Advertisement

வீட்டில் இருந்த நீச்சல் குளம் அருகே நின்றபடி மதிவர்மன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது அவனைத் தேடி அபிசாரா அங்கே வந்தாள்.
அவளது வருகையை உணர்ந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் கைபேசி உரையாடலில் கவனமாக இருப்பது போல் காட்டிக் கொண்டான்.
அவனது செய்கையில், ‘ரொம்ப தான் டா பண்ற!’ என்று மனதினுள் கூறிக் கொண்ட அபிசாரா அவனை என்ன செய்யலாம் என்று யோசித்தாள். அவளது குறும்புத்தனம் தலைதூக்க சட்டென்று ஒரு யோசனை வந்தது.
சரியாக அப்பொழுது அவன் பேசி முடித்து அழைப்பைத் துண்டிக்கவும், இவள் அமைதியான குரலில், “மதி ஒரு நிமிஷம் உன் போன் தாயேன்” என்றாள்.
சிறிதும் யோசிக்காமல் கைபேசியை அவள் கையில் கொடுத்த அடுத்த நொடி, “ஏய்!!!” என்று கத்தியபடி நீச்சல் குளத்தினுள் விழுந்திருந்தான்.
நீரினுள் முங்கி எழுந்தவன் முகத்தில் வடிந்த நீரை கையால் துடைத்தபடி அவளை முறைக்க, அவளோ புன்னகையுடன், “காலையில் என்னை தப்பா பேசினதுக்கு பனிஷ்மென்ட்” என்றாள்.
அவன் முறைப்புடனே, “அதான் சாரி சொன்னேனே! நீ கூட…” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“சாரி சொன்னா பேசினது இல்லைன்னு ஆகிடாதே!” என்றாள்.
நீருக்குள் இருந்தபடியே அவன் அவளை ஆழ்ந்து நோக்க, அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தவளாக மெல்லியக் குரலில், “நான் பேசினதுக்கு நாலு வருஷம் அனுபவிச்ச தண்டனைப் போதாதா?” என்று வினவினாள்.
‘நானும் தானேடி தண்டனை அனுபவிச்சேன்’ என்று மனதினுள் வலியுடன் கூறிக் கொண்டவன் அதை வெளியே கூறி அவளை காயப்படுத்த விரும்பாமல் மௌனப் பார்வை பார்த்தான்.
‘ப்ச்… சொதப்புறியே அபி!’ என்று தன்னைத் தானே மனதினுள் திட்டிக் கொண்டவள் வரவழைத்த புன்னகையுடன் அவனை பார்த்து, “நாம ஒன்னு பண்ணலாமா?” என்று கேட்டாள்.
அவள் தன்னுள் போராடுவதை புரிந்துக் கொண்டவன் தானும் வரவழைத்த இயல்பு குரலில், “என்ன?” என்றான்.
லேசாக தலை சரித்து புன்னகையுடன், “எல்லா கோட்டையும் அழிச்சுட்டு, புதுசா லவ் பண்ணலாமா?” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.
சட்டென்று மனம் லேசாகிவிட்ட, உதட்டோர மென்னகையுடன், “ட்ரை பண்றேன்” என்றவன் கையை நீட்டினான்.
நீச்சல் குளத்தில் இருந்து வெளியேறத் தான் கையை நீட்டுகிறான் என்று நினைத்து கையை நீட்டியவள், அவன் கண்ணில் தெரிந்த கள்ளத்தனத்தைக் கண்டுகொண்டாள். அவன் அவளது கையை பற்றும் முன் கையை இழுத்துக் கொண்டவள் சிரிப்புடன் அழகு காட்டி, “நீயே வா” என்றாள்.
‘ச… ஜஸ்ட் மிஸ்’ என்று மனதினுள் நினைத்தவன் புன்னகையுடனேயே மேலே ஏறி வந்தான்.
நீச்சல் குளத்தை விட்டு நன்றாக தள்ளி நின்றவளைப் பார்த்து, “உஷார் தான்” என்றான் மென்னகையுடன்.
அவள் புன்னகையுடன் முன்னாள் நடக்க அவன் அவளைப் பின் தொடர்ந்தான்.
இருவரும் வீட்டினுள் சென்ற போது மித்ராணி, “என்னாச்சு வர்மா?” என்று கேட்க,
அபிசாரா, “எனக்கு ஸ்விம் பண்ண சொல்லிக் கொடுத்தாங்க அத்தமா” என்றாள்.
மதிவர்மன், “அத்தமா வா!!” என்று இழுக்க,
“எவ்ளோ சீக்கிரம் கேட்டுட்டீங்க!” என்று அவள் போலி ஆச்சரியத்துடன் வினவ, அவன் அவளைச் செல்லமாக முறைத்தான்.
“ஆபீஸ்லேயே குடியிருந்தா, வீட்டில் நடக்கிறது எப்படித் தெரியும்?” என்று நக்கல் குரலில் அவள் கூற, அவன் நிஜமாகவே முறைத்தான்.
மித்ராணி புன்னகையுடன், “சரி சரி ரூமுக்கு போய் சண்டை போடுங்க… வர்மா போ… போய் டிரஸ் மாத்திட்டு சாப்பிட வாங்க” என்றார்.
இருவரும் தங்கள் அறை நோக்கிச் சென்றனர். படியில் ஏறியபடி அவன், “அது என்ன அத்தமா?” என்று கேட்டான்.
“அத்தை பிளஸ் அம்மா, அத்தமா” என்றவள், “அத்தமானு மட்டுமில்லை ராஜமாதானும் கூப்பிடுவேன்.. அதுவும் அத்தை மாமாவோட லவ் ஸ்டோரி கேட்ட அன்னைக்கு புல்லா ராஜமாதானு தான் கூப்பிட்டேன்” என்றாள் உற்சாகத்துடன்.
அவனும் புன்னகையுடன், “அப்போ பாட்டியை எப்படி கூப்பிடுவ?” 
“கலை பாட்டி பெரிய ராஜமாதா… கமலா பாட்டி பெரிய ராணிமாதா” 
“அப்போ நீ ராணி யா!” என்று அவன் சிறு கிண்டல் குரலில் கூறியபடி அறையினுள் செல்ல, 
அவனுடன் அறையினுள் வந்தவள் தலை சரித்து மென்னகையுடன், “என்னை உன்னோட இதயராணி இல்லைனு சொல்லிடுவியா?” என்று சிறிது சவாலிடும் குரலில் வினவினாள்.
“ஏன் உனக்குத் தெரியாதா?” 
“அப்புறம் ஏன் கேட்ட?” 
“நான் கேட்டது… நீ இந்த வீட்டோட ராணியா என்ற அர்த்தத்தில்” 
“ஸோ உன் வாயால் சொல்ல மாட்ட!” 
அவள் கேட்பதை புரிந்துக் கொண்டவன், ‘எதை?’ என்று கேட்காமல், “நான் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன்” என்றுவிட்டு ஆடை மாற்றும் அறைக்குச் சென்றான்.
அவன் உடையை மாற்றிவிட்டு வந்ததும், அவள் தீவிரமான குரலில், “எனக்கு ஒரு சந்தேகம்” என்றாள்.
அவன் யோசனையுடன், “என்ன?” என்று வினவ,
“முதல் நாளில் இருந்து என் முன்னாடி வெறும் துண்டுடன் வந்து நிக்கிற… அப்போ நான் தானே ‘என்னை மயக்க பார்க்கிறியா?’ னு கேட்கணும்?” என்று கேட்டவளின் கண்கள் மட்டும் குறும்புடன் சிரித்தது.
அவளது கேள்வியில் ஒரு நொடி அதிர்ந்தவன் பின் சுதாரித்து அலட்டிக் கொள்ளாத குரலில், “என்னோட தோற்றத்தில் நீ மயங்குவனு எனக்கு தெரியாம போச்சே!” என்றான்.
உதட்டோர வலையுடன், “ப்ரோபசர் அன்சரையே காப்பி பண்றீங்களே பாஸ்!” என்றவள், “ஆனா நான் உன்னை மாதிரி இல்லை… உண்மையை பகிரங்கமா ஒத்துக்குவேன்… உன்னோட குணத்தில், வசீகர சிரிப்பில் மயங்கி தான் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… என்றும் இதே மயக்கத்தில் இருக்கவே விரும்புறேன்” என்றாள்.
அவளது பதிலில் அவன் அசைவற்று நிற்க, சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது.
முதலில் சுதாரித்தவள் குறும்பு பார்வையுடன், “மதிவர்மா இன்று முதல் நீ மிஸ்டர் சில்க் என்று அழைக்கப்படுவாய்” என்றாள் புன்னகையுடன்.
அவளது பார்வையும் புன்னகையும் அவள் ஏதோ வில்லங்கமாக கூறுகிறாள் என்பதை உணர்த்த, அவன் யோசனையுடன், “அது என்ன சில்க்?” 
“நம்பர் ஒன் பிஸ்னெஸ் மென் இதைக் கூட கண்டு பிடிக்க முடியாதா?”   
“நீ தான் பி.எச்.டி முடிச்ச பெரிய ப்ரோபசர் ஆச்சே! சொல்லிக் கொடு” 
“சில்க் ஸ்மித்தா வோட மேள்(Male) வெர்ஷன்” என்று கண் சிமிட்டி கூற,
“அடிங்க!!” என்றபடி அவன் அவளை நெருங்க, அவளோ அவனுக்கு அழகு காட்டிவிட்டு சிட்டாக பறந்து வெளியேறி இருந்தாள்.
லேசான மனதுடனும் புன்னகை முகத்துடனும் உற்சாக மனநிலையில் உணவுண்ண சென்றான்.
மகன் மற்றும் மருமகளின் முகங்கள் தெளிந்து வசீகரித்ததில் மித்ராணி நிம்மதியடைய, வேந்தன் பாராட்டுதலாக அவரை பார்த்தார்.

 

ஒருவாரமாக வேலைப்பழு அதிகமாக இருந்ததால் உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் உறங்கி எழுந்தவன் மனைவியை கண்களால் தேடியபடி கீழே இறங்கி வந்தான்.
அன்னையைக் கண்டவன் தேடலை நிறுத்தி, “குட் ஈவ்னிங் மாம்” என்று கூறியபடி  அமைதியாக சோபாவில் அமர்ந்தான்.
ஆனால் அவனது தேடலை கண்டுக்கொண்ட மித்ராணி, “அபி தோட்டத்தில் இருக்கா” என்றார்.
“அங்கே இல்லையே” என்று சட்டென்று கூறியவன் நாக்கை கடித்துக்கொள்ள,
மித்ராணி புன்னகையுடன், “பின் பக்க தோட்டத்தில் இருக்கா… முருங்கைக்காய் பறிச்சுட்டு இருக்கா” என்றார்.
“ஓ!” என்றவன் மனதினுள், ‘இவ இன்னும் இதை விடலையா!’ என்று கூறிக் கொண்டான்.
தான் அகன்றால் தான் மகன் எழுந்து செல்வான் என்பதை அறிந்த மித்ராணி எழுந்து சென்ற அடுத்த நொடி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக மதிவர்மன் பின் பக்கம் இருக்கும் தோட்டத்தை நோக்கி சென்றான்.
அவன் அங்கே சென்றபோது அபிசாரா மட்டுமே இருந்தாள். தானே தயாரித்த துரட்டி கம்பைக் கொண்டு முருங்கைக்காயை பறிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
மகனை அறிந்தவராக மித்ராணி அபிசாரா அருகே இருந்த வேலையாளை அப்புறப்படுத்தி இருந்தார்.
அவள் எம்பி எம்பி குதித்தபடி உயரத்தில் இருந்த காயைப் பறிக்க முயற்சிக்க, அதைக் கண்ட மதிவர்மனின் மனம் எகிறிக் குதித்தது.
காயைப் பறிக்க வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக புடவை முந்தானையை இடுப்பில் சொருகி இருந்ததில் வெளியே தெரிந்த அவளது வெளிர் இடையில் அவனது மனம் சிக்கித் தவித்தது.
உள்ளுணர்வு தூண்டியதில் அவள் திரும்பி பார்க்கவும், அவன் சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

Advertisement