Advertisement

மதிவர்மனின் அழைப்பில் கலைவாணி, “நாளைக்கு படிச்சுக்கலாம்… ராஜா கூப்பிடுறான் பாரு” என்றார்.
பகவத் கீதையை மூடியவள் வலது கை முஷ்டியை மூடி நெஞ்சில் வைத்து, “உங்கள் கட்டளையே எனது சாசனம் பெரிய ராஜமாதா” என்று கூறி லேசாக தலை வணங்கி நிமிற,
கலைவாணி மற்றும் கமலா முகத்தில் புன்னகை மலர்ந்தது. கலைவாணி விரிந்த புன்னகையுடன், “வாலு” என்று கூற,
அவள் புன்னகைத்துவிட்டு தங்கள் அறை நோக்கி ஓடினாள்.
கமலா, “இத்தனை நாள் நம்ம கிட்ட சிரிச்சு பேசினாலும் இன்னைக்கு தான் மனசில் இருந்து சிக்கிறா” என்றார் மகிழ்ச்சியுடன்.
தலை அசைத்து அதை ஆமோதித்த கலைவாணி, “அருமையான பொண்ணு… பொறுமை, பொறுப்பு, திறமை, குறும்புனு எல்லா வகையிலும் ராஜாக்கு ஏத்த ராணி…” என்றவர், “ரொம்ப நாள் கழிச்சு ராஜா முகமும் இன்னைக்குத் தான் இயல்பான சின்ன சிரிப்புடன் இருக்குது” என்றார்.
அபிசாரா அறையினுள் வந்ததும், “உட்காரு சாரா… கொஞ்சம் பேசணும்” என்றான்.
அவள் அமர்ந்ததும், அவன், “நாளையில் இருந்து நம்ம காலேஜ் சார்ஜ் எடுத்துக்கோ” என்றான்.
“என்ன!!” 
“காலேஜ் போறதுக்கு எதுக்கு ஷாக்?” 
“காலேஜ் போறதுக்கு ஷாக் இல்லை… சார்ஜ் எடுக்க சொன்னதில் தான் கொஞ்சம் ஷாக்” 
“ஏன்?” 
“எனக்கு என்ன எக்ஸ்பிரியன்ஸ் இருக்குதுன்னு சார்ஜ் எடுக்கச் சொல்ற?” 
“உன் திறமையின் மீது இருக்கும் நம்பிக்கையில் சொல்றேன்” 
மறுப்பாக தலை அசைத்தவள், “எனக்கு பாடம் நடத்துவதில் தான் இன்ட்ரெஸ்ட்… சேர்மன் வேலையெல்லாம் நீயே பாரு” 
“சேர்மன் கிளாஸ் எடுக்கக் கூடாதுன்னு ரூல் இல்லையே!” 
“இல்லை தான் ஆனா நான் சாதாரண ப்ரொபசரா கிளாஸ் எடுக்கத் தான் ஆசைப்படுறேன்” 
அவன் புருவம் உயர்த்தி பார்க்க, அவள் தொடர்ந்தாள்.
“நானே உன் கிட்ட பேசணும்னு இருந்தேன்… ஒரு வாரம் கழிச்சு நம்ம காலேஜ் வரலாம் நினைச்சேன்… ஆனா சேர்மன் வைஃப் என்ற அடையாளத்தில் இல்லாம சாதாரண ப்ரொபசரா வர தான் நினைக்கிறேன்… அப்போ தான் எல்லோரும் இயல்பா பழகுவாங்க” 
“எத்தனை நாளுக்கு?” 
“புரியலை” 
“எப்படியும் நீ தான் இந்த காலேஜ் சார்ஜ் எடுத்துக்கணும் ஏன்னா…” என்று ஒரு நொடி நிறுத்தியவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியபடி, “இந்த காலேஜை நான் ஆரம்பித்ததே உனக்காகத் தான்…” என்றான்.
அவள் கண்ணில் அதிர்வு தெரியவும், அவன் மனதினுள் சிறு பெருமூச்சை விட்டபடி தொடர்ந்தான்.
“நீ அப்படி பேசிட்டு போனதும் என்னோட சொந்த முயற்சியில் என்ன பிஸ்னெஸ் ஆரம்பிக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்… நீ ஊருக்கு போய் உன் சித்தப்பா காலேஜில் வேலைப் பார்க்க ஆரம்பிச்சத்தும், உனக்காகவே என்னோட சொந்த முயற்சியில் SM இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பிச்சேன்… ஆதி கூட S யாரு னு கிண்டல் பண்ணுவா. நான் S னா சக்சஸ்னு சொல்லுவேன்… அதுவும் சரி தானே என் வாழ்வின் சக்சஸ் நீ தானே!” என்றான்.  
கலங்கும் கண்களை கட்டுப்படுத்தியபடி அவள் பேச்சற்று அமர்ந்திருந்தாள்.
அவள் மனமோ, ‘அன்பால் கொல்றது இது தானா! இவ்வளவு காதலை கொட்ட நான் என்னடா செய்தேன்? ஏன்டா உனக்கு என் மேல் இவ்வளவு காதல்?’ என்று கேட்டது.
அவளது மனதை அவள் கண்களில் படித்தவன் போல், “ஏன்! அம்மா, அப்பாவை, பிறந்து வளர்ந்த ஊரை விட்டுட்டு போற அளவுக்கு உனக்கு என் மேல் காதல் இல்லையா! அதைப் போல் தான்” என்றான்.
கட்டுபடுத்த முடியாமல் கண்ணீர் கோடாக அவள் கன்னத்தில் இறங்க, அவள் வேகமாக அவனை அணைத்து நெஞ்சில் முகம் புதைத்து தேம்பினாள்.
அவளை அரவணைத்து முதுகில் வருடிக் கொடுத்தான்.
அவன் நெஞ்சில் தலை சாய்த்தபடியே முகத்தை மட்டும் நிமிர்த்தி பார்த்தபடி, “சாரி மதி… நான் உன்னை…” என்றவளின் பேச்சை ஒற்றை விரலை அவள் உதட்டில் வைத்து நிறுத்தினான்.
அவள் கண்கள் தவிப்புடன் அவனை நோக்க, அவளது கண்ணீரை துடைத்தவன், “யாரோ பழைய கோட்டையெல்லாம் அழிச்சாச்சு… புதுசா போடலாம்னு சொன்னாங்க!” என்றான் புருவம் உயர்த்தி இளநகையுடன்.
“நான் மட்டும் அழிச்சா போதுமா?” 
“இல்லைனா, என்னை இப்படியே விட்டுருவியா என்ன?” என்று மென்னகையுடன் கேட்டபடி அவளது நெற்றியில் முட்ட, அவளும் மென்னகையுடன் இல்லை என்று தலையை ஆட்டினாள்.
பின் அவன், “எப்போ சார்ஜ் எடுத்துக்கிற?” என்று மீண்டும் கேட்கவும்,
அவனை விட்டு சற்று நகர்ந்து அமர்ந்தவள், “ஒரு டூ இயர்ஸ் போகட்டுமே! நானும் எதார்த்தமா பழகி காலேஜ் நிலவரத்தை தெரிஞ்சுக்கிறேனே!” என்றாள்.
அவன் சிறு யோசனையுடன், “சரி டூ இயர்ஸ் தான் உனக்கு டைம்… ஆனா நீ யாருனு மறைக்கிறது…” என்று இழுக்கவும்,
அவள், “ப்ரின்சிபால் மட்டும் தானே நம்ம கல்யாணத்துக்கு வந்தார்… ஸோ அவர் கிட்ட யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிடலாம்… நாளானைக்கு இருக்கிற இண்டர்வியூ அட்டென்ட் பண்ணியே நான் வேலைக்கு சேருறேன்… ப்ளீஸ்… ப்ளீஸ்” என்று அவள் கொஞ்சலாக கெஞ்சவும்,
புன்னகையுடன், “சரி” என்றவன், அவளைச் சீண்ட, “செலக்ட் ஆகிடுவியா?” என்றான்.
அவளோ அலட்டிக்கொள்ளாமல் தோளைக் குலுக்கினாள்.
அவன் மென்னகையுடன், “காலேஜ் எப்படி போயிட்டு வருவ?” என்று அடுத்த கேள்வியை கேட்டான்.
“என்னோட சுசுகி-அக்செஸ்(இரு சக்கர வண்டி) சித்தப்பா வீட்டில் இருக்குது” 
“அது தான் வேணுமா?” 
“இல்லை… அதை நேத்ரா யூஸ் பண்ணிப்பா” 
“டூ மினிட்ஸ்” என்று கூறி கைபேசியை எடுத்து யாருக்கோ பேசியவன், “நாளைக்கு காலையில் உன்னோட புது வண்டி நம்ம வீட்டில் இருக்கும்” என்றான்.
அவள் புன்னகையுடன், “தேங்க்ஸ்” என்று கூற, அவன் முறைத்தான்.
அவள் விரிந்த புன்னகையுடன், “இந்த முறைப்புக்கும் தேங்க்ஸ்” என்றதும் அவன் உதட்டோரம் புன்னகை அரும்பியது.
“இதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்” என்று கூறி அவள் கண் சிமிட்ட,
அவன் சிரிப்புடன் அவளது தலைமுடியை லேசாக கலைத்தபடி, “கொஞ்சம் வேலை இருக்குது” என்று கூறி எழுந்துச் சென்றான்.
குட்டிப் போட்ட பூனையாக ஆதிரா பின்னாடியே சஞ்சய் சுத்திக் கொண்டிருக்கவும், அவள், “இப்போ எதுக்கு என் பின்னாடியே சுத்திட்டு இருக்கிற? உன்னோட பாட்டி உன்னை என் சேலை முந்தானையில் முடிஞ்சுகிட்டேன்னு சொல்றதுக்கா?” 
“நீ சுடி தானே போட்டு இருக்க!” என்று அவன் கூற, அவள் முறைத்தாள்.
“ஹி… ஹி…” என்று அசடு வழிந்தவன், “இனி உன் கிட்ட வாய் திறக்க அவங்களுக்கு தைரியம் வரும்!!!” என்றான் ஆச்சரியக் குரலில். 
“உன்னோட பாட்டி வாயெல்லாம் மூடவே முடியாது… எப்படியும் அப்பப்போ பேசி வாங்கிகட்டிக்கத் தான் போறாங்க” 
“அதை அப்போ பார்த்துக்கலாம்… இப்போ என்னைக் கட்டிக்கோ” என்று கூறி அவன் கண் சிமிட்ட, 
“இப்போ குட்டீஸ் பாட்டு கத்துக்க வர நேரம்… என்னை டிஸ்டர்ப் பண்ணாம இடத்தைக் காலி பண்ணு” 
பார்வையைச் சுழற்றியவன் அருகில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவளைப் பின்னால் இருந்து அணைத்தபடி, “லவ் யூ ஆரு” என்றான்.
அவனது கையை விலக்க முயற்சித்தபடி, “சஞ்சு என்ன இது! ரூமுக்கு வெளியே வச்சு… யாராவது வரப் போறாங்க… தள்ளிப் போ” என்றாள்.
அவனோ சற்று கிறங்கியக் குரலில், “ஆருமா நாம ஹனிமூன் போகலாமா?” என்று கேட்டான். 
‘இது வேலைக்கு ஆகாது’ என்று மனதினுள் நினைத்தவள் எதையோ தேடுவது போல் பாவனைச் செய்ய,
சஞ்சய், “என்ன தேடுற?” என்று கேட்டான்.
அவள் பார்வையைச் சுழற்றியபடியே, “இங்கே ஒரு உருட்டுக் கட்டை இருந்தது… அதைத் தான் தேடுறேன்” என்று சொல்லி முடிக்கையில் சட்டென்று அவளை விட்டு விலகியவன்,
“நோ… நோ… நோ வயோலன்ஸ் ஆருமா… கண்ணே கண்ணா உன்னோட ஒரே ஒரு புருஷன் நான்… மீ பாவம் இல்லையா! இப்போ என்ன! நீ பாட்டு கேட்கணும்… அவ்ளோ தானே… நான் இதோ கிளம்பிட்டேன்” என்றவன் ஓடியேவிட்டான்.
ஆதிரா உதட்டில் உறைந்த புன்னகையுடன் நிவேதாவைத் தேடிச் சென்றாள்.  
 
மாலையில் ஆதிராவிற்கு மாதவிலக்கு வந்துவிட, அன்றைய இரவில் சஞ்சய் அமைதியாக கண்களை மூடிபடி சற்று தள்ளி படுத்திருந்தான்.
ஆதிரா, “சஞ்சு” என்று அழைத்தாள்.
“ஹ்ம்ம்”
“சாரி” 
சட்டென்று கண்களை திறந்தவன் விடிவிளக்கின் ஒளியில் தெரிந்த அவளது முகத்தைப் பார்த்து, “ஹே லூசு… இப்போ எதுக்கு சாரி சொல்ற? இதில் நீ என்ன செய்ய முடியும்? அண்ட் நீ தான் காலையிலேயே சொல்லிட்டியே…” என்றான்.
“நீ ஏன் தள்ளி படுத்திருக்க?” 
“இந்த நேரத்தில் நீ எப்படி பீல் பண்ணுவனு தெரியலை… அதான்” என்றவன், “வயிறு வலி, கால் வலினு எதுவும் வலி இருக்குதா?” என்று அக்கறையுடன் கேட்டான்.
“வயிறு வலி இருக்குது… பட் மனேஜ் பண்ணிப்பேன்… நீ பக்கத்துலேயே படு…” என்றவள், “நான் உன் நெஞ்சில் தலை வச்சு படுத்துக்கவா?” என்று கேட்டதும் கையை விரித்து கண்களால் ‘வா’ என்று அழைத்தபடி, “இது என்ன புதுசா பெர்மிஷன்லாம் கேட்கிற?” என்றான்.
மெல்ல நகர்ந்து அவன் நெஞ்சில் தலை வைத்து கையை அவன் மேல் போட்டு அணைத்தார் போல் அவள் படுக்க, அவளை மென்மையாக அணைத்தபடி கன்னத்தை அவளது உச்சந்தலையில் பதித்துக் கொண்டான்.
அவனது அரவணைப்பில் நெகிழ்ந்தவள், “லவ் யூ ஸோ மச் டா சஞ்சு” என்று கூறி அவனது நெஞ்சில் இதழ் பதித்தாள்.
அவன் மென்னகையுடன், “மீ டூ லவ் யூ ஸோ மச் டா” என்று கூறி அவளது உச்சந்தலையில் இதழ் பதித்தான்.
காமமில்லா காதலான அந்த அணைப்பில் இருவரின் மனம் நிறைய, இருவரும் நிர்மலமான உறக்கத்தைத் தழுவினர்.

Advertisement