தினேன்னு இப்போ நீ என்னைத் துரத்துறியா?” என்று அவள் சற்று இறங்கிய குரலில் கேட்டாள்.
 
அவன் முறைப்புடன், “கொஞ்சம் டைம் கொடுனு தானே சொன்னேன்…” என்றான்.
அவள் அமைதியாக இருக்கவும், அவன், “அண்ட் நீ ஒன்னும் என் துணைத் தேடி வரலை” என்றான்.
“நீயும் தான் என்னைத் தேடி வரலை”
 
ஒரு நொடி மௌனித்தவன், “தப்பு தான்… சாரி” என்றான்.
அவள் சிறு ஆச்சரியத்துடன் பார்க்க, அவன் அமைதியான குரலில் பேசினான்.
“என்னோட காதலை நீ நிராகரித்த விதம் என்னை ரொம்பவே பாதிச்சிருச்சு… அன்னைக்கு வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் ரொம்ப நேரம் கழிச்சு கொஞ்சம் நிதானத்துக்கு வந்ததுக்கு அப்புறம் தான் ஒன்னு புரிஞ்சுது… அன்னைக்கு நீ என்னைப் பார்த்து சிரிக்கவே இல்லை அண்ட் வந்ததில் இருந்தே உன் முகம் சரி இல்லைனு… ஸோ நான் காதலைச் சொல்லப் போவதை எதிர்பார்த்து வேணும்னே அப்படி பேசி நிராகரித்தியோனு தோணுச்சு… உனக்கு என்ன பிரச்சனையோனு மனசு அடிச்சுகிச்சு… அடுத்த நாள் உன்னை நேரில் பார்த்து பேசலாம்னு நினைச்சா, ஆதி மூலம் நீ ஊருக்கு போனது தெரிந்துது… அப்போ நான் அனுபவிச்ச வலி…” என்று நிறுத்தியவன் மூச்சை இழுத்துவிட்டபடி தொடர்ந்தான்.
அவள் தவிப்புடன் அவன் கையைப் பற்ற, அவனும் அவளது கையை இறுக்கமாக பற்றியபடியே தொடர்ந்தான்.
“வலியும் கோபமும் அதிகமா இருந்தாலும், ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுது… நீ என் உயிரில் நீக்கமற கலந்துட்டனு… உன் கண்ணில் எனக்கான தேடலையும் ரசனையையும் காதலையும் நான் பார்த்தேன்… அன்னைக்கு நைட் போனில் பேசினதிலேயே உன்னோட மனசு எனக்கு தெளிவா புரிஞ்சுது… ஆனா அடுத்த நாள் நீ ஏன் என் காதலை நிராகரிச்ச? அதுவும் நிராகரிச்ச விதம்? உனக்கு என்ன பிரச்சனையோ? னு மனசு தவிச்சாலும், ‘உன்னை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போனவ உனக்கு வேணாம்’ னு இன்னொரு மனசு கோபப்பட்டு உன்னைத் தேடி வரவிடலை… ஓபன்னா சொல்லணும்னா ஆண் என்ற ஈகோ என்னைத் தடுத்துருச்சு… அதுக்கு ரொம்பவே வருந்தி சாரி கேட்கிறேன்… சாரி டா… அம் ரியலி…” என்றவனின் பேச்சை தடை செய்வது போல் தன் கரம் கொண்டு அவன் வாயை மூடினாள்.

Advertisement