Advertisement

சென்னை:

RV நூற்பாலை(SPINNING MILL) பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, அந்த மூவரும் தங்களுக்குள் பேசியபடி நிர்வாக இயக்குனர் மதிவர்மன் அறை நோக்கி சிறு பதற்றத்துடன் வேகமாக சென்று கொண்டிருந்தனர்.
மூவரில் மூத்தவர் ஒருவனைப் பார்த்து, “MD சாரை பார்த்து இருக்கிறியா?” என்று கேட்க,
அவன், “இல்லை” என்றான். 
“நான் இரண்டு முறை பார்த்து இருக்கிறேன்…” என்ற இன்னொருவன் முதலாவதாக பேசியவரைப் பார்த்து, “என்னவா இருக்கும் (அண்)ணா? எதுக்கு நம்மளை கூப்பிட்டு இருப்பாங்க?” என்று சிறு பதற்றத்துடன் வினவ,
முதலில் பேசியவரும் சிறு பதற்றத்தை தன்னுள் மறைத்தபடி, “நம்ம மூணு பேரையும் ஒரே நேரத்தில் கூப்பிட்டு இருப்பதை பார்த்தால், என் மனசுக்குள் ஏதோ பிரச்சனைன்னு தோணுது. ஆனா என்னன்னு தான் தெரியலை” என்றார். 
இரண்டாவதாக பேசியவன், “எதுக்கு இப்படி பயப்படுறீங்க?” 
“நீ சேர்ந்து கொஞ்ச நாள் தானே ஆகுது, அதான் உனக்கு வர்மா சாரைப் பத்தி தெரியலை.” என்று மூன்றாவதாக பேசியவன் கூற,
முதலில் பேசியவர், “வர்மா சாரை பார்த்தது இல்லை சரி, அவரைப் பத்தி கேள்விபட்டிருப்ப தானே?” 
“ஹ்ம்ம்… சார் டெரரான ஆள்னும் பெரியவரை விட இவரு வேகத்திலும் விவேகத்திலும் ஒரு படி மேலனும் கேள்விப்பட்டேன்.” 
முதலில் பேசியவர், “அது உண்மை தான். ரெண்டு சிங்கங்களுக்கு பிறந்த குட்டி சிங்கம் எப்படி இருக்கும்? நம்ம கம்பெனி எப்போதுமே நம்பர் ஒன் தான் என்றாலும், வர்மா சார் முழுவதுமா சார்ஜ் எடுத்ததுக்கு அப்பறம் எல்லாத்துலையும் அபார வளர்ச்சி தான்.” என்றவர் அவன் பார்வையை பார்த்து, “என்ன பார்க்கிற? மேடம்… அதான் வர்மா சாரோட அம்மாவும் லேசுப்பட்டவங்க கிடையாது. நம்ம ஸ்பின்னிங் மில், கார்மென்ட்லாம் முதல்ல மேடம் தான் பார்த்துட்டு இருந்தாங்க. குடும்பமே ‘கிங்-மேக்கர்’ தான்” என்றார். 
இன்னொருவன், “நான் ரெண்டாவது முறை வர்மா சாரை பார்த்தப்ப, அவர் கோபத்தை பார்த்து ஆடிப் போயிட்டேன்.” என்றதும், 
இரண்டாவதாக பேசியவன், “அவ்ளோ கோபம் வருமா?” என்று கேட்டான். 
“சார் கோபத்தில் நியாயம் இருக்கும். தப்பு செஞ்சா தொலைஞ்சோம். வர்மா சார் மேல் எல்லோருக்கும் மரியாதையும் பயமும் இருக்குதே தவிர யாரும் அவருக்கு எதிரா போர்க் கொடி தூக்கியது கிடையாது” 
அவன், “எல்லா எம்டியும் கறாரா தான் இருப்பாங்க… அப்போ தானே நம்மளை சரியா வேலை வாங்க முடியும்” என்றான். 
முதலில் பேசியவர், “அது சரி தான்… உன்னை மாதிரி சிலர் வர்மா சாரை பார்த்தது கூட கிடையாது, ஆனா கம்பனி எல்லாத்துலையும் முக்கிய பதவியில் இருக்கும் எல்லோரை பற்றியும் அவருக்குத் தெரியும்… நாம நேர்மையா, கடினமா உழைச்சா நம்ம திறமைக்கு ஏற்ற பதவி உயர்வும், ஊதிய உயர்வும் நாம கேட்காமலேயே நமக்கு கிடைக்கும். ஆனா தப்பு ஏதாவது நடந்துது, யாரா இருந்தாலும் மன்னிக்கவே மாட்டார்… கடுமையான தண்டனையும் கிடைக்கும்… உனக்கு இந்த வேலை எப்படி கிடைச்சுதுன்னு தெரியுமா?” 
“என் திறமையைப் பார்த்து கொடுத்தாங்க” 
“அது சரி தான்… ஆனா எதனால் இந்த வேலை வாய்ப்பு கிடைத்ததுன்னு தெரியுமா?” 
அவன் இல்லை என்பது போல் உதட்டை பிதுக்க, அவர், “உனக்கு முன்னாடி இருந்தவன் பத்து வருஷம் இந்த வேலையில் இருந்தான். அவனோட ஒரு நாள் அஜாக்கிரதைத் தான் இப்போ நீ இங்க இருக்க காரணம். இங்கே வேலை செய்றவங்க வேலை நேரத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு வேலைக்கு சேரும் போதே சொல்லித் தானே எடுப்பாங்க! அவன் அதை மீறிட்டான்…” என்று அவர் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே,
அவன், “ஒரு சிகரெட் பிடிச்சதுக்கா வேலையை விட்டு தூக்கிட்டாங்க?” என்றான் அதிர்ச்சியுடன். 
“கேன்டீனில் பிடிச்சாலோ மில்லுக்கு வெளியே பிடிச்சாலோ ஒன்னும் சொல்ல மாட்டாங்க. வேலை நேரத்தில் தான் பிடிக்கக் கூடாது… ஏன்னா இது பஞ்சு ஆலை… புரியுதா?” 
“ஹ்ம்ம்…” 
“அவன் வேலை நேரத்தில் குடோவ்னில் வச்சு சிகரட் பிடிச்சதோடு, பிடிச்சு முடிச்ச சிகரெட் துண்டை அணைக்காம அஜாக்கிரதையா தூக்கி போட்டதில் நெருப்பு பிடிச்சுகிச்சு… அதிர்ஷ்டவசமா அந்த நேரத்தில் மில்லில் இருந்த வர்மா சார் அவன் தூக்கிப் போட்டதை சிசிடிவி கேமராவில் பார்த்துட்டு வேகமா வந்ததால் ரெண்டு பெட்டியோட போச்சு… கொஞ்சம் தாமதம் ஆகி இருந்தாலும், மொத்த குடோவ்னும் தீ பிடிச்சு மெட்டிரியலோடு சேர்த்து அந்த நேரத்தில் அங்க வேலை செஞ்ச எல்லோரும் தீயில் கருகி இருப்பாங்க…” 
இன்னொருவன், “அப்போ நானும் அங்க தான் இருந்தேன். அன்னைக்கு தான் சாரை ரெண்டாவது முறை பார்த்தேன்… அன்னைக்கு மட்டும் சார் வரலை, நான் தீக்கு இரையாகி இருப்பேன்… வேகமா வந்து தீயை அனைச்சதும், சார் அவனுக்கு விட்டார் பாரு ஒரு அரை… ஒரே அரையில் அவன் கழுத்து சுளுக்கி ஒரு மாசம் கழிச்சி தான் நார்மல் ஆனான்… அந்த நிமிஷமே அவனை வேலையை விட்டு தூக்கிட்டார்.”  
அவன் அதிர்ச்சியுடனும் பயத்துடனும் பார்க்க, முதலில் பேசிய மூத்தவர் தொடர்ந்து பேசினார்.  
“கிட்ட திட்ட முப்பது வருஷமா நான் இங்கே தான் வேலை பார்க்கிறேன். பெரியவராவது ஒருத்தருக்கு பெரிய தண்டனை கொடுக்கிறதுக்கு முன்னாடி அவனோட குடும்பத்தை பத்தி யோசிப்பார்… கூடவே அவன் செய்த தப்பை உணர்ந்து கெஞ்சினாலோ, வருந்தி மன்னிப்பு கேட்டாலோ, கடைசியா ஒரு வாய்ப்பு கொடுப்பார். ஆனா வர்மா சார் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்… எவ்ளோ கெஞ்சினாலும் வர்மா சாரிடம்  வேலைக்காகாது.” 
“ஏன் சார் பீதியை கிளப்புறீங்க?” 
“உன்னை பயமுறுத்தி எனக்கென்ன ஆகப் போகுது? உண்மை நிலவரத்தை சொல்றேன்.” 
இறுதியாக பேசியவன், “ஏதும் தப்பு நடந்ததா தெரியலை அண்ணே… வர்மா சார் கூப்பிட்டதும் நான் விசாரிச்சுட்டு தான் வந்தேன்” என்றான். 
“நானும் விசாரிச்சேன்… என்ன விஷயம்னு எனக்கும் தெரியலை… ஒருவேளை கஸ்டமர் கிட்ட இருந்து கம்ப்ளைன்ட் வந்து இருக்கலாம்” என்று அவரது அனுபவத்தில் சரியாகவே கணித்துக் கூறினார். 
அவர்கள் அனுமதி பெற்றுக் கொண்டு மதிவர்மன் அறையினுள் சென்றனர்.
கம்பீரமாக ராஜ தோரணையில் அமர்ந்திருந்த மதிவர்மனைப் பார்த்து, “வணக்கம் சார்”, “குட் மார்னிங் சார்”, “குட்… மார்னிங்… சார்” என்று மூவரும் வணக்கம் கூறினார்கள்.
“குட் மார்னிங்கா எனக்கு தோணலையே!” என்ற மதிவர்மனின் பார்வையும் குரலும் மூவரினுள் பதற்றத்தை அதிகரித்தது.
மதிவர்மனின் பார்வையில் அவனது செயலாளர் மற்றும் நெருங்கிய நண்பனுமான சஞ்சய் மூவரையும் பார்த்து, “JD குரூப் நேத்து நாம அனுப்பின மெட்டிரியல் குவாலிட்டி சரி இல்லைன்னு ரிட்டர்ன் பண்றேன்னு சொல்றாங்க” என்றான்.
மூவரும் அதிர்ச்சியுடன் மதிவர்மனைப் பார்த்தனர்.
அவர்கள் உள்ளே நுழைந்ததில் இருந்தே ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த மதிவர்மன் அந்த வயதில் மூத்தவரைப் பார்த்து கேள்வி கேட்கும் முன் அவரே, “சார் ப்ரொடக்சனில் எந்த தப்பும் நடக்கலை” என்றார் திடமான குரலில். 
மதிவர்மனின் பார்வை அடுத்து நின்றவனிடம் செல்ல, அவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “குவாலிட்டி செக் பண்ணதிலும் தப்பு எதுவும் நடக்கலை சார்… எப்போதும் போல குவாலிட்டி பக்காவா தான் இருந்துது” என்று கூற,
அடுத்து நின்றவன்(புதிதாக சேர்ந்தவன்) மதிவர்மனின் பார்வை அவனிடம் திரும்பும் முன்பே அவசரமாக, “பேக்கிங்லும்(Packing) எந்த தப்பு நடக்கலை சார்” என்றான்.
மதிவர்மன் மூவருக்கும் பொதுவாக, “நீங்க தப்பு செஞ்சீங்கனு நான் சொல்லலை… உங்களுக்கே தெரியாம ஏதும் நடந்து இருக்கலாம்…” 
“இல்லை சார்” என்று மூவரும் கூற,
மதிவர்மன், “நேத்து அன்-யூசுவல்லா எதுவும் நடந்ததா?” 
“இல்லை சார்” என்று மூவரும் மீண்டும் கூற,
அவன், “இத்தனை வருஷத்தில் இது தான் முதல் முறை… ஸோ கொஞ்சம் யோசிச்சுச் சொல்லுங்க… நேத்துன்னு இல்லை, கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஏதும் வித்யாசமா நடந்ததா? உங்களுக்கு தெரிஞ்சு யாரையும் பார்க்க புதுசா யாரும் வந்தாங்களா?” 
சில நொடிகளுக்கு பிறகு ஒருத்தர் பின் ஒருத்தர் ‘இல்லை’ என்ற பதிலையே கூறவும், அவன், “சரி நான் பார்த்துக்கிறேன்… இதை பத்தி யார் கிட்டயும் மூச்சு விடக் கூடாது… நீங்க மூணு பேரும் இன்னும் கவனமா எல்லோரையும் கண்கானிங்க” என்றான். 
“ஓகே சார்”, “சரி சார்” என்று கூறி மூவரும் வெளியேறினர்.
அந்த அறையை விட்டு வெளியேறியதும் இறுதியாக பேசியவன், “எவ்ளோ பயந்தேன் தெரியுமா அண்ணே… ஆனா…” என்று பேசிக் கொண்டிரும் பொழுதே அந்த மூத்தவர், “அமைதியா பேசினார்னு சொல்ல வரியா?” 
“ஹ்ம்ம்” 
“நம்ம மேல தப்பு இல்லைனு நம்ம முகத்தையும், உடல் மொழியையும் வச்சு கண்டு பிடித்து இருப்பார்” 
“அதுவும் சரி தான்” 
புதிதாக சேர்ந்தவன், “ஆமா… உள்ளே போனதும் பார்த்தாரே ஒரு பார்வை! என்ன பார்வை! கண்ணுலேயே ஸ்கேன் பண்றார்… நீங்க சொன்னபடி சார் சிங்கம் தான் அண்ணே… சாருக்கு என்ன வயசு இருக்கும்?” 
“29” என்ற அந்த மூத்தவர், “வயசுக்கும் ஆளுமைக்கும் சம்பந்தம் கிடையாது” என்று சேர்த்து கூறினார். அதை அவனும் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினான்.
வர்கள் சென்றதும் சஞ்சய், “என்ன வர்மா உடனே அனுபிட்ட?” 
“நம்ம ஆட்கள் கிட்ட தப்பில்லை… சிசிடிவி புட்டேஜ் பார்த்ததிலும் எதுவும் தப்பா தெரியலை” என்றவன், “டெலிவரி மனேஜர் கிட்ட நேத்து யாரு லோட் எடுத்துட்டு போனதுன்னு விசாரி… அவனை உடனே என்னை வந்து பார்க்கச் சொல்லு… அவன் வரதுக்கு முன்னாடி அவனைப் பற்றிய டிடேல்ஸ் எனக்கு மெயில் வந்திருக்கணும்” என்றான்.
டுத்த மூன்று மணி நேரத்தில், “கொஞ்சம் பொறுமையா…” என்று ஆரம்பித்த சஞ்சய் மதிவர்மனின் அக்னி பார்வையில் வாய்க்கு பூட்டுப் போட்டு அமைதியானான்.
அப்பொழுது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த நடுத்தர வயதில் இருந்த மனிதர் பதற்றத்துடன், “சார்… நான் உங்களுக்கு எதிரா இதை செய்யலை… நான்…” என்று பேசிக் கொண்டிருந்த பொழுதே,
மதிவர்மன் கோபத்தை அடக்கியபடி தீர்க்கமான பார்வையுடன், “உங்க சொந்த பகையைத் தீர்த்துக்க என்னோட ரெபுடேஷனை(Reputation – நன்மதிப்பு) நான் இழக்க முடியாது… இதை செய்ததுக்கு பதில், நீங்க உதவி கேட்டு இருந்தாக் கூட நான் செய்திருப்பேன்… ஆனா இப்போ…” என்று நிறுத்தியவன் சில காகிதங்களை மேசை மீது அவர் முன் போட்டான்.
கைகள் நடுங்க அதை எடுத்து பார்த்தவர் அதிர்ச்சியுடன், “சார்… இந்த சின்ன தப்புக்கு…” என்று முடிக்கும் முன்,
“எது சின்ன தப்பு? நம்பர் ஒன் குவாலிட்டியில் இருக்கும் என்னோட மெட்டிரியல் தரம் குறைந்தவைனு பேர் கெடுறது சின்னத் தப்பா?” என்று சீறியவன் பின் உதட்டோர வளைவுடன், “தப்பில் சின்ன தப்பு, பெரிய தப்பு என்ன? தப்பு தப்பு தான்” என்று அழுத்தத்துடன் முடித்தான்.
அவர், “சார்” என்று தயங்க, “என் நேரத்தை வீணாக்காதீங்க” என்றவன், “கடையா ஜெயிலா? நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்றும் சேர்த்துக் கூறினான்.
அவர் தனது தவறையும் விதியையும் நொந்தபடி அந்த காகிதங்களில் கையெழுத்து போட்டுவிட்டு தளர்ந்த நடையுடன் அறையின் வாயிலை நோக்கி சென்றார்.
அந்த காகிதங்களை புரட்டியபடி மதிவர்மன், “நாளானைக்கு பத்தரை மணிக்கு ரெஜிஸ்ட்ரேஷன் நடக்கணும்” என்றான்.
அவனது அறிவிப்பில் ஒரு நொடி நின்றவர் திரும்பி பார்க்காமல் வெளியேற, சஞ்சய் அவரை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
மதிவர்மன் சஞ்சயைப் பார்த்து, “ரொம்ப உருகாத… அவரால் ரன் பண்ண முடியாத கடையைத் தான், அதுவும் அதிக விலை கொடுத்து தான் வாங்கப் போறோம்” என்றான். 
“அதை அந்த மனுஷன் கிட்ட சொன்னியா? ஏதோ வழிப்பறி செய்ற எப்பெக்ட் கொடுத்து இருக்க” 
“கொஞ்ச நேரம் அனுபவிக்கட்டும்… அதான் அவர் செய்ததுக்கு தண்டனை” 
“தப்பு வர்மா… அந்த மனுஷன் தப்பான முடிவை எடுத்தா என்ன செய்வ?” 
மதிவர்மன் உதட்டோர சின்ன புன்னகையுடன் பார்க்கவும், சஞ்சய் புரியாமல், “என்ன?” 
“நான் சொன்னதை நீ சரியா கவனிக்கலை… கொஞ்ச நேரத்துக்குனு தான் சொன்னேன்… அவர் வீட்டுக்கு போற நேரம் நம்ம வக்கீல் அங்கே இருப்பார்…” 
“நீ இருக்கியே!” என்றான் தளர்வுடன்.

 

நடந்தது இது தான்…
நேற்று பொருட்களை எடுத்துச் சென்ற வண்டி ஓட்டுனரை மதிவர்மன் விசாரித்ததில், அவனுக்கு நேற்று முன்தினம் ஏதோ ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததாகவும், பேசிய ஆள் வெளியே தெரியாதபடி அவன்(ஓட்டுனர்) கொண்டு செல்லும் பொருட்களில் சிலதை குறைவான விலைக்கு விற்க முடியுமா என்று கேட்டதாக கூறினான். அந்த எண்னை வைத்து பேசிய ஆளை அடுத்த பத்து நிமிடத்தில் கண்டு பிடிக்க, அது JD குழுமத்தின் மேலாளர்.
மதிவர்மன் வேகமாக அறையை விட்டு வெளியேற, மதிவர்மன் வேகத்திற்கு அவன் பின்னால் ஓடிய சஞ்சய், “என்ன பிளான் சார்? நாம மிஸ்டர் ஷர்மா கிட்ட பேசலாமே?” என்றான்.
(தனிமையில் மட்டுமே மதிவர்மனை சஞ்சய் நண்பனாக ஒருமையில் அழைத்து பேசுவான். ஷர்மா JD குழுமத்தின் பொது மேலாளர். அவர் தான் சஞ்சயிடம் அவர்கள் அனுப்பிய பொருளின் தரத்தைப் பற்றி கூறியது)
மதிவர்மன், “ஆதாரம் வேணாமா? அண்ட் இனி ஒருமுறை யாரும் நம்மை கை நீட்டி குற்றம் சொல்லக் கூடாது” என்றான்.
அடுத்த முக்கால் மணி நேரத்தில் JD குழுமத்தின் மேலாளர் பதற்றத்துடன் விழுந்தடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்று மதிவர்மன் முன் நின்றார். ஆம், மதிவர்மன் வேகமாக சென்றது அவர் வீட்டிற்கு தான்.
அடுத்து மதிவர்மன் விட்ட இரண்டு அறையிலேயே உண்மையை சொல்லி இருந்தார். மதிவர்மன் அனுப்பிய பொருட்களை மாற்றி தரம் குறைந்த பொருட்களை வைத்தது அவர் தான். ‘தனம்’ ஆடைக்கடையின் உரிமையாளர் சொல்லி, JD குழுமத்தின் மேலாளர் இதை செய்திருந்தார்.
‘தனம்’ ஆடைக்கடையின் உரிமையாளரின் மகளை JD குழுமத்தின் உரிமையாளன் காதலிப்பதாக நடித்து ஏமாற்றி கைவிட்டிருக்க, அந்த பெண் தற்கொலை செய்திருந்தாள். ‘தனம்’ சிறிய அளவிலான கடை தான். தனது மகளின் மரணத்திற்கு நியாயம் செய்யவே அவர் இவ்வாறு செய்திருந்தார்.
தன்னால் JD குழுமத்தை எதிர்க்க முடியாது என்பதால் அவனை மதிவர்மனிடம் கோர்த்துவிட்டு அழிக்க நினைக்க, அது பூமராங் மாதிரி அவரிடமே திரும்பிவிட்டது.
உதடு கிழிந்து ரத்தம் வடிந்தபடி JD குழுமத்தின் மேலாளர் பேசிய காணொளியை மதிவர்மன் ‘தனம்’ ஆடைக்கடையின் உரிமையாளருக்கு அனுப்பியதின் விழைவே அவர் மதிவர்மன் அழைக்காமலேயே அவனை சந்திக்க அவனது RV நூற்பாலைக்கு சென்றது. ஆனால் அவர் வருவார் என்பதை அறிந்திருந்த மதிவர்மன் அவரது கடையை அவனது பெயரில் மாற்றுவதாக பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதோடு நாளை மறுநாள் கடையை அவன் பெயரில் பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தான்.

Advertisement