Advertisement

விருந்தினர் மாளிகையில் தனது அறையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த மதிவர்மன், தனக்கு எதிரே நின்றிருந்த சஞ்சயை அழுத்தமான பார்வைப் பார்க்க,
“என்ன…” என்று கேட்க வந்த சஞ்சய் பாதியில் நிறுத்தி, “அது வந்து…” என்று இழுத்து, மீண்டும் பாதியில் நிறுத்தி, “அங்கிள் ஒரு முறை பேச்சோட பேச்சா நடுவுல ‘அனுவோட அக்கா பேர் என்ன? மறந்துட்டேன்!’ னு சொன்னப்ப, அபிசாரானு பட்டுன்னு சொல்லிட்டேன்… அங்கிள் உடனே எனக்கு எப்படித் தெரியும்னு கேட்டாங்களா!’ என்றவன் எச்சிலை முழுங்கியபடி, “நான் ஏதோ ஒரு ப்ளோவில் நீ சொன்னதா உளறிட்டேன்… ஆனா உடனே ஆதி உன் கிட்ட சொன்னப்ப கவனிச்சதை வச்சு சொன்னேன்னு சமாளிச்சுட்…” என்று அவன் முடிப்பதற்குள்,
“கிழிச்ச…” என்று ஆரம்பித்த மதிவர்மன், சில பல அருமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்யத் தொடங்கியிருந்தான்.
ஐந்து நிமிடங்கள் கழித்து மதிவர்மனின் வேகம் சற்று குறையவும், சஞ்சய் ‘அப்பாடா இன்னைக்கு சீக்கிரம் முடிச்சுட்டான்’ என்று நினைத்து முடிப்பதற்குள்,
மதிவர்மன், “அட்லீஸ்ட் உளறினதையாவது உடனே என் கிட்ட சொன்னியா?” என்று வினவி அர்ச்சனையைத் தொடர்ந்தான்.
சஞ்சய் மனதில், ‘அதானே! இவனாது அர்ச்சனையை உடனே முடிக்கிறதாவது!’ என்று கூறிக் கொண்டான்.
ஒருவழியாக மதிவர்மன் முடித்ததும், பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட சஞ்சய், “முடிச்சிட்டியா மச்சி?” என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்.
அவனது பாவனையிலும் கேள்வியிலும் மதிவர்மன் கடுமையாக முறைத்தான்.
அதை கண்டுக் கொள்ளாது, “ஒரு நிமிஷம் மச்சி” என்றுவிட்டு வேகமாக வெளியே சென்றவன் ஒரு நிமிட நேரத்தில் உள்ளே வந்த பொழுது அவன் கையில் ஒரு போத்தல்(bottle) குளிர்ந்த நீர் இருந்தது.
உள்ளே வந்த சஞ்சய் அந்த நீரை வேகமாக அருந்தி காலி செய்தான்.
பின் மதிவர்மனைப் பார்த்து, “என்ன பார்க்கிற? நீ கூப்டியேனு அரக்கப் பறக்க இந்த வேகாத வெயிலில் வந்தா… மனசாட்சியே இல்லாம நிக்க வச்சு லெக்சர் கொடுக்கிற… ஸோ, உன்னோட லெக்சரை கேட்ட எனக்குத் தான் தண்ணி” என்றவன் ஒரு நொடி இடைவெளி இட்டு, “இதை அங்க வச்சே குடிச்சுட்டு வந்திருக்கலாமேனு நீ நினைக்கலாம், என்ன பண்ண! என்னை நிம்மதியா தண்ணிக் கூட குடிக்க விடாம, பொறுமை இல்லாம, ‘என்ன பண்ற?’ னு ஒரு சவுண்ட் விடுவ” என்றான்.
மதிவர்மனின் முறைப்பில் காரம் கூடவும், சஞ்சய் மனதினுள், ‘கொஞ்சம் அதிகமாத் தான் போய்ட்டோமோ!’ என்று வினவினான். ஆனால் அடுத்த நொடியே, ‘எப்படியும் திட்டு உறுதி… பேசிட்டே வாங்கிப்போம்’ என்றும் கூறிக் கொண்டான்.
மதிவர்மன் சிறு நக்கலான பார்வையுடன், “அது என்ன டா வேகாத வெயில்?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம்… சுட்டெரிக்கும் சூரியன் வேகாத வெயில், சுட்டெரிக்கும் வர்மன் வெந்த வெயில்” என்றவன், “சரி அதை விடு… இப்போச் சொல்லு, உன் பிரச்சனை என்ன?” 
“நீ தான்” என்றான் சிறு எரிச்சலுடன்.
சஞ்சய் மென்னகையுடன், “இந்த பிரச்சனை உன் வாழ் நாள் முழுவதும் தொடரும் பிரச்சனை… விடாது கருப்பு” என்று ஏற்ற இறக்கத்துடன் கூற, மதிவர்மன் இதழோரம் சிறு மென்னகை எட்டிப் பார்த்தது. 
மதிவர்மன் அருகே அமர்ந்த சஞ்சய் விளையாட்டை கைவிட்டவனாக, “சொல்லு டா” என்றான்.
சட்டென்று மதிவர்மன் உடல் இறுகிவிட, இறுகிய குரலில், “குடும்பமே அவளை பொண்ணு பார்க்க போய் உட்கார்ந்து இருக்குது… விட்டா இன்னைக்கே அவளை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருப்பாங்க” என்றான்.
“அது எப்படி டா! அபியைக் கல்யாணம் செய்துக்க வேண்டிய நீ அவங்களோட இல்லையே!” என்று கூறி முறைப்பை பரிசாகப் பெற்றுக் கொண்டான்.
சஞ்சய், “ஆமா! இந்த விஷயம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று வினவ, 
மதிவர்மான், “அப்போ உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று கோபக் குரலில் வினவினான். 
“சத்தியமா இப்போ நீ சொல்லி தான் டா தெரியும்” என்று சஞ்சய் அலறினான்.
மதிவர்மன், “ஆதி அவ பிரெண்ட்டை ட்ராப் பண்ணச் சொன்னா… போனா! குடும்பமே அங்க இருக்குது” 
‘எந்த பிரெண்ட்?’ என்று கேட்க வந்த சஞ்சய் பின் ‘ஓ! அபி தங்கை அனு வா!’ என்று நினைத்துக் கொண்டான். பின், “உனக்கு ஒரு வேலை மிச்சம்னு நினைச்சுக்க வேண்டியது தானே!” என்றான். 
மதிவர்மன் கடுமையாக முறைக்க, சஞ்சய் தீவிரமான குரலில், “உன்னால் அபி இல்லாம இருக்க முடியுமா?” என்று கேட்டான். 
“என்னை வேணாம்னு சொன்னவ எனக்கு வேணாம்” என்று மதிவர்மன் சற்று குரலை உயர்த்தி கோபத்துடன் கத்தினான்.
“அப்போ இப்போ அபி வேணும்னு சொன்னா உனக்கு ஓகே வா?” என்று சஞ்சய் நிதானமாக வினவ,
ஒரே ஒரு நொடி மௌனித்த மதிவர்மன், “அப்பவும் எனக்கு அவ வேணாம்” என்றான்.
“என்ன! பழிக்குப் பழியா?” 
மதிவர்மன் அமைதியாக பார்க்க, அந்த பார்வை ‘அவ்ளோ தான் நீ என்னை புரிந்துக் கொண்டதா?’ என்று வினவியது.
சஞ்சய் சற்று இறங்கிய குரலில், “இது உன் வாழ்க்கை டா” என்றான்.
“அவ என்ன பேசினானு உனக்கே தெரியும்” என்று மீண்டும் இறுகிய குரலில் கூறிய மதிவர்மன், “என்னால் அவ பேசியதை மறக்க முடியாது… அது நெருஞ்சி முள்ளா என் நெஞ்சைக் குத்தி கிழிச்சுட்டே தான் இருக்குது” என்று கோபமும் வலியும் கலந்த குரலில் கூறினான். 
“அவளோட இந்த பேச்சை மட்டுமா உன்னால் மறக்க முடியலை? அவளோட நினைவுகளும் தானே!” 
மதிவர்மன் மெளனமாக இருக்க,
“அபி மட்டும் சந்தோஷமாவா இருக்கிறா? நீ நினைச்சா ரெண்டு பேருமே…” என்ற சஞ்சயின் பேச்சை இடையிட்ட மதிவர்மன், “ஆதிக்கு போன் பண்ணி என்னாச்சுனு கேளு” என்றான்.
“நீயே கேட்க வேண்டியது தானே!” 
மதிவர்மன் முறைக்க,
‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… பார்த்து டா, உன் பார்வையே இப்படித் தான் இருக்கும்னு எல்லோரும் நினைச்சுக்கப் போறாங்க’ என்று சத்தமாக முணுமுணுத்த சஞ்சய், ‘அந்த குரங்கு வேற நான் போன் பண்ணா எடுக்க மாட்டாளே!’ என்று சத்தமின்றி முணுமுணுத்தான்.
அவனது வாயசைப்பை வைத்து அதை கண்டுகொண்ட மதிவர்மன், “ஆதி ஏன் நீ போன் பண்ணா எடுக்க மாட்டா?” என்று வினவினான்.
‘சந்திரமுகி ரஜினி மாதிரி இவன் முன்னாடி லைட்டா கூட வாயசைக்க முடியலையே! என்ன கொடுமை சரவணன்!’ என்று மனதினுள் கூறிக் கொண்ட சஞ்சய், “அதை அவ கிட்டயே கேளு” என்றான். 
மதிவர்மன் மீண்டும் அழுத்தமான பார்வை பார்க்க, ‘உனக்கு நேரமே சரி இல்லை டா சஞ்சய்’ என்று மனதினுள் கூறிக் கொண்ட சஞ்சய், “முதல்ல உன் பிரச்சனையைக் கவனி… ஆதி பத்தி உனக்கு தெரியாதா? நான் அவளை சமாளிச்சுக்கிறேன்” என்று ஏதோ சொல்லி சமாளித்தவன் கைபேசியில் அவளை அழைத்தான்.
சஞ்சய் சொன்னது போல் அவள் அவனது அழைப்பை எடுக்கவில்லை. சஞ்சய் மதிவர்மனைப் பார்த்து உதட்டை பிதுக்கி தோள் குலுக்க, மதிவர்மன் தனது கைபேசியை நீட்டினான்.
மதிவர்மன் கைபேசியில் இருந்து ஆதிராவை அழைத்த சஞ்சய் ஒலிபெருக்கியை இயக்கினான்.
அழைப்பை எடுத்த புகழ்வேந்தன், “வர்மா நேரில் பேசிக்கலாம்… இன்னும் அஞ்சு நிமிஷத்தில் நான் கெஸ்ட் ஹௌசில் இருப்பேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.
மதிவர்மன் சஞ்சயை திட்ட ஆரம்பிக்க, சஞ்சய், “இதுக்கு மேல திட்டுன நிஜமாவே என் இயர் பட்(bud) வெடிச்சு ரத்தம் வந்துரும் என்றான்.
மதிவர்மன் முறைப்புடன், “நீ மட்டும் வாய் விடாம இருந்து இருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது… அனேகமா கல்யாணத்தை உறுதி செஞ்சிருப்பாங்க… அதான் அப்பா நேரில் பேசிக்கலாம்னு சொல்றாங்க”  என்றான்.
“டேய் இதெல்லாம் நியாயமே இல்லை சொல்லிட்டேன்… அங்கிள் ஜகஜால கில்லாடி… அபி பத்தி எல்லாம் விசாரிச்சுட்டு, கன்பர்ம் பண்ணிக்கத் தான் என் கிட்ட போட்டு வாங்கி இருப்பாங்க… இது உனக்கும் தெரியும்… உனக்கு உன் டென்ஷன் குறைய என்னை திட்டனுமா திட்டிக்கோ… அதுக்காக என்னோவோ நான் சொன்னதால் தான் இப்படி நடக்கிற மாதிரி சொல்லாத…” 
“ப்ச்… சாரி டா” என்ற மதிவர்மன் கண்களை மூடி தளர்வாக சோபாவில் சாய்ந்து காலை நீட்டி அமர்ந்தான்.
நண்பனின் தளர்வை முதல் முறையாக பார்த்த சஞ்சய் வருத்தத்தை தன்னுள் மறைத்தபடி மதிவர்மனின் தோளை தொட்டான்.
மதிவர்மனிடம் அசைவில்லை என்றதும் அவன், “வர்மா என்ன டா! புதுசா சாரிலாம் சொல்ற?” என்று கேட்டான்.
அப்பொழுதும் அவனிடம் அசைவில்லை.
சஞ்சய், “வர்மா” என்று சற்று அழுத்தத்துடன் அழைக்கவும், கண்களை திறந்தவன், “சொல்லணும் தோணுச்சு” என்றான் அமைதியான குரலில்.
“வாட்’ஸ் ஈட்டிங் யூ?” 
“விடு டா” என்றபடி மூச்சை ஒரு முறை நன்றாக இழுத்து விட்டவன் நொடியில் தன்னை மீட்டு இருந்தான்.
இனி அவன் வாய் திறக்க மாட்டன் என்பதை உணர்ந்த சஞ்சய் அமைதியானான்.

 

அப்பொழுது கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே வந்த புகழ்வேந்தன் அழுத்தமான பார்வையுடன் மதிவர்மன் எதிரே இருந்த ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.
சஞ்சய் எப்பொழுதும் போல் இப்பொழுதும் புகழ்வேந்தனின் கம்பீரத்தில் கவரப்பட்டவனாக மனதினுள், ‘வயசானாலும் உங்க கம்பீரம் அப்படியே இருக்குது’ என்று கூறிக் கொண்டான்.
தந்தை பார்வையின் அர்த்தம் புரிந்த மதிவர்மன், “கோபத்தில் ஏதும் வார்த்தையை விட்டுறக் கூடாதுன்னு தான் யார் முகத்தையும் பார்க்காம வந்துட்டேன்” என்றான் அமைதியான குரலில்.
“உன்னையும், உன் கோபத்தையும் பத்தி அவங்களுக்குத் தெரியுமா?” 
“…” 
“பெரியவங்களுக்காகவாது நீ நின்னு பேசிட்டு வந்திருக்கனும்”  
“அவங்க முன்னாடி கோபத்தை காட்ட வேணாம்னு தான் வந்தேன்” 
“என்ன விளக்கம் நீ கொடுத்தாலும், நீ பண்ணது தப்பு தான்… ப்ரனேஷ் கிட்ட சாரி கேட்கிற” 
“எப்படியும் நீங்க கேட்டு இருப்பீங்களே!” என்றவன் தந்தையின் பார்வையில், “சரி கேட்கிறேன்” என்றான்.
“குட்” என்ற புகழ்வேந்தன் சற்று இலகுவாக அமர்ந்தபடி, “இந்த மாசம் 24ஆம் தேதி உனக்கும் அபிக்கும் கல்யாணம்” என்றவர் அவன் மறுத்து பேசும் முன், “ஆதி உனக்கு வாட்ஸ்-அப்-பில் ஒரு வீடியோ அனுப்பி இருக்கா… அதை பார்த்துட்டு உன் பதிலைச் சொல்லு” என்றார்.
பின் எழுந்தபடி சஞ்சயிடம், “அவன் பார்த்துட்டு பதில் சொல்லட்டும்… நாம வெளியே இருப்போம்” என்று கூற, அடுத்த நொடி அவருடன் சஞ்சய் வெளியேறி இருந்தான்.
சஞ்சய் தோளில் கை போட்டபடி மதிவர்மன் அறையை விட்டு வெளியே வந்த புகழ்வேந்தன், “வயசு பொண்ணை சைட் அடிக்காம வயசான என்னை ஏன் டா சைட் அடிக்கிற?” என்றார்.
அவன் அசடு வழிந்தபடி, “அப்படியெல்லாம் இல்லை அங்கிள்” என்றான்.
“அப்போ வயசு பொண்ணை சைட் அடிக்கிற!” 
“அங்கிள்!!” என்று அவன் அழுதுவிடும் குரலில் அழைக்க, புகழ்வேந்தன் சிரித்தார்.

Advertisement