Advertisement

சஞ்சய் விழி விரித்து நண்பனைப் பார்க்க, மதிவர்மன், “XXXXXXX அபிசாரா வண்டி நம்பர்… அவளைப் பற்றிய முழு விவரமும் எனக்கு வேணும்” என்றான்.
“டேய்!!! என்னடா? பார்த்ததும் காதலா?” 
மறுப்பாக தலை அசைத்தவன், “இது எங்களோட நாலாவது சந்திப்பு…. மோதலில் ஆரம்பித்து காதலில் கொண்டு வந்து விட்டிருக்குது” என்றான் கனவில் சஞ்சரித்தபடியே.
“வர்மா… இவ்ளோ வேகம் வேணாம் டா… அவ மனசில் என்ன இருக்குதுனு தெரியாம…” என்றவனின் பேச்சை இடையிட்ட மதிவர்மன், “முதல் ரெண்டு சந்திப்பிலும் என் மேல் அவளுக்கு கோபம் தான் என்றாலும், இன்னைக்கு அவ கண்ணிலும் அதே உணர்வை நான் பார்த்தேன் டா…” என்றான்.
நண்பனின் காதல் வெற்றிப் பெற வேண்டும் என்ற வேண்டுதலோடு தனக்குத் தெரிந்த துப்பறிவாளரை அழைத்த சஞ்சய் அபிசாராவின் பெயரையும் வண்டி எண்ணையும் கூறி அவளைப் பற்றிய விவரங்களை சேகரித்து தரக் கூறினான். 
பின் நண்பனை வம்பிழுக்கும் நோக்கத்துடன், “என்ன பண்ணி மிரட்டின டா! அந்த பொண்ணு இப்படி பயந்து போய் இருக்குது” என்று கேட்டான்.
“யாரு! அவ பயந்தவளா!” 
“நீ காட்டிய போட்டோவில் அப்படி தான் தெரியுது” 
“அதுவா!!!!” என்றவனின் உதடுகள் ரசனையுடன் கூடிய ரகசிய புன்னகையை உதிர்க்க, அவனது கைகளோ அவனையும் அறியாமல் கன்னத்தை வருடியது.
நண்பனை விசித்திரமாக பார்த்த சஞ்சய், “ரைட்டு முத்திப் போச்சு” என்றான்.
மதிவர்மன் புன்னகையுடன், “இதெல்லாம் சொன்னா புரியாது டா… அனுபவிக்கனும்” என்று ரசித்துக் கூறினான்.
“உன்னை கிட்ட வச்சிக்கிட்டு எங்கிருந்து நான் அனுபவிக்க! எல்லா பொண்ணுங்களும் உன்னைத் தான் பார்க்கிறாங்க” என்றான்.
வாய்விட்டு சிரித்த மதிவர்மன், “வா டா” என்றபடி அவனை அழைத்துச் சென்றான்.
த்துடன் நிகழ் காலத்திற்கு திரும்பியவனின் மனம் மீண்டும் அதே கேள்வியை தான் கேட்டது. ‘எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்க வேண்டியது! ஏன்டி அப்படி பேசின? என்னை எப்படிடி உன்னால தூக்கி போட்டுட்டு போக முடிஞ்சுது? உன் மேல அதிகமா கோபம் இருக்கிறப்ப கூட என்னால நீ இல்லாத வாழ்க்கையை நினைச்சுப் பார்க்க முடியலையே! ஆனா நீ!!!!!!!!’ என்று வாய்விட்டு கேட்டவனின் மனம் வலியில் கதறிய அளவிற்கு சரிசமமாக கோபத்திலும் தகித்தது.
அபிசாராவோ, ‘நான் செய்தது தப்பு தான்… அன்னைக்கு இருந்த மனநிலையில் என்ன செய்றேன்னு தெரியாம அப்படி பண்ணிட்டேன்… நீ இல்லாம எனக்கு வாழ்வே இல்லை மதி… ப்ளீஸ் என்னை வெறுத்துறாதடா’ என்று நிலவைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில் சஞ்சய், ‘என்னை மன்னிப்பியா ஆரு? உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்… அம் வெரி சாரி ஆரு… என்னை மன்னிக்கலைனாலும் வெறுத்துறாதடி ப்ளீஸ்’ என்று தன்னவளிடம் மானசீகமாக கெஞ்சிக் கொண்டிருந்தான்.
ஆதிராவோ, ‘என்னோட காதலை கொச்சை படுத்தி, என் கேரக்டரையே தப்பா பேசிட்டியே டா! உன் பின்னாடியே வந்ததால என்னோட அருமை உனக்கு தெரியலை டா… இனி நானா உன் கிட்ட வர மாட்டேன்’ என்று கூறிக் கொண்டவள் மீண்டும் தனது காதலுக்காக தானே இறங்கி போகப் போவதைப் பற்றி அறியவில்லை.
யாருக்கும் காத்திருக்காமல் அடுத்த நாள் அழகாக விடிந்தது. ஆனந்தன் அமுதாவின் சதாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. புகழ்வேந்தன் குடும்பத்தில் மதிவர்மனைத் தவிர அனைவரும் வந்திருந்தனர்.
புகழ்வேந்தன் ப்ரனேஷ் கையைப் பற்றி, “வர்மாக்கு ஒரு முக்கியமான மீட்டிங்… அதான் அவனால் வர முடியலை… சாரி” என்று கூற,
ப்ரனேஷ், “நேத்தே வர்மா சொன்னான்” 
“வர்மா பேசினானா?” 
“ஹ்ம்ம்… சாரி கேட்டான்… உன்னை மாதிரி ஒருமையில் தான் பேசணும்னு பாசத்தால் மிரட்டினான்” என்றார் புன்னகையுடன். புகழ்வேந்தனும் புன்னகைத்தார்.

 

அதே நேரத்தில் சற்று தள்ளி நின்ற அபிசாராவிடம், “அபி… ஸ்டில் அம் வெயிட்ங் பார் யூ” என்ற ப்ரனேஷின் நண்பன் மகன் அவள் சொல்ல வரதை கேட்காமல், “அந்த மதிவர்மன் கூட பிரேக்-அப் ஆகி தான் நாலு வருஷம் ஆகுதே! அப்புறம் என்ன? நான்…” என்று பேசிக் கொண்டே போனவனின் பேச்சை கையை நீட்டி நிறுத்தியவள் செய்கையால் பின்னால் திரும்பி பார்க்கச் சொன்னாள்.
திரும்பியவன் ருத்ரமூர்த்தியாக நின்றிருந்த மதிவர்மனைக் கண்டு அதிர்ச்சியுடனும் பயத்துடனும் இரண்டடி பின்னால் நகர்ந்தான். பின்னால் நகர்ந்தவன் அபிசாராவை லேசாக இடிக்கப் போக, சட்டென்று அவளை இழுத்து இடையோடு அணைத்த மதிவர்மன், “என்ன சொன்ன?” என்று கேட்டான்.
மதிவர்மனின் நெருக்கமும் தொடுகையும் அவளுள் உணர்வலையை எழுப்ப, அதையும் மீறி அவனது அதிரடியில் அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள்.
மதிவர்மன் சாதரணமாக கேட்டதே உறுமலாக அவனுக்குத் தோன்ற, அவன், “ஒன்..னு..ம் சொல்..ல..லை” என்று திணறினான்.
“இந்த நாலு வருஷத்தில் உனக்கு ரெண்டு பிரேக்-அப்னு கேள்விப் பட்டேனே!” என்று மதிவர்மன் நக்கலாகக் கூற,
“பை அபி…” என்றபடி அவன் கிளம்ப பார்க்க,
மதிவர்மன், “அபிசாரா” என்று அழுத்தத்துடன் கூறினான்.
அவனும், “பை அபிசாரா” என்றான்.
அடுத்து மதிவர்மன், “வர 24ஆம் தேதி எங்களுக்கு கல்யாணம்” என்றதும்,
சிறு அதிர்ச்சியுடன் அபிசாராவைப் பார்த்தவன், “கன்க்ராட்ஸ்” என்றுவிட்டு இடத்தை விட்டு வேகமாக அகன்றான்.
அவன் சென்றதும் சட்டென்று தனது கையை விலக்கியவன் அபிசாரா பக்கம் சிறிதும் திரும்பாமல் ப்ரனேஷை நோக்கிச் சென்றான். அவளது அருகாமை அவனது உணர்வுகளை தட்டி எழுப்பினாலும் வெளியே அவளது அருகாமை தன்னை பாதிக்காதது போல் நடந்துக் கொண்டான். அபிசாரா தான் உணர்வு போராட்டத்திலும், அவனது விலகலிலும் தவித்துப் போனாள்.
மதிவர்மனின் வருகையில் ஆதிரா, கலைவாணி மற்றும் கமலாவும் சிறிது அதிர்ச்சியடைய, புகழ்வேந்தனும் மித்ராணியும் அவனது வருகையை எதிர்பார்த்தது போல் மென்னகை புரிந்தனர்.
ப்ரனேஷ் ஆரவாரத்துடன் மதிவர்மனை வரவேற்க, அதை அவன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்.
பின், “மாமா இந்த தருணத்தில் எங்க கல்யாணத்தைப் பத்தி அறிவிக்கலாமே!” என்றவன் சற்று முன் அபிசாராவுடன் பேசியவனைப் பார்த்தபடி, “தேவை இல்லாத பேச்சைத் தவிர்க்கலாமே… அதான்” என்று சேர்த்துக் கூற, ப்ரனேஷ் சட்டென்று விஷயத்தை யூகித்தார்.
புன்னகையுடன், “கண்டிப்பா… முதலில் அப்பா அம்மாவை பார்க்கலாம் வா”  என்றபடி அவனை அழைத்துச் சென்ற ப்ரனேஷ் அபிசாராவையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
மேடை ஏறியதும் மதிவர்மன் பெரியவர்களின் காலை தொட்டு வணங்கி ஆசிர்வாதம் வாங்க, அபிசாராவும் அவனுடன் இணைந்து ஆசிர்வாதம் வாங்கினாள். இந்த காட்சியைக் கண்டு அனைவர் மனங்களும் மகிழ்ச்சியில் திளைத்தது.
ப்ரனேஷ் இருவரையும் தோளோடு அணைத்தபடி, “இந்த தருணத்தில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லப் போறேன்… வேந்தன் குரூப் மதிவர்மனுக்கும் என்னோட பெரிய பொண்ணு அபிசாராவுக்கும் வர 24ஆம் தேதி கல்யாணம் செய்ய முடிவு பண்ணி இருக்கிறோம்… இந்த விழாவுக்கு வந்தது போலவே இவங்க கல்யாணத்துக்கும் வந்து ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றார்.
அனைவரும் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க, ப்ரனேஷ், “தன்க் யூ… இவங்க கல்யாணத்தை உறுதி செய்ய, இப்போ ரெண்டு பேரும் மோதிரம் போடப் போறாங்க” என்றவர், “புகழ்… எல்லோரும் மேல வாங்க” என்றார்.
புகழ்வேந்தன் குடும்பத்தினர் மேடைக்கு வரவும், இனியமலர் இருவருக்குமான மோதிரத்துடன் வரவும் சரியாக இருந்தது.
இனியமலர் முதலில் அபிசாராவிடம் மோதிரத்தை கொடுத்தார். சற்று இறுகிய முகத்துடன் நின்றிருந்த மதிவர்மனைக் கண்ட அபிசாரா மெல்லிய குரலில், “மதி” என்று அழைத்தாள்.
அவளது அழைப்பில் இறுக்கம் சற்று தளர்ந்தவனாக அவளைப் பார்க்க, அவள் காதலுடன் பார்த்தபடி, “லவ் யூ ஸோ மச் மதி” என்று கூறியபடி மோதிரத்தை அணிவித்தாள். முதலில் மன்னிப்பைக் கேட்க நினைத்தவள் அந்த நொடியில் அவனது ரணத்தைக் கிளற விரும்பாமல் முதல் முறையாக தனது காதலைக் கூறினாள்.
அவள் நினைத்தது சரியே என்பது போல் அவனது இறுக்கம் முற்றிலுமாக தளர, அமைதியாக அவள் கையில் மோதிரம் அணிவித்தான். அவன் சிரிக்கவோ பதில் கூறவோ இல்லை என்ற வருத்தம் அவளுக்கு இருந்தாலும், அவன் கோபமும் இறுக்கமும் இல்லாமல் சாதாரணமாக இருந்ததே அவளுக்குப் பெரிதாகத் தோன்றியது.
புகழ்வேந்தன் ப்ரனேஷிடம், “கலக்குறியே! முன்னாடியே பிளான் பண்ணி இருந்தியா?” 
“இல்லை… வர்மா எப்படியும் வருவான்னு நம்பிக்கை இருந்தது. ரெண்டு பேருக்கும் அப்பா அம்மாவை போடச் சொல்லலாம்னு நேத்து தான் மோதிரம் வாங்கினேன்… வர்மாக்கு என்னோட நடு விரல் சைசில் வாங்கினேன்… சரியா தான் இருக்கும்னு நினைக்கிறேன்” 
“ஓ… இந்த இன்ஸ்டன்ட் எங்கேஜ்மென்ட் செம” 
“வர்மா தான் அனௌன்ஸ் பண்ணச் சொன்னான்” 
“பார் டா!” என்று கூறிய புகழ்வேந்தன், “மாமனார் மருமகன் கெமிஸ்ட்ரி செம்மையா இருக்குது போலவே!” என்று கூறி கண்ணடிக்க, ப்ரனேஷ் சத்தமாக சிரிக்க, அனைவர் பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியது.
புகழ்வேந்தன், “இப்போ எல்லோரும் நம்ம கெமிஸ்ட்ரி பத்தி பேசப் போறாங்க டா… கொஞ்சம் கம்மியா சிரி” என்றதும் ப்ரனேஷ் இன்னும் அதிகமாகத் தான் சிரித்தார்.
அபிசாரா மதிவர்மன் உட்பட அனைவரின் முகத்திலும் அழகான சிரிப்பு மலர்ந்தது.
விழா முடிந்து ஒவ்வொருவராக கிளம்ப, இறுதியாக புகழ்வேந்தன் குடும்பம் கிளம்பிக் கொண்டிருந்த பொழுது மதிவர்மன் ப்ரனேஷிடம் கண்காட்ட, அவர் புகழ்வேந்தனிடம், “புகழ்… என்னோட பிரெண்ட் அவனோட பொண்ணுக்கு உன்னோட பிரெண்ட் சதீஷோட பையனை பார்க்கிறான் போல… சஞ்சய் பத்தி கேட்டான்… நான் உன்னிடம் கேட்டு சொல்றேன்னு சொன்னேன்” என்றதும் புகழ்வேந்தன் மகளைத் தான் பார்த்தார்.

Advertisement