Advertisement

தன்னவனை நினைத்தபடி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த அபிசாரா எப்பொழுது தூங்கினாள் என்று அவளே அறியவில்லை. ஆனால் அவள் கண்ணயரும் வரை மதிவர்மன் அறையினுள் வந்திருக்கவில்லை.
அதிகாலை மூன்று மணியளவில் அறையினுள்ளே வந்த மதிவர்மன் கண்டது தலையை மட்டும் சோபாவில் சாய்த்து தரையில் அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த அபிசாராவைத் தான். கன்னங்களில் கண்ணீர் தடத்துடன் கலைந்த ஓவியமாக இருந்த தன்னவளைக் கண்டவனின் மனம் வெகுவாக வருந்தியது.
தன்னவளின் உறக்கம் கலையாதவாறு பூ போல் கைகளில் ஏந்தி மெத்தையில் படுக்க வைத்தவன் அவளது நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து, “லவ் யூ சாரா” என்று கூறி நகரப் போக, அவளோ தூக்கத்திலேயே, “சாரி மதி… லவ் யூ ஸோ மச் மதி” என்றாள்.
அவள் அருகில் தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன் அவளது கன்னத்தை மயிலிறகை போல் மென்மையாக வருடியபடி, “சாரி டா… நானும் அதை விட்டு வெளி வரத் தான் பார்க்கிறேன்… ஆனா என்னால முடியலைகொஞ்சம் டைம் கொடுஎன்று வருத்தமான குரலில் கூறியவன், பின் பெருமூச்சை வெளியிட்டபடி எழுந்து சென்று மெத்தையின் மறுபக்கம் படுத்துக் கொண்டான்.
அபிசாரா அருகில் இருப்பது ஒரு விதத்தில் அவன் மனதிற்கு அமைதியைக் கொடுத்தாலும், தனது ரணத்தின் தாக்குதலாக தானே தன்னவளை வருத்திவிடக் கூடாதே என்ற கவலை அவனது உறக்கத்தை விரட்டி இருந்தது.
அடுத்த நாள் காலையில் கண்விழித்த பொழுது தான் மெத்தையில் படுத்திருந்தைப் பார்த்து ஒரு நொடி யோசித்தவள், அடுத்த நொடியே அது மதிவர்மனின் வேலை என்பதைப் புரிந்துக் கொண்டதும் அவளுள் சிறு நிம்மதி பிறந்தது.
அப்பொழுது குளியலறையில் இருந்து இடுப்பில் மட்டும் துண்டை கட்டியபடி மதிவர்மன் வெளியே வரவும் இவள் சட்டென்று கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். அதை பார்த்தும் இதழோர மென்னகையுடன் தனது ஆடையை எடுத்துக் கொண்டு அறையினுள்ளேயே இருந்த ஆடை மாற்றும் அறைக்குள் சென்றான்.  எப்பொழுதும் செல்வது போல் ஆடையை எடுக்காமல் குளிக்கச் சென்றிருந்தவன் குளித்து முடித்த பிறகு தான், ‘அடடா சாரா இருப்பாளே!’ என்று யோசித்தான். பிறகு, ‘தூங்கிட்டு தானே இருக்கா… நாளைக்கு மறக்காம ட்ரெஸ் எடுத்துட்டு வந்திரணும்’ என்று நினைத்தபடி வெளியே வந்தவனின் மனம் அவளது வெட்கத்தைக் கண்டதும், ‘இது கூட நல்லாத் தான் இருக்குது’ என்று கூறிக் கொண்டது.
அடுத்து அவன் கிளம்பி முடித்து ஆடை மாற்றும் அறையில் இருந்து வெளியே வந்த போது, குளியலறையில் இருந்து வெளியே வந்த அபிசாரா குளித்து முடித்து புது புடவையை அணிந்திருந்தாள்.
அதைப் பார்த்ததும் அவனது காதல் கொண்ட மனம், ‘வட போச்சே!’ என்று நினைக்க, அவனது மனசாட்சியோ, ‘நேத்து பேசிய பேச்சு என்ன! இப்போ நினைக்கிறது என்ன!’ என்று அவனைப் பார்த்து காறித் துப்ப, அவனோ அதை கண்டுக் கொள்ளவில்லை.
அவன் அறையை விட்டு வெளியே செல்வதற்கு முன் வந்துவிட வேண்டும் என்று அவசர அவசரமாக குளித்து முடித்து புடவையை வேகமாக கட்டிவிட்டு வந்தவள் காலின் ஈரத்தை சரியாக துடைக்காததால் வழுக்கி கீழே விழப் போக,
“ஏய் பார்த்து!” என்று பதறியபடி மதிவர்மன் அவளை பிடிக்க வர, அதற்குள் அவளே சமாளித்து நேராக நின்றபடி, “ஒன்னுமில்லை… ஈரம் ஸ்லைட்டா வழுக்கிடுச்சு” என்றாள்.
“ஹ்ம்ம்” என்றபடி அப்படியே பாதியில் நின்றவன், “நான் கீழ இருக்கிறேன்… நீ கிளம்பிட்டு வா” என்றபடி திரும்பி நடந்தான்.
அவள் அவசரமாக, “மதி ஒரு நிமிஷம்” என்றாள்.
அவன் நின்று திரும்பி பார்க்கவும், அவள் மெல்லியக் குரலில், “நம்ம பிரச்சனை நமக்குள்ளேயே இருக்கட்டும்… பெரியவங்களுக்கு தெரிய வேண்டாம்” என்றாள்.
“உன்னை யாரிடமும் விட்டுக் கொடுக்கிற பழக்கம் எனக்கில்லை” என்று கொட்டு வைத்துவிட்டு வெளியேறி இருந்தான்.
பெருமூச்சை வெளியிட்டவள் கிளம்ப ஆரம்பித்தாள்.
மதிவர்மன் வெளியே சென்ற போது பக்கத்து அறையில் இருந்து சற்று நொண்டியபடி சஞ்சய் வெளியே வந்தான்.
மதிவர்மன் ஒரு மாதிரி குரலில், “என்ன டா நொண்டுற அளவுக்கு… ஹும்ஹம்” என்று கூற,
சஞ்சய் கடுப்புடன், “வேணாம் டா… ஏதாவது அசிங்கமா சொல்லிடப் போறேன்” என்றான்.
“ஏன் டா! முதலில் நீ என் நண்பன்… அப்புறம் தான் என்னோட தங்கை ஹஸ்பண்ட்”
“நண்பனா டா நீ! துரோகியோட மோசமானவன்” 
மதிவர்மன் யோசனையுடன் அழுத்தமான பார்வை பார்க்க,
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று முணுமுணுத்தவன், “உனக்கு அப்படி என்ன டா கொலைவெறி என் மேல! ஏன் டா இப்படி பண்ணி வச்சிருக்க? வீட்டில் பார்க்கிற பொண்ணுக்கு நான் ஓகே சொன்னதா சொல்லி வச்சிருக்கிற… உன் மாமனாரோடு சேர்ந்து ஏதோ ஒரு பொண்ணை எனக்கு பேசி முடிக்கிற அளவுக்கு போய் இருக்க… போதாதுக்கு நான் கனடா போறேன்னு சொன்னதை வேற சொல்லி வச்சிருக்க” என்று பொரிந்தான்.
மதிவர்மன் மென்னகையுடன், “பொண்ணு பார்த்தது, கல்யாணம் பேசியது எல்லாம் டிராமா டா… அதனால் தான் ஆதி உங்க கல்யாணத்தைப் பத்தி பேசினா… எப்படியும் கல்யாணத்தைப் பத்தி பேசுற தைரியம் உனக்கு வரப் போறது இல்லை… அதான் இந்த டிராமா போட்டேன்… வொர்க் அவுட் ஆச்சு தானே!!” என்றவன், “ஆனா கனடா விஷயம் நான் சொல்லலை டா… மே பி அப்பா கிட்ட சொன்னப்ப அவ கேட்டு இருக்கலாம்” என்றான். 
“ஏன்டா! ஒரு விஷயம் பேசும் போது அக்கம் பக்கம் பார்த்து பேச மாட்டியா?” 
மதிவர்மன் மென்னகையுடன், “உன்னைப் பத்தி பேசுறதுக்கு நான் ஏன்டா ஜாக்கிரதையா இருக்கணும்?” 
“அது சரி… சேதாரம் எனக்கு தானே! ஜக்கம்மா மனசாட்சியே இல்லாம நொங்கெடுத்துட்டா டா… நான் தான் ஆர்வக் கோளாறில் அவளை மலை இறக்க 1000 தோப்புகரணம் போடுறேன்னு சொன்னேன்னா, ராட்சசி இரக்கமே இல்லாம என்னை போட விட்டு மயங்க வச்சிட்டா டா”
“என்னை அக்கம் பக்கம் பார்த்து பேசச் சொன்ன நீ கோட்டை விட்டுட்டியே மச்சி” என்று சிரிப்பை அடக்கியபடி மதிவர்மன் கூற,
அவசரமாக திரும்பிய சஞ்சய் தனக்கு பின்னால்  நின்றிருந்த ஆதிராவை பார்த்ததும் மனதினுள், ‘நெற்றிக்கண் இருந்து இருந்தா இந்நேரம் நம்மளை பஸ்பமாக்கி இருப்பா’ என்று அலறினான்.
அதன் பிறகு சஞ்சய்யின் நிலையை பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. நடு நடுவில் மானே தேனே பொன்மானே போட்டுக்கோங்க தோழமைகளே…
சிறிது நேரம் கழித்து ப்ரனேஷ் மற்றும் இனியமலர் புகழ்வேந்தன் வீட்டிற்கு வந்தனர்.  மதிவர்மன் மற்றும் அபிசாராவை மறுவீட்டிற்காக அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தனர்.
மதிவர்மனுடன் சமரசம் ஆகவில்லை என்றாலும் அவனுடன் இருப்பதே அபிசாராவின் மனதிற்கு இதத்தைத் தந்திருக்க, பெற்றோர்களைப் பார்த்ததும் அவள் முகம் இயல்பாக புன்னகையில் மலர்ந்தது. அதில் அவளது பெற்றோர்களின் மனம் நிம்மதி அடைந்தது.
மதிவர்மனுமே அதே நிலையில் தான் இருந்தான். தன்னவளின் அருகாமையே அவனது இத்தனை நாள் இறுக்கத்தை தளர்த்தி இருக்க, அவன் முகம் கலையாக இருந்தது. மகன் மற்றும் மகள் மீது இருக்கும் நம்பிக்கையில் புகழ்வேந்தன் மற்றும் மித்ராணியும் இயல்பான புன்னகையுடன் வலம் வந்தனர்.
முதலில் மதிவர்மன் மற்றும் அபிசாராவும் கிளம்ப, கிளம்பும் முன் தங்கையின் தலையை மதிவர்மன் பாசத்துடன் வருட, அவள் சிறிது கலங்கிய கண்களுடன் அவன் தோளில் சாய்ந்தாள்.
அவளது மனநிலையை மாற்ற, “என் நண்பன் உடம்பு பிஞ்சு உடம்பு டா… எதை செய்றதா இருந்தாலும் பார்த்து பதமா செய்” என்று கூறவும் சஞ்சய் அவனை முறைக்க, ஆதிரா புன்னகைத்தாள்.
புன்னகையுடன் நண்பனை தழுவிக் கொண்ட மதிவர்மன், “ஆதியை கல்யாணம் செய்துகிட்ட உன்னோட மன தைரியத்தைப் பாராட்டி என்னோட கல்யாண பரிசு” என்று கூறி ஒரு உரையை அவன் கையில் கொடுத்தான்.
ஆதிரா, “டேய் அண்ணா!” என்று கத்த, சஞ்சய் யோசனையுடன் அந்த உரையை பிரித்துப் பார்த்தான்.
உறையினுள் இருந்த காகிதங்களை பார்த்த சஞ்சய் கோபத்துடன், “என்னடா! என்னை பிரிச்சுப் பார்க்கிறியா?” என்று எகிறினான்.
ஆதிரா சஞ்சய்யின் கோபத்தை விழி விரித்து பார்த்தாள். சஞ்சய் நண்பனிடம் உரிமையாக கோபம் கொண்ட தருணங்கள் உண்டு என்றாலும் அவற்றை ஆதிரா பார்த்தது இல்லை.
மதிவர்மன் மென்னகையுடன் நண்பனைப் பார்த்துக் கொண்டிருக்க, சஞ்சய் கையில் இருந்த காகிதங்களைத் தூக்கி காட்டியபடி, “என்ன டா இது?” என்றான் கோபம் குறையாமல்.

Advertisement