Advertisement

அத்தியாயம் – 10

அந்த நேரம் பெங்களூரில், உதயனின் வருகையைப் பற்றி யோசித்தபடி ஆடிட்டர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் ஆதவன். அப்போது அவனது கைப்பேசி ஒலி எழுப்பியது. அழைப்பை ஏற்றவன், சில நொடிகளுக்கு அந்தப் புறத்தில் பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டு,

“பிரச்சனை இல்லை…லோட் ஆகறவரை இருப்பாங்க….எப்படியும் முழு லோட் ஏத்திட்டு இன்னைக்கு மிட்நைட்க்கு மேலே தான் வண்டி புறப்படும்…உங்க லோடிங் முடிஞ்சவுடனே ரெசிப்டோட ஃபோட்டோ உங்க நம்பருக்கு அனுப்பி விடச் சொல்றேன்..நீங்க உங்க ஆளுங்களுக்கு அதை அனுப்பி விட்டிடுங்க.” என்ற சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தவன் அடுத்து அருந்ததிக்கு அழைக்குமுன் ஆடிட்டர் அவனை அழைத்து விட்டார்.

அதே நேரம் அருந்ததியின் கைப்பேசி ஒலித்தது. சுவரின் மீதிருந்ததை உயிர்ப்பித்து சில நொடிகளுக்கு பேசியவள், கடைசியில்,”சொல்லுங்க அண்ணே..அரைமணிலேயா..சரி.” என்று பதில் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

ஆதவன், அருந்ததி இருவரும் அவரவர் தொழிலில் மற்றவரை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தனர். கோவிட் கற்றுக் கொடுத்த பாடம் அது. யாரையும் சார்ந்திருக்காமல், அவனில்லாத போது தனியாக வியாபாரத்தைக் கையாள பல நுணுக்கங்களை மனைவிக்குக் கற்றுக் கொடுத்திருந்தான் ஆதவன். அதே போல் அருந்ததியின் வியாபாரத்திற்கு தேவையான மளிகைப் பொருள்களைத் தருவிப்பது, சமையலில் உதவி செய்வது, தயாரான உணவு பொருள்களைப் பேக் செய்து டெலிவரி செய்வது ஆதவன் தான்.

பல வருடங்களாக இடைத்தரகன் தொழிலைச் செய்து வந்தாலும் கோவிட் நேரத்தில் எந்த பொருள், எப்போது, எவ்வளவு, எங்கே தேவைப்படும் என்று கணிக்க கடினமாக இருந்தது ஆதவனுக்கு. அவன் மூலமாக கை மாறிய பொருள்கள் சிலவற்றின் தேவையை ஆராய்ந்து, அடுத்து எப்போது அதன் தேவை ஏற்படும் என்று யுகித்து அதை ஸ்டாக் செய்ய ஊருக்கு வெளியே, நெடுஞ்சாலையில் ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து அதைக் கிடங்காக உபயோகிக்க ஆரம்பித்தான் ஆதவன். பெங்களூரைச் சேர்ந்த டீலர் ஒருவருக்கு நாமக்கலில் ஏஜென்ஸி இருந்தது. கிடங்கிலிருந்து விற்பனை செய்த பொருள்களுக்கு அந்த ஏஜென்சி பெயரில் தான் ரசீது தயாரானது. இப்போது வரை அந்த ஏற்பாடு தான் தொடர்கிறது. அதை அவன் பெயரில் மாற்றி அமைக்க தான் இந்த பெங்களூர் விஜயம். அருந்ததியிடம் கூட இந்த விஷயத்தை அவன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆடிட்டரைச் சந்தித்து பேசிய பின் அவளுக்குத் தெரிவிக்கலாமென்று நினைத்திருந்தான்.

சிறிது நேரத்திற்கு முன் உதயன் ஊருக்கு வந்திருப்பதைப் பற்றிய செய்தி அவனுக்கு கிடைக்க, குடும்பத்தாரின் திடீர் வருகை அவனது மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அவர்களோடு இருக்கும் உறவிற்கு என்ன பெயர் கொடுப்பதென்று அவனுக்குப் புரியவில்லை. இரத்த சம்மந்தம் இருந்தாலும் அவர்களைச் சொந்தம் என்று அவன் சொல்ல முடியாது. அவனைப் பொறுத்தவரை உதயன் வீட்டு கிருஹப்பிரவேசத்தன்று நடந்தது நடந்தது தான். அதை மாற்ற அவர்கள் யாரும் முயற்சி செய்யவில்லை. அவனும் அதை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. அதற்கு பின் எத்தனையோ விஷயங்களைக் கணவன், மனைவியாக அருந்ததியும் அவனும் கடந்து வந்து விட்டார்கள்.

கொரோனா தாக்கிய போது கைக்குழந்தை மதுவோடு நிரம்பக் கஷ்டப்பட்டு விட்டார்கள். திடீரென்று நாடு மொத்தமும் முடங்கிப் போக, சரக்கை ஏற்றி வந்த அவனின் வாகனங்கள் பாதி வழியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டதால் ஆதவனின் வருமானம் மொத்தமாக நின்று போனது. சில நாள்களுக்கு தோட்ட வேலைக்கு சென்றான். ஊரடங்கு கெடுபிடி அதிகமான போது, வீட்டிலேயே இருந்தான். அறிந்தவர் தெரிந்தவரிடம் கைம்மாத்து வாங்கி, அப்படி இப்படி என்று செலவுகளை சமாளித்து இதற்கு மேல் முடியாதென்று அவன் நினைத்த போது அவனைப் போலவே பலரின் நிலையும் இருக்க, மக்களின் அல்லலைப் போக்க கொஞ்சம் போல் சரக்கு போக்குவரத்து ஆரம்பித்தது. முடங்கிப் போயிருந்த வாகனங்கள் அதன் பயணத்தைத் தொடங்க, ஆதவன் நிலையும் சிறிது சீரானது. அதன் பின் தான் அவனே எதிர்பார்த்திராத திருப்பங்கள் ஏற்பட்டன.

எந்த ஊரில் என்ன பொருள் கிடைக்கும்? அது இப்போது யாருக்கு தேவைப்படுகிறது? அதை எப்படி, எத்தனை நாள்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் சேர்பிக்க முடியும்? எத்தனை வாகனங்கள் எந்த செக்போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன? எத்துணைக்கு அனுமதி படிவம் இருக்கிறது? எத்தனை ஓட்டுநர்கள் கோவிட் பரிசோதனை முடிவுகளோடு சுற்றுகிறார்கள்? யார் எங்கே தனிமைப்படுத்தபட்டு இருக்கிறார்களென்று அத்தனை விவரங்களையும் அவனது நினைவடுக்களிருந்து தோண்டி எடுத்து, அவற்றை அவனுக்கு சாதகமாக, வருமானமாக மாற்றிக் கொண்டான் ஆதவன்.

பெரிய, சிறிய, மிகச் சிறிய, தெருவோரக் கடைகள் என்று எதுவும் முழுமையாக செயல்படாததால், மொத்த வியாபாரத் தரகனாக, பொருள்களை உற்பத்தியாளர்களிடம் வரவழைத்து முதலில் அவனது வீட்டில், பிறகு கிடங்கில் ஸ்டாக் செய்து வைத்தான். அந்தப் பொருளின் தேவை ஏற்படும் போது, வாகனம், ஓட்டுநர், அனுமதி படிவம் என்று சகலத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்து பெரும் லாபம் சம்பாதித்தான். அதில் ஒரு பகுதியை மனைவியின் வியாபாரத்தில் முதலீடு செய்தான். அவளுக்கு இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கிக் கொடுத்தான். அருந்ததியும் சம்பாதிக்க ஆரம்பிக்க, வாழ்க்கையை எதிர்கொள்ள இருவருக்கும் தைரியம் கிடைத்தது. அருந்ததி சமாளித்து விடுவாளென்ற நம்பிக்கையில் பெங்களூருக்குக் கிளம்பி வந்திருந்தான்.

எப்படி இந்தத் திடீர் மாறுதலை சமாளிப்பது என்று யோசித்த அருந்ததி, முதலில் உணவை டெலிவரி செய்ய வேண்டுமென்று முடிவு செய்தாள். அதற்குப் பின் கௌடோன் என்று திட்டமிட்டாள். எப்படியும் அனைத்தையும் முடித்துக் கொண்டு திரும்பி வர ஒருமணி நேரமாவது ஆகிவிடும். அத்தனை நேரம் ஆயாவிடம் இருக்க மாட்டாள் மது. இரு சக்கர வாகனத்தில் உணவுப் பொருள்களோடு மகளையும் அழைத்து செல்வது சாத்தியமில்லை என்பதால் என்ன செய்யலாமென்று அருந்ததி யோசித்துக் கொண்டிருந்த போது அவனுடைய காப்பி டம்பளருடன் பின்பக்கம் வந்தான் கனகராஜ்.

உடனே,”மாமா, கௌடோன் சாவி கொடுக்கறேன்..சாமான் லோட் செய்ய அரைமணிலே ஆள் வராங்களாம்..கொஞ்சம் போய் பார்க்கறீங்களா?..நான் ஆர்டர் டெலிவர் செய்திட்டு அங்கே வந்திடறேன்.” என்றாள்.

“அப்போ மது?” என்று விசாரித்தது வள்ளி இல்லை வனஜா. பேத்தி என்று ஒருத்தி இருப்பது வள்ளியின் மனத்தில் இன்னும் பதியவேயில்லை. அடுத்த தலைமுறை வந்து விட்டதை அவர் உணரவேயில்லை. இளைய மகன் உதயன் இன்னும் அவரது இதயத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால், ‘எதுக்கு குழந்தையே அலைய வைக்கற..நான் பார்த்துக்கறேன்.’ என்று உதவிக்கரம் நீட்டவில்லை.

“டெலிவரிக்குப் போகும் போது சாமான்களோட அவளை முன்னாடி நிக்க வைச்சு அழைச்சிட்டுப் போக முடியாது..இரண்டு விளையாட்டுப் பொருளைக் கொடுத்தா சமத்தா விளையாடிட்டு இருப்பா.” என்று பதில் கொடுத்த மருமகளும் மாமியாரிடம் உதவி கேட்கவில்லை.

காப்பி டம்பளரை வனஜாவிடம் கொடுத்து விட்டு,”மதுவை எங்களோட கௌடோனுக்கு அழைச்சிட்டுப் போறோம்..நீ அங்கே வர வேணாம்..வேலை முடிஞ்சதும் மதுவை வீட்டிலே விட்டிட்டு நாங்க கிளம்பறோம்..நீ போய் சாவியை கொண்டு வா.” என்றான் கனகராஜ்.

“வேணாம் மாமா..உங்களை வேலை செய்ய விட மாட்டா.” என்று மறுத்தாள் அருந்ததி.

“என் வீட்லே இரண்டு பேரை சமாளிச்சிட்டு எல்லா வேலையும் செய்திட்டு இருக்கேன்.” என்று அருந்ததியிடம் சொன்னவன்.”நீ பெரியப்பாகிட்டே வா கண்ணு.” என்று மதுவைத் தூக்கிக் கொண்டவன்.”பைக்லே ஒரு ரவுண்ட் அடிக்கலாம்..இதை பத்திரமா வைச்சுக்கோங்க” என்று அவனது கைப்பேசியை மதுவிடம் கொடுத்து விட்டு,”வனஜா சாவியை வாங்கிட்டு வா நான் வெளியே இருக்கேன்.” என்று மனைவியிடம் சொல்லி விட்டு வாசலுக்கு சென்று விட்டான்.

வனஜா, கனகராஜ் இருவருமே அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து கொண்டது வள்ளிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதே சமயம் அதை வெளிப்படுத்தினால்,’நீ நடந்துக்கறது நல்லா இருக்கா?’ என்று அவருடைய அம்மா கேட்டுவிடுவார் என்பதால் அமைதியாக அமர்ந்திருந்தார் வள்ளி.

உதயனுக்கும் சவீதாவிற்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் வள்ளிக்குத் தெரியாமல் இல்லை. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சண்டைகள் அவரைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன. அதுவும் சவீதாவிற்கு வேலை போனதிலிருந்து அவளது குணம் மிகவும் மோசமாகியிருந்தது. மாமியாரென்ற மரியாதை இல்லாமல் அவரைப் பேசுவது, நடத்துவது என்று அவளது நடவடிக்கைகள் எல்லை மீறிக் கொண்டிருந்தன. சில நாள்களாகவே அதைப் பற்றி உதயனிடம் எப்படிப் பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தவர் இப்போதும் அந்த யோசனையில் மூழ்கிப் போனார். சென்னைக்கு திரும்பிப் போகும் போது மகனிற்குத் தெரியப்படுத்தி விட வேண்டுமென்ற முடிவிற்கு வள்ளி வந்திருந்த போது வீடு அமைதியாகி இருந்தது. யாருமே அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்றிருந்தனர்.

அனைவரும் சென்ற பின் மகளுடன் தனித்து விடப்பட்ட காளியம்மா வள்ளியோடு உரையாட விருப்பமில்லாமல் சுவரோரமாக கண்களை மூடிப் படுத்துக் கொண்டார். வள்ளிக்குமே அம்மாவுடன் பேச சமாசாரமில்லை. முன் வாசலுக்கு சென்று அமர்ந்து கொண்டால் அக்கம் பக்கத்தவரின் விசாரணையை எதிர் கொள்ள நேரிடுமென்பதால் பின் வாசலில் அம்மாவின் அருகிலேயே அமர்ந்து கொண்டு கணவர், இளைய மகனின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார் வள்ளி. அவர்கள் வருவதற்குள் அருந்ததி வந்து விட்டால் காப்பி போடும் வேலை மிச்சம் என்று எண்ணியவர் அறியவில்லை அவர் தான் இரவு உணவை சமைக்கப் போகிறாரென்று.

லக்ஷ்மி டீச்சர் வீட்டில் அவள் எதிர்பார்த்ததை விட தாமதமாகி விட, ஆயாக்குத் துணையாக மாமியார் இருந்தாலும் வேக வேகமாக அவளின் ஸ்கூட்டியை வீட்டை நோக்கி செலுத்தினாள் அருந்ததி. அப்போது அவளது கைப்பேசி தொடர்ந்து ஓசை எழுப்பியது. வண்டியை ஓரம் கட்டி விட்டு அழைப்பை ஏற்று,

“சாமானை வண்டிலே ஏத்த ராஜ் மாமாவை அனுப்பி வைச்சேன்..உங்களுக்கு ரசீது வந்திடுச்சா?” என்று விசாரித்தாள்.

“இப்போதான் வண்டி வந்திருக்குன்னு வனஜா ஃபோன் செய்தா..இனிமே தான் சாமானை ஏத்தணும்.” என்றான் ஆதவன்.

“ஏன் இவ்வளவு லேட்டு..அரைமணிலே வந்திடும் உடனே வேலை முடிஞ்சிடும்னு நினைச்சேன்.” என்றாள்.

“வண்டிலே பிரச்சனை..லேட்டா வந்திச்சு..மதுவைச் சமாளிக்க முடியாம தான் எனக்கு ஃபோன் செய்தா.” என்றான் ஆதவன்.

அதற்கு,“மதுவோட பேசினீங்களா? போன், போன்னு மதியத்திலேர்ந்து ஒரே அழுகை, அடம்.” என்றாள் அருந்ததி.

“பேசினேன்..நீ நேரே அங்கே போயிடு..அவங்களுக்கு நேரமாகிடுச்சு அவங்க ஊருக்குப் போகட்டும்..சாமான் ஏத்தினதும் நீ கிளம்பிடு.” என்றான் ஆதவன்.

“நான் வர லேட்டாகும்னு ஆயாகிட்டே சொல்லணுமே.” என்று அருந்ததி சொல்ல,

“ஒரு நாள்லே ஆயாக்கு ஃபோன் வாங்கிக் கொடுத்து அதை எப்படி உபயோகிக்கணும்னு கத்து கொடுத்திட்டேயா?” என்று கேலி செய்தான் ஆதவன்.

“பெங்களூர் போன ஒரே நாள்லே உங்க பேச்செல்லாம் மாறிப் போயிடுச்சு.” என்று பதிலுக்கு கேலி செய்தாள் அருந்ததி.

“அதெல்லாம் ஒண்ணும் மாறலை..நீ வேற மாதிரி பேசின..நானும் வேற மாதிரி பதில் கொடுத்தேன்.” என்று சொன்ன ஆதவன், சில நொடிகள் கழித்து,“அம்மாக்கு ஃபோன் செய்து நீ லேட்டா வருவேன்னு நான் சொல்லிடறேன்.” என்றான்.

Advertisement