Advertisement

ஆதிரா இப்பொழுது யோசனையுடன், “என்ன அண்ணா?” என்றாள்.
அலட்டிக் கொள்ளாமல், “ஆர்ட்ஸ் காலேஜ் அவன் பெயரில் எழுதி வச்சிருக்கிறேன்” என்றவன் தங்கையிடம் ஒரு உரையை கொடுத்து, “என்னோட செல்லத் தங்கைக்கு  என்னோட சின்ன கிப்ட்” என்றான்.
அவன் கொடுத்த உரையை வாங்காமல் அவள் அதிர்ச்சியுடன், “என்ன அண்ணா சொல்ற! அதான் அப்பா ஹாஸ்பிடல் தராங்களே!” 
“அது அப்பா தரது… இது என்னோட கிப்ட்… அதுவும் என் நண்பனுக்கு நான் தரும் கிப்ட்” 
“அண்ணா! ஆர்ட்ஸ் காலேஜ் உன்னோட சொந்த உழைப்பு… அதை…” என்றவளின் பேச்சை இடையிட்ட மதிவர்மன்,
“என்னோட பரிசு என்னோட சொந்த உழைப்பில் இருந்து தானே இருக்கணும்! நீ முதல்ல இதை வாங்கு” என்றபடி அவள் கையில் அந்த உரையைத் திணித்தான்.
அதை பிரித்துப் பார்த்தவள் அதிர்ச்சியுடனே, “அண்ணா! இது…” என்று ஆரம்பிக்க, மென்னகையுடன் தனது உதட்டின் மீது விரலை வைத்து அவளது பேச்சை நிறுத்தி, “அதே விளக்கம் தான்… இந்த வீடு என் சொந்த உழைப்பில் வாங்கியது… ஆசையா என் தங்கைக்கு தந்திருக்கும் பரிசு” என்றவன் இன்னமும் தன்னை முறைத்துக் கொண்டு நின்ற நண்பனை பார்த்து, “என்னை உன் நண்பனா நினைத்தால் மறுபேச்சு இல்லாம என் பரிசை ஏத்துக்கிற” என்றான். மதிவர்மன் முகத்தில் மென்னகை இருந்தாலும் குரலில் அழுத்தம் இருந்தது.
சஞ்சய் அப்பொழுதும் முறைத்தபடி, “வாங்கிக்கிறேன் ஆனா ஒரு கண்டிஷன்” என்றான்.
மதிவர்மன் மென்னகையுடன், “என்ன! நீ என் கூடவே இருப்பனு சொல்லப் போறியா?” என்றான் நண்பனை அறிந்தவனாக.
சஞ்சய், “ஆமா… அது என் பேர்லேயே இருக்கட்டும்… ஆனா எப்பொழுதும் போல் நீயே அதை பார்த்துக்கோ… அண்ட் முக்கியமான விஷயம், நான் எப்பொழுதும் உன்னோட பி.ஏ வா உன்னோட தான் இருப்பேன்” என்றான்.
சஞ்சய்யின் கூற்றில் அபிசாரா ப்ரனேஷ் மற்றும் இனியமலர் பிரம்மிப்புடன் அவனைப் பார்க்க, புகழ்வேந்தன் வீட்டினர் அவனை அறிந்தவர்களாக மென்னகையுடன் நின்றிருந்தனர்.
ஆதிரா அதிகரித்த காதலுடன் தன்னவனைப் பார்த்துக் கொண்டிருக்க, அதை கவனிக்க வேண்டியவனோ நண்பனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் நண்பனைத் தழுவிய மதிவர்மன், “நீ என்னோடவே இரு… ஆனா அந்த ஆர்ட்ஸ் காலேஜ்ஜை நீ தான் பார்த்துக்கிற” என்றான் அழுத்ததுடனே.
சஞ்சய்யை தன்னுடனே இருக்கச் சொன்ன மதிவர்மன் ‘பி.ஏ’ என்ற வார்த்தையை உபயோகப் படுத்தவில்லை. ஆம், அனைவரும் நண்பனை மதிக்கும் விதத்தில் தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் பதவியை கொடுக்க முடிவெடுத்து இருந்தான்.
கலைவாணி, “சரி… நல்ல நேரத்தில் கிளம்புங்க” என்றதும் ப்ரனேஷ் இனியமலர் அபிசாரா மற்றும் மதிவர்மன் கிளம்ப ஆயுத்தமானர்.
நண்பனின் தோளில் கை போட்டபடி நடந்த மதிவர்மன் சஞ்சய்க்கு மட்டும் கேட்கும் குரலில், “நிஜமாவே 1000 தோப்புகரணம் போட்டியா டா?” என்றான்.
சஞ்சய் இவனை முறைக்க,
இவனோ சிரிப்பை அடக்கியபடி, “இல்லை… டெய்லி வொர்க்-அவுட் பண்ற எனக்கே அது கொஞ்சம் கஷ்டம் தான்… அதான் கேட்டேன்” என்றதும்,
சஞ்சய் கடுப்புடன், “600 போடும் போதே மயங்கிட்டேன்… வேறு ஏதும் சந்தேகம் இருக்குதா?” என்றான்.
சிரிப்புடன் நண்பனின் தோளைத் தட்டிய மதிவர்மன், “ஆதி செல்லமா வளர்ந்தவ டா… பார்த்துக்கோ” என்றான்.
“நீ சொல்லனுமா டா! நான் பார்த்துக்கிறேன்” என்றவன் நண்பனின் மனநிலையை மாற்ற, “அப்படியே உன் தங்கச்சி கிட்டயும் என்னை கண் கலங்காம பார்த்துக்க சொல்லு டா” என்றான்.
வாய்விட்டு சிரித்த மதிவர்மன், “அது உன்னோட சாமர்த்தியம் கண்ணா” என்றான்.
“என்ன டா இப்படி கை விரிச்சுட்ட!” என்று பாவமான முக பாவத்துடன் கேட்க,
“என்ன அண்ணா?” என்று ஆதிரா கேட்டாள்.
மதிவர்மன் ‘சொல்லிடவா!’ என்று கண்ணால் நண்பனிடம் வினவ, கை எடுத்து கும்பிட்ட சஞ்சய், “நீ ஆணியே புடுங்க வேணாம்… உன் மாமனார் வீட்டுக்கு கிளம்பு ராசா” என்றான்.
அனைவரின் முகத்திலும் சன்னமான புன்னகை அரும்ப, மதிவர்மன் தன்னவளுடன் மாமனார் வீட்டிற்கு கிளம்பினான்.
அடுத்து புகழ்வேந்தன் மற்றும் மித்ராணி சஞ்சய், ஆதிராவை அழைத்துக் கொண்டு சஞ்சய் வீட்டிற்கு கிளம்பினர். சஞ்சய் கலைவாணி மற்றும் கமலாவையும் அழைத்தான் தான் ஆனால் சதீஷின் அன்னையை நினைத்து அவர்கள் இதமாகவே மறுத்து விட்டனர்.
ப்ரனேஷ் வீட்டில் விருந்து தயாராகிக் கொண்டிருக்க, மதிவர்மன் மற்றும் அபிசாராவை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மதிவர்மன் மற்றும் அபிசாராவிற்கு நேத்ரா மற்றும் அனன்யா ஆரத்தி எடுத்தனர். தனது குற்ற உணர்ச்சியில் அனன்யா அமைதியாக இருக்க, நேத்ரா குறும்பு புன்னகையுடன், “மாம்ஸ் தட்சணை போட்டா தான் வழி விடுவேன்” என்றாள்.
மதிவர்மனின் பார்வையில் அபிசாரா தங்கைகள் இருவருக்கும் நகைபெட்டி ஒன்றை பரிசளிக்க, அதிர்ச்சியை கண்ணில் மட்டும் வெளிகாட்டியபடி அனன்யா அதை வாங்கிக்கொள்ள, நேத்ரா, “மாம்ஸ் நான் சும்மா தான் கேட்டன்” என்றாள்.
மென்னகையுடன், “தெரியும்… வாங்கிக்கோ” என்ற மதிவர்மன், “ஸ்ரீ குட்டி இங்க வாங்க” என்றான்.
யான்விஸ்ரீ அவன் அருகில் வந்ததும் அவளுக்கு தன் கையால் ஒரு நகைபெட்டியை கொடுக்க, அவளோ அன்னையின் முகம் பார்த்து நின்றாள்.
மதிவர்மன், “அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க… வாங்கிக்கோ” என்றான்.
அப்பொழுதும் அன்னையின் சம்மதம் பெற்றுக்கொண்ட பிறகே நன்றி கூறி வாங்கிக் கொண்டாள்.
அனைவரும் வீட்டின் உள்ளே சென்றதும், யான்விஸ்ரீ துள்ளி குதித்தபடி நேத்ராவிடம், “உங்களுக்கு அபி அக்கா தானே தந்தாங்க… எனக்கு மாமாவே தந்தாங்களே!” என்று கூறி அழகு காட்டினாள்.
நேத்ரா, “அதானே! மாம்ஸ் அப்போ நீங்க இன்னும் தட்சணை தரலை” என்று மதிவர்மனை வம்பிழுத்தாள்.
மதிவர்மனோ அசராமல் வசீகர புன்னகையுடன், “நான் வேற சாரா வேற இல்லை” என்றான்.
“ஓ!!” என்று நேத்ரா ராகம் பாட, அனன்யா முகத்தில் அப்பொழுது தான் இயல்பான சிறு புன்னகை வந்தது.
சிறிது நேரம் கழித்து முதல் மாடியில் இருந்த அபிசாராவின் அறையில் மதிவர்மன் தனியாக இருந்தபோது, எதிரில் இருந்த அறையில் இருந்து அனன்யா தனியாக வருவதைக் கண்டவன், “அப்புறம் படிப்பெல்லாம் எப்படி போகுது அனு?” என்று கேட்டான்.
அவனது குரலில் திரும்பியவள் நம்ப முடியாத அதிர்ச்சியுடன் விழி விரித்து நோக்கினாள்.
மதிவர்மன் மென்னகையுடன், “எதுக்கு இவ்ளோ ஷாக்?” என்று எதுவும் நடக்காதது போல் வினவ,
அவள் தடுமாற்றத்துடன், “இல்ல… அப்படி இல்லை…” என்றாள்.
அவன், “பழசை எல்லாம் மறந்துடு… நான் உன்னோட அக்கா ஹஸ்பண்டுனு மட்டும் நினைச்சுக்கோ… பழையபடி இயல்பா சந்தோஷமா இரு” என்றான்.
கலங்கிய கண்களுடன் தலையாட்டியவள், “தேங்க்ஸ் மாமா… நீங்களும் அக்காவை விரும்புறது தெரிஞ்சிருந்தா நான் ப்ரொபோஸ் பண்ணி இருக்கவே மாட்டேன்… ரியலி வெரி சாரி” என்றாள்.
அவளது ‘நீங்களும்’ என்ற வார்த்தையில் ‘அப்போ உன் அக்கா என்னை விரும்புறதை தெரிந்தே அவள் என்னை விட்டுக் கொடுக்கனும்னு நினைத்து இருக்க!’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன் அவளை மேலும் குற்ற உணர்ச்சியில் தவிக்க விட விரும்பாமல் வர வழைத்த அதிர்ச்சி குரலில், “என்ன! நீ ப்ரொபோஸ் பண்ணியா? எப்போ? யாருக்கு?” என்று கேட்டான்.
அவன் கேட்ட விதத்தில் ஒரு நொடி குழம்பி அதிர்ந்தவள் பின் அவனது எண்ணம் புரிந்து புன்னகையுடன், “தேங்க்ஸ் மாமா” என்றாள்.
அவனும் புன்னகையுடன், “குட்… எப்பொழுதும் இப்படியே இயல்பான புன்னகையுடன் இரு” என்றான். 
மனம் லேசாகிவிட அனன்யா குறும்புடன், “எப்போதும் சிரிச்சிட்டே இருந்தா அதுக்கு வேற பெயர்” என்றாள்.
அவன் அசராமல், “இயல்பான சிரிப்புனு தான் சொன்னேன்… நீ சொல்றவங்களோட சிரிப்பு வேற மாதிரி இருக்கும்” என்றான்.
“உங்களை ஜெய்க்க என்னால் முடியாது மாமா” என்றுவிட்டு அவள் சென்றதும் அவன் அறையினுள் சென்றான்.
அப்பொழுது உள்ளே வந்த அபிசாராவின் பார்வையைப் புரிந்துக் கொண்டவன் புரியாத பாவனையில் ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்தினான்.
“ப்ளீஸ் மதி” என்று அவள் கெஞ்ச, அவனது பார்வை திறந்திருந்த கதவில் பதிந்தது.
அறைக் கதவை மூடியவள் அவனைப் பார்க்க, அவன், “நீயும் அவளும் ஒன்றா?” என்று நிதானமாக அழுத்தமான குரலில் கேட்டான்.
பின், “அவளை குற்ற உணர்ச்சியில் இருந்து வெளி கொண்டு வந்ததில் என்னோட சுயநலமும் இருக்குது… அவ இயல்பா இருந்தா தான் நீ சந்தோஷமா இருப்ப” என்றான்.
ஒவ்வொன்றிலும் தனக்காக பார்க்கும் தன்னவன் மேல் அபிசாராவிற்கு காதல் அதிகரித்தது.
“இந்த வர்மாவோட அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடம் இருந்தது இல்லை… முதல் முறையா உனக்காக உன் தங்கையை மன்னித்து இருக்கிறேன்…” என்றதும் அவள் காதலுடன் அவனைப் பார்க்க,
அவனோ இறுகிய முகத்துடன், “ஆனா உன்னோட செயலையும், பேச்சையும் என்னால் ஈசியா மறக்க முடியலை…” என்றான்.
“அன்னைக்கு நான் இருந்த…” என்றவளின் பேச்சை தடை செய்வது போல், “அபி” என்று இனியமலர் மூடிய கதவிற்கு  வெளியே இருந்து அழைக்கவும், அபிசாரா மனதினுள் நொந்தபடி அறையை விட்டு வெளியேறினாள்.

Advertisement