Advertisement

அவள் சொல்லாமல் அவளது மனத்தில் இருந்ததைப் புரிந்து கொண்ட கணவனின் மீது அன்பு பொங்க,”மதியம் என்ன சாப்பிட்டீங்க?” என்று விசாரித்தாள் அருந்ததி.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி,”கரம்” என்றான் ஆதவன்.

அவனது சிரிப்பை உணர்ந்தவள்,”பொய் சொல்லாதீங்க..மதியத்துக்கு நான் தான் கரம் சாப்பிட்டேன்..நீங்கயில்லை.” என்று பொய்யாக அவனைக் கடிந்து கொண்டாள்.

“உண்மையை தான் சொல்றேன் அரு..நானும் கரம் தான் சாப்பிட்டேன்..உனக்கு ஃபோட்டோ அனுப்பி வைக்கறேன்..நீயே பார்த்துக்கோ.” என்று உடனேயே அவளுக்கு ஒரு ஃபோட்டோவை அனுப்பி வைத்தான். அதைப் பெரிதுபடுத்தி அவள் பார்க்க, ஒரு சின்ன தட்டில், பொரி, அதன் மீது பச்சை கலர் சட்னி, வெள்ளரிக்காய், சோளம் என்று கலர் கலராக இருந்தது.

“அதுக்கு பெயர் பங்கார்பெட் பேல் (bangarpet bhel) பெங்களூர்லே ஃபேமஸ்ஸாம்..சில இடத்திலே கேரட் சேர்க்கறாங்க..நறுக் நறுக்குன் நடு நடுவுலே நாக்கிலே வெள்ளரிக்கா துண்டு அகப்பட்டு நல்லா டேஸ்டா இருந்திச்சு.” என்றான் ஆதவன்.

“அடடா வனஜா அக்கா காலைலே வந்திருந்தா அவங்க கொண்டு வந்த வெள்ளரிக்காயை என்னோட கரம்லே சேர்த்திருப்பேனே” என்று அருந்ததி வருத்தப்பட, அதற்கு,

“நான் மதியம் தானே அதைச் சாப்பிட்டேன்.” என்று ஆதவன் பதில் கொடுக்க,

“ஆமாமில்லே…நீங்க திரும்பி வந்ததும் வெள்ளரிக்காய் போட்டு கரம் செய்து சாப்பிடலாம்.” என்றாள் அருந்ததி.

“அம்மா தாயே இங்கே பொரிலே என்னத்தை சேர்க்கறாங்கண்ணு கண்டுபிடிச்சு அதை உனக்குச் சொல்ல தான் மதியத்துக்கு பேல் பூரி சாப்பிட்டேன்..தில்லி, பாம்பேலேர்ந்து கரூர் வரை இந்தப் பொரி பண்டம் விதம் விதமா கிடைக்குது..ஒவ்வொரு ஊர்லேயும் ஒரு பொருளைச் சேர்த்து அதுக்கு வேற பெயரைக் கொடுத்து புதுசாக் கண்டுபிடிச்ச மாதிரி பில்டப் கொடுக்கறாங்க..எல்லா ஊர்லேயும் அதுக்குப் பெயர் பொரின்னு இருந்தா எவன் அதைத் தேடிப் போய் சாப்பிடப் போறான்?” என்றான் ஆதவன்.

“உங்களுக்குப் பிடிக்கலைன்னா விடுங்க..எனக்குப் பிடிச்சிருக்கு..எல்லா ஊர்லேயும் செய்யற மாதிரி செய்து பார்த்து அதோட எனக்குப் பிடிச்சதைப் போட்டு புதுசா ‘அரு கரம்னு’ ஒண்ணைக் கண்டுபிடிக்க போறேன்.” என்றாள்

“என்னை விட்டிடு தாயே..புதுசு புதுசா நீ செய்யற கரம் வேணாம்..எப்போதும் செய்யற சன்னா பூரி போதும்..அதுக்கு என்னையே கொடுத்திடுவேன்.” என்று மனைவியிடம் சரணடைந்தான் கணவன்.

“என்னோட பூரி சன்னாக்காக ராசிபுரம் ஸ்கூல்லே காண்ட்ராக்ட் வாங்கித் தரேன்னு லக்ஷ்மி டீச்சர் வாக்கு கொடுத்திருக்காங்க.” என்றாள் அருந்ததி.

“நிஜமாவா?” என்று ஆதவன் அதிர்ச்சியாக,

“அதைப் பற்றி பேசிட்டு இருந்ததாலே தான் லேட்டாகிடுச்சு..’காண்ட்ராக்ட் கிடைக்க உன் கைப்பக்குவத்திலே சன்னா பூரி ஒண்ணு மட்டும் போதும்.’ நு சொல்றாங்க.” என்று பெருமையாக சொன்னாள் அருந்ததி.

அதற்கு,“அவங்க அப்படித் தான் சொல்வாங்க..அது மட்டும் போதாது.” என்றான் யதார்த்தத்தை அறிந்திருந்த ஆதவன்.

“தெரியும்..கொஞ்சம் பணமும் தேவைப்படும்னு..அவங்க சிபாரிசு செய்தா கண்டிப்பா காண்ட்ராக்ட் கிடைக்கும்..எப்படியாவது முதலுக்கு ஏற்பாடு செய்திட்டோம்னா போதும்..சமாளிச்சிடலாம்” என்றாள் அருந்ததி.

“இரண்டு வருஷம் போகட்டும் அரு..சின்னதா ஒரு கடை போடுவோம்..அது எப்படிப் போகுதுன்னு பார்த்திட்டு ஸ்கூல் கேண்டீனைப் பற்றி யோசிக்கலாம்.” என்றான் ஆதவன்.

“இப்போவே சின்னதா தானே செய்திட்டு இருக்கோம்.” என்று அவளது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள் அருந்ததி.

“இப்போ சின்னதா செய்திட்டு இருந்தாலும் சரியா செய்யலை..வீட்டுப் பின்னாடி சமைச்சுக் கொடுக்கறதெல்லாம் நான் போட்டு வைச்சு இருக்கற திட்டத்திலே சேரவே வராது. நமக்குன்னு ஓர் இடம். எல்லா அனுமதியும் வாங்கி, வரி கட்டி, நல்ல விதமா செய்யணும்னு நினைக்கறேன்..ஆடிட்டர்கிட்டே அதைப் பற்றி பேசினேன்..இடம் வாங்கிறதிலேர்ந்து யார் பெயர்லே, எப்படி, என்னென்னு ஆரம்பத்திலிருந்து எல்லாம் சரியா செய்யணும் அப்போ தான் பிரச்சனை வராம இருக்கும்னு சொல்றார்..ராசிபுரத்திலே இடம் பார்க்கறேன்..முதல்லே அங்கே ஹோட்டல் ஆரம்பிப்போம்..அப்புறம் கேண்டீன்னு படி படியாச் செய்வோம்..அப்படியே மதுகுட்டியை அதே பள்ளிக்கூடத்திலேயும் சேர்த்திடலாம்..என்ன சொல்ற?” என்று ஆதவன் அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை வெளியிட,

“அஞ்சு நிமிஷத்திலே ஹோட்டல், கேண்டீன்னு மதுவை ஸ்கூல்லே சேர்க்கறவரை போயிட்டீங்க.” என்று ஆச்சரியப்பட்டாள் அருந்ததி.

“ஹோட்டலுக்கு பெயர் கூட யோசிச்சு வைச்சிட்டேன்.” என்றவனிடம்,

“என்ன பெயர்? சொல்லுங்க..சொல்லுங்க.” என்று ஆவலுடன் கேட்டாள் அருந்ததி.

“மதுரா உணவகம்” என்றான் ஆதவன்.

“அடுப்படிலே கஷ்டப்படப் போகறது நான்..ஹோட்டலுக்கு உங்க ராணியோட பெயரா.” என்று சிணுங்கினாள் அருந்ததி.

“உன்னோட பெயர் ஹோட்டலுக்கு பொருந்தி வராது அரு…என் மக ராணி இல்லை மகாராணி…அதான் அவ பெயரை ஹோட்டல்க்கு வைக்கப் போறேன்..உன் பெயருக்கு வேற பிளான் வைச்சிருக்கேன்.” என்று மெல்லியக் குரலில் பதில் கொடுத்தான் ஆதவன்.

அந்தக் குரலைக் கேட்டவுடன் ஏதோ வில்லங்கமா சொல்லப் போகிறான் என்று உணர்ந்தவள், அதை அறியும் ஆவலில்.” என்ன பிளான் சொல்லுங்க.” என்று செல்லமாக அவனுக்கு கட்டளையிட்டாள்.

“நேர்லே வந்து சொல்றேன்.” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தான் ஆதவன்.

“இப்போவே சொல்லுங்க.” என்று அடம் பிடித்தாள் அருந்ததி.

அப்போது ஆதவனுக்கு ஓர் அழைப்பு வர,”இரு இந்தக் கால்லை பேசிட்டு வரேன்.” என்று அவளது அழைப்பை ஹொல்டில் போட்டான். சில நொடிகள் கழித்து,

“இன்னொரு வண்டி வருது அரு..என்ன ஏத்தணும், யார் பெயர்லே ரசீது போடணும்னு கொஞ்ச நேரம் கழிச்சு நான் ஃபோன் செய்யறேன்.” என்றான் ஆதவன்.

“முடியாதுன்னு சொல்லிடுங்க..ஏற்கனவே வந்த வண்டிலே சாமானை ஏத்திட்டு நேரமா நான் வீட்டுக்குப் போயே ஆகணும்..இராத்திரிக்கு ரசம் வைச்சு முட்டை வறுவல் செய்யணும்னு உங்கம்மா ஆர்டர் போட்டிருக்காங்க..ஆயாக்கு கஞ்சி வைச்சுக் கொடுக்கணும்..மதுவும் பசி தாங்க மாட்டாங்க.” என்றாள் அருந்ததி.

“அதை நான் பார்த்துக்கறேன்..நீ நேரே கௌடோனுக்கு போயிடு..ராஜ் அண்ணன் என்ன சொன்னாலும் ஒதுக்காதே அவரை அனுப்பி வைச்சிடு.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டிக்க இருந்தவன்,

“அரு” என்று அழைக்க,

“என்ன சொல்லுங்க..நேரமாகிட்டு இருக்கு.” என்று எரிச்சலுடன் அவள் கத்த,

“அருந்ததி கரம் செண்டர்” என்று அவளுடைய பெயருக்கான அவனது பிளானை சொல்லி விட்டு அதற்கு அவள் எதிர்வினை ஆற்றுமுன் அழைப்பைத் துண்டித்தான் ஆதவன்.

‘மக பெயர்லே ஹோட்டல், நம்ம பெயர்லே கரம் கடை..வரட்டும் நாளைக்கு..இருக்கு இவங்களுக்கு.’ என்று கணவனை செல்லமாக கடிந்து கொண்டு வண்டியை கௌடோனை நோக்கிச் செலுத்தினாள் அருந்ததி.

இளைய மகன், கணவனை காணாமல் கவலையில் அமர்ந்திருந்த வள்ளியை அறைக்குள்ளிருந்த அவரது கைப்பேசி அழைத்தது. அறைக்குச் சென்று அழைப்பை ஏற்றவர்,”காலைலே வந்தேன்..இப்போ தான் என்னோட பேச உனக்கு பேச நேரம் கிடைச்சதா?” என்று ஆதவனிடம் கேட்டார்.

‘இப்போ கூட நேரம் கிடைக்கலை’ என்று பதில் சொல்ல நினைக்க, அதற்குள் அவனை முந்திக் கொண்டு,”உங்கப்பாவோட பேசினேயா?” என்று கேட்டார்.

“இல்லை ம்மா..மதுவோட பேசவே எனக்கு நேரம் கிடைக்கலை..ரொம்ப அழறான்னு வனஜா இப்போ தான் அவளோட ஃபோன்லேர்ந்து எனக்கு ஃபோன் போட்டு பேச வைச்சா.” என்றான்.

‘அப்படியா’ என்று அனுதாபம் கொள்ளாமல்,”நாளைக்கு எப்போ வருவே டா?” என்று அவரது காரியத்தில் கவனமாக இருந்தார் வள்ளி.

“இராத்திரி ஆகிடும்னு நினைக்கறேன்..உங்க பிளான் என்ன?” என்று அன்னையிடம் விசாரித்தான்.

“நாளைக்குக் காலைலே இல்லை மதியம் போல கிளம்பிடுவோம்னு நினைக்கறேன்.” என்று சொன்னவர், அப்படியே,”உதயன் வந்திருக்கான்..உங்கப்பாவும் அவனும் காலைலே வெளியே போனவங்க இன்னும் வீட்டுக்கு வரலை..கவலையா இருக்கு.”என்று மூத்த மகனிடம் அவரது கவலையைப் பகிர்ந்து கொண்டார் வள்ளி.

அம்மாவின் கவலையைக் கேட்டவுடன் கடந்த இரண்டு வருடங்களாக தனியாக கஷ்டப்பட்டது, உதயன் வீட்டு கிருஹப்பிரவேசத்தன்று தெரிந்தவரிடம் உதவி கேட்டு, தி நகரில் தங்கியது, ஒருமுறை கூட ஃபோன் செய்து யாரும் அவர்களை விசாரிக்காதது என்று அனைத்து நிகழ்வுகளும் வலிகளும் உள்ளத்திலிருந்து பொங்கி எழ,“இரண்டு பேரும் ஊர்க்காரங்க தானே..காணாமப் போயிட மாட்டாங்க..வீட்டுக்கு வந்து சேருவாங்க.” என்று வெடுக்கென்று பதில் அளித்தான்.

அந்த பதிலில் அதிர்ச்சியாகியிருந்த வள்ளியிடம்,”அருந்ததி வர நேரமாகும்..அவளை கௌடோனுக்கு அனுப்பி வைச்சிருக்கேன்..இன்னொரு வண்டி வருது..அதிலே சாமானை ஏத்திவிட்டிட்டு தான் வருவா..இராத்திரிக்கு ரசம் வைச்சு முட்டை வறுவல் செய்திடுங்க.” என்று சொல்லி வாயடைத்துப் போக வைத்தான்.

அடுத்த சில நொடிகளில் அவரது அதிர்ச்சியிலிருந்து மீண்ட வள்ளி,”என்ன டா நினைச்சிட்டு இருக்க நீ?..நான் உன் அம்மா டா வேலைக்காரி இல்லை.” என்று கோபத்துடன் சொல்ல,

“அதனால் தான் உங்க நினைப்பை மாத்த முயற்சி எடுக்கறேன்..ஆபிஸிலே வேலை செய்து சம்பாதிக்கறவங்களும் வீட்லே சுயதொழில் செய்து சம்பாதிக்கறவங்களும் ஒண்ணு தான்னு உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கறேன்..புரியுது ஆனா மாற முடியாதுன்னா அதை இப்போவே சொல்லிடுங்க..அடுத்தமுறை என் வீட்டுக்கு வர்றத்துக்கு முன்னாடி எனக்கு நீங்க தகவல் கொடுக்கணும்..அருந்ததி சௌகர்யத்தை நான் கேட்கணும்.” என்று மிகத் தெளிவாக அவனது எண்ணத்தைத் தெரியப்படுத்தினான்.

‘நீங்க உங்க எண்ணத்தை மாத்திக்கிட்டா மட்டும் போதாது..அதைச் செய்கைலேயும் காட்டணும்..இல்லைன்னா இது என் வீடு..என்னோட மனைவி சரின்னு சொன்னா தான் இந்த வீட்லே உங்களுக்கு இடமிருக்கும்.’ என்று மகன் சொன்னதைச் சரியாகப் புரிந்து கொண்ட வள்ளிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இரு மகன்களுக்கிடையே ஏற்ற தாழ்வு இருந்தாலும் பாரபட்சமில்லாமல் நடந்து கொண்டால் தான் அவர்கள் உறவு தொடருமென்று என்று ஆதவன் சொன்னது அவரைச் சென்றடைந்தது.

பிறப்பிலிருந்து இறப்பு வரை, குடும்பம், பாலினம், தோற்றம், படிப்பு, உத்தியோகம், வருமானம், சந்ததி என்று பல ஆக்கக்கூறுகளின் (factors, components) அளவை வைத்து தான் மனிதனின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. சில சமயங்களில் அவன் இறந்த பின்னும் கூட அவனின் மதிப்பு சிரஞ்சீவியாக வாழ்வது இந்தக் காரணிகளால் தான்.

யார் அவனை எப்படி நடத்துகிறார்கள்? அவனிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அவனே தீர்மானித்து, அடுத்தவர்களின் அளவுகோல்களை அர்த்தமற்றதாக்கியிருந்தான் ஆதவன். அளவிட முடியாத அன்பு, பரிவு, பாசம், நேசம் போன்ற உணர்வுகள் தான் மனித உறவுகளின் அடிப்படை. அஸ்திவாரம், என்பதை புரிந்து வைத்திருந்ததால் அவன் குடும்பத்தினரோடு இருக்கும் இழை முழுவதுமாக இத்துப் போகும் முன் அதைப் புணரமைக்க அவனாலான முயற்சியை எடுத்திருந்தான்.

அவனின் மதிப்பை அவனைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. அப்படிச் செய்ய நினைப்பவர்களுக்கு அவன் வாழ்க்கையில் இடமில்லை என்ற அவனது முடிவை தெளிவாக வள்ளிக்குத் தெரியப்படுத்திவிட்டான்.

மாமியாராக அருந்ததியை ஆட்டுவித்துக் கொண்டிருந்தவரால் திடீரென்று அவளோடு ஒட்டி உறவாட முடியுமென்று தோன்றவில்லை. மூத்த மகனுடனான உறவை சீர் செய்வது எப்படியென்று யோசித்தபடி இருக்க,”யார்கிட்டே பேசிட்டு இருக்க டீ வள்ளி?” என்று காளியம்மா குரல் கொடுக்க, கைப்பேசியுடன் அறையிலிருந்து வெளியே வந்தவரிடம்,”உதயனா?” என்ற அவர் விசாரிக்க,’இல்லை’ என்று வள்ளி தலையசைக்க,”ஆதவனா?” என்று அவர் கேட்க,’ஆமாம்’ என்று தலையசைத்தவுடன்,”குட்டிகிட்டே பேசச் சொல்லு..ஒரு நாள்லேயே அப்பனைப் பார்க்காம வாடிப் போயிட்டா..இப்போயெல்லாம் நிறைய விவரம் வந்திடுச்சு அதுக்கு..பைக் சத்தம் கேட்டா வாசலுக்கு ஓடிப் போகுது.” என்றார்.

காளியம்மா சாதாரணமாக பேசியது வள்ளியின் புத்தியில் வேறு விதமாகச் சென்றடைய, மூத்த மகன் நீட்டிய துடுப்பை இறுக்கமாக பற்றிக் கொள்ள முடிவு செய்து,”மதுக்கு முட்டை வறுவல் பிடிக்குமா டா?” என்று பேத்தியின் உணவு பழக்கத்தை பற்றி விசாரித்து, ஊசலாடிக் கொண்டிருந்த அவர்களின் உறவிற்கு பாட்டியாக புத்துயிர் அளிக்க முயற்சி எடுத்தார். அவரது புது முயற்சியை ஏற்றுக் கொண்ட ஆதவனும் மதுவின் தந்தையாக,

“கொத்தமல்லி, பச்சை மிளகாய் அரைச்சு விட்டு தோசைக்கு செய்வீங்களே ம்மா அந்த மாதிரி செய்து வைங்க..காரம் கம்மியா இருந்தா ஒரு முட்டை முழுசா சாப்பிடுவா.” என்று பழைய கதையில் பாட்டி, பேத்தி கதாபாத்திரங்களைக் கொண்டு வந்து புது அத்தியாயத்தை, உறவை ஆரம்பித்து வைத்தான்.

****ஆரம்பம்****

சகோதரனுடன் சண்டை போட்டாலும் அத்தையாக அவனது குழந்தைகளோடு உறவு வைத்துக் கொள்ளும் சகோதரிகள். சகோதரிக்கும் மனைவிக்கு ஒத்துப் போகவில்லை என்றாலும் சகோதரியின் குழந்தைகளுக்கு தாய் மாமனாக துணை இருக்கும் சகோதரர்கள். பூசல், சச்சரவுன்னு  குடும்பத்திலே பலது ஓடிக்கிட்டு இருந்தாலும் சொந்தம் விட்டுப் போகாம இருக்கறதுக்கு காரணம் புதிதாக உருவாகும் உறவுகள் தான்னு நினைக்கறேன். ஆதவன், உதயன் உறவும் மதுவாலே புதுசா ஆரம்பிக்க வாய்ப்பிருக்கு. அந்தக் கோணத்தை எக்ஸ்ப்ளோர் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்கலை. எனவே கதையை இதோட முடித்துக் கொள்கிறேன்.

***************

அப்புறம், இந்தப் பதிவுலே சொல்லியிருக்கற மாதிரி பல பொருள்களைச் சேர்த்து ‘bhel puri’ யை பலவிதமா தயார் செய்யறாங்க. எனக்கு தெரிஞ்ச சில வித்தியாசங்களைக் கொடுத்திருக்கேன்.

Madras masala pori – onion, tomatoes, chilli powder, turmeric powder, roasted ground nuts

Bombay Bhel – onion, tomato, green chutney, sweet and sour chutney, sev

Bangalore, bangarpet bhel – cucumber, carrot, boiled sweet corn

Kolkata jhal muri- mustard oil, onion, tomato, gugni (கூக்னிங்கறது சாட் ஐட்டம்..dried peas ல செய்வாங்க..இது தனியாவும் சாப்பிடக் கிடைக்கும்..இதைப் பேல் பூரிலே சேர்த்தும் சாப்பிடறாங்க)

Schezwan bhel – schezwan sauce

Achaari bhel – pickle masala

Attached picture is mobile muri chilli dhania flavour from Swissyum, Kolkata.

நம்ம ஊர்லே கிடைக்கற பொரி பொட்டலம் போல தான் இருக்கு ஆனா காகிதமில்லை வேற பேக்கிங். பாலிதீன் வந்த பிறகு பேப்பர் பொட்டலம் கிடைக்கறது அரிதாகிடுச்சு.

Enjoy the virtual muri pottalam readers. Thanks for supporting. Stay blessed.

Advertisement