Advertisement

ங்கே சதீஷ் வீட்டில் மதிய விருந்தை முடித்துக் கொண்டு புகழ்வேந்தன் மற்றும் மித்ராணி கிளம்பி இருக்க, மற்ற உறவினர்களும் கிளம்பி இருக்க, சதீஷ் வீட்டில் புதுமணத் தம்பதியர்கள் போக சதீஷின் அன்னை, சதீஷ், நிவேதா, சதீஷின் மூத்த மகள் சவீதாவும் அவள் மகனும், இளைய மகள் சஞ்சனா மற்றும் அவளது மகள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
மாலையில், “ஏய் புது பொண்ணு இங்க வா” என்று அதிகார குரலில் சதீஷின் அன்னை ஆதிராவை அழைத்தார். அவளும் அமைதியாக அவர் பக்கத்தில் போய் நின்றாள்.
சவீதா தங்கையிடம், “பாட்டி ஆரம்பிச்சுட்டாங்க… போடி… போய் ஆதியை காப்பாத்தி விடு” என்று பதற,
சஞ்சனாவோ மென்னகையுடன், “காப்பாத்த வேண்டியது ஆதியை இல்லை… நீ பொறுத்திருந்து பாரு” என்றாள்.
சதீஷின் அன்னை, “நோகாம உட்கார்ந்து திங்கிறதெல்லாம் உன் வீட்டோட வச்சிக்கோ… இப்போ போய் எனக்கு ஸ்ட்ராங்கா பில்டர் காப்பி போட்டுக் கொண்டு வா” என்றார்.
ஆதிரா அமைதியாக சமையலறையினுள் செல்ல, அவரோ அவள் தனக்கு பயந்து போவதாக நினைத்து மனதினுள், ‘ஹ்ம்ம்… இந்த நிவேதா மாதிரி இவளையும்  முதல்லேயே தட்டி வைக்கணும்’ என்று கூறிக் கொண்டார்.
சமயலறையில் நிவேதா, “நான் போட்டு தரேன் டா” என்று கூற, ஆதிரா மென்னகையுடன், “நானே போடுறேன் அத்தை” என்றாள்.
டிக்காஷனை போட்டபடி, “கவலைப் படாதீங்க அத்தை… நான் போடுற காப்பி குடிக்கிற மாதிரி தான் இருக்கும்” என்று கூறி கண் சிமிட்டினாள்.
நிவேதா அப்பொழுதும் சிறு பதற்றத்துடனே சிரித்தார். தனது மாமியார் என்ன பிரச்சனை செய்யப் போறாரோ! இல்லை ஆதிராவின் மனம் காயப்படுகிற மாதிரி பேசிவிடக் கூடாதே என்ற கவலை அவருக்கு.
சரியான அளவில் அருமையான காபியை கலந்த ஆதிரா அதை சதீஷின் அன்னையிடம் கொடுத்தாள்.
காபியை ஒரு வாய் அருந்தியதும் அதன் சுவையில் ஆச்சரியமானவர் பாராட்டும் மனம் இன்றி சிறிய புத்தியுடன், “என்ன காப்பி இது? இதை மனுஷன் குடிப்பானா?” என்று குரலை உயர்த்தி கேட்டார்.
ஆதிரா அலட்டிக் கொள்ளாமல், “அப்போ நீங்க குடிக்கலாம்” என்றதும்,
அவர் அதிர்ச்சியுடன், “ஏய்!!” என்று கத்தினார்.
சவீதா அதிர்ச்சியுடன் தங்கையை பார்க்க, அவளோ புன்னகையுடன், “நான் சொல்லலை!” என்றாள்.
“எனக்கு காது கேட்கும்… மெதுவாவே பேசுங்க” என்று நிதானமான குரலில் கூறிய ஆதிரா பின் சிறு நக்கல் கலந்த குரலில், “ஒரு வேளை உங்களுக்கு கேட்காதோ! அதான் கத்துறீங்களா?” என்று கேட்டாள்.
“என்ன பிரச்சனை?” என்று கேட்டபடி சதீஷும் சஞ்சையும் வர,
சதீஷின் அன்னை, “நீயே கேளு டா… உன் மருமக என்னை மனுஷியே இல்லைனு சொல்றா” என்றார்.
சதீஷ் யோசனையுடன் ஆதிராவை பார்த்து, “என்ன நடந்துச்சு மா?” என்று கேட்டார்.
“நான் தான் சொல்றேனே! அவளை திட்டாம என்ன நடந்ததுன்னு அமைதியா கேட்டுட்டு இருக்க” என்று கத்திய சதீஷின் அன்னை நிவேதாவைப் பார்த்து, “என்னடி இவளைப் பேச விட்டு வேடிக்கைப் பார்க்குறியா?” என்றார்.
ஆதிரா அழுத்தமான குரலில், “அத்தையை ஏன் இழுக்குறீங்க? எதை கேட்கிறதா இருந்தாலும் நேரிடையா என் கிட்டயே கேளுங்க” என்றாள்.
அவர் கோபத்துடன், “என்னடி பணக்கார திமிரை காட்டுறியா?” என்று கேட்க,
சஞ்சய் கோபத்துடன், “பாட்டி பார்த்து பேசுங்க” என்றான்.
அவர், “அடஅட!!! ஒரே நாளில் என் பேரனை என்னமா மயக்கி வச்சிருக்கா!” என்று கூற,
இப்பொழுது சதீஷ், “அம்மா பிரச்சனை பண்ணாம உள்ள போங்க” என்றார் கண்டிக்கும் குரலில்.
“இருங்க மாமா நானே பேசிக்கிறேன்” என்று அமைதியான குரலில் கூறிய ஆதிரா சதீஷ் அன்னை அருகே சென்று, “இப்போ உங்களுக்கு என்ன வேணும்? நான் உங்களுக்கு அடிமையா இருக்கணும்னு நினைக்கிறீங்களா? ஒரு நாளும் அது நடக்காது… உண்மையான அன்புக்கு மட்டும் தான் இந்த ஆதி அடிபணிவா… இல்லை பிரச்சனை தான் பண்ணுவீங்கனா தாராளமா பண்ணுங்க… கூடவே களி சாப்பிடவும் ரெடியா இருங்க… என்ன பார்க்குறீங்க? அத்தை மாதிரி நான் அமைதியா இருக்க மாட்டேன்… போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்துருவேன்” என்றவள் நிவேதா பக்கம் திரும்பி, “ஏன் அத்தை! கமிஷ்னர் சார், அதான் வெற்றி அங்கிள் உங்க சொந்த அண்ணன் தானே!” என்றாள்.
அதிர்ச்சியுடனும் பயத்துடனும் வாயை இறுக்கமாக மூடிய சதீஷின் அன்னை அமைதியாக தனது அறைக்கு செல்லத் திரும்ப,
ஆதிரா, “இந்த காப்பியை குடிச்சுட்டு போங்க” என்றாள்.
யார் முகத்தையும் பார்க்காமல் அவசரமாக காப்பியை அருந்தியவர் விட்டால் போதுமென்று ஓடிவிட்டார்.
சதீஷ் புன்னகையுடன், “உன்னோட தைரியத்தை உன் அத்தைக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடு மா” என்றார்.
ஆதிராவும் மென்னகையுடன், “உங்க மேல இருக்கிற அன்பும் காதலும் தான் அத்தையோட அமைதிக்கு காரணம்” என்றாள்.
“அது சரி தான்” என்ற சதீஷ் மனைவியை பார்த்தார். அவரும் இவரை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
சஞ்சய் ஆதிராவை காதலுடன் பார்க்க, அவளோ இவனை கண்டுக்கொள்ளாமல் சிறு அதிர்ச்சி கலந்த பிரம்பிப்புடன் நின்றிருந்த சவீதாவை பார்த்து, “என்ன அண்ணி! மியூசியத்தில் இருக்கிற பொருளைப் பார்க்கிற மாதிரி பார்க்குறீங்க! நானும் சாதாரண மனுஷி தான்” என்றாள்.
“எங்க பாட்டியைச் சமாளிக்கிறவங்கலாம் தெய்வப் பிறவிகள்” என்று சவீதா கூற,
ஆதிரா, “உங்க பாட்டி அவ்ளோ பெரிய அப்பாடக்கரா!” என்று கேட்ட விதத்தில் சவீதா சிரித்தாள்.
அப்பொழுது சஞ்சனாவின் மகள் தூக்கம் கலைந்து சிணுங்கவும் அவள் மகளை பார்க்க சென்றாள். சவீதாவின் மகனும் தூக்கம் கலைந்து அன்னையை அழைக்க அவளும், “இதோ வரேன்” என்று குரல் கொடுத்தபடி ஆதிராவிடம் தலை அசைத்து அகன்றாள்.
நிவேதா சமையலறைக்குச் செல்ல, ஆதிரா தங்கள் அறைக்குள் சென்றாள். அவள் பின்னாலேயே சென்ற சஞ்சய் அறை கதவை மூடிவிட்டு தன்னவளை இறுக்கமாக அணைத்து விடுவித்தபடி, “சூப்பர்டி” என்றான்.
ஆதிரா முறைப்புடன், “உன் கிட்ட என்ன சொன்னேன்?” என்று வினவ,
அவன் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு, “சின்ன சின்ன டச்சிங் கூட கிடையாதுனா எப்படிடி?” என்றான்.
“ராட்சசியை ஏன் சார் கட்டி பிடிச்சி கொஞ்சுறீங்க?” 
“அது சும்மா சொன்னது டா… நீ என்னோட தேவதை டா ஆருமா” என்றபடி அவன் அவளை நெருங்க,
அவளோ, “கிட்ட வந்த கொன்னுடுவேன்” என்று மிரட்டினாள்.
“நேத்து தோப்புகரணம்லாம் போட்டேனே!” என்று அவன் பாவமாக கூற,
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “அதான் பாதிலேயே மயங்கிட்டியே!” என்றாள்.
“என்னைப் பார்த்தா பாவமா இல்லையா ஆரு?” 
“இல்லை” என்றவள், “எனக்கு கொஞ்சம் ரெப்ஃபர் பண்ற வேலை இருக்குது… நீ கிளம்பு” என்றுவிட்டு அவனை கண்டுக் கொள்ளாமல் தனது புத்தகத்தை எடுத்து பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள்.
சஞ்சய் அறையில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி அவளை ரசிக்க, அவனது பார்வை அவளை வெகுவாக பாதித்தது.
தற்போது அவன் மேல் இருந்த கோபம் வெகுவாக குறைந்து இருந்தாலும் தன்னை ஒரு வருடத்திற்கு மேல் சுத்தலில் விட்டதிற்காக சில நாட்கள் அவனை சுத்தலில் விட நினைத்தே அவனை விலக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள்.
அவனது ரசனையான பார்வை அவளின் உணர்ச்சிகளை தட்டி எழுப்ப, அதை தாங்கிக் கொள்ள முடியாமல் வர வழைத்த கோபக் குரலில், “கொஞ்ச நேரம் என்னை தனியா விடு” என்றாள்.
தனது உணர்ச்சிகளை கட்டுபடுத்தியபடி வெளியேறிய சஞ்சய் மொட்டை மாடிக்கு சென்று நண்பனை கைபேசியில் அழைத்தான்.
மதிவர்மன் அழைப்பை எடுத்ததும்,
“வாழ இஷ்டமில்லனா அண்ணனும் தங்கையும் எதுக்குடா கல்யாணம் பண்ணீங்க?” என்று பொரிந்தவன், “என்ன!! எப்படியும் நீயும் அபியை மன்னிச்சு வாழ்க்கையை ஆரம்பிச்சு இருக்க மாட்ட, அதான் உன்னையும் சேர்த்துச் சொன்னேன்” என்றான்.
“நீங்க எங்களை விட்டு விலகினாலும் நானும் என் தங்கையும் ஒன்றிலேயே நிற்கும் ரகம்னு நிரூபிக்க கல்யாணம் பண்ணோம்… அண்ட் என்னோட நண்பனாவே இருந்தாலும், என்னோட பெர்சனல் விஷயம் பத்தி நீ பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும்…” என்றான்.
‘ஆத்தி சிங்கம் அல்ரெடி கர்ஜனை மோடில் இருப்பது தெரியாம சொரிஞ்சு விட்டுட்டோம் போலவே!’ என்று சஞ்சய் மனதினுள் அலறியதுக்கு ஏற்ப சில பல நல்ல வார்த்தைகளால் நண்பனைத் திட்டிவிட்டே மதிவர்மன் அழைப்பைத் துண்டித்தான்.

                    நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement