Advertisement

மதிவர்மன் அபிசாரா இருவருமே மற்றவரைத் தான் நினைத்துக் கொண்டிருந்தனர். தங்கள் இணையை சந்தித்த ஒவ்வொரு நிகழ்வுகளுமே நெஞ்சின் நீங்கா நினைவுகள் தான் என்ற போதிலும் இன்றைய சந்திப்பு அவர்களின் முதல் சந்திப்பிற்கு அவர்களை இழுத்துச் சென்றது.
நான்கு வருடங்களுக்கு முன்…
மதிவர்மன் தந்தையுடன் சேர்ந்து தொழிலில் இறங்கி இரண்டு வருடங்கள் கடந்திருக்க, அபிசாரா தனது முதுநிலை படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்த நேரம் அது.
அப்பொழுதெல்லாம் மதிவர்மன் அலுவலகம் முதற்கொண்டு எங்கும் தனது ‘BMW’ இரு சக்கர வண்டியில் தான் செல்வான்.
ஒரு நாள் மதிய வேளையில் அபிசாரா தனது இரு சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பொழுது, எதிரே இரு சக்கர வண்டியில் வந்துக் கொண்டிருந்த இளைஞன் அவளைப் பார்த்து இதழ் குவித்து முத்தமிட, ஒரு நொடி அதிர்ந்தவள் அடுத்த நொடியே கோபத்துடன் நெற்றிக்கண்ணை திறந்திருந்தாள். ஆனால் அதைப் பார்க்க அந்த இளைஞன் அவள் எதிரில் இல்லை.
அன்று மதிய வேளையில் மதிவர்மன் தனது இரு சக்கர வண்டியில் மென் பொருள் நிறுவனத்தில் இருந்து முக்கியமான கூட்டத்திற்காக நூற்பாலை நோக்கி சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அன்னையிடமிருந்து அழைப்பு வரவும், நேரமின்மை காரணமாக வண்டியை செலுத்தியபடியே ஊடலை(Bluetooth) கருவி மூலம் அழைப்பை எடுத்து பேசியவன், இறுதியாக “லவ் யூ மாம்” என்று கூறி இதழ் குவித்து முத்தம் கொடுத்து அழைப்பைத் துண்டித்தான். அவனது கவனம் அன்னையிடம் இருக்க, சாதரணமாக தலையை லேசாக இடதுபுறம் திருப்பியபடி முத்தம் கொடுத்து அழைப்பைத் துண்டித்திருக்க, துரதிஷ்டவசமாக அவனது பார்வைச் சென்ற இடத்தில் இருந்த அபிசாரா அவனை தவறாக நினைத்து விட்டாள்.
சட்டென்று வண்டியை ஓரம்கட்டி பின்னால் வந்தவரின் வசையை பொருட்படுத்தாமல் அந்த இளைஞனை(மதிவர்மனை) தேடிய அபிசாராவின் கண்ணில் சிக்கினான் அவன். அப்பொழுது தான் மதிவர்மன் போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறிக்காக வண்டியை நிறுத்தி இருந்தான். அவனை கண்டவள் சட்டென்று வண்டியை ‘u’ வடிவில் திருப்பி வேகமாக சென்று அவன் வண்டியை உரசுவது போல் வழி மறித்து தனது வண்டியை நிறுத்தினாள்.
இவள் அவனை திட்டும் முன் அவன், “வண்டி ஓட்ட தெரியாம ஏன் வண்டியை எடுத்துட்டு வரீங்க!” என்று திட்டி இருந்தான்.
அபிசாரா கோபக் குரலில், “ஹெல்மெட்டை கழட்டு டா” என்றாள்.
அவனும் கோபத்துடன், “ஹலோ! மரியாதையா பேசுங்க” என்று சீறினான்.
“உனக்கெல்லாம் எதுக்கு டா மரியாதை? தைரியம் இருந்தா ஹெல்மெட்டை கழட்டி உன் முகத்தைக் காட்டு” 
அவன் கோபத்தை அடக்கிய குரலில், “பொண்ணாச்சேனு பார்க்கிறேன்” என்றான். 
“அதான் தெரியுதே!” என்று அவள் இகழ்ச்சியாக கூற,
அவன் புருவ சுளிப்புடன், “உனக்கு என்ன வேணும்? எதுக்கு இப்போ ஸீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கிற?” என்று கேட்டான். 
வண்டிகள் செல்வதற்கான பச்சை விளக்கு ஒளிரவும், பின்னால் இருந்த வண்டிகளின் ஓட்டுனர்கள் வாகன ஒலியை ஒலிக்க விட, கூட்டத்தில் ஒருவர், “உங்க சண்டையை கொஞ்சம் ஓரமா இருந்து போடுங்க…” என்று கூறினார்.
மதிவர்மன் இவளை முறைத்துவிட்டு கிளம்பப் பார்க்க, அவனது வண்டி சாவியை எடுத்தவள் அவனது, “ஏய்!!!” என்ற கத்தலை பொருட் படுத்தாமல் தனது வண்டியை ஓரமாக செலுத்தி நிறுத்தினாள்.
கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தவன் எரிச்சலும் கோபமுமாக தனது வண்டியை அமர்ந்த நிலையிலேயே உருட்டியபடி ஓரமாக சென்று அவள் அருகே நிறுத்தினான்.
பின் கோபமாக அவளைப் பார்த்து, “யாரு நீ? உனக்கு என்ன வேணும்? என் வண்டி சாவியைத் தா” என்றான்.
தனது தலைக் கவசத்தை கழட்டி வண்டியின் கண்ணாடியில் வைத்தவள் அழுத்தமான பார்வையுடன், “ஹெல்மெட்டை கழட்டிட்டு பத்து தோப்புகரணம் போடு, சாவியைத் தரேன்” என்றாள்.
“வாட்!!!!” 
அவள் அமைதியாக இருக்க, அவன் கோபத்துடன், “லூசா நீ? என்ன நினைச்…” என்றவனின் பேச்சை இடையிட்டவள் கோபத்துடன், “போறபோக்கில் பிளைங் கிஸ் கொடுத்த உன்னை அறையாம பேசிட்டு இருக்கிற நான் லூசு தான்” என்றாள். 
“வாட்!!!” 
“உனக்கு ஒரு நிமிஷம் டைம் தரேன், சொன்னதை செய்யலைனா சாவியோடு நான் கிளம்பி போய்கிட்டே இருப்பேன்” என்றாள்.
“நான் யாருன்னு தெரியாம…” என்றவனின் பேச்சை மீண்டும் இடையிட்டு, “இந்த பூச்சாண்டி காட்டுறதெல்லாம் என் கிட்ட வேலைக்காகாது…” என்றவள் “இன்னும் முப்பது செகண்ட்ஸ் தான் இருக்குது” என்றாள்.
இரண்டு நொடிகள் அவளை ஆழ்ந்து பார்த்தவன் அவள் கண்ணில் பொய் இல்லை என்றதும் சற்று யோசித்தான். பின் உதட்டோர புன்னகையுடன், “நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கிறீங்க… நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னோட அம்மா கிட்ட போன் பேசிட்டு இருந்தேன்… அவங்களுக்கு கொடுத்த முத்தத்தை உங்களுக்கு கொடுத்ததா நினைச்சுட்டீங்க” என்று பன்மையில் அழைத்து பேசினான். 
“பைவ் செகண்ட்ஸ்” 
“நான் நிஜமா தான் சொல்றேன்… நீங்க…” என்றவனின் பேச்சை மீண்டும் இடையிட்டவள், “கதை சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாம சொன்னதை செய்… லாஸ்ட் 30 செகண்ட்ஸ் தரேன்” என்றாள். 
“மிஸ்… நான் நிஜத்தைத் தான் சொல்றேன்… சாவியைத் தாங்க, எனக்கு மீட்டிங்க்கு லேட் ஆகுது” என்று அவன் தன்மையாகவே கூறினான்.
அபிசாரா நக்கலான குரலில், “தப்பு செய்யும் போது இருக்கிற தைரியம், அதை ஒத்துக்கிறதிலும் இருக்கணும்” என்றாள். 
“பண்ணாத தப்பையெல்லாம் ஒத்துக்க முடியாது… வேணும்னா இப்போ நிஜமா கிஸ் பண்ணிட்டு ஒத்துகிறேன்” என்றபடி அவன் கண்சிமிட்ட,
அபிசாரா கோபத்தில் அவன் தலை கவசம் அணிந்திருப்பதை மறந்து ஓங்கி அறைந்து விட்டு வலியில் கையை உதறினாள்.
அதிகரித்த கோபத்துடன் அவளை அடிக்க கை ஓங்கியவன் இறுதி நொடியில் கையை இறக்கி உதறியபடி, “சை!” என்றான்.
பின் மூச்சை இழுத்து விட்டு கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்தபடி, “யூ ஆர் கிராஸ்சிங் தி லிமிட்… பேச்சு பேச்சா இருக்கணும்” என்றான். 
அவன் கையை வீசிய வேகத்தில் ஒரு நொடி அதிர்ந்து, பின் அவன் நிறுத்தியதில் சுதாரித்தவள் அவனது பேச்சிற்கு கோபத்துடனே, “பொறுக்கி கிட்ட இப்படி தான் பேச முடியும்” என்றாள்.
அவன் கோபத்துடன் பேச வாய் திறக்கையில் சஞ்சய் அவனை அழைக்கவும், மீண்டும் ஊடலை கருவி மூலம் அழைப்பை எடுத்தவன், “டென் மினிட்ஸ்” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவனை கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்த அபிசாரா அவன் கைபேசியில் தானே பேசிக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் சற்று மெத்தனமாக நிற்க, அவன் அழைப்பைத் துண்டித்ததை அவள் கண்டுக்கொள்ளும் முன் அவள் கையில் இருந்து வண்டி சாவியைப் பிடுங்கியவன் அவளை முறைத்தபடி அவளது தலைக் கவசத்தை கீழே எரிந்து உடைத்துவிட்டு கிளம்பியிருந்தான்.
அவள், “ஏய்!!” என்று கோபத்துடன் கத்தியபடி அவனைத் தொடர, அதை கண்ணாடியில் பார்த்தவன் சட்டென்று வண்டியை நிறுத்தி திரும்பிப் பார்த்து இதழ் குவித்து முத்தம் கொடுத்துவிட்டு செல்ல, அபிசாரா உச்சக்கட்ட கோபத்துடன் கீழே கிடந்த கல்லை எடுத்து அவன் மீது எரிந்து இருந்தாள். கண்ணாடி வழியாக பார்த்தவன் வண்டியைச் சற்று வளைத்து கல்லடியில் இருந்து தப்பித்து, திரும்பி பார்க்காமல், “பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று கத்திவிட்டு வண்டியில் பறந்திருந்தான்.
அபிசாரா எரிச்சலும் கோபமுமாக கிளம்ப, மதிவர்மனோ கோபத்தை மீறிய உதட்டோர புன்னகையுடன் சென்றான்.
இன்று… 
முதல் சந்திப்பை நினைத்துப் பார்த்த அபிசாரா உதட்டோர புன்னகையுடன் அமர்ந்திருக்க, அதற்கு நேர் எதிராக மதிவர்மன் எரிச்சலும் கோபமுமாக அமர்ந்திருந்தான்.
காணொளியில் கண்ணீருடன் கலங்கிய குரலில் பாடிய அபிசாராவைப் பார்த்த மதிவர்மன் தாள முடியாமல் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டான். ஆனால் மனதார தன்னவளை ஏற்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் தவித்தவன் இயலாமை தந்த கோபத்துடனும் எரிச்சலுடனும் அமர்ந்திருந்தான்.  எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தனோ அறையின் கதவு தட்டும் சத்தத்தில் சுயம் பெற்றவன் மணியைப் பார்க்க, அது இரவு 8 என்று காட்டியது.
எழுந்து சென்று கதவைத் திறந்தவன் அன்னையை கண்டதும் வழி விட்டு நிற்க, மித்ராணி உள்ளே வந்து அமர்ந்தார். உள்ளே வந்து அன்னை அருகில் அமர்ந்தவன் அவர் முகத்தை பார்க்கவில்லை.
மித்ராணி மெல்ல அவனது தலையை வருட, கண்களை மூடி தன்னை நிலைபடுத்த முயற்சித்தான்.
அவர், “வர்மா…” என்று ஆரம்பிக்க,
கண்களை மூடியபடியே, “அட்வைஸ் கேட்கிற மூடில் நான் இல்லை ம்மா” என்றான்.
மித்ராணி, “நான் நடந்ததைச் சொல்லத் தான் வந்தேன்… ஜஸ்ட் அபியைப் பார்க்கத் தான் போனோம்… அது கூட பாட்டி ரெண்டு பேரும் கட்டாயப்படுத்தியதால் தான் இன்னைக்கே அவசரமா கிளம்பிப் போனோம்… நீயும் அங்க வந்துட்டு போகவும் பெரியவங்க எல்லோரும் கல்யாண தேதியைக் குறிச்சுட்டாங்க” என்றார். 
அவன் அமைதியாக அவர் மடியில் தலை வைத்து படுத்து மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

Advertisement