Advertisement

      இரு ஜோடிக்களுக்கும் புகழ்வேந்தன் வீட்டில் தான் முதல் இரவு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆதிராவிற்காக காத்திருந்த சஞ்சய் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது அவனது எண்ணத்தின் நாயகி அறையினுள் நுழைந்தாள்.
அவள் வந்ததைக் கூட கவனிக்காமல், ‘பேசாம ஆரு வந்ததும் சாஷ்டாங்கமா காலில் விழுந்துருவோமா!’ என்று யோசித்துக் கொண்டிருந்தவன் ‘டங்’ என்ற சத்தத்தில் சிறு பதறலுடன் எழுந்தான்.
கையில் இருந்த வெள்ளிக் குவளையை கீழே எறிந்திருந்த ஆதிரா பத்திரகாளியாக நின்றிருந்தாள்.
ஒருவாறு தைரியத்தை வர வழைத்துக் கொண்டு, “ஆரு… அம் ரியலி சாரி… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்… நானும் உன்னைக் காதலிக்கிறேன்… அன்னைக்கு…” என்று பேசிக் கொண்டிருந்தவனின் பேச்சை கையை நீட்டி நிறுத்துமாறு கூறினாள்.
அதிகரித்த கோபத்துடன் அவனை முறைத்தவள் பல்லை கடித்தபடி, “என்னை காதலிக்கிறவன் தான் வீட்டில் பார்க்கும் பொண்ணைக் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டியா?” என்றாள். 
அவன் அதிர்ச்சியுடன், “என்ன!! எனக்கு வீட்டில் பொண்ணு பார்த்தாங்களா?” என்று வினவ,
“நடிக்காத டா” என்று சற்று குரலை உயர்த்தினாள்.
அவன், “ஆரு… நிஜமாவே எனக்கு இது தெரியாது” என்று கூற, 
“பொய் சொல்லாதடா… அண்ணா சொன்னான்… உனக்கு வீட்டில் பொண்ணு பார்க்கிறதாவும், நீ அதுக்கு சம்மதிச்சதாவும்” 
“என்ன!!!!” 
அவள் கோபத்துடனே, “நான் ஒன்னும் நீ பேசியதை எல்லாம் மறந்து ஆசைப்பட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலை… அன்னைக்கு அண்ணியோட அப்பாவும் அண்ணாவும் ஏதோ ஒரு பொண்ணுக்கும் உனக்கும் கல்யாணத்தைக் கிட்டதிட்ட முடிவு பண்ற நிலைக்கு போய்ட்டாங்க… அதான் நான் சதீஷ் அங்கிள்… ஷ்… மாமாக்கு போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லி எல்லோர் கிட்டயும் பேசி நம்ம கல்யாணத்தை பிக்ஸ் பண்ணேன்…” என்றாள். 
என்ன சொல்லி அவளை மலை இறக்குவது என்ற யோசனையில் அவன் அமைதியாக இருக்க,
அவள், “நீ பேசிய பேச்சுக்கு உன்னை இனி பார்க்கவே கூடாதுன்னு தான் நினைச்சேன்… ஆனா அடுத்த நாளே சூடு சொரணை இல்லாம நானே நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசினேன்…” என்று கோபத்துடன் அவனை அடிப்பது போல் நெருங்கியவள், “காதல்னு இப்ப வந்து சொல்ற நீ, இந்த காதலுக்காக என்னடா செஞ்ச? காதலிக்கிறானாம்! பேசக் கூடாதெல்லாம் பேசிட்டு ஊரை விட்டு ஓடத் தானே பார்த்த! இனி காதலிக்கிறேன்னு சொன்ன! வாயிலேயே சூடு போட்டுருவேன்” என்றாள் ஆவேசமாக. 
கையால் வாயை மூடி இரண்டடி பின்னால் நகர்ந்தபடி, ‘கிராதகா! வழி பண்றேன்னு என்னை ஒருவழி ஆக்க எக்கச்செக்க பிட் போட்டு வச்சிருக்கியே!’ என்று மனதினுள் நண்பனைத் திட்டியவனின் காதில் ‘என்ன அய்யாசாமி பிட் போதுமா!’ என்ற வசனம் மதிவர்மன் குரலில் கேட்பதுப் போல் இருந்தது.
அவனது அமைதியில் அவளது கோபத்தின் காரம் கூட, அதை அவள் பார்வையில் இருந்து உணர்ந்துக் கொண்டவன், “ஆருமா உன் அண்ணன் தப்புத் தப்பா சொல்லி இருக்கிறான் டா… எங்க வீட்டில் எனக்கு பொண்ணெல்லாம் பார்க்கவே இல்லை…” என்றவனின் பேச்சை இடையிட்டு,
“அதில் ரொம்ப வருத்தமோ!” என்றவள், “ஊரை விட்டு ஓட பிளான் பண்ணலை?” என்று அழுத்தமான பார்வையுடன் கேட்டாள்.
‘டேய் வர்மா உன் தங்கச்சியைச் சேர்த்து வைக்க பிளான் பண்ணியா, பிரிச்சு விட பிளான் பண்ணியா டா!’ என்று மனதினுள் நண்பனை மீண்டும் திட்டியவன் வெளியே, “பிலீவ் மீ ஆருமா… உன்னோட ஸ்டேடஸை நினைச்சு விலக நினைத்தாலும் வேற பொண்ணை கல்யாணம் பண்ண நான் நினைக்கவே இல்லை” 
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே” 
“அது… வந்து…” என்று திணறியவன், “உன் நல்லதுக்காக உன்னை விட்டு விலகி இருக்க நினைச்சு…” என்று இழுத்து நிறுத்தினான்.
“ஓ!!” என்றவள் நிதானமான குரலில், “இனியும் அப்படியே விலகி இருந்துரு” என்றாள்.
“ஆருமா” என்றபடி அவன் அவளை நெருங்க, அவளோ, “பக்கத்தில் வந்த கொன்னுடுவேன்” என்று மிரட்டினாள்.
அவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நிற்க, அவள் சிறிதும் மனம் இறங்காமல், “நான் படிப்பை முடிக்கிற வரை என் கிட்டயே வரக் கூடாது” என்றாள் கறாரான குரலில்.
உடனே அவன், “படிப்பை முடித்ததும் ஓகே வா?” என்று கண்ணில் மின்னலுடன் வினவ,
அவளோ அலட்டிக் கொள்ளாமல், “அதை அப்போ யோசிச்சு சொல்றேன்” என்றாள்.
காற்று போன பலூனாக சுருங்கிய முகத்துடன், “நீ எப்போ படிச்சு முடிப்ப?” என்று கேட்டான். 
“குறைந்தது நாலு வருஷம் ஆகும்” என்றவள், “ஏன்டா இப்போ கல்யாணம் பண்ணோம்னு இருக்குதோ?” என்று வினவ, அவன் ‘ஆம்’ என்று ஆட்டி பின் பதறியபடி ‘இல்லை’ என்று ஆட்டினான்.
அவனது செய்கையில் சிரிப்பு வந்தாலும் அதை சிறிதும் வெளியே காட்டிக்கொள்ளாதவள், “இப்போ தூங்கலாம்… நீ சோபாவில் படுத்துக்கோ” என்றபடி கட்டிலை நோக்கிச் செல்ல,
“நான் வேணா தோப்புகரணம் போடட்டா?” என்று  கேட்டான்.
“வாட்!!”
அவன் குரலை சற்று தாழ்த்தி, “இல்லை… சின்ன வயசில் தப்பு பண்ணா அம்மா தோப்புகரணம் போடச் சொல்லுவாங்க… அந்த ஞாபகத்தில் கேட்டேன்” என்றான்.
கைகளை கட்டியபடி மெத்தையில் அமர்ந்தவள் அசராமல், “சரி 1000 தோப்புகரணம் போடு”  என்று கூற, அவன் ஆடிப்போனான்.
அவள் புருவம் உயர்த்தி, “என்ன! போடு” என்றாள்.
“ஆருமா கொஞ்சம் குறைச்சுக்கோயேன்” 
“ஹ்ம்ம்… 999 போடு” 
‘என்ன ஒரு தாராள மனசு! முன்னாடி பேட்டா கடையில் வேலை பார்த்து இருப்பாளோ’ என்று மனதில் கூறுவதாக நினைத்து வெளியே கூறியிருந்தான்.
அவளது முறைப்பை கண்டு அவன், ‘ஆத்தி மனசுக்குள்ள சொல்றதா நினைச்சு வெளியே சொல்லி மூக்குத்தி அம்மன் நயன்தாராவா இருந்தவளை ஐரா நயன்தாராவா மாத்திட்டியே டா!’ என்று கூற, 
அவளோ பல்லைகடித்தபடி, “இப்பவும் வெளியே தான் டா சொல்லிட்டு இருக்கிற” என்றாள்.
‘அச்சோ! உன்னோட கிரைம் ரேட் ஏறிட்டே போகுதே டா!’ என்று இந்த முறை சரியாக மனதினுள் அலறியவன், ‘வேற வழியே இல்லை… களத்தில் குதிச்சிருடா கைபிள்ளை’ என்ற முடிவிற்கு வந்தவனாக, “1..2..3..” என்று எண்ணியபடி வேக வேகமாக தோப்புகரணம் போட ஆரம்பித்தான்.
விளையாட்டுக்காக சொன்னவளுக்கு அவன் நிஜமாக தோப்புகரணம் போட ஆரம்பிக்கவும், அவன் எவ்வளவு தூரம் போகிறான் என்று பார்க்கும் எண்ணம் தோன்ற அமைதியாக இருந்தாள்.
அவன் 100 தோப்புகரணங்கள் போட்டதும் அவள், “போதும்” என்று கூற,
அவனோ, “நான் பேசியதுக்கு தண்டனையாவும், என்னோட காதலை உனக்கு புரிய வைக்கவும் 1000 தோப்புகரணம் போடுவேன்” என்று வீர வசனம் பேசினான்.
அவள், “நல்ல யோசிச்சுக்கோ… நீ சொல்றது, 1000 தோப்புகரணம் போட்டா தான் உன் காதல் உண்மைங்கிற மீனிங் தருது” என்று கூற,
அப்பொழுதும் அவன், “நிச்சயமா போடுவேன்” என்றான்.
அதற்கு மேல் வாதிடாமல் அவள், “சரி போடு” என்றாள்.
அவ்வபொழுது மதிவர்மனுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்ததால் முதல் 100 தோப்புகரணங்களை சுலபமாக போட்டவன் ஒருவாறு சமாளித்து 400 வரை போட்டான். அதன் பிறகு வெகுவாக திணறியவன் மனதினுள், ‘தேவையா டா உனக்கு! இப்படி வாயைக் கொடுத்து மாட்டிக் கிட்டயே!’ என்று புலம்பியபடி தொடர்ந்தான்.
அவள், ‘போதும்’ என்று கூற வாய் திறக்கும் முன் அவன், “நான் போட்டுருவேன் ஆருமா” என்றபடி கஷ்டப்பட்டு தொடர்ந்தான்.
சிரமத்துடன் 600 தோப்புகரணங்கள் போட்டவன் அப்படியே தரையில் சரிந்து படுத்துவிட்டான்.
‘தேவையா இது! சரியான வாய் சொல் வீரன்… நீ ஒரு அட்டக் கத்தி டா…’ என்று மனதினுள் கூறிக் கொண்டவள் அவனது தலையைத் தூக்கி தலையணை வைத்து போர்வையால் போத்திவிட்டாள்.
அவளிடம் நன்றி கூறக் கூட தெம்பில்லாமல் மனதினுள், ‘முதல் இரவில் இப்படி டயர்டு ஆன ஒரே ஆள் நானாத் தான் இருப்பேன்’ என்று நினைத்துபடி மயங்கியிருந்தான்.
  
மதி மற்றும் சாரா என்ன செய்றாங்க என்று போய் பார்ப்போம் வாங்க…
தனது அறையை அளப்பதுப் போல் நடந்து கொண்டிருந்த மதிவர்மனோ கோபத்திற்கும் காதலுக்கும் இடையே தத்தளித்துக் கொண்டிருந்தான்.
காலையில் இருந்து நடந்தவற்றை அசை போட்டுக் கொண்டிருந்தவனின் காதல் கொண்ட மனம் தன்னவளை காதலுடன் ரசிக்க, மறு மனமோ, ‘உனக்கு சூடு சுரணை இல்லை! உன்னை என்னலாம் சொன்னா!’ என்று திட்டியது.
காதல் கொண்ட மனம், ‘சாரா அப்படி நடந்துகிட்டதுக்கு காரணம் இருக்கும்’ என்று வாதிட,
மற்றொரு மனமோ கோபத்துடன், ‘என்ன பெரிய காரணம்!! எல்லாம் தெரிந்த காரணம் தானே! என்ன தான் நீ சொன்னாலும், அவ விட்டுக் கொடுத்ததையோ, அப்படி பேசியதையோ மறக்கவும் முடியலை, மன்னிக்கவும் முடியலை… அவளை ஆசையா பார்த்தாலும் நெறிஞ்சி முள்ளா நெஞ்சை குத்திட்டு இருக்கிற அவளோட வார்த்தைகள்!!! ப்ச்…” என்றது.
இயலாமை தந்த கோபத்துடன் அவன் கையை உதற, அருகில் இருந்த இருக்கை கீழே விழுந்தது.
சரியாக அப்பொழுது உள்ளே வந்த அபிசாரா அவனது கோபத்தைக் கண்டு ஒரு நொடி மிரண்டுத் தான் போனாள். அவளது மருண்ட விழிகளைக் கண்டவன் தனது கோபத்தை அடக்க முயற்சித்தபடி முகத்தைத் திருப்ப, அவளோ அவன் தனது முகத்தைப் பார்க்க பிடிக்காமல் திருப்பியதாக நினைத்து மனம் வருந்தினாள்.
அவள் மெல்லியக் குரலில், “மதி” என்று அழைக்க,
கோப முகத்தை அவளிடம் காட்ட விரும்பாமல் அவன் திரும்பி இருந்த நிலையிலேயே இறுகிய குரலில், “இப்ப எதுவும் பேச வேண்டாம்… படுத்து தூங்கு” என்றான்.
அவளோ அவன் தன்னிடம் பேச விரும்பவில்லை என்று தவறாக நினைத்து கலங்கியக் குரலில், “ப்ளீஸ் மதி… நான் சொல்றதை கேளேன்” என்றாள்.
அவளது கலங்கிய குரல் ஒரு பக்கம் அவனை பலவீனப்படுத்த மறுப்பக்கம் தன்னவளின் கலக்கத்தை தன்னால் போக்க முடியலையே என்று தன் மீதும், தன்னை இந்த நிலைக்குத் தள்ளிய தன்னவள் மீதும் சேர்த்தே கோபம் வந்தது. ஆக மொத்தம் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தவனுக்கு கோபம் குறைவதற்கு பதில் கூடியது.
கோபத்துடன் அவள் பக்கம் திரும்பியவன், “என்ன சொல்லப் போற? ஏன் அப்படி பேசினனா? இல்லை மன்னிப்பு கேட்கப் போறியா? என்னை உயிரோட கொல்ற வார்த்தைகளை சொல்லிட்டு, மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியா போய்டுமா? எப்படிடி அப்படி பேச முடிஞ்சுது உன்னால? என்னைப் பார்த்தா வுமனைசர் மாதிரியா உனக்குத் தெரியுது?”
அவள் கலங்கிய விழிகளுடன், “ப்ளீஸ் மதி… நான் அப்படி மீன் பண்ணலை…” 
“நீ சொன்னதுக்கு வேற என்ன அர்த்தம்?” 
“அது…” என்று அவள் திணற,
அவன் அதிகரித்த கோபத்துடன், “காதலை சொன்னவன் கிட்ட இகழ்ச்சியான குரலில் ‘இதை மாதிரி எத்தனைப் பேர் கிட்ட சொல்லி இருக்க? ஐ மீன் நான் எத்தானாவது?’ னு நீ கேட்ட!!! இதோட அர்த்தம் நான் ஒரு வுமனைசர் இல்லை பொம்பளை பொறுக்கி” 
“அப்படி இல்லை…” என்று ஆரம்பித்தவளின் கன்னங்களில் கண்ணீர் இறங்க, 
“முதல்ல அழுறதை நிறுத்து…” என்று குரலை உயர்த்திக் கத்தியவன் கோபத்துடனே தொடர்ந்தான், “உன்னோட கண்ணீரை பார்க்கிறப்ப எனக்கு என் மேலயே கோபம் கோபமா வருது… உன்னோட கண்ணீரை என் மனசு துடைக்க துடிக்கிறப்பவே நீ கொடுத்த வலி அதை தடுக்குது…” என்று முடித்தபோது அவன் குரலில் வருத்தமே மேலோங்கி இருந்தது.
வேகமாக கண்ணீரை துடைத்தவள், “என்னை வேணா ரெண்டு அடி அடிச்சுக்கோ… இப்படி உன்னை நீயே வருத்திக்காத ப்ளீஸ்” என்று இறைஞ்சும் குரலில் கூற,
விரக்த்தியாக சிரித்தவன், “அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லை… உன்னோட கண்ணீரை பார்க்க முடியலைனு சொல்றேன்… உன்னை அடிச்சா, உன்னை விட எனக்குத் தானடி அதிகமா வலிக்கும்!!” என்றான்.
“அன்னைக்கு நான் ஏன் அப்படி…” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
“பெருசா என்ன சொல்லப் போற! உன்னோட தங்கச்சிக்காக என்னை விட்டு விலகுற முடிவை எடுத்தேன்னு தானே சொல்லப் போற!” என்று அவன் கோபத்துடன் வினவ, அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
அவன், “என்னை எவ்வ்வ்வ்ளோ நல்ல புரிஞ்சிருந்தா, நீ அப்படி பேசி விலகி போய்ட்டா, நான் வேற பொண்ணை கல்யாணம் செய்துப்பேன்னு நினைச்சிருக்க! என் மேல ரொம்ப நல்ல அப்பிப்பராயம் தான்” என்றான் கோபமும், இகழ்ச்சியும், வருத்தமும் கலந்த குரலில். 
பின், “முதல்ல நீ அப்படி பேசியதும் உன் மேல கோபம் மட்டும் தான் இருந்தது… அப்பறம் உனக்கு என்ன பிரச்சனையோ! என்னிடம் சொல்லி இருந்தா உனக்கு துணையா இருந்து இருப்பேனேனு கோபத்தை மீறி உனக்காகத் தான் வருந்தினேன்… நீ ஊரை விட்டு போனதும் யாரையுமே பார்க்க பிடிக்காத அளவுக்கு ஒரு வெறுப்பு அண்ட் என் மேலேயே எனக்கு கோபம் வந்தது… அப்புறம் கிட்டதிட்ட ஒரு வருஷம் கழிச்சு ஈர்ப்புக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாத உன்னோட தங்கச்சி என்னைக் காதலிக்கிறதா சொன்னப்ப தான் உன்னோட விலகலுக்கான காரணம் புரிந்தது. இனி உன்னை பார்க்கவே கூடாதுன்னு நினைத்தேன்” என்றான் கோபமும் வலியும் நிறைந்த குரலில்.
கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கிய அபிசாரா எங்கே வாய் திறந்தால் கதறிவிடுவோமோ என்ற பயத்தில் அமைதியாக நின்றிருந்தாள். 
“இந்த மதியோட மதி ஒரு நாளும் உன்னை மறக்காதுடி…” என்றவன், “அதே நேரத்தில் என்னை விட்டுக் கொடுத்து, என் காதலைக் கொச்சைப் படுத்தி என்னை தூக்கி எறிஞ்சுட்டு போன உன்னை என்னால் மன்னிக்கவும் முடியலை… இந்த கல்யாணம் நம்ம பேரென்ட்ஸ்காக மட்டும் தான்” என்றுவிட்டு வேகமாக வெளியேறினான். 
தனது வார்த்தைகளால் அவளை மேலும் மேலும் வருத்த விரும்பாமல் அறையைவிட்டு வெளியேறி மொட்டை மாடிக்குச் சென்றிருந்தான்.
ஆனால் அவளோ தன்னவன் தன்னை வெறுத்துவிட்டானோ என்று அஞ்சினாள். அன்று தந்தையின் அருகாமையிலும் வார்த்தைகளிலும் திடமடைந்திருந்த அவளது மனம் இன்றோ வலியிலும் வருத்தத்திலும் பயத்திலும் கண்ணீர் சிந்தியது. தைரியமான அதிரடியான சாரா அமைதியான அபியாக உருமாறியிருந்தாள்.
அவனது மனமோ, ‘உன்னோட எவ்வளவு சந்தோஷமா வாழ ஆசைப்பட்டேன் தெரியுமா? எல்லாத்தையும் கெடுத்துட்டியே!’ என்று வலியுடனும் நிராசையுடனும் கூறியது.

                    நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement