Advertisement

ஆதிரா அமைதியாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் பதற்றமாக இருப்பதை அவளது தந்தையும் தமையனும் நன்றாக புரிந்துக் கொண்டனர்.
புகழ்வேந்தன் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் மதிவர்மன், “சஞ்சய் அருமையான பையன் மாமா… அவனைக் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும்… வீட்டில் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கிறதா சொன்னான்… பொண்ணு எப்படி மாமா? குணம் எப்படி?” என்று தங்கையை ஓரப்பார்வை பார்த்தபடியே கேட்டான்.
மகனின் செய்கையில் மித்ராணி யோசனையுடன் மகனையும் மகளையும் பார்க்க, புகழ்வேந்தன் மதிவர்மனின் ஆட்டத்தை புரிந்துக் கொண்டவராக அமைதியாக இருந்தார்.
ப்ரனேஷ் மருமகன் போட்ட கோட்டில் ரோடு போடுபவராக, “பொண்ணு அருமையான பொண்ணு வர்மா… நீ சொன்னது போல, இந்த பொண்ணைக் கல்யாணம் செய்துக்கப் போறவன் கொடுத்து வச்சவன்” என்றார்.
“அப்போ ஓகே மாமா… நீங்க ப்ரோசீட் பண்ணச் சொல்லுங்க… நானும் அங்கிள் அண்ட் சஞ்சய் கிட்ட பேசுறேன்… எங்க கல்யாணத்தோடு சஞ்சய் கல்யாணத்தையும் பிக்ஸ் பண்ணிடலாம்… ஒரே நாளில் ரெண்டு கல்யாணத்தையும் ஜமாச்சிடலாம்” என்றான்.
“அம்மா நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்” என்ற ஆதிரா வேகமாக கழிவறை இருக்கும் இடம் நோக்கிச் சென்றாள்.
ப்ரனேஷ், “போதும் வர்மா… ஆதி பாவம்” என்று கூற,
மதிவர்மன், “வெண்ணைத் திரண்டு வர நேரத்தில் பானையை உடைச்சிடாதீங்க மாமா… சஞ்சய்க்கு கல்யாணத்தை பத்தி பேச தைரியம் வரப் போறது இல்லை… ஆதி தான் கல்யாண பேச்சை எடுக்கணும், பட் இவ அவன் மேல கோபத்தில் இருக்கிறா… அதான் இப்படி…” என்றவன் அன்னையைப் பார்க்க, அவர் அவனை முறைத்தார்.
அவன் அன்னையின் தோளில் கை போட்டபடி, “நேத்து நைட்டு தான் மா கண்பார்ம் பண்ணேன்… கூடவே அவங்களுக்குள் சண்டைனும் தெரிந்துது… அதான் சின்ன டிராமா… எங்க கல்யாணத்தோட ஆதி சஞ்சய் கல்யாணத்தையும் வச்சிக்கலாம் மா” என்று கெஞ்சியபடி கொஞ்சியவன், “அப்பா அமைதியா இருக்கிறதை பார்த்தால் அப்பாக்கு முன்னாடியே விஷயம் தெரியும் போல மா” என்று கூறி அன்னையின் கோபத்தை ‘டேக் டைவெர்ஷன்’ என்று தந்தைப் பக்கம் திருப்பிவிட்டான்.
சம்பந்தி வீட்டார் முன் எதுவும் பேச முடியாமல் கணவனை முறைத்தபடி மித்ராணி, “வீட்டிற்கு போய் பேசிக்கலாம்” என்றார்.
புகழ்வேந்தன் மகனை முறைக்க, அவனோ மாமனாருடன் கை தட்டியபடி சிரித்தான். புகழ்வேந்தன் ப்ரனேஷையும் சேர்த்து முறைக்க, அவரோ மென்னகையுடன், “ஆல் தி பெஸ்ட்” என்றார்.
அப்பொழுது ஆதிரா அங்கே வரவும் புகழ்வேந்தன் குடும்பத்தார் விடைப் பெற்றனர்.
புகழ்வேந்தன் குடும்பம் வீட்டிற்கு சென்றபோது அவர்களுக்காக சதீஷும் நிவேதாவும் காத்துக் கொண்டிருந்தனர்.
வண்டியில் இருந்து இறங்கிய புகழ்வேந்தன் தனது வண்டியில் இருந்து இறங்கிய  மகனை பார்க்க, அவன் ‘நான் இல்லை’ என்பது போல் செய்கை செய்தான்.
மித்ராணி கணவனரைக் கடுமையாக முறைக்க, புகழ்வேந்தன் மெல்லியக் குரலில், “ராணிமா நான் அவனை வரச் சொல்லலை” என்றார்.
பின் சதீஷை பார்த்து, “வா டா” என்ற புகழ்வேந்தன் நிவேதாவை பார்த்து, “வா மா” என்றார்.
மித்ராணி மென்னகைத்தபடி பொதுவாக, “வாங்க” என்றார்.
சதீஷ் புகழ்வேந்தன் அருகே சென்று, “என்ன விஷயம் பாஸ்?” என்று கேட்க,
ஆதிரா, “நான் தான் அங்கிள் உங்களை வரச் சொன்னேன்… உள்ள போய் பேசலாம்” என்றாள்.
மதிவர்மன் புன்னகையுடன் உள்ளே செல்ல, மித்ராணி கணவரை முறைத்துவிட்டே உள்ளே சென்றார்.
‘மகனும் மகளும் நம்மளை நல்ல கோர்த்து விடுதுங்க’ என்று மனதினுள் நினைத்தபடி புகழ்வேந்தன் உள்ளே சென்றார்.
அனைவரும் உள்ளே சென்று அமர்ந்ததும் மித்ராணி சமையல் செய்பவரை அழைத்து பழச்சாறு கொடுக்க கூறினார்.
அனைவரும் பழச்சாறு அருந்தியதும் ஆதிரா பொதுவாக, “நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை” என்றாள். பின் பெற்றோரை பார்த்து, “அம்மா அப்பா நான் சஞ்சய்யை விரும்புறேன்” என்றவள் அடுத்து சதீஷ், நிவேதா பக்கம் திரும்பி, “அங்கிள் நீங்க சஞ்சய்க்கு பொண்ணு பார்க்கிறதா கேள்விபட்டேன்… என்னை உங்க வீட்டு மருமகளா ஏத்துக்குவீங்களா?” என்று கேட்டாள்.
சதீஷ், ‘நாம எங்க அவனுக்கு பொண்ணு பார்க்கிறோம்!’ என்று மனதினுள் யோசித்தாலும், அதை வெளியே கேட்கக் கூட தோன்றாமல் அதிர்ச்சியில் அமர்ந்திருக்க, முதலில் சுதாரித்த நிவேதா, “ஆதி அம்மா அப்பா கிட்ட கலந்து பேசிட்டு…” என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடையிட்ட ஆதிரா, “என் விருப்பம் தான் அப்பா அம்மா விருப்பமும்” என்றுவிட்டு பெற்றோரை பார்த்தாள்.
மித்ராணி, “நிவி ஆதி விருப்பம் தான் எங்க விருப்பமும்” என்று கூற, 
புகழ்வேந்தன் ஒரு படி மேலே போய், “சஞ்சய் அருமையான பையன்… அவனை மருமகனா ஏத்துக்கிறதில் எங்களுக்கு ரொம்ப சந்தோசம்… சஞ்சய் கிட்ட கேட்டுட்டு உங்க முடிவைச் சொல்லுங்க” என்றார்.
சதீஷ், “பாஸ்!” என்று அதிர்ச்சியுடனே அழைக்க,
புகழ்வேந்தன் மென்னகையுடன், “இப்பவாது இந்த பாஸ்சை விடேன் டா” என்றார்.
நிவேதா சஞ்சய் என்ன சொல்வானோ என்ற பதற்றத்தில் செய்வதறியாது அமர்ந்திருக்க, மித்ராணி, “ஆதி… உன்னோட விருப்பத்தை சஞ்சய் கிட்ட சொன்னியா?” என்று கேட்டார்.
உடலும் முகமும் இறுகிவிட அவள், “அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம் ஆனா காதல் இல்லையாம்… அப்பா சொல்ற, என் ஸ்டேடஸ்க்கு ஏத்த பையனை நான் கல்யாணம் பண்ணிக்கனுமாம்” என்றாள்.
மித்ராணி யோசனையுடன் பார்க்க, புகழ்வேந்தன், “நான் சஞ்சய் கிட்ட பேசுறேன்” என்றபடி எழுந்து சென்று சஞ்சய்யை கைபேசியில் அழைத்தார்.
அழைப்பை எடுத்த சஞ்சய், “சொல்லுங்க அங்கிள்” என்றான்.
“ஒரு விஷயம் கேட்பேன்… உண்மையைச் சொல்லணும்” 
‘ஆத்தி! நாம இன்னும் முதல் ரௌண்டையே முடிக்கலையே!’ என்று மனதினுள் அலறியவன், “கேளுங்க அங்கிள்” என்றான்.
“நீ ஆதியை விரும்புறியா?” 
“அங்கிள்!!” என்று அதிர்ந்தவனுக்கு அடுத்து வார்த்தை வரவில்லை.
அவனது நிலையை புரிந்துக் கொண்ட புகழ்வேந்தன், “ஆதியை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்டார்.
தன்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டவன் ஒருவாறு குரலை சீர் செய்துக் கொண்டு, “ஆருக்கு விருப்பம்னா எனக்கு ஓகே அங்கிள்” என்றான்.
புகழ்வேந்தனோ, “எந்த ஆறோட விருப்பத்தை கேட்கணும்?” என்று கேட்டார்.
“அங்கிள்!!!” என்று அவன் புரியாமல் கேட்க,
அவரோ அடக்கப்பட்ட புன்னகையுடன், “ஆறுனு சொன்னியே அதான் எந்த ஆறு? அதாவாது எந்த ரிவர் னு கேட்டேன்” என்றார்.
“அங்கிள்!!! நீங்க வச்சு செய்றதுக்கு தான் எங்க அப்பாவை நேர்ந்து விட்டிருக்கே!” என்று கூற,
சத்தமாக சிரித்த புகழ்வேந்தன், “வர 24ஆம் தேதி உனக்கும் உன்னோட ஆருக்கும் கல்யாணம்” என்றார்.
அவன் மகிழ்ச்சியுடன், “அங்கிள் ஆரு ஓகே சொல்லிட்டாளா?” என்று வினவ,
“அதை நீயே போன் பண்ணி கேட்டுக்கோ… இப்போ உன்னோட அப்பா அம்மா எங்க வீட்டில் தான் இருக்கிறாங்க… உன்னோட சம்மதத்தை நீயே அவங்க கிட்ட சொல்லிடு” என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.
தந்தையைப் பற்றி அறிந்தவனாக அடுத்த நொடியே அன்னையை அழைத்தவன், “அம்மா எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்” என்றான் உற்சாகக் குரலில்.
நிவேதா, “சரி டா வீட்டுக்கு வந்து பேசுறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.
மகனின் குரலில் இருந்தே அவனும் ஆதிராவை விரும்புவதை புரிந்துக் கொண்ட நிவேதா புன்னகையுடன் மித்ராணியைப் பார்த்து, “மித்து சஞ்சய்க்கும் சம்மதம்” என்றார்.
“அப்போ 24ஆம் தேதியே இவங்க கல்யாணத்தையும் வச்சிப்போம்” என்ற புகழ்வேந்தன் அன்னை மற்றும் மாமியாரை பார்த்து, “நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்.
கமலா முகத்தைப் பார்த்த கலைவாணி மகனிடம், “எங்களுக்கும் அது சரியாத் தான் படுது… சதீஷ், வீட்டு பெரியவங்க கிட்ட பேசிட்டு சொல்லட்டும்” என்றார்.
“பாஸ் சொல்றது தான் மா” என்று அப்பொழுது தான் சதீஷ் வாய் திறந்தார்.
புகழ்வேந்தன் சதீஷ் தோளில் கை போட்டபடி மென்னகையுடன், “அப்புறம் சம்பந்தி… பொண்ணுக்கு சீரா என்ன எதிர் பார்க்கிறீங்க?” என்று கேட்டார்.
“பாஸ்!!!” என்று சதீஷ் அலற, அனைவரும் சிரித்துவிட்டனர்.
அதன் பிறகு கல்யாணத்தை உறுதி செய்துவிட்டு கிளம்பியவர்கள் தங்கள் வீட்டிற்கு சென்றதும் இரு வீட்டு பெரியவர்களிடமும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். சதீஷின் அன்னை மட்டும் தன்னைக் கேட்காமல் எப்படி முடிவு செய்யலாம் என்று எகிற, சதீஷ் ‘எதுவாக இருந்தாலும் பாஸ் கிட்ட கேட்டுக்கோ’ என்றதும் அவர் வாயை பசை போட்டது போல் மூடிக் கொண்டார்.
நிவேதா கணவரிடம், “உன் அம்மாக்கெல்லாம் எங்க அண்ணாவும், உன்னோட பாஸ்ஸும் தான் சரியான ஆள்” என்றார்.
சஞ்சய் மகிழ்ச்சியுடன் ஆதிராவை அழைக்க, அவளோ அவனது அழைப்பை எடுக்காததோடு மதிவர்மன் மூலம் ‘தன்னிடம் பேச முயற்சித்தால் கொன்று விடுவதாக’ தகவல் அனுப்பினாள்.
சஞ்சய் என்ன செய்து தன்னவளை மலை இறக்க என்ற தீவிர யோசனையில் மூழ்க,
புகழ்வேந்தன் எப்பொழுதும் போல் மித்ராணியை கொஞ்சியும் கெஞ்சியும் மலை இறக்க,
மதிவர்மனும் அபிசாராவும் தங்களுக்குள் நிகழ்ந்த முதல் சுமுகமான சந்திப்பை நினைத்துப் பார்த்தனர்.

Advertisement