Advertisement

அறையினுள் நேத்ரா எடுத்த அபிசாரவின் காணொளியை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்த மதிவர்மனின் மனதை அவளது கண்ணீரும் கலங்கிய குரலும் வெகுவாக வதைத்தது.
காணொளியை முழுவதுமாக பார்க்க முடியாமல் நிறுத்தியவன் கைபேசியில் தந்தையை அழைத்தான்.
அவனது மனநிலையை புரிந்தார் போல் அவர் அறையினுள் செல்லாமல் அழைப்பை எடுத்தார்.
அவர் அழைப்பை எடுத்ததும், “ப்ரோசீட் பண்ணுங்க” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்த மதிவர்மன் கைபேசியை மெத்தை மீது தூக்கி எறிந்துவிட்டு கண்களை மூடியபடி அமர்ந்து விட்டான்.
அவனது மனம், ‘நீயும் கஷ்டப்பட்டு, நானும் கஷ்டப்பட்டு… தேவையா இது? ஏன்டி அப்படி பேசின?’ என்று வேதனையுடனும் வலியுடனும் கதறியது.
தே நேரத்தில் அபிசாரா தந்தையிடம், “என்னை பற்றிய உண்மையை சொல்லிட்டீங்களா ப்பா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்ட ப்ரனேஷ், “மனசைப் போட்டு குழப்பிக்காத டா… எதுவும் மாறப் போறதில்லை… ஜஸ்ட் நீ உண்மையை தெரிஞ்சுக் கிட்ட அவ்ளோ தான்” என்றார்.
“அவங்க எதுவும் சொல்லலையா ப்பா?” 
“அம்மு!” என்று ப்ரனேஷின் குரல் சற்று அழுத்தத்துடன் வர, கலங்கிய விழிகளுடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
ப்ரனேஷ் சட்டென்று அணைப்பை இறுக்கியபடி, “நீ எப்போதுமே எங்க பொண்ணு தான் டா…” என்று கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டார்.
“இந்த உண்மை கடைசி வரை எனக்கு தெரியாமலேயே இருந்திருக்கலாம் ப்பா” என்றபடி அவர் மடியில் தலை சாய்த்து கண்ணீர் சிந்த,
‘தொப்’ என்ற சத்தத்தில் இருவரும் திரும்பிப் பார்க்க, நெஞ்சில் கைவைத்தபடி கலங்கிய விழிகளுடன் இனியமலர் அறை வாயிலில் தரையில் அமர்ந்திருந்தார்.
மனைவியை பார்க்கவா மகளை பார்க்கவா என்று ப்ரனேஷ் ஒரு நொடி திண்டாட, அவருக்கு அந்த கஷ்டத்தை கொடுக்காமல் கண்களை துடைத்துக் கொண்ட அபிசாரா விரைந்து சென்று தரையில் அமர்ந்து அன்னையை அணைத்துக் கொண்டாள்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, ப்ரனேஷ், “இனியா” என்று அழைத்தார்.
கணவரின் குரலில் திடமடைந்த இனியமலர் கண்களை துடைத்தபடி எழுந்து நின்றார்.
தன்னுடன் எழுந்து நின்ற மகளிடம் அமைதியான குரலில், “உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
அபிசாரா தயங்கவும், இனியமலர் அதே கேள்வியை சற்று அழுத்தத்துடன் மீண்டும் கேட்டார்.
அபிசாரா இப்பொழுதும் மௌனம் காக்கவும் இனியமலர் விஷயத்தை யூகித்தவராக, “அனு” என்று கத்தி அழைத்தார்.
மென்மையே உருவான இனியமலரின் சத்தத்தில் அனைவரும் சற்று அதிர்ச்சியுடன் மேலே பார்க்க, அனன்யா வேகமாக மேலே வந்தாள்.
அனன்யா வந்ததும் அபிசாரா அவசரமாக அவள் அருகே சென்று நின்றபடி, “அம்மா அவளை எதுவும் சொல்லாத… அவளே தெரியாமத் தான் சொல்லிட்டா… உண்மையை சொன்னதில் இருந்து அவளும் வருத்தப்பட்டுட்டு தான் இருக்கிறா… இப்ப வரை என் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு தான் இருக்கிறா” என்றாள்.
அனன்யா, “அம்மா ப்ளீஸ் மா, சாரி மா… நான் வேணும்னு செய்யலை மா… என்னை மன்னிச்சுரு மா” என்று கலங்கிய குரலில் கூறினாள். 
இனியமலர் கோபமாக, “உன் மனசில் இல்லாமல் எப்படி உன் வாயில் இருந்து வரும்? நாங்க அவ்ளோ சொல்லியும் அந்த நினைப்பை நீ ஒதுக்கலை… அப்படித் தானே?” 
“அப்படி இல்லை மா… எனக்கே தெரியலை, அக்கா கிட்ட எப்படி அப்படி பேசினேன்னு”  என்று அழுகையுடன் கூறினாள்.
“என்ன பேசின?” என்று அவர் வினவ, அனன்யாவின் அழுகை கூடியது. அபிசாரா தங்கையை அணைத்துக்கொள்ள, அவளும் அபிசாராவை அணைத்தபடி, “சாரி க்கா… சாரி க்கா” என்றபடி கதறினாள்.
அபிசாரா, “ஒன்னுமில்லை டா… விடு” என்று சமாதானம் செய்ய,
இனியமலர் விடாமல் அழுத்தமான குரலில், “அனு அபி கிட்ட என்ன சொன்னன்னு எனக்கு தெரிந்தாகனும்” என்றார். 
அனன்யா தான் பேசியதை நினைத்துத் துடிக்க, அபிசாரா அன்னையைப் பார்த்து அழுத்தமான குரலில், “அம்மா நான் உங்க பொண்ணுங்கிறது உண்மைனா, இந்த விஷயத்தை இத்தோடு விடுறீங்க” என்றாள்.
அபிசாராவின் பேச்சில் அனன்யா மேலும் கூனிக்குறுக, அபிசாரா, “அனு என்னை பாரு” என்றாள் அழுத்தமான குரலில்.
அனன்யா அவளைப் பார்க்கவும், அபிசாரா, “உனக்கும் சேர்த்துத் தான் சொல்றேன்… என்னை உன் கூட பிறந்த அக்காவா நினைத்தால் அழுகையை நிறுத்து… இனி இதைப் பத்தி நீ யோசிக்கவும் கூடாது, என் கிட்ட மன்னிப்பும் கேட்கக் கூடாது” என்றாள். 
அனன்யா சட்டென்று அழுகையை நிறுத்தி கண்களை துடைக்கவும், அபிசாரா மென்னகையுடன், “குட் கேர்ள்” என்றபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
பின், “ஸ்ரீ… உன்னோட சயின்ஸ் ப்ராஜெக்ட் அனு அக்கா செஞ்சுத் தராங்களாம்” என்று குரல் கொடுக்க,
“ஹை… ஜாலி” என்றபடி துள்ளி குதித்து ஓடி வந்த யான்விஸ்ரீ, “வாங்க க்கா… சீக்கிரம் செய்யலாம்” என்றபடி அனன்யாவின் கையை பற்றி இழுத்தாள்.
அபிசாரா, “போ… செஞ்சுக் குடு… நானும் கொஞ்ச நேரத்தில் கீழ வரேன்” என்றதும் அன்னையை திரும்பி பார்த்தபடி அனன்யா சென்றாள்.
படிகளில் இறங்கிக் கொண்டிருந்த போது, “ஒரு நிமிஷம்” என்றுவிட்டு மீண்டும் மேலே வந்த யான்விஸ்ரீ அபிசாராவிடம் ரகசிய குரலில், “அனு அக்கா அழாம பார்த்துக்கிறேன்” என்றாள்.
அபிசாரா மென்னகையுடன் தலையை ஆட்ட, இனியமலர் அருகே சென்றவள், “பெரியம்மா சாரி சொன்னதுக்கு அப்பறம் திட்டக் கூடாது… அனு அக்கா திரும்ப இந்த தப்பைச் செய்ய மாட்டா… ஓகே?” என்று பெரிய மனிஷியை போல் கூறினாள்.
யான்விஸ்ரீக்கு என்ன விஷயம் என்று புரியாவிட்டாலும் அனன்யா ஏதோ தவறு செய்துவிட்டாள் என்பது வரை புரிந்தது. எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கும் பெரியன்னை கோபம் கொள்வதை முதல் முறையாக பார்க்கவும், அவரை சமாதானம் செய்யும் முயற்சியே இது.
இனியமலர் அமைதியாக இருக்கவும், யான்விஸ்ரீ, “ஓகே சொல்லுங்க பெரியம்மா” என்று விடாமல் கேட்டு, பெரியன்னையின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட பிறகே கீழே சென்றாள்.
அபிசாரா மேலே இருந்தபடியே நேத்ராவிற்கு கண் ஜாடைக் காட்ட, அவளும் கண்ணை மூடித் திறந்து ‘நான் பார்த்துக்கிறேன்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு அனன்யா மற்றும் யான்விஸ்ரீயுடன் சென்றாள். நடந்த பேச்சு வார்த்தையை வைத்து உண்மையை யூகித்துக் கொண்ட நேத்ராவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதை அவள் சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளாததோடு, எப்பொழுதும் போல் இயல்பாகவே பதில் அளித்தாள்.
பெரியவர்கள் அவரவர் அறைக்குச் செல்ல, அபிசாரா புன்னகையுடன் அன்னையை இறுக்கமாக கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டபடி, “என் செல்ல அம்மா… இந்த விஷயத்தை நாம எல்லோருமே மறந்துருவோம்” என்றாள்.
கஷ்டத்தை தன்னுள் புதைத்துக் கொண்டு தனக்காக சிரிக்கும் மகளுக்காக இனியமலரும் புன்னகைத்து ‘சரி’ என்று தலை அசைத்தார்.
மகளின் தலையை வருடிய ப்ரனேஷ், “என் பொண்ணு பெரிய பொண்ணு ஆகிட்டா” என்றார்.
அபிசாரா கண்களை உருட்டியபடி, “இது தெரியாமயா எனக்கு கல்யாணம் பேசினீங்க?” என்றாள்.
ப்ரனேஷ் புன்னகையுடன், “வாலு” என்று கூற, அன்னை மற்றும் மகள் முகத்தில் மென்னகை அரும்பியது.
ஆம்… அபிசாரா ப்ரனேஷ் இனியமலரின் சொந்த மகள் இல்லை. முதல் திருமணம் ஏற்படுத்திய காயத்தினால் வாழ்வில் பிடிப்பில்லாமல் இருந்த இனியமலர் தன் வாழ்விற்கு அர்த்தம் கொடுப்பதற்காக அனாதை ஆசிரமத்தில் இருந்து ஒரு வயது பெண் குழந்தையைத் தத்தெடுத்து ‘அபிசாரா’ என்று பெயரிட்டார்.
அபிசாராவை பார்ப்பதற்கு முன்பே அவளை மனதளவில் தனது மகளாக தத்தெடுத்த ப்ரனேஷ் இனியமலரை திருமணம் செய்த பிறகு சட்டப்பூர்வமாக தத்தெடுத்து இருந்தார். ஆனந்தன் மற்றும் அமுதாவுமே தொடக்கத்தில் இருந்தே அபிசாராவை தங்கள் சொந்த பேத்தியாகத் தான் நினைக்கின்றனர்.
ப்ரனேஷ் இவற்றை புகழ்வேந்தனிடம் கூறியபோது, அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதில் அவர்களின் நட்பு மேலும் பலப்பட்டது.
இனியமலரின் முதல் திருமணத்தை பற்றி அனன்யா மற்றும் அபிசாராவிற்கு தெரியாது. அனன்யா தனது பன்னிரெண்டாவது வயதில் இனியமலரின் சித்தி மூலம் அபிசாரா தனது உடன் பிறந்த சகோதரி இல்லை என்றதை அறிந்துக் கொண்டாள். அப்பொழுதும் அதை முழுமையாக நம்பாமல் அன்னையிடம் சென்று கேட்டாள். இனியமலர் உண்மையை மறைக்க முயற்சிக்க, யார் அவளுக்கு இந்த விஷயத்தை கூறியது என்றதை கேட்டு அறிந்துக் கொண்ட ப்ரனேஷ் பக்குவமாக உண்மையை எடுத்துக் கூறி, அதை அபிசாரா அறியாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் அவளிடமே கொடுத்தார். நாளடைவில் அனன்யா இந்த விஷயத்தையே மறந்திருக்க, எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது, மதிவர்மன் இவர்கள் வாழ்வில் வரும் வரை.

                                           நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement