Advertisement

மித்ராணி மென்னகையுடன் அவன் தலையை வருடியபடி, “உங்களுக்குள் என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியாது, ஆனா அபி ஏதோ தப்பு பண்ணியிருக்கானு புரியுது… அண்ட் அந்த தப்பை நினைச்சு அபி ரொம்பவே வருத்தப்படுறா… காலம் ஒரு சிறந்த மருந்து… கொஞ்ச நாள் ஆறப்போடு, எல்லாம் சரியாகும்” என்றார்.
சட்டென்று எழுந்து அமர்ந்தவன் அவரைப் பார்த்து, “நாலு வருஷம் ஆகியும் என் மனதின் கொதிப்பு அடங்கலையே! சொல்லப் போனா, வலியும் கொதிப்பும் கூடித் தான் இருக்குது” என்றான். 
மித்ராணி அமைதியான குரலில், “உன்னோட காதலும் கூடி தானே இருக்குது?” என்று வினவ, அவன் அமைதியாக இருந்தான்.
அவர், “உன்னோட காயத்துக்கு மருந்து தான் இந்த கல்யாணம்” 
மறுப்பாக தலை அசைத்தவன், “எனக்கு அப்படி தோணலை” என்றான். 
“அபியோட அருகாமை நிச்சயம் உன் மனதை அமைதிபடுத்தும்” 
“ஆனா சாரா மனதை என் கோபம் காயப்படுத்துமே!” என்று கண்ணில் வலியுடன் கூறினான்.
ஒரு நொடி மௌனித்த மித்ராணி சிறு பெருமூச்சை வெளியிட்டபடி, “உப்பை தின்றால் தண்ணி குடித்துத் தானே ஆகணும்!” என்றார்.
பின் அவனது கன்னத்தை தட்டி, “அபிக்காக பார்க்கிற உன் மனசு அவளை அதிகம் காயப்படுத்தாது” என்றார்.
வரவழைத்த புன்னகையுடன் அவன், “ஆல்ரைட்… பார்க்கலாம்” என்றான்.
அவரும் புன்னகையுடன், “பீலிங் பெட்டெர்?” என்று கேட்டார். 
அவன் இயல்பான மென்னகையுடன், “யூ ஹவ் சம் மேஜிக் மாம்… லவ் யூ மாம்” என்று கூறி அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
அவர் விரிந்த புன்னகையுடன், “லவ் யூ டூ” என்று கூறி அவன் நெற்றியில் முத்தம் கொடுத்தார்.
அப்பொழுது உள்ளே வந்த புகழ்வேந்தன் மகன் அறியாமல் மித்ராணியைப் பார்த்து செல்லமாக முறைக்க, மித்ராணி இதழோரம் ரகசிய புன்னகை அரும்பியது.
புகழ்வேந்தன், “அம்மாவும் பையனும் தனியா கொஞ்சி முடிச்சாச்சா?” என்று வினவ,
வாய்விட்டு சிரித்த மதிவர்மன், “அம்மா உன்னோட டார்லிங்கு என் மேல் பொறாமை” என்றான்.
புகழ்வேந்தன், “டேய்!!” என்று சிரிக்க,
மித்ராணி ‘மகன் முன்னாடி மானத்தை வாங்குறியே!’ என்பது போல் அவரைப் பார்த்து முறைத்தார்.
புகழ்வேந்தானோ அசராமல் மகன் கவனம் தன்னிடமில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு மித்ராணியை பார்த்து கண்சிமிட்ட, அவர் இப்பொழுது வெளிப்படையாக முறைத்தார்.
புகழ்வேந்தன் அறியாதவர் போல், “நாளைக்குப் போறதை பத்தி சொல்லிட்டியா?” என்று பேச்சை மாற்றினார்.
மதிவர்மன் சட்டென்று விஷயத்தை யூகித்தவனாக, “சாரா பாட்டி தாத்தா சதாபிஷேக பங்சனுக்கு நான் வரலை” என்றான். 
அவனது கூற்றில் இருந்தே அவன் அபிசாராவை விட்டு சிறிதும் விலகவில்லை என்பதை புரிந்துக் கொண்ட பெற்றோர்கள் அவனது காதலின் ஆழத்தை கண்டு நிம்மதி அடைந்தனர். முன்பே ஆதிரா இந்த விழாவைப் பற்றி வீட்டில் பேசி இருந்தாலும், அந்த நேரத்தில் மதிவர்மன் வீட்டில் இல்லை. இருப்பினும் இந்த விழாவை பற்றி அவன் கூறியதில் இருந்தே அவன் அபிசாராவை நிழல் போல் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டனர்.
புகழ்வேந்தன் அவனிடம் விளையாடி பார்க்க, “நாளைக்கு இவனிங் மிஸ்டர் ஸ்டீபன் பேத்தி பஸ்ட் பர்த்-டே பங்சனுக்கு போறதைப் பத்தி பேசினேன்” என்று கூறவும், அவர் முகத்தைப் பார்த்து அவர் விளையாடுவதை கண்டுகொண்டவன் செல்லமாக முறைத்தான்.
புகழவேந்தன் மென்னகையுடன் அவன் தோளைத் தட்டி, “நாங்க எல்லோரும் போறோம்… உன்னை நாங்க போர்ஸ் பண்ணலை, பட் நீ வந்தால் அபி வீட்டிலுமே எல்லோரும் சந்தோஷப்படுவாங்க” என்றார்.
அவன் பதில் கூறாமல், “ஆதி எங்க?” என்று பேச்சை மாற்றினான்.
அவன் பேச்சை மாற்றுவதை புரிந்துக் கொண்டவர்கள் அதைப் பற்றி பேசவில்லை.
மித்ராணி, “அவ பிரெண்ட் சுதாவோட என்கேஜ்மென்ட்க்கு போயிருக்கா” 
“அவ கார் வந்திருச்சா?” 
“ஆதி கிளம்பி போனதுக்கு அப்பறம் தான் கார் வந்துது… சஞ்சய் அவளைக் கூட்டிட்டு வந்திருவான்” என்று புகழ்வேந்தன் கூற,
“ஹ்ம்ம்” என்றவனுக்கு அப்பொழுது தான் சஞ்சய் பற்றி தங்கையிடம் பேச வேண்டும் என்ற விஷயம் நினைவிற்கு வந்தது.
தே நேரத்தில் ஆதிராவை தனது மகிழுந்தில் அழைத்து வந்துக் கொண்டிருந்த சஞ்சய் வண்டியினுள் நிலவிய அமைதியை உடைக்கும் பொருட்டு தன் அருகில் அமர்ந்திருந்தவளை, “ஆதி” என்று அழைத்தான்.
அவளோ அதைக் கண்டுக்கொள்ளவே இல்லை.
‘குடும்பமே அழுத்தத்துக்கு பிறந்ததுங்க’ என்று மனதினுள் நினைத்தவன், “ரொம்ப பண்ணாத குரங்கு” என்றதும் சட்டென்று திரும்பி அவனை முறைத்தாள்.
ஆனால் அவள் திரும்புகிறாள் என்றதும் இவன் தனது பார்வையை வேறு பக்கம் திருப்பி இருந்தான்.
அவள் கோபத்துடன், “என்னைப் பேசாதனு சொல்லிட்டு இப்போ எதுக்கு டா என் கிட்ட பேசிட்டு இருக்கிற?” என்று கேட்டாள். 
அவன் அமைதியாக இருக்கவும், அவள் அதிகரித்த கோபத்துடன், “நான் சொல்லவா! மதியம் நான் பேசியதை வைத்து அண்ணா உன்கிட்ட கேட்டு இருப்பான்… அதான் பேசுற… என்னைப் பத்தி, என் உணர்வுகளைப் பத்தி, எப்பயாச்சும் யோசிச்சு இருக்கிறியா? நான் எப்படி போனா உனக்கு என்ன? நான் யாரு உனக்கு?” என்று அவள் கத்திக் கொண்டே போக,
அவன் பேச முயற்சிக்க, அதை கண்டுக்கொள்ளாமல் அவள், “இப்போ எதுக்குடா என்னைக் கூட்டிட்டுப் போக வந்த?” என்றாள். 
“அங்கிள் தான் சொன்னாங்க” என்று மெல்லிய குரலில் அவளைப் பார்க்காமல் கூறினான். 
“அங்கிள் சொன்னா எது வேணாலும் செய்வியா?” 
“ஹ்ம்ம்” 
“என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொன்னா?” 
சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தவன் அடுத்த நொடியே பார்வையைத் திருப்பி இருந்தான்.
அவள் கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தபடி அமைதியாக இருக்க, அவனும் அவளை எப்படி சமாளிக்க என்று யோசித்தபடி அமைதியாக இருந்தான்.
ஐந்து நிமிட மௌனத்திற்கு பிறகு அவன் சாலையில் கவனத்தை வைத்தபடி வரவழைத்த இயல்பு குரலில், “வர்மா கிட்ட என்ன சொன்ன?” என்று கேட்டான்.
“அதை என் முகத்தை பார்த்துக் கூட கேட்கலாம்” என்ற ஆதிராவின் குரலில் திரும்பி பார்த்தவன் அவள் கண்ணில் வழிந்த காதலில் சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
அவனது செய்கையில் மீண்டும் கோபமடைந்த ஆதிரா, “நீ எனக்கு ப்ரொபோஸ் பண்ணனு அண்ணா கிட்ட சொன்னேன்” என்று கூற,
சட்டென்று ‘கீரீச்’ என்ற சத்தத்துடன் வண்டியை நிறுத்தி இருந்தான்.
பின்னால் வந்தவன் இவனை திட்டிவிட்டு செல்ல, அவனோ அதிர்ச்சியுடன், “ஆதி உண்மையைச் சொல்லு” என்றான்.
அவள் அவனை கண்டுக்கொள்ளாமல் வெளிப்புறம் திரும்பி வேடிக்கைப் பார்க்க, அவன் பொறுமை இழந்து, “ஆதி” என்று அழைத்தான்.
அலட்டிக் கொள்ளாமல் ‘என்ன’ என்பது போல் அவனை அவள் பார்க்க, அவன், “சொல்லு” என்றான்.
“ரெண்டு நாள் முன்னாடி, உன் கிட்ட இனி பேசக் கூடாது, உன்னைப் பார்க்கக் கூடாதுனு சொன்ன?” 
“ப்ச்… அதை விடு” 
“அது எப்படி விட முடியும்?” 
“சரி… இனி அப்படி சொல்லலை… வர்மா கிட்ட என்ன சொன்ன?” 
“நீ சொன்னாலும் நான் அதை கேட்கப் போறது இல்லை… பட் நீ அப்படி சொன்னதுக்கு பனிஷ்மென்ட் வேணாமா?” 
‘வர்மாவை கூட சமாளிச்சிருவேன், இவளை எப்படி சமாளிக்க! ஆண்டவா ஹெல்ப் மீ பிளீச்!’ என்று மனதினுள் புலம்பியவன் அவளைப் பாவமாக பார்க்க,
“பனிஷ்மென்ட் பத்தி அப்பறம் சொல்றேன்” என்றவள் சற்று தள்ளி இருந்த மரத்தை சுட்டி காட்டி, “வண்டியை அந்த மரத்துக்கிட்ட நிறுத்து” என்றாள். 
அவன் அவளை முறைக்க, அவள் தோளைக் குலுக்கியபடி, “அப்போ வரவன் போறவன் கிட்டலாம் திட்டு வாங்கிக்கோ” என்றாள்.
சரியாக அப்பொழுது ஒருவர், “இதென்ன உன்னோட வீடுனு நினைச்சியா? கதை பேசுறதா இருந்தா வண்டியை ஓரம்கட்டிப் பேசு” என்று கத்த,
இவன், “சாரி சார்… வண்டி திடீர்னு நின்னுருச்சு…” என்றபடி இரண்டு முறை வண்டியை கிளப்ப முயற்சிப்பதுப் போல் நடித்து விட்டு மூன்றாவது முறை வண்டியை கிளப்பியபடி, “இதோ ஸ்டார்ட் ஆகிருச்சு சார்” என்றபடி வண்டியை நகர்த்தி அவள் சொன்ன இடத்தில் நிறுத்தினான்.
“இப்போ சொல்லு” 
“என்ன சொல்லணும்?”
“விளையாடாம உண்மையைச் சொல்லு”
அவள் கோபத்துடன், “என் காதல் உனக்கு விளையாட்டா?” என்று வினவ,
அவன், “ப்ச்” என்று சலித்தபடி, “நான் அப்படிச் சொல்லலை… நான் சொல்றதை ஏன் புரிஞ்சுக்க மாட்டிக்கிற? எனக்கு உன்னை பிடிக்கும், ஆனா (அவளது தீர்க்கமான பார்வையில் மிக சிறு தடுமாற்றத்துடன்) காதல் இல்லை” என்றான்.
அவனது அரை நொடி தடுமாற்றத்தை கவனித்தவள் அவனை இன்னும் தீர்க்கமாக பார்த்து, “அப்போ நிஜமாவே நீ என்னைக் காதலிக்கலை?” 
“அதைத் தானே சொல்றேன்” 
“அப்போ இனி நான் உன்னை அண்ணானு கூப்பிடட்டா?” 
அதிர்ந்தவன், “ம்ம்” என்றான்.
அவள் அதிகரித்த கோபத்தைக் கட்டுபடுத்தியபடி இறுகிய குரலில், “வாயை திறந்து சொல்லு” என்றாள்.
“என்ன?” 
“உன் வாயால் இனி நான் உன்னை அண்ணானு கூப்பிடனும்னு சொல்லு” 
“இனி… நீ… என்னை… அண்…” என்றவனின் பேச்சை முடிக்க விடாமல் அவனது உதட்டை தன் இதழ் கொண்டு மூடியிருந்தாள்.
பெரிதும் அதிர்ந்தவனின் மூளை அவளை விட்டு விலகக் கூற, காதல் கொண்ட மனமோ இதழ் முத்தத்தில் லயிக்க ஆரம்பித்து இருந்தது.
ஆதிரா மற்றும் சஞ்சய் நடுவில் இருக்கும் பிரச்சனை இது தான். கடந்த ஒரு வருடமாகவே பார்வையால் தனது காதலைச் சொல்லிக் கொண்டிருந்த ஆதிரா, ஒரு மாதத்திற்கு முன்பு சஞ்சையிடம் நேரிடையாக காதலைச் சொல்லியிருக்க, அவனோ இருவருக்கும் இடையே இருக்கும் அந்தஸ்து வித்யாசத்தை மனதில் கொண்டு அவளது காதலை நிராகரித்து இருந்தான். என்ன தான் அவன் மறுத்திருந்தாலும் அவன் காதலை உணர்ந்த ஆதிரா அவனைத் துரத்திக் கொண்டு தான் இருக்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன்பு அவளை சமாளிக்க முடியாமல் சஞ்சய் அவளிடம் இனி தன்னிடம் பேசவோ, தன்னை சந்திக்கவோ வேண்டாம் என்று கூறியதால் அவன் மீது கோபத்தில் இருந்தவள் மதியம் மதிவர்மனிடம் பொரிந்து தள்ளியிருந்தாள்.
குறிப்பு: இனி இந்த கதையை மாலையில் பதிவிடுகிறேன் தோழமைகளே!

                    நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement