Advertisement

புகழ்வேந்தனின் RL கல்யாண மண்டபம் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. தெரு வாசலில் வண்ணக் கோலமிட்டிருக்க, வாழை கமுகு தோரணம் வரவேற்க, உள் வாசலில் பூக்கோலமிட்டு, வலதுபுறம் ‘மதிவர்மன் வெட்ஸ் அபிசாரா’ என்ற வாக்கியமும் ‘சஞ்சய் வெட்ஸ் ஆதிரா’ என்ற வாக்கியமும் ஒரு அட்டையில் பூ அலங்காரம் செய்யப் பட்டிருக்க, இடதுபுறம் குபேர பொம்மை கையில் இருந்து பன்னீர் தானாக தெளித்துக் கொண்டிருந்தது.
மண்டபத்தின் உள்ளே ஆங்காங்கே வண்ண வண்ண மலர்த் தோரணங்கள் தொங்க, இரு மண-மேடைகள் ஒன்று போல் மலர்களால் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது. மண்டபம் முழுவதும் மங்கள இசை முழங்க, உற்றார் உறவினர்களால் நிரம்பி வழிந்தது.
காலை 6-7.30 முகூர்த்தம் என்பதால் 5.30 மணியளவில் மூன்று வீட்டினரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
ஆம் இன்று மதிவர்மன் அபிசாராவிற்கு மட்டுமில்லை ஆதிரா சஞ்சய்க்கும் திருமணம்.
அன்று மதிவர்மன் சஞ்சய்யின் வண்டி சாவியை பெற்றுக் கொண்டு கிளம்பிய போது அவனைக் கண்ட புகழ்வேந்தன் புருவம் உயர்த்த, அவன், “சஞ்சயைப் பார்த்துட்டு வரேன்” என்று கூறி கிளம்ப எத்தனிக்க,
அவர், “ப்ரனேஷ் கிட்ட பேசிடு” என்றார்.
‘சரி’ என்பது போல் தலையை ஆட்டிவிட்டு வெளியேறினான்.
வண்டியைக் கிளப்பியதும் கைபேசியில் ப்ரனேஷை அழைத்தவன் அவர் அழைப்பை எடுத்ததும் ஊடலை மூலம் பேசத் தொடங்கினான்.
மதிவர்மன், “அங்கிள் மதிவர்மன் பேசுறேன்… படுத்துட்டீங்களா? டிஸ்டர்ப் பண்ணி இருந்தா சாரி” என்றான்.
ப்ரனேஷ், “டிஸ்டர்பன்ஸ் எல்லாம் இல்லை மாப்பிள்ளை… சொல்லுங்க” என்றார்.
“அங்கிள் மாப்பிள்ளையெல்லாம் வேணாம்… வர்மானு கூப்பிடுங்க” 
“நீங்களும் மாமானு கூப்பிடுங்க” 
“ஓகே மாமா… இந்த ‘ங்க’ கூட வேணாம்” 
“அது சரி வராது…” என்று அவர் இழுக்க,
அவனோ, “அதெல்லாம் வரும்… அப்பாவும் நீங்களும் ஒருமையில் தானே பேசிக்கிறீங்க! அப்பறம் என்ன?” 
“அது வேற, இது வேற” 
“எல்லாம் ஒன்னு தான்… மருமகனை மகனா நினைத்தால் ஒருமை தானா வரும்” 
‘அப்பாவை போல் மகன்’ என்று நினைத்த ப்ரனேஷ் மென்னகையுடன், “என்ன விஷயம் வர்மா?” என்று ஒருமையும் அல்லாது பன்மையும் அல்லாமல் பேசினார்.
அதை புரிந்துக் கொண்ட மதிவர்மன் மென்னகையுடன், “காலையில் நான் நடந்துகிட்ட முறைக்கு மன்னிப்பு கேட்கத் தான் போன் பண்ணேன்… என்னை மன்…” என்றவனின் பேச்சை இடையிட்ட ப்ரனேஷ், “மன்னிப்பெல்லாம் தேவையே இல்லை வர்மா… உங்க… உன்னோட மனநிலை எனக்குப் புரியுது… இங்கே யாரும் தப்பா நினைக்கலை… எதையும் பத்தி யோசிக்காம நாளைக்கு அப்பா அம்மா சதாபிஷேக விழாவுக்கு வா…” என்றார்.
தன்னை மன்னிப்பு கேட்க விடாத அவரது பெருந்தன்மையில் நெகிழ்ந்தவன், “தேங்க்ஸ் அ லாட் மாமா… யூ ஆர் சச் அ ஜெம்” என்றான்.
அவனது மனநிலையை புரிந்துக் கொண்ட ப்ரனேஷ் பேச்சை மாற்றும் விதமாக, “ஜெம்-னா ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி யா?” என்று வினவ,
வாய்விட்டு சிரித்த மதிவர்மன், “யூ ஆர் சான்ஸ்லெஸ் மாமா…” என்றான்.
அப்பொழுது வாகன ஒலியின் சத்தத்தைக் கேட்ட ப்ரனேஷ், “டிரைவ் பண்ணிட்டே பேசுறியா?” என்று கேட்டார்,
மதிவர்மன், “ஆமா” என்ற அடுத்த நொடி, “அப்போ நாளைக்கு பங்சனில் பேசிக்கலாம்… எப்பவும் டிரைவ் பண்ணும் போது பேசக் கூடாது” என்று அன்புக் கட்டளையிட்டார்.
“சரி மாமா” என்றதும், “சரி நாளைக்கு பங்சனில் பார்க்கலாம்…” என்றார்.
“பங்சன் வர ட்ரை பண்றேன் மாமா… நாளைக்கு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்குது” என்று அவன் நழுவப் பார்க்க,
அவர், “கண்டிப்பா வரணும்னு சொல்லலை, ஆனா வந்தா எல்லோரும் ரொம்ப சந்தோஷப் படுவோம்…” என்றார். 
“ட்ரை பண்றேன் மாமா” 
“ஓகே பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தார். 
அப்பொழுது அவனது விருந்தினர் மாளிகையும் வந்திருக்க, வண்டியை உள்ளே நிறுத்திவிட்டு நேராக மொட்டை மாடிக்குச் சென்றான்.
நிலவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய் தோளில் மதிவர்மன் கையை வைத்ததும் திரும்பிய சஞ்சய், “காரணம் ஏதும் கேட்காம நாம புதுசா ஆரம்பிச்சு இருக்கிற கனடா பிரான்ச் பொறுப்பை என்னிடம் தருவியா?” என்று கேட்டான்.
நண்பனைப் பார்த்த மதிவர்மன் நிதானமான குரலில், “தரேன், ஆனா ஆதியைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போ” என்றான்.
சஞ்சய் அதிர்ச்சியுடன் வார்த்தைகளின்றி நண்பனைப் பார்க்க,
மதிவர்மன் நண்பனின் தோளில் கைபோட்டபடி, “இன்னும் உன் வட்டத்தை விட்டு வெளியே வரலையா நீ?” என்றான்.
“வர்மா!” என்று அவன் இப்பொழுதும் பேச்சு வராமல் திணற,
மதிவர்மன், “நீ ஊரை விட்டு போய்ட்டா மட்டும் உன்னை காதலிச்சுட்டு வேறு ஒருவனை ஆதி கல்யாணம் பண்ணிப்பானு நினைக்கிறியா?” என்று கேட்டான்.
நண்பனின் கேள்வி ஆதிராவின் காதலின் ஆழத்தை எடுத்துரைக்க, அப்பொழுது தான் மற்றொரு கோணத்தில் யோசித்தவன் பார்வையைத் தாழ்த்தியபடி வேதனையுடன், “இனி சம்மதிப்பா” என்றான்.
“நீ ஆதியை புரிஞ்சுகிட்டது அவ்ளோ தானா?” 
சட்டென்று நிமிர்ந்து பார்த்தவன் வலியுடன், “இன்னைக்கு ரொம்ப காயப்படுத்திட்டேன் டா… அவ என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டா” 
“இப்பவும் நீ அவளைப் புரிஞ்சுக்கலை டா” என்றான் சற்று வருத்ததுடன்.
சஞ்சய் அவனைப் பார்க்கவும்,
மதிவர்மன், “கல்யாணத்தை தவிர்ப்பாளே தவிர, இன்னொருத்தனை ஒருநாளும் கல்யாணம் செய்ய மாட்டா” என்றான் உறுதியான குரலில். 
சஞ்சய், “நான் அவளை ரொம்பவே ஹர்ட் பண்ணிட்டேன்… ஆரு ஒரு பொக்கிஷம் டா… அவளுக்கு நான் தகுதியானவன் இல்லை டா” என்றான் கலங்கிய விழிகளுடன்.
நண்பனின் தோளை தட்டிக் கொடுத்த மதிவர்மன், “கொஞ்ச நாள் ஆறப் போடு… நான் இதுக்கு வழி செய்றேன்” என்றான்.
அதன் பிறகு வேறு சில பேச்சுக்களைப் பேசி நண்பனின் மனதை சற்று இளைப்பாற செய்த பின் நண்பனைப் படுக்க சொல்லிவிட்டு தானும் படுக்கச் சென்றான். இருவரின் மனதையும் அவர்களின் மனம் கவர்ந்தவர்களே நிறைந்து இருந்தார்கள்.
மதிவர்மனின் மனம் தன்னவளுடன் நிகழ்ந்த அடுத்த சந்திப்பை நினைத்துப் பார்த்தது.
ஒருநாள் பேரங்காடி சென்ற மதிவர்மன் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது வண்டியை நிறுத்திவிட்டு காலைத் தூக்கி இறங்கிய பொழுது, அவன் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பிய அபிசாரா கன்னத்தில் இவனது பூட்ஸ்ஸின் முனை உரசிச் சென்றது.
யார் என்று பார்க்காமலேயே இவன் அவசரமாக, “சாரி பார்க்கலை” என்றான்.
அபிசாரா இவனை முறைக்க, அவளை பார்த்ததும் இவன் இதழோர மென்னகையுடன், “கம்படிக்கும் இதுக்கும் சரியா போச்சு…” என்றான்.
அவள் முறைப்புடனே, “அல்ரெடி அதுக்கு கணக்கு சொன்னதா நியாபகம்” என்றாள்.
அவன் மென்னகையுடன், “அடிக்கும் உரசலுக்கும் தான் டேலி ஆகும்… முதல் சந்திப்பை டேலி பண்ண நீ வேணா எனக்கு ஒரு முத்தம் கொடுத்துடு” என்று கூறி கண்சிமிட்ட, அவள் கடுமையாக முறைத்துவிட்டுச் சென்றாள்.
அவனை கடுமையாக முறைத்தாலும் அதற்கேற்ற கோபம் தன் மனதினுள் இல்லாததை உணர்ந்த அபிசாரா சிறிது அதிர்ச்சி அடைந்தாள். இரண்டாவது சந்திப்பிற்குப் பிறகு அவ்வபோது மதிவர்மனின் முகம் அவளது மனக்கண்ணில் மின்னி மறைய, அவனது பார்வையும் உதட்டோர சிரிப்பும் தனது மனதை வசீகரித்த உண்மையை அறிந்து இருந்தாலும் அதைப் புறம் தள்ளி இருந்தவள் அதன் வீரியத்தை தற்போது முழுமையாக உணர்ந்து கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
மதிவர்மனோ உல்லாச மனநிலையில் தான் இருந்தான். எந்த பெண்ணிடமும் அசையாத தன் மனம் அபிசாராவிடம் சரிவதை உணர்ந்தே தான் இருந்தான். காதல் என்று உறுதி செய்வதற்கு முன்னான இந்த உணர்வு அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதனால் அவளைப் பற்றிய விவரங்களை சேகரிக்க அவன் நினைக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து அவன் மின்தூக்கியில் சென்ற போது அபிசாரா அவன் அருகில் நின்றிருந்தாள். முதலில் இருவருவே மற்றவரை கவனிக்கவில்லை. எதேர்ச்சையாக திரும்பிய இருவரின் பார்வையும் நேர்கோட்டில் சந்தித்த நொடி கூட்ட நெரிசலில் அபிசாரா மதிவர்மனை நோக்கி தள்ளப்பட, அவளது இதழ்கள் அவனது கன்னத்தில் பதிந்தது. அதிர்ச்சியுடன் பதறியபடி விலகியவள் நெரிசலில் விழப் போக, அவன் சட்டென்று அவளது இடையைத் தாங்கிப் பிடித்தான். பெரும் அதிர்ச்சியுடன் கண்களை விரித்தபடி அவள் அவனை நோக்க, அதில் வெகுவாகக் கவரப்பட்டவன்,
“கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
   கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ – கண்ணம்மா
   உன்மத்த மாகுதடீ..” என்று மெல்லியக் குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி பாடியபடி அவளை நேராக நிற்க வைத்தான். அப்பொழுது மின்தூக்கி நிற்கவும், எந்த தளம் என்பதை கூட ஆராயாமல் ஆபிசரா அவசரமாக வெளியேறி இருந்தாள்.
அவசரமாக அவள் பின்னால் வெளியேறிய மதிவர்மன், “சாரா” என்று அழைத்தான்.
அவள் தன்னையும் அறியாமல் பதற்றத்துடனே திரும்பிப் பார்க்க, அவள் அறியாமல் தனது கைபேசியில் அவளைப் புகைப்படம் எடுத்தவன் மென்னகையுடன், “ஜஸ்ட் ரிலாக்ஸ்… நான் எதுவும் தப்பா நினைச்சுக்கலை” என்றான்.
சற்று பதற்றம் குறைந்தவள் ‘சரி’ என்பது போல் தலை அசைத்து அவ்விடத்தை விட்டு அகன்று வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.
“இங்க என்ன டா பண்ணிட்டு இருக்கிற?” என்றபடி சஞ்சய் வர,
மென்னகையுடன் தனது கைபேசியை அவனிடம் காட்டியவன், “சாரா… உன்னோட வருங்கால பாஸ்” என்றபோது அவனது கண்ணிலும் குரலிலும் காதல் நிரம்பி வழிந்தது.

Advertisement