Advertisement

ஆதிரா அறையினுள் அவள் முன் நின்றிருந்த மதிவர்மன், “உனக்கும் சஞ்சய்க்கும் என்ன பிரச்சனை?” என்று கேட்டான். 
“அவனைப் பற்றி என் கிட்ட பேசாத” என்றாள் கோபக் குரலில்.
“என்னாச்சு?” 
“இதை கேட்கத் தான் வந்தியா?” 
“ஹ்ம்ம்” 
“நான் அவனைப் பற்றி பேச விரும்பலை… வேற எதுவும் இருந்தா பேசு இல்லை கிளம்பு” என்றாள் கறார் குரலில்.
அவள் அருகில் அமர்ந்தவன், “இன்னைக்கு பங்சன் எப்படி போச்சு?” என்று பேச்சை மாற்றினான். 
“நல்லா போச்சு, பட் அனு இல்லாம எனக்குத் தான் போர் அடிச்சுது… அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்”
“உன் பிரெண்ட் ஏன் வரலை?” 
“நாளைக்கு வீட்டில் பங்சன் வச்சிட்டு எப்படி வருவா?” என்றவள், “எனக்கு ஒரு சந்தேகம்” என்றாள்.
“என்ன?” 
“உண்மையைச் சொல்லணும்” 
“நான் எப்போ பொய் சொல்லி இருக்கிறேன்?” 
“நீ பொய் சொன்னதா நான் சொல்லலையே!” 
“நீ சொன்னதுக்கு வேற என்ன அர்த்தம்?” 
“பொய்யும் இல்லாம உண்மையும் இல்லாம ஒரு பதிலைச் சொல்லக் கூடாதுனு உண்மையைச் சொல்லுனு முதல்லேயே சொல்றேன்” 
அவன் உதட்டோர மென்னகையுடன், “என்ன தெரிஞ்சுக்கணும்?” 
“அனு மேல் உனக்கு இருக்கும் கோபம் அவ உன்னிடம் ப்ரொபோஸ் பண்ணதுக்காக இல்லை தானே?” 
“ஏன் இந்த சந்தேகம்?” 
அவள் முறைப்புடன், “கேள்வி கேட்காம உண்மையான பதிலைச் சொல்லு” என்றாள். 
“ஈர்ப்புக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாம, நான் சொன்னதையும் புரிஞ்சுக்காம திரும்பத் திரும்ப ப்ரொபோஸ் பண்ணதால் தான் அவ மேல எனக்கு கோபம்…” 
“அதுக்காக இவ்ளோ கோபமா? அதுவும் பார்க்கிற நேரம் எல்லாம் எப்படி முறைக்கிற!” 
“என் கோபம் தான் அவளை விலக்கி வைக்கும்னு கொஞ்சம் அதிகமான கோபத்தைக் காட்டினேன்… அண்ட் அவளைப் பார்க்கும் போது நான் மறக்க நினைக்கிற விஷயம் நினைவிற்கு வரதாலும் அவளை அவாயிட் பண்ணேன்” 
“நீ மறக்க நினைத்த விஷயம் அபி அண்ணியா?” 
உணர்ச்சியற்ற முகத்துடன், “என் உயிரில் கலந்தவளின் நினைவு என் உயிர் போனாலும் என் ஆன்மாவில் கலந்து இருக்கும்” என்றான்.
தமையனின் காதலின் ஆழத்தைக் கண்டு பிரம்மித்தவள், “அப்பறம் ஏன் இந்த பிரிவு?” என்று கேட்டாள். 
அவன் தோள்களைக் குலுக்கவும், அவனைப் பற்றி அறிந்தவளாக அதைப் பற்றி மேலும் கேட்காமல், “அண்ணி உன்னை விட்டு பிரிஞ்சதுக்காக அனு மேல் உனக்கு கோபம் இல்லையா?” என்று கேட்டாள். 
“சாரா என்னை விட்டு போனதுக்கு, அனன்யா மேல் ஏன் நான் கோபப் படனும்?” என்று அவன் நிதானமாக வினவ, 
“அப்போ உங்க பிரிவுக்கு அனு காரணம் இல்லையா?” என்று சிறு அதிர்ச்சியுடன் கேட்டாள். 
“பிரியனும் நினைத்து விலகியது சாரா தான், ஆனா நான் நினைத்து இருந்தால் அவளை என்னை விட்டு விலக விட்டிருக்க மாட்டேன்… இது நானா ஏற்படுத்திக்கிட்ட பிரிவு… ஸோ உன் பிரெண்டை குற்ற உணர்ச்சி இல்லாம இருக்கச் சொல்லு” 
“நீ என்னைக் குழப்புற” 
“என்ன நடந்துதுன்னு உன் பிரெண்ட் கிட்ட கேளு” 
“ஏன் அதை நீயே சொல்றது தானே!”
“என்ன நடந்துதுனு எனக்குத் தெரியாது, ஆனா எங்க பிரிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது உன் பிரெண்ட் தான்னு நான் யூகித்தேன்…” 
“ஸோ… நான் என்ன நடந்ததுன்னு கேட்டு, உன் கிட்ட சொல்லணுமா?” 
“ஏன் எனக்கு வாய் இல்லையா?” 
அவள் அவனை முறைக்க, அவனோ அலட்டிக் கொல்லாமல், “உனக்கு தெரிஞ்சுக்கணும்னு நினைத்தால் உன் பிரெண்ட் கிட்ட கேட்டு தெரிஞ்சுகோ… பட் எனக்கு அது தேவை இல்லை… அண்ட் எனக்கு எது வேணும் வேண்டாம்னு தீர்மானிப்பது நானாக மட்டுமே இருப்பேன், ஸோ அதைத் தெரிந்து ஆகப் போறது எதுவும் இல்லை…” 
“அபி அண்ணி ரொம்ப பீல் பண்றாங்க” 
“இதை விடு… உனக்கும் சஞ்சய்க்கும் என்ன பிரச்சனை?” 
“அவனைப் பற்றி பேசாதேனு சொன்னேன்” என்று சற்று கோபமாகவே கூறியவள், “உனக்கு தெரிஞ்சுக்கணும்னு நினைத்தால் உன் பிரெண்ட் கிட்ட கேட்டு தெரிஞ்சுகோ” என்று அவன் கூறியதையே கூறினாள். 
அவன் உதட்டோர மென்னகையுடன், “நான் சஞ்சய் கிட்ட கேட்டுக்கிறேன்” என்றான்.
தோள்களைக் குலுக்கியவள், “எதிர்விசை தான் ஈர்க்கும்னு சொல்றது போல், ரொம்ப சாப்ட்டான அபி அண்ணியை உனக்கு பிடிச்சிருச்சோ?” என்று கேட்டதும் அவன் வாய்விட்டு சிரித்தான்.
“இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிற?” 
“நீ சொன்ன ஜோக்கைக் கேட்டதும் சிரிப்பு வந்திருச்சு” 
அவள் முறைக்கவும், அவன் மென்னகையுடன், “உன் அண்ணி பத்தி உன் பிரெண்ட் கிட்ட கேளு… இப்போ நான் இடத்தை காலி பண்றேன்” என்றபடி அவன் எழ, 
“ரொம்ப தான்… போடா” என்று உதட்டை சுழித்தாள்.
மதிவர்மன் சென்றதும் மீண்டும் சஞ்சயின் நினைவுகள் அவளை ஆக்கிரமிக்க, தலையை உலுக்கிக் கொண்டு அனன்யாவை கைபேசியில் அழைத்தாள். ஆனால் அனன்யா அந்த அழைப்பை எடுக்கவில்லை. எங்கே அன்னைத் தன்னை வெறுத்துவிடுவாரோ என்ற கவலையிலும் குற்ற உணர்ச்சியிலும் தத்தளித்துக் கொண்டிருந்த அனன்யா கைபேசியை ‘சைலென்ட் மோட்’-ல் போட்டிருந்தாள்.

 

தனது அறைக்குச் சென்றதும், ‘நீ சாப்ட்-டா?’ என்று மானசீகமாக தன்னவளிடம் கேட்டுக் கொண்ட மதிவர்மனின் மனம் தன்னவளுடன் நிகழ்ந்த இரண்டாவது சந்திப்பை அசை போட்டது…         
ரு ஞாயிறு அன்று தோழி வீட்டிற்குச் சென்றிருந்த அபிசாரா தெரு வாசலில் நின்றபடி தோழி வீட்டினுள் இருந்த முருங்கை மரத்தில் இருந்த முருங்கைக் காய்களை துரட்டிக் கம்பை வைத்து பறித்துக் கொண்டிருந்தாள்.
அவளது தோழி, “உனக்கு ஏன்டி இந்த வேலை?” என்று வினவ, 
“எவ்ளோ இன்ட்ரெஸ்டிங்கா இருக்குது! இது தான் முதல் முறை முருங்கைக் காயை மரத்தில் இருந்து பறிக்கிறேன்… ரியலி எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குது” என்று உற்சாகத்துடன் கூறியபடி அபிசாரா காயை பறித்துக் கொண்டிருந்தாள்.
“என்னவோ போ” என்ற அவளது தோழி ஐந்து நிமிடங்கள் கழித்து, “போதும்டி வா” என்று அழைத்தாள்.
“இருடி… இன்னும் ரெண்டே ரெண்டு பறிச்சுட்டு வரேன்” என்றபடி பின்னால் சென்றவள் “ஏய்!!! ஆ!” என்ற சத்தத்தில் திரும்பிப் பார்க்க, இரு சக்கர வண்டியில் வந்துக் கொண்டிருந்த இளைஞன் சரிந்த நிலையில் இருந்த வண்டியைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான்.
அதைக் கண்டு அபிசாரா அமைதியாக நிற்க, அவளது தோழி தான், “அய்யோ! சாரி சார்… கம்பு தெரியாம பட்டிருச்சு… அடி பட்டிருச்சா?” என்று பதறினாள்.
அபிசாரா காயைப் பறிப்பதற்காக கம்பை வேகமாக பின்னால் இழுத்தப் போது, அந்த இளைஞன் முகத்தில் தலைக் கவசம் மறைக்காத கன்னப் பகுதியில் கம்பு பட்டு விட, அவன் தடுமாறியபடி வண்டியைப் பக்கத்தில் இருந்த விளக்குக் கம்பத்தில் லேசாக மோதி இருந்தான்.
அவன் அபிசாராவை முறைத்தபடி, “பார்த்து பண்ண மாட்டியா?” என்று சீறினான்.
‘பார்த்ததால் தானே இப்படி பண்ணேன்’ என்று மனதினுள் கூறிக் கொண்ட அபிசாரா அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்து, “நான் தான் பார்க்கலை… நீ அங்கிருந்து பார்த்துட்டேத் தானே வந்திருப்ப! நீ தள்ளிப் போயிருக்க வேண்டியது தானே!” என்றாள்.
தோழி யோசனையுடன் இவளைப் பார்க்க, இவள் தோழி பக்கம் திரும்பவே இல்லை.
“தள்ளிப் போனதால் தான் லேசான அடியோட தப்பிச்சேன்…” என்றவன் அடுத்து கோபத்துடன் பேசும் முன் அபிசாராவின் தோழி, “சார்!! நீங்களா?” என்றாள் உற்சாக குரலில்.
அவன் யோசனையுடன் அவளைப் பார்க்க, அவள், “ஹெல்மெட் போட்டிருந்ததால் சட்டுன்னு அடையாளம் தெரியலை… என்னை ஞாபகம் இல்லையா சார்? ரெண்டு நாள் முன்னாடி xxx பஸ் ஸ்டாண்டில்…” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
“யா! ஞாபகம் இருக்குது… அவன்க திரும்ப பிரச்சனைப் பண்ணலைத் தானே?” என்று வினவினான்.
“இல்லை சார்… உங்க அடியில் இருந்து எழுந்து வரவே அவன்களுக்கு குறைந்தது ஒரு மாசம் ஆகும்” என்றவள் அபிசாராவைப் பார்த்து, “அன்னைக்கு அந்த அருள் கேங் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தியது சார் தான்” என்றதும் அபிசாரா சிறிது நம்பாத பார்வையை அவன் மீது செலுத்தினாள்.
அபிசாராவின் எண்ணம் புரிந்தது போல் அவன் உதட்டை லேசாக வளைத்து சிறிதாக தோளைக் குலுக்கினான்.
அபிசாராவின் தோழி அவனைப் பார்த்து, “அன்னைக்கு பதற்றத்தில் உங்க பெயர் கூட கேட்கலை… சாரி சார்…” 
அவன் மென்னகையுடன், “இட்’ஸ் ஓகே… என்னோட பெயர் மதிவர்மன்” என்றான். 
அவள், “என்னோட பெயர் தாரா” என்றதும் மென்னகைத்தவன் அபிசாராவை பார்த்து, “இவங்க?” என்று இழுத்து நிறுத்தினான்.
“இவ என்னோட பிரெண்ட் அபிசாரா” என்றவள், “வீட்டுக்கு வாங்களேன் சார்” என்று அழைத்தாள்.
“இல்லைக் கொஞ்சம் வேலை இருக்குது” 
“ஓ” என்றவள், “ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ண முடியுமா சார்? என் பரென்ட்ஸ் உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க… உள்ளே போய் கூட்டிட்டு வந்திருறேன்” 
“இன்னொரு நாள்…” என்றவனின் பேச்சை இடையிட்டு, “ப்ளீஸ் சார்… ப்ளீஸ்… இதோ வந்திருறேன்” என்று அவசர அவசரமாக கூறியவள் அபிசாராவை பார்த்து, “பேசிட்டு இருடி… வந்துறேன்” என்றுவிட்டு இருவர் பதிலையும் எதிர்பார்க்காமல் உள்ளே ஓடினாள்.
அவள் உள்ளே சென்றதும் அழுத்தமான பார்வையுடன் அபிசாராவைப் பார்த்த மதிவர்மன், “அன்னைக்கு கல்லடியில் இருந்து தப்பிச்சதுக்காக இன்னைக்கு கம்படி… ரைட்!” என்று வினவ, அவள் தோள்களைக் குலுக்கினாள்.
அவன் உதட்டோர புன்னகையுடன், “ஸோ, என்னை உன்னால் மறக்க முடியலை” என்றான்,
அவள் முறைக்கவும், அவன், “ஐ மீன் என் முகம் உனக்கு நல்லாவே ஞாபகம் இருக்குது!” 
அவள் அலட்சியத்துடன், “ஹெல்மெட்டுக்குள் இருக்கும் உன் முகம் எப்படி இருக்கும்னு கூட எனக்குத் தெரியாது… உன் வண்டியும், வண்டி நம்பரும் தான் ஞாபகத்தில் இருக்குது” என்றாள். 
‘அப்படியா!’ என்பது போல் நம்பாத பாவனையில் புருவம் உயர்த்தியவன், “ஒருவேளை என் வண்டியில் என் நண்பன் வந்திருந்தால்?” என்று வினவினான்.
அவள் அதே அலட்சியத்துடன், “உன் நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக அவனுக்கு இந்த அடி கிடைத்து இருக்கும்” என்றதும் அவன் வாய்விட்டு சிரித்தான்.
அவள் அவனை விசித்திரமாக பார்க்க, அவன் ஹெல்மெட்டை கழட்டியபடி, “இனி என் வண்டி மட்டுமில்லை என் முகமும் உன் ஞாபகத்தில் இருக்கும்” என்றான்.
“தேவை இல்லாததை நான் ஞாபகத்தில் வச்சிக்கிறது இல்லை” 
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “இப்போ அறிவை மறைக்கிற அளவிற்கு என் மேல் கோபம் இல்லைனு நினைக்கிறேன்… ஸோ கொஞ்சம் யோசிச்சுப் பாரு… நிஜமாவே அன்னைக்கு போனில் பேசிட்டு இருந்த என் அம்மாக்குத் தான் முத்தம் கொடுத்தேன்” என்றான்.
அவள் கைகளை கட்டியபடி அவனை ஆழ்ந்து நோக்க, அவன், “என்ன?” 
“கிளம்பும் போது என்ன பண்ண?” 
“அது நீ என்னை அடிச்சதோடு…” என்றவனின் பேச்சை இடையிட்டவள், “உன்னோட ஹெல்மெட்டைத் தான் அடிச்சேன்” என்றாள்.
“உன்னோட அடி ஹெல்மெட்டில் பட்டாலும் நீ என்னைத் தானே அடிச்ச! அண்ட் நான் செய்யாதை திரும்பத் திரும்ப செய்ததா சொல்லவும் தான் அப்படி செய்தேன்” என்றவன், “எனிவே நான் கொடுத்த முத்தத்துக்கும் இப்போ நீ கொடுத்த அடிக்கும் சரியா போச்சு” என்றான் தோளைக் குலுக்கியபடி.
அவள் அவனை முறைக்கவும் அவளைச் சீண்டிப் பார்க்க நினைத்தவன் உதட்டோர புன்னகையுடன், “உன்னோட தைரியம் எனக்கு பிடிச்சிருக்குது” என்று கூறி கண் சிமிட்டினான்.
அபிசாரா கோபத்துடன் பேச வாய் திறக்கப் போகையில் அவளது தோழி பெற்றோருடன் வரவும் இவர்கள் பேச்சு தடைப்பட்டது.
மதிவர்மனின் கண்கள் மட்டும் இவளைப் பார்த்து சிரிக்க, இவள் அவனை முறைத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அன்று வீட்டிற்கு சென்ற பிறகு நிதானமாக யோசித்தப் போது தன்னிடம் விரசமில்லாத கண்ணிய பார்வையுடன் அவன் பேசியதை யோசித்து பார்த்தவள் மனதினுள் ‘ஒருவேளை அவன் சொன்ன மாதிரி நிஜமாவே அம்மாக்குத் தான் முத்தம் கொடுத்து இருப்பானோ!’ என்ற எண்ணம் தோன்றினாலும், அவன் இறுதியாக பறக்கும் முத்தம் கொடுத்ததும், நக்கலாக சிரித்ததும் நினைவிற்கு வந்ததும் அவன் மீது கோபம் தான் வந்தது. அதன் விளைவே இன்று அவனை தாக்கியது.
தோழி ‘போதும்’ என்று கூறி வீட்டிற்குள் செல்ல அழைத்ததும், உள்ளே செல்ல நினைத்தவளின் கண்ணில் மதிவர்மன் விழ, நொடி பொழுதில் அவனை தாக்கும் திட்டத்தை தீட்டினாள். அவன் அருகே வந்ததும் வேண்டுமென்றே சட்டென்று பின்னால் நகர்ந்து வேகமாக கம்பை பின்னால் இழுத்து அவன் முகத்தில் தாக்கி இருந்தாள்.
அபிசாரா தோழியின் அன்னை கை கூப்பியபடி, “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று கூற,
தோழியின் தந்தை மதிவர்மன் கையை பற்றியபடி, “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்… நீங்க செய்த உதவிக்கு நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறேன்” என்றார். 
“பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க சார்… நான் பெருசா எதுவும் செய்யலை” 
“இது உங்க பெருந்தன்மை… வீட்டுக்குள்ள வாங்களேன் சார்… ஒரு கப் காபி குடிச்சுட்டுப் போகலாமே!” 
“சாரி சார்… இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்… இப்போ எனக்கு வேலை இருக்குது… தப்பா நினைச்சுக்காதீங்க” 
“இன்னொரு நாள் கண்டிப்பா வரனும்” 
“சூர்” என்றவன் சிறு தலை அசைப்புடன் கிளம்பினான். கிளம்பும் முன் மற்றவர்கள் அறியாமல் அபிசாராவை பார்த்து கண்ணடித்துவிட்டே கிளம்பினான். அவள் கோபத்துடன் அவனை முறைக்க, அதை கண்ணாடி வழியாக பார்த்தவனின் உதட்டோரம் இந்த முறையும் புன்னகை அரும்பியது.
கைபேசியின் அலறலில் நிகழ் காலத்திற்கு திரும்பிய மதிவர்மன் கைபேசியை எடுத்துப் பார்த்தான். அழைத்தது சஞ்சய்.
யோசனையுடன் அழைப்பை எடுத்தவன், “சொல்லு டா” என்றான்.
“உடனே உன்னோட கெஸ்ட் ஹௌஸ் வா” 
“எதுக்கு டா?” 
“நீ நேரில் வா சொல்றேன்” 
“இப்போ தான் டா அங்க இருந்து வீட்டுக்கு வந்தேன்” 
“பரவா இல்லை… கிளம்பி வா” 
“டேய்” 
“ப்ச்… இப்போ உன்னால வர முடியுமா முடியாதா?” என்று சஞ்சய் எரிச்சல் கலந்த குரலில் வினவ,
அவன் குரலில் மறைந்திருந்த தவிப்பைக் கண்டுக் கொண்ட மதிவர்மன், “வரேன்… நீ எங்க இருக்க?” என்று கேட்டான். 
“கெஸ்ட் ஹௌஸ் மொட்ட மாடியில்” 
“பதினைந்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன்” 
“என் வண்டியில் வா” 
“என்ன டா சொல்ற?” 
“என்னோட கார் அங்க தான் இருக்குது” 
“சரி” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் மீண்டும் தங்கை அறைக்குச் சென்றான்.
அவள், “என்ன?” 
“சஞ்சய் வண்டி சாவி” என்றபடி கையை நீட்டினான்.
அவள் அமைதியாக அதை அவனிடம் கொடுக்கவும் அவனும் கிளம்பினான்.
ஆதிரா கைபேசியில் பாடல்களை கேட்டபடி தனது மனதை சமநிலைக்கு கொண்டு வர முயற்சித்தாள்.
அங்கே சஞ்சய் ஆதிராவைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
ஆதிராவின் இதழ் அணைப்பில் லயித்து இருந்தவன் அவள் விலகியதும் மானசீகமாக தன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.
ஆதிரா மென்னகையுடன், “இப்போ என்ன சொல்ற?” என்று கேட்டாள்.
அவள் முகத்தை பார்க்காமல் அவன் சிறு தடுமாற்றத்துடன், “இல்லை… இது ஏதோ உணர்ச்சி வேகத்தில்…” என்றவனின் பேச்சை இடையிட்டவள், “என் முகத்தை பார்த்துப் பேசு” என்றாள்.
அவள் முகத்தை பார்த்தவனின் கண்கள் அவள் இதழ்களைப் பார்க்கத் துடிக்க, கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்தியவன், “இப்போ நடந்ததை மறந்துடு… இது காதல் இல்லை… வெறும் உணர்ச்சி வேகத்தில் நடந்தது… உன் இடத்தில் வேற பொண்ணு இருந்து இருந்தாலும் உணர்ச்சி வேகத்தில் இப்படி தான் நடந்து இருப்பேன்… நான் உணர்ச்சிவசப்பட்டு, அந்த மயக்கத்தில் சம்மதம் சொல்லணும் தான் நீ இப்படி நடந்துக்…” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் கன்னத்தில் அறைந்தவள் பெண் சிங்கமாக மாறி, “நீ என்ன டா சொல்றது! நான் சொல்றேன்… இனி என் முகத்திலேயே முழிக்காத… இறங்கு டா கீழ” என்று உறுமினாள்.
அவளது கோபத்திலும் அறையிலும் அவன் அதிர்ச்சியுடன் அமர்ந்திருக்க, அவனைத் தொடாமல் அவன் பக்கம் இருந்த கதவைத் திறந்து அவனை வெளியே தள்ளிவிட்டு கதவை ஓங்கி சாற்றியவளின் கையில் வண்டி சீறிப் பாய்ந்தது.
சில நிமிடங்கள் கழித்தே சுயத்திற்கு வந்த சஞ்சய் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் நண்பனின் விருந்தினர் மாளிகைக்கு வந்தான். அதன் பிறகு ஒரு முடிவிற்கு வந்தவனாக நண்பனை கைபேசியில் அழைத்து இங்கே வரச் சொன்னான்.

                    நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement