Advertisement

அதன் பிறகு ஆதிரா புன்னகையுடன், “வெல்கம் டு அவர் ஹோம் அண்ணி” என்றபடி அபிசாராவின் தலையில் பூவை வைக்கவும், அபிசாரா புன்னகையுடன் அவளை அணைத்தாள்.
நேத்ரா, “ரெண்டு பேரும் அப்படியே ஒரு போஸ் கொடுங்க” என்றபடி புகைப்படம் எடுத்தாள்.
அபிசாரா தங்கையைப் பார்த்து, “அனு நீயும் வா” என்றதும், அனன்யா தமக்கையைக் கட்டிக் கொண்டு நிற்க, மறுபக்கம் ஆதிரா கட்டிக் கொண்டு நின்றாள்.
மூவரையும் நேத்ரா புகைப்படம் எடுத்ததும், யான்விஸ்ரீ, “நானும்…” என்று குதித்தபடி அபிசாரா முன் நிற்க, கைபேசியை தந்தை கையில் கொடுத்த நேத்ரா, “நானும்” என்றபடி போய் நின்று கொண்டாள்.
அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு ஒவ்வொருவராக அபிசாராவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள,
கமலா கலைவாணியிடம் ஏதோ சொல்லவும் அவரும் ஆமோதிப்பாக தலையை ஆட்டினார்.
அதன் பின் கலைவாணி, “நல்ல நேரம் முடியிறதுக்குள்ள அபி இந்த புடவையைக் கட்டிட்டு வரட்டும்” என்றவர் அமுதாவைப் பார்த்து, “இன்னைக்கு முகூர்த்த நாள் தான்… இன்னைக்கே அபி ராஜா கல்யாணத்துக்கு முகூர்த்த நாள் குறிச்சிடலாமா?” என்று கேட்டார்.
அமுதா கணவரைப் பார்க்க, அவர் மகனைப் பார்த்தார்.
ப்ரனேஷ் புகழ்வேந்தனை பார்த்து, “வர்மா கிட்ட கேட்டுட்டு…” என்று ஆரம்பிக்கும் பொழுதே புகழ்வேந்தன், “வர்மா பத்தி நீ கவலைப்படாத… உங்களுக்கு சம்மதம்னா அம்மா சொல்ற மாதிரி இன்னைக்கே முகூர்த்த நாள் குறிச்சிடலாம்” என்றார்.
ப்ரனேஷ் வீட்டினரை ஒருமுறை பார்த்துவிட்டு, “சரி… அப்படியே செஞ்சிடலாம்” என்றார்.
கலைவாணி, “குடும்ப ஜோசியர்னு யாரையும் நீங்க பார்ப்பீங்களா?” என்று வினவ,
ஆனந்தன், “மன்னிக்கணும்… ஜோசியத்தில் பெருசா நம்பிக்கை இல்லை, அதனால் நாங்க இதுவரை யாரையும் பார்த்தது இல்லை… நீங்க உங்க வழக்கம் எப்படியோ அப்படி செய்யுங்க” என்றார்.
கலைவாணி, “இங்கேயும் ஜோசியம் பார்க்கிற பழக்கம் இல்லை… கமலா அண்ணி வீட்டில் சிலதுக்கு மட்டும் பார்ப்பாங்க… அபி ராஜா ரெண்டு பேர் நட்சத்திரத்தை வச்சு முகூர்த்த நாள் குறிப்போம்… என்ன சொல்றீங்க?” 
ஆனந்தன், “அப்படியே செஞ்சிடலாம்” என்றார். 
மகன் பக்கம் திரும்பிய கலைவாணி, “அண்ணி பார்க்கிற ஜோசியர் வீடு இங்க பக்கத்தில் தானே இருக்குது… அவருக்கு போனைப் போட்டு வீட்டில் இருக்காரானு கேளு… இருந்தா உடனே இங்க வரச் சொல்லு, கல்யாணதுக்கு முகூர்த்த நாள் குறிக்கணும்னு சொல்லு” என்றார்.
அடுத்தடுத்து வேலைகள் ஜெட் வேகத்தில் நடைபெற, அபிசாரா சற்று திணறித் தான் போனாள். தனது மதியுடன் கல்யாணம் முடிவானதில் மகிழ்வதா இல்லை தன்னவனின் கோபத்தையும் விலகலையும் நினைத்து வருந்துவதா என்று குழம்பிய நிலையில் தான் இருந்தாள்.
அவளது மனநிலையை புரிந்துக் கொண்ட ஆதிரா, அனன்யா மற்றும் நேத்ரா அவளை கிண்டல் செய்து சகஜ நிலைக்கு மாற்ற முயற்சித்தனர். தோழியின் தமக்கை என்ற முறையில் ஆதிராவிற்கு அபிசாராவுடன் நல்ல பழக்கமே.
அபிசாரா என்ன தான் அவர்களுடன் சிரித்துப் பேசினாலும், உள்ளுக்குள் தன்னவனை நினைத்து உழன்றுக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் அதை அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டாள்.
மதிவர்மன் வீட்டில் வாங்கி வந்த புடவைக்கு தோதாக தன்னிடம் இருந்த பட்டு ரவிக்கையை அணித்து புடவையைக் கட்டிக் கொண்டு அபிசாரா தயாராக, நேத்ரா அவளுக்கு சிகை அலங்காரம் செய்தாள். அபிசாரா மிதமான ஒப்பனையில் அந்த லாவெண்டர் நிற பட்டுப் புடவையில் தேவதையாக ஜொலித்தாள்.
ஆதிரா அபிசாராவை அழைத்துக் கொண்டு கீழே செல்ல, அனன்யாவும் நேத்ராவும் அவர்களுடன் சென்றனர்.
ஜோசியரும் வந்துவிட அபிசாரா மற்றும் மதிவர்மனின் திருமண நாள் மதிவர்மன் அறியாமலேயே குறிக்கப் பட்டது. அடுத்து வந்த முதல் முகூர்த்ததையே குறிக்க, திருமணத்திற்கு மூன்று வாரங்கள் மட்டுமே இருந்தது.
ஜோசியர் கிளம்பியதும், நேத்ரா, “என்ன ஆதி! நீயாது அபி அக்காவை பாட்டுப் பாட தெரியுமானு கேட்பனு நினைத்தேன்… ஏமாத்திட்டியே!” என்றாள்.
சர்வேஷ், “நேத்ரா!” என்று கண்டிக்கும் குரலில் அழைக்க,
கமலா, “விடுங்க தம்பி… இப்படி கேலியும் கலாட்டாவுமா இருந்தா தானே கல்யாண வீடு நல்லா இருக்கும்” என்று கூற, நேத்ரா தந்தைக்கு அழகு காட்டினாள். பெரியவர்கள் முகத்தில் புன்னகை அரும்பியது.
ஆதிரா, “அண்ணி நீங்க வீணை சூப்பரா வாசிப்பீங்கனு அனு சொல்லுவா… எங்களுக்காக வீணை வாசித்தபடி ஒரு பாட்டுப் பாடுங்க” என்றாள்.
அபிசாரா, “இப்போதைக்குள்ள நான் வாசிக்கவே இல்லையே” என்று சற்று தயங்க,
அனன்யா, “அதெல்லாம் நல்லா தான் வாசிப்ப… இரு நான் போய் எடுத்துட்டு வரேன்” என்றபடி எழுந்து செல்ல, யான்விஸ்ரீ, “அனு க்கா நானும் வரேன்” என்றபடி துள்ளிக் குதித்து ஓடினாள்.
இனியமலர் தங்கள் அறைக்குச் சென்று விரிப்பு ஒன்றை எடுத்து வந்து கீழே விரித்தார்.
வீணையை எடுத்து வந்த அனன்யா கீழே அமர்ந்திருந்த அபிசாராவிடம் கொடுத்தாள்.
அபிசாரா, “என்ன பாட்டுப் பாட?” என்று ஆதிராவிடம் வினவ, அவள் பதில் சொல்லும் முன் நேத்ரா அவசரமாக, “உன்னோட ரிங்டோன் பாடு” என்றாள்.
அபிசாரா அவசரமாக, “வேற பாட்டுச் சொல்லு” என்றாள்.
நேத்ரா, “இல்லை… அதைத் தான் பாடுற” என்று சற்று பிடிவாதத்துடன் கூற,
சற்று அழுத்தமான குரலில், “வேற பாட்டுச் சொல்லு” என்ற அபிசாரா ஆதிரவை பார்த்து, “இல்லை நீ சொல்லு ஆதி” என்றாள்.
ஆதிரா யோசனையாக நேத்ராவைப் பார்த்தாள்.
“அதையே பாடு க்கா… நீ பாடுறதை வீடியோ எடுத்து மாம்ஸ்க்கு அனுப்புறேன்… அதைப் பார்த்ததும் மாம்ஸ்ஸோட கோபமெல்லாம் பஞ்சு பஞ்சா பறந்து போய்டும்” என்ற நேத்ரா, “இத்தனை நாள் ஏன் இந்த பாட்டை வச்சிருக்கனு யோசிச்சு இருக்கிறேன்… இன்னைக்கு தான் காரணம் புரியுது… உன் உள்ளம் கவர்ந்த கள்வன் பெயர் மதி னு” என்று கூறி கண் சிமிட்டினாள்.
மித்ராணி, “அப்படி என்ன பாட்டு?” என்று சற்று ஆர்வத்துடன் வினவினார்.
நேத்ரா, “அக்கா இப்போ பாடியே காட்டுவா… அது கொஞ்சம் சோகப் பாட்டு, அதான் அக்கா யோசிக்கிறா…” என்றவள் அபிசாராவைப் பார்த்து, “முதல்ல இதை பாடிட்டு, அடுத்து ஒரு ஜாலியான பாட்டுப் பாடு” என்றாள்.
“நான் உனக்கு தனியா பாடுறேன்” என்ற அபிசாரா மித்ராணியை பார்த்து, “நீங்க ஒரு பாட்டுச் சொல்லுங்க அத்தை” என்றாள்.
மித்ராணி, “முதல்ல நேத்ரா சொல்ற பாட்டைப் பாடிட்டு, அடுத்து உனக்கு பிடிச்ச பாட்டைப் பாடு” என்றார் மென்னகையுடன்.
மித்ராணியே சொல்லிவிட வேறு வழி இல்லாமல் அந்த பாடலையே பாட தாயாரானாள்.
கண்களை மூடியபடி அவள் தயாராக, அவளது மனக் கண்ணில் புன்னகையுடன் மதிவர்மன் தோன்றினான்.
“மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா – இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
(இந்த இடத்தில், என்ன முயற்சித்தும் தனது கட்டுப்பாட்டை இழந்து அவளது கண்கள் கலங்கிட, மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.)
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா… வாழ்வே வெறும் கனவா… 
(மார்கழி) 
இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா…” என்றதோடு பாடலை முடித்தப் போது மித்ராணி அவளை தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டார்.
ப்ரனேஷ் ஒரு குவளையில் தண்ணீரை மனைவிடம் கொடுக்க, கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்ட இனியமலர், “அபி” என்று அழைத்து தண்ணீரை கொடுத்தார்.
சூழ்நிலைப் புரிந்து கண்களை துடைத்தபடி புன்னகைக்க அவள் முயற்சிக்க, மித்ராணி புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டு, “நீ நம்ம வீட்டுக்கு வந்ததும் எல்லாம் சரியாகிடும் டா” என்றார்.
சர்வேஷ் நேத்ராவை முறைக்க, அவளோ அதை கண்டுக் கொள்ளாமல் ஆதிராவிடம் அவளது கைபேசி எண்ணை வாங்கி, தான் எடுத்த காணொளியை புலனம்(WhatsApp) மூலம் ஆதிராவிற்கு அனுப்பிக் கொண்டிருந்தாள்.
யான்விஸ்ரீ, “ஓகே ஓகே… நெக்ஸ்ட் பாட்டுப் பாடுங்க” என்றாள்.
இதற்குள் தண்ணீரை அருந்தி தன்னை நிலைபடுத்தி இருந்த அபிசாரா மித்ராணியைப் பார்த்து புன்னகையுடன், “தேங்க்ஸ் அத்தை” என்றாள்.
அவரும் புன்னகையுடன் அவளது கன்னத்தைத் தட்டினார்.
அபிசாரா யான்விஸ்ரீயைப் பார்த்து, “அக்கா ‘கண்ணுக்குள் பொத்தி வைத்தேன்’ (திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படம்) பாடுறேன், ஸ்ரீ குட்டி டான்ஸ் ஆடு” என்றதும் அவள் உற்சாகத்துடன், “ஓகே… நான் ரெடி” என்றாள்.
அடுத்து அபிசாரா அந்த பாடலைப் பாட, யான்விஸ்ரீ அழகாக ஆடி அனைவரையும் கவர்ந்தாள்.
அடுத்து ஆதிரா, அனன்யா மற்றும் நேத்ராவை ஆடக் கூறிய அபிசாரா சில உற்சாகமான பாடல்களை பாடி சூழ்நிலையைக் கலகலப்பாக மாற்றினாள்.
இறுதியில் அனைவரின் மனமும் உற்சாகத்தில் திளைக்க, புகழ்வேந்தன் குடும்பம் மதிய விருந்துணவை முடித்துக் கொண்டு கிளம்பினர்.

நினைவுகள் தொடரும்♥♥♥♥♥♥

Advertisement