Advertisement

விழாவில் அபிசாராவுடன் பேசியவன் தான் அவர்களின் முதல் சுமுகமான சந்திப்பிற்கு காரணமானவன்.
மதிவர்மனை பேரங்காடியில் சந்தித்த அடுத்த நாளே அனன்யா அழைத்ததால் மீண்டும் அதே பேரங்காடிக்கு அபிசாரா கல்லூரி முடிந்ததும் சென்றாள். அதே போல் மதிவர்மனும் ஆதிராவின் அழைப்பிற்காக அங்கே சென்றான்.
ஆதிரா வர தாமதமானதால் மதிவர்மன் அபிசாராவை நினைத்தபடி அங்கே சுற்றிக் கொண்டிருந்தான். அனன்யாவும் வர சற்று தாமதம் ஆகும் என்று கூறியதால் உணவுகள் வழங்கப்படும் இடத்தில் அபிசாரா ஒரு மேசையில் அமர்ந்தபடி தங்கைக்காக காத்திருந்தாள். காத்திருந்த நேரத்தில் அவளது மனமும் மதிவர்மனைப் பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தது.
அப்பொழுது, “ஹாய் அபி… வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்” என்றபடி அவளுக்கு எதிரே அமர்ந்தவனைக் கண்டதும் அபிசாரா மதினுள், ‘ஐயோ இவனா!’ என்று சிறு எரிச்சலுடன் நினைத்தாலும் இங்கிதம் கருதி லேசாக புன்னகைத்தபடி, “ஹாய்” என்றாள். அவன் வேறு யாருமில்லை, சதாபிஷேக விழாவில் இவளிடம் பேசியவன் தான்.
அவன், “அபி… அன்னைக்கு நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே!” என்றான்.
“அன்னைக்கே பதில் சொல்லிட்டேனே!” 
“அதை ரிகன்சிடர் பண்ணலாமே!” 
“நான் தான்…” என்றவளின் பேச்சை இடையிட்டவன், “ப்ளீஸ் அபி நான் பேசி முடிச்சிக்கிறேன்… நம்ம அப்பாக்கள் நல்ல பிரெண்ட்ஸ்…” என்று ஆரம்பித்து அவன் பேசிக் கொண்டே போக, அவளோ தந்தை நண்பரின் மகனிடம் கடுமையாக பேச விரும்பாமல் எரிச்சலை மறைத்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது, “சாரி சாரா… வர கொஞ்சம் லேட் ஆகிருச்சு” என்றபடி அங்கே வந்த மதிவர்மன் அபிசாரா அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
மதிவர்மனின் உரிமையான பேச்சில் சிறு அதிர்ச்சியுடன் கண்களை விரித்தவள், மதிவர்மன் எதிரில் இருந்தவனை பார்வையால் சுட்டிக் காட்டியதும் மறுத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
மதிவர்மன் எதிரில் இருந்தவனிடம் கையை நீட்டியபடி, “ஹாய்… அம் மதிவர்மன்… வேந்தன் குரூப் ஆஃப் கம்பனீஸ் ஒன் ஆஃப் தி எம்.டி” என்றவன் கை குலுக்கியபடி அபிசாராவை பார்த்து கண்ணடித்து, “அண்ட் முக்கியமான குவாலிபிகேஷன் சாராவோட பாய் பிரெண்ட்” என்றதும் மனதினுள் சிறிது அதிர்ந்தவள் நிமிர்ந்து அமர,
எதிரில் இருந்தவன் வெளிப்படையாகவே அதிர்ந்தான். அபிசாரா அமைதியாக இருக்கவும், “ஓகே நீங்க கண்டின்யு பண்ணுங்க” என்றவன் வேறு வழி இல்லாமல் எழுந்து சென்றான்.
அவன் அகன்றதும் அபிசாரா கோபமாக பேச வாய் திறக்கும் முன், “சாரி… நீ இஷ்டமில்லாம அவனோட அறுவையைக் கேட்டுட்டு இருந்த மாதிரி இருந்துது… அதான் அப்படி சொன்னேன்” என்ற மதிவர்மன், “எப்படி! பையன் தெறிச்சு ஓடிட்டான்ல” என்று கூறி கண் சிமிட்டினான்.
அவன் கூறிய விதத்தில் சிரிப்பு வந்தாலும் அவள் அவனை அழுத்தமான பார்வையுடனே பார்த்தாள்.
“லுக்… நான் தப்பா எதுவும் சொல்லலை… நான் ஒரு பையன் அதான் பாய் பிரெண்ட்னு சொன்னேன்” என்றவன் கையை நீட்டி, “பிரெண்ட்ஸ்!!!” என்று கேட்டான்.  
அவனது கையை பற்றி குலுக்கியவள் மென்னகையுடன், “பிரெண்ட்ஸ்” என்றாள்.
பின், “நீங்க ஆதியோட அண்ணனா? நான்…” என்றவளின் பேச்சை இடையிட்டவன், “அனுவோட அக்கா” என்றான்.
“எப்படி தெரியும்?” 
“நேத்து மாலில் இருந்து கிளம்பியதும் உன்னைப் பத்தி விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்” என்று மென்னகையுடன் கூறியவனின் பார்வை ரகசியமாக அவளது இதழ்களை வருடியது.
அவனது ரகசிய பார்வையை உணர்ந்தவளுள் ஏதோ சொல்லத் தெரியாத உணர்வு எழ, அதை மறைத்தபடி, “எப்படி?” என்று வினவினாள். 
சிறு தோள் குலுக்கலுடன், “உன் பெயர் தெரியும்… உன்னோட வண்டி நம்பர் தெரியும்” என்றான். 
“ஓ” 
“அவன்?” என்று இழுத்து நிறுத்த,
அவள், “அப்பாவோட பிரெண்ட் பையன்… லீவ் இட்” என்றாள். 
“ஹ்ம்ம்” என்றவன், “ஸோ ஆதியோட அண்ணன் என்றதால் தான் இந்த பிரெண்ட்ஷிப்பா?” 
“அப்படியில்லை… உங்கள் நட்பை உங்களுக்காக தான் ஏற்றுக் கொண்டேன்… ஆதியோட அண்ணன் என்றது கூடுதல் குவாலிபிகேஷன்” என்றாள் மென்னகையுடன். 
“அப்போ பிரெண்ட்னு கேட்கிறதுக்கு பதில் பாய் பிரெண்ட்னே கேட்டு இருக்கலாமோ?” என்று கேட்டு அவன் கண்ணடிக்க,
அவள் மென்னகையுடனே ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டினாள்.
அவன் சற்று முன் வாங்கிய புதிய சாவிக் கொத்தை அவளிடம் நீட்டி, “இன்று மலர்ந்த நம்ம நட்பிற்காக சின்ன கிப்ட்” என்றான்.
அவள் மறுப்பாக தலை அசைத்தபடி, “எனக்கு சில சென்டிமென்ட்ஸ் உண்டு… நண்பர்களுக்குள் கீ-செயின் வாங்குறது இல்லை” 
“ஏன்?” 
“நட்பு முறிந்துவிடும்” என்று அவள் கூறியதும் புன்னகையுடன் எழுந்தவன், “நட்பு தானே முறியும்! அப்போ வாங்கிக்கலாம்” என்று கூறி கண்ணடித்தபடி அவள் கையில் அந்த சாவிக் கொத்தை கொடுத்துவிட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு சென்றான்.
“ஏய்!” என்று இவள் அழைக்க, சற்று தள்ளி இருந்தபடியே திரும்பி பார்த்தவன் மீண்டும் கண்ணடித்துவிட்டு சென்றான்.
அவன் இட்டுச் சென்ற மாயவலையினுள் இன்பமாக சஞ்சரித்தவள் தங்கையின் அழைப்பில் சுயம் பெற்று கையில் இருந்த சாவிக் கொத்தை அவசரமாக கைப்பையினுள் மறைத்து வைத்தாள்.
இன்று… திருமண நாள்…
மணப்பெண் அறையில் அபிசாராவும் மணமகன் அறையில் ஆதிராவும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு திருமண மேடையின் கீழ் ஹோம-குண்டலம் முன் அமர்ந்திருந்த மதிவர்மனும் புகழ்வேந்தனும் அய்யர் கூறிய மந்திரங்களைக் கூறிக் கொண்டிருக்க, மித்ராணி புகழ்வேந்தன் பக்கதில் நின்று கொண்டிருந்தார். மற்றொரு திருமண மேடையின் கீழ் ஹோம-குண்டலம் முன் சதீஷும் சஞ்சையும் அமர்ந்து அய்யர் கூறிய மந்திரங்களைக் கூறிக் கொண்டிருக்க, நிவேதா சதீஷ் அருகே நின்று கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து இரு மணமகன்களும் முதல் மாடியில் இருந்த தத்தம் அறைகளுக்கு சென்றுவிட, அபிசாராவும் ப்ரனேஷும் ஒரு ஹோம-குண்டலத்தின் முன் அமர, ஆதிராவும் புகழ்வேந்தனும் மற்றொரு ஹோம-குண்டலத்தின் முன் அமர்ந்தனர். இனியமலர் ப்ரனேஷ் அருகேயும், மித்ராணி புகழ்வேந்தன் அருகேயும் நின்றனர்.
“இதை எப்படி மாமா கட்டுறீங்க? இடுப்பில் நிக்கவே மாட்டிக்குது!” என்றபடி மதிவர்மன் வேட்டியைச் சரி செய்ய, சர்வேஷ் மென்னகையுடன், “பெல்ட் போட்டு கட்டிக்கோங்க” என்றார்.
இரு கல்யாணம் என்பதால் புகழ்வேந்தன் முழு நேரமும் மேடையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட, ப்ரனேஷின் அறிவுரைப் படி சர்வேஷ் தான் மதிவர்மன் கூடவே இருக்கிறார்.
அதே நேரத்தில் சஞ்சையும் அதை தான் தனது தாய் மாமன் வெற்றிவேலிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“மாம்ஸ்… இந்த வேட்டி இடுப்பில் நிக்கவே மாட்டிக்குது” என்றான்.
அவர் சிரிப்புடன், “அதான் மானத்தை காப்பாத்த த்ரீ-போர்த் போட்டு இருக்கிறியே… அப்புறம் என்ன!” என்றார். 
“மாம்ஸ் ராஜ ரகசியத்தை இப்படி சபையில் சொல்லக் கூடாது” என்று சஞ்சய் கூற,
சஞ்சய்யின் தாய் மாமன் மகள், “நாராயணா இந்த கொசு தொல்லைத் தாங்கலையே!” என்றாள்.
சஞ்சய்யோ, “மாப்பிள்ளை ரூமில் உனக்கென்ன வேலை? வெளியே ஓடு” என்றான்.
“எனக்கென்ன! ஐயோ பாவம் காலையில் இருந்து ரொம்ப காஞ்சிப் போய் இருக்கிறியே! மணப்பெண் கோலத்தில் இருக்கும் ஆதி அக்கா போட்டோ காமிக்கலாம்னு வந்தேன்”
“ஏய்! தெரியாம சொல்லிட்டேன்டி… போட்டோ காமி” என்று கூற,
“இமோஷன் பத்தலையே! உன் கிட்ட இன்னும் கொஞ்சம் எதிர் பார்க்கிறேன்” என்று அவள் கூற,
சஞ்சய் முறைப்புடன், “எல்லாம் என் நேரம்டி சுண்டைக்காய்” என்றான்.
“ஓ! அப்போ நீ நேரிலேயே பார்த்துக்கோ” என்றவள் அவனது அழைப்பைப் பொருட்படுத்தாமல் அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.
சிரித்துக் கொண்டிருந்த தாய் மாமனிடம், “மாம்ஸ் உங்க பொண்ணு அத்தை மாதிரி ஸ்வீட்டா இல்லாம உங்களை மாதிரி இருக்கா” என்றான் கடுப்புடன்.
அவரோ சிரித்தபடி, “என் பொண்ணு என்னை மாதிரி தான் டா இருப்பா” என்று பெருமையாக கூறிக் கொண்டார்.  
அடுத்து முகூர்த்தப் புடவை கட்டுவதற்காக மணமகள்கள் தங்கள் அறைக்குச் செல்ல, மதிவர்மன் மற்றும் சஞ்சய் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து கம்பீரமாக மணமேடையில் அமர்ந்தார்கள்.
கல்யாணம் நிச்சயம் ஆனதில் இருந்தே சஞ்சயுடன் பேசவோ பார்க்கவோ மறுத்த ஆதிராவின் வரவை எதிர்பார்த்து சஞ்சய்யின் ஒவ்வொரு அணுவும் ஏங்கிக் கொண்டிருந்தது.
மதிவர்மனிடமும் கோபத்தை மீறிய எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்தது, ஆனால் அதை அவன் வெளிகாட்டிக் கொள்ளவில்லை.
அய்யர், “பெண்ணை அழைச்சுண்டு வாங்கோ” என்றதும், அனன்யாவும் நேத்ராவும் அபிசாராவை அழைத்து வர, சஞ்சயின் சகோதரிகள் சவீதாவும் சஞ்சனாவும் ஆதிராவை அழைத்து வந்தனர்.
தாமரை நிறத்தில் முழுவதும் ஜரிகை வேலைபாடு  நிறைந்த  பட்டுப் புடவையில் தேவதையின் பேரழகோடு ஜொலித்த அபிசாராவை பார்த்ததும் சில நொடிகள் தன்னை மறந்த மதிவர்மன் தன் கோபங்களைக் கூட மறந்தான்.
சரியாக அந்த நொடி நிமிர்ந்து பார்த்த அபிசாராவும் பார்வையைத் திருப்ப முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இளஞ்சிவப்பு நிறத்தில் முழுவதும் ஜரிகை வேலைபாடு  நிறைந்த  பட்டுப் புடவையில்  ரதியை போல் காட்சியளித்த ஆதிராவை மூச்சுவிட மறந்தவனாய் தன்னை மறந்து கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.
ஆதிராவின் மூளை சஞ்சயைப் பார்க்காதே என்று அறிவுரை செய்தாலும், மூளையை மனம் வென்றிட, அவனை நிமிர்ந்து பார்த்தவளின் மனதை அவனது கண்ணில் தெரிந்த மயக்கம் மயில் இறகால் வருடுவதுப் போல் வருடியது.
சில நொடிகள் சுற்றம் மறந்து தங்கள் துணையை விழிகளால் தழுவிய இவர்களின் மோன நிலையை அய்யரின் உரத்தக் குரல் கலைத்தது.
மதிவர்மன் தனது செய்கையில் தன்னையே மனதினுள் திட்டியபடி முகத்தை திருப்பிக் கொள்ள, அவனது செய்கையில் அபிசாரா மனம் கலங்கினாள்.
ஆதிராவும் கோபத்துடன் முகத்தை திருப்பிக்கொள்ள சஞ்சயோ மனம் தளராமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது சகோதரி சஞ்சனா அவன் காதில், “டேய் ஓவரா வழியாத” என்று கூறியதைக் கூட அவன் பொருட் படுத்தவில்லை.
கெட்டிமேளம் முழங்க, அனைவரும் மணமக்களை வாழ்த்தி அட்சதை தூவ, சிறு இறுக்கத்துடனே அபிசாரா கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்த மதிவர்மன் மூன்று முடிச்சையும் அவனே போட்டான். அதை கண்ட மித்ராணி மற்றும் புகழ்வேந்தன் முகத்தில் புன்னகை விரிந்தது.
அடுத்து மீண்டும் கெட்டிமேளம் முழங்க, சஞ்சய் விரிந்த புன்னகையுடன் ஆதிராவின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து இரண்டு முடிச்சுப் போட, மூன்றாவது முடிச்சை அவனது மூத்த சகோதரி சவீதா போட்டாள்.
மதிவர்மனின் முகத்தைப் பார்க்க ஆசையும் ஏக்கமுமாக அபிசாரா காத்திருக்க அவனோ அவள் பக்கம் சிறிதும் திரும்பவில்லை. அதே போல் ஆதிராவின் முகத்தை பார்க்க சஞ்சய் ஆசையுடன் காத்திருக்க, அவளோ அவனை சிறிதும் நிமிர்ந்து பார்க்கவில்லை. தங்களின் ஏமாற்றத்தைப் பற்றி யோசிக்க நேரமின்றி அய்யர் கூறிய சடங்குளைச் செய்யத் தொடங்கினர்.
கரம் கோர்த்து அக்னியை வலம் வந்த பொழுது அபிசாராவின் கரம் சிறிது நடுங்க, மதிவர்மன் தன்னை மீறி அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக் கொள்ள, அதுவே அவளுக்கு போதுமானதாக இருக்க, அவளுள் இருந்த நடுக்கம் மாயமாக மறைந்தது. மதிவர்மனுக்குமே அந்த நொடியில் இறுக்கம் சற்று தளர்ந்து கோபத்தை மீறி சிறு நிம்மதி பிறந்தது.
சஞ்சய்யின் கையைப் பற்றிய நொடியில் ஆதிரா தன்னுள் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தாலும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

                    நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement