Advertisement

அவனது மனசாட்சி, ‘என்ன டா இப்படி ஆகிட்ட! சொந்த மனைவியைத் திருட்டுத்தனமா ரசிச்சிட்டு இருக்க!’ என்று அவனைச் சாடியது. ஆனால் மனமோ தறிகெட்டு ஓடத் தான் துடித்தது.
அவள் உற்சாகத்துடன், “ஹே மதி இங்க வாயேன்” என்றாள்.
‘இங்கிருந்தே முடியலை… கிட்ட போய்டாத டா’ என்று அவனது மூளை எச்சரிக்கை செய்தது.
இவனது நிலை அறியாது அவள், “வா மதி” என்று மீண்டும் அழைத்தாள்.
மனதிற்கும் மூளைக்கும் இடையே நடந்த போராட்டத்தில் கஷ்டப்பட்டு மூளையை ஜெய்க்க வைத்தவன் நின்ற இடத்தில் இருந்து நகராமல், “எதுக்கு? இன்னொரு தடவ கன்னத்தில் கம்படி வாங்கவா?” என்று கேட்டான்.
சட்டென்று வாய்விட்டு சிரித்தபடி, “அதெல்லாம் இல்லை…” என்றவள், “ஏன் கன்னத்தில் கம்படி மட்டும் தான் வாங்குனியா?” என்று கேட்டு கண்சிமிட்ட,
மின்தூக்கியில் வைத்து அவள் முத்தமிட்டதை குறிப்பிடுவதைப் புரிந்துக் கொண்டவன், ‘குள்ளச்சி சோதிக்கிறாளே!’ என்று மனதினுள் புலம்பினான்.
“என்ன!” என்று மென்னகையுடன் அவள் புருவம் உயர்த்த, அவனது பார்வை அவளது உதட்டில் பதிந்தது.
அவனது பார்வையின் வீரியத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவள் மனதினுள், ‘ரொம்ப சீன்டிட்டோமோ!’ என்று கூறியபடி அமைதியானாள்.
சில நொடிகளில் சுதாரித்தவன், “எதுக்கு கூப்பிட்ட?” என்று கேட்டான்.
இப்பொழுது அவள் தயக்கத்துடன், “ஒன்னுமில்லை” என்று கூற,
அவன், “சொல்லு” என்றான்.
அவள் கையில் இருந்த கம்பை மரத்தில் சாய்த்து வைத்தபடி, “சும்மா தான் கூப்பிட்டேன்… வா உள்ள போகலாம்” என்றாள்.
“என்னனு சொன்னா உள்ள போகலாம்” என்று அவன் கூறவும்,
மெல்லியக் குரலில், “காய் எல்லாம் மேல இருக்குது… எனக்கு எட்டலை… அதான்…” என்று அவள் இழுத்து நிறுத்த,
அவன், “அதான்…” என்று எடுத்துக் கொடுத்தான்.
அவள் சிறு தயக்கத்துடனும் மெல்லிய படபடப்புடனும், “உன்னை தூக்கச் சொல்லி காயைப் பறிக்கலாம்னு நினைச்சேன்” என்றாள்.
அவளது தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் சரியாகவே புரிந்துக் கொண்டான். அவள் கூறியதைச் செய்ய கொள்ளை ஆசை இருந்தாலும், தற்போது அவளை நெருங்குவது நல்லதல்ல என்று மூளை மீண்டும் எச்சரிக்கை செய்யவும் மனதை அடக்கியபடி பேச்சை மாற்றினான்.
“குள்ளமா இருந்துட்டு உனக்கு எதுக்கு இந்த வேலை?” என்றான்.
அவன் எதிர்பார்த்தது போலவே அவள், “ஹெலோ! யாரு குள்ளம்? நீ பனைமரம் மாதிரி வளர்ந்துட்டு என்னை குள்ளம்னு சொல்றியா!” என்று சண்டைக்கோழியாக நின்றாள்.
“அப்படித் தான் சொல்வேன்… நீ குள்ளச்சித் தான்” என்றான் அவளைச் சீண்டும் குரலில். 
“வேணாம் டா” என்றபடி வேகமாக அவன் அருகே வர, அவளது வலது கால் காலணியின்(‘ஹை-ஹீல் கட்-ஷு’ என்ற காலணி வகையை அணிந்து இருந்தாள்) ‘ஹீல்ஸ்’ உடைந்ததில் தடுமாறி மல்லாக்க கீழே விழப் போனாள்.
சட்டென்று, “ஹேய்… பார்த்து” என்றபடி அவளை நெருங்கிய மதிவர்மன் அவளைத் தாங்கிப் பிடித்தான்.
அவ்வளவு நெருக்கத்தில் தன்னை மீறி அவள் இதழ்களைத் தீண்டப் போனவன் தென்னை மரத்தில் இருந்து விழுந்த தேங்காவின் சத்தத்தில் சுதாரித்து மனதைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தான்.
“பார்த்து வர மாட்டியா?” என்று அவளைச் சாடியவன், “உனக்கும் இந்த கட் சூ ஹீல்ஸ்க்கும் தான் ஏக பொருத்தமாச்சே! அப்பறம் ஏன் இதை போடுற?” என்றான் சிறு கண்டன குரலில்.
அவனது தடுமாற்றத்தை கண்டுக் கொண்டவள் மென்னகையுடன், “என்னைத் தாங்கி பிடிக்க நீ இருக்கும் போது, எனக்கென்ன கவலை?” என்றாள்.
சட்டென்று அவன் பிடியை விட்டுவிட்டு நகர்ந்துக்கொள்ள, பொத்தென்று தரையில் விழுந்தவள், “ஆ!!!” என்று கத்தினாள்.
உண்மையில் அவளுக்கு பெரிதாக அடிபடவில்லை, விழுந்த அதிர்ச்சியில் தான் கத்தி இருந்தாள். ஆனால் அவள் அப்படி கத்தியதும் அவன் பதற்றத்துடன், “என்னாச்சு? அடி பட்டிருச்சா?” என்று கேட்டபடி அவளைத் தூக்க வர,
கோபத்துடன் அவன் கையை தட்டிவிட்டபடி, “தள்ளிவிட்டுட்டு நீ ஒன்னும் தூக்க வேண்டாம்… தள்ளி போ டா” என்றவள், “அத்தமா” என்று கத்தினாள்.
சட்டென்று அவளைத் தூக்கி நிறுத்தியவன் அவளது வாயை மூடியபடி, “இப்போ எதுக்கு கத்துற?” என்றான்.
அவனது கையைத் தட்டிவிட முயற்சித்தவள், முடியவில்லை என்றதும் லேசாக கடித்தாள்.
அவள் வாயில் இருந்து கையை எடுத்து உதறியபடி, “லூசா நீ?” என்றான்.
“நீ தான் டா லூசு” என்றவள் வேண்டுமென்றே, “அப்படி தான் கத்திக் கூப்பிடுவேன்…” என்று கூறி, “அத்…” என்று கத்த ஆரம்பித்தவளின் இதழ்களை தன் இதழ் கொண்டு மூடி இருந்தான்.
அதிர்ச்சியில் அவள் கண்களை விரிக்க, அவளது விழி வீச்சில் விரும்பியே விழுந்தான்.
அவளைக் கத்தவிடாமல் செய்ய என்று ஆரம்பித்த முத்தம் அவனுள் மோகத் தீயைப் பற்ற வைக்க, இந்த முறை எச்சரித்த மூளையைக் காதல் கொண்ட மனம் ஓரம்கட்டியது.
அவன் அவளது இடையை வளைத்தபடி முத்தத்தின் ஆழத்தை கூட்டவும், அவளையும் மோகத் தீ பற்றிக் கொண்டதில் முத்தத்தில் கரைய ஆரம்பித்தாள்.
இருவரின் மோகன மோன நிலையைக் கலைப்பதுப் போல், “அபி” என்று அழைத்தபடி மித்ராணி அங்கே வர, இருவரும் அவசரமாக பிரிந்தனர்.
அவள் நெஞ்சின் படபடப்பையும் வெட்கத்தையும் மறைக்க முயற்சித்தபடி பார்வையைத் தாழ்த்தியபடி நிற்க, அவனோ இடது கையை அரைக் கால் சட்டை பையினுள் விட்டு வலது கையால் தலையைக் கோதியபடி தனது உணர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வந்துக் கொண்டிருந்தான்.
அங்கே வந்த மித்ராணி, “என்ன அபி?” என்று வினவ,
இதற்குள் ஒருவாறு இயல்பிற்கு திரும்பி இருந்தாள்.
“மதி தான் கூப்பிடச் சொன்னாங்க அத்தமா” என்றவளின் ஓரப்பார்வை மதிவர்மனை குறும்புடன் நோக்க, அவனோ இவளை அலட்டிக்கொள்ளாத பார்வை பார்த்தான்.
மித்ராணி மகனைப் பார்க்க, அவன் குறும்பு புன்னகையுடன், “மருமக கிட்டலாம் உங்க லவ் ஸ்டோரி சொல்லி இருக்கிற! ஆனா இதுவரை என் கிட்ட சொன்னதே இல்லையே மா!” என்றான்.
இருவரையும் செல்லமாக முறைத்த மித்ராணி, “உங்களை லவ் பண்ணச் சொன்னா, எங்க லவ் ஸ்டோரி பத்தி கேட்கிறீங்களா?” என்று ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டினார்.
விரிந்த புன்னகையுடன் அவர் தோளில் தொங்கியபடி, “அப்பா பத்தி பேசினாலே ரொம்ப அழகாகிடுற மா” என்று கொஞ்சியவன், “சொல்லு மா உங்க லவ் ஸ்டோரியை” என்றான். 
“டேய்!!!” என்று சிறு வெட்கத்துடன் கூறிய மித்ராணி, “நீங்க விளையாட நான் ஆள் இல்லை” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
மித்ராணி சென்றதும் சில நொடிகள் மௌனத்தில் கழிய, அபிசாரா வீட்டை நோக்கி திரும்ப, “சாரா” என்று மெல்லியக் குரலில் அழைத்தான்.
அவள் திரும்பியதும், “சாரி” என்றான்.
‘என்னை கிஸ் பண்ணதுக்கு சாரி சொல்லுவியா?’ என்ற எண்ணத்தில் அவள் அவனை முறைக்க,
அதை புரிந்து கொண்டவன் தீர்க்கமான பார்வையுடன், “நீ என்னோட மனைவி தான்… எனக்கு உரிமை இருக்குது தான்… ஆனா டைம் கேட்டுட்டு இப்படி பண்ணி உன் உணர்ச்சியோட நான் விளையாடக் கூடாது… அது தப்பு தான்” என்றான்.
எப்பொழுதும் தனக்காக யோசிக்கும் அவனது காதலில் நெகிழ்ந்தவள், “ஆனாலும் நீ இவ்ளோ நல்லவனா இருக்க வேணாம்” என்று முணுமுணுத்துவிட்டு வீட்டின் உள்ளே சென்றாள்.
‘கொஞ்ச நாளுக்கு தான்… அப்புறம் உன் கிட்ட மட்டும் ரொம்ப ரொம்ப கெட்டவனா தான் இருப்பேன்’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவனின் பார்வை வீட்டினுள் செல்லும் தன்னவளிடமே இருந்தது.
அவள் சென்றதும் யோசனையில் ஆழ்ந்தான். முதலில் ஒன்றல்லது இரண்டு மாதங்கள் அவள் வீட்டினருடன் ஒன்றிய பிறகு, பொறியியல் கல்லூரியின் பொறுப்பை அவளிடம் ஒப்படைக்க நினைத்திருந்தான். ஆனால் இன்று ஒரே நாளில் அபிசாராவின் மாற்றத்தில் சற்று திணறியவன், அவளது செய்கைகளில் தன் மனம் நீரும் நெருப்புமாக தத்தளித்ததில் அடுத்த நாளே கல்லூரியின் பொறுப்பை அவளிடம் ஒப்படைக்கும் முடிவிற்கு வந்திருந்தான்.
முடிவை எடுத்ததும் வீட்டினுள் சென்றவன் அறை வாயிலில் இருந்து, “சாரா” என்று அழைத்துவிட்டு அறையினுள் சென்றான்.
அபிசாரா கலைவாணி மற்றும் கமலாவிற்கு பகவத் கீதை வாசித்துக் கொடிருந்தாள்.

Advertisement