Advertisement

அத்தியாயம் – 9

கணவனுக்குக் காப்பி கொடுத்து விட்டு வந்த வனஜாவிடம்,“இந்தா..குட்டிக்குத் தெரியாம இதைக் கொண்டு போய் உள்ளே வைச்சிடு.” என்று கரம் இருந்த கிண்ணத்தை கொடுத்தார் காளியம்மா.

அதைக் கையில் வாங்கிக் கொண்டு அவளுடைய காப்பியுடன் தரையில் அமர்ந்தவள், ஒரு வாய் கரம்மை போட்டுக் கொண்டு,”என்ன ஆயா..உப்பு, புளிப்பு, காரமெல்லாம் காணும்.” என்றாள்.

அது குட்டிக்காக தனியா எடுத்து வைச்சது.. அருந்ததி அவளுக்கு செய்யும் போது எல்லாத்தையும் கலந்துகிடுவா.” என்றார் காளியம்மா.

எதுக்கு இப்போ கரம் செய்திருக்கா? மதியம் அவ சரியாச் சாப்பிடலையா?” என்று விசாரித்தாள் வனஜா.

பூரி, பஜ்ஜின்னு எண்ணெய் சட்டி வேலை இருக்கும் போது மதியம் கரம் தான் செய்து சாப்பிடுவா..இராத்திரிக்கு தான் சோறு பொங்குவா.” என்றார் காளியம்மா.

அருந்ததிக்குத் தேவையான தகவலைக் கறக்க அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று உணர்ந்த வனஜா,”இன்னைக்கு இராத்திரி உனக்கும் சோறுதானா?” என்று காளியம்மாவிடம்  கேட்டாள்.

சில நாளைக்கு புழுங்கல் அரிசி கஞ்சி தான்..அன்னைக்கு சின்னவளுக்கும் ஆதவனுக்கும் இட்லி ஊத்தி கொடுத்திடுவா..இன்னைக்கு எனக்கு இதுவே போதும்..குட்டிக்கு குட்டி குட்டி பூரி..அருந்ததிக்கு கஞ்சி பிடிக்கும் அதனாலே இன்னைக்கு..” என்று காளியம்மா தொடருமுன்,

எங்களுக்குக் கஞ்சியெல்லாம் சரிபட்டு வராது ம்மா.” என்று காளியம்மாவிடம் சொன்ன வள்ளி,”இரசம் வைச்சு முட்டை வறுவல் செய்திடு அருந்ததி..நாளைக்கு காலைலே டிஃபனுக்கு பூரி மசால் செய்திடு.” என்று மருமகளுக்குக் கட்டளையிட்டு பூரி சாப்பிடும் ஆசையை நிறைவேற்றி கொண்டார்.

அதைக் கேட்டு வனஜாவும் அருந்ததியும் ஒருவரையொருவர் ஒரு நொடி நோக்கிக் கொண்டனர்

அத்தை, அம்மாவைப் பார்க்க எப்போ வர்றீங்க?” என்று கேட்டாள் வனஜா.

வள்ளியின் திட்டம் என்ன? எத்தனை நாள்கள் இங்கே இருக்கப் போகிறாரென்று அவரிடம் நேரடியாக கேட்காமல் அவளுடைய அம்மாவை பேச்சில் கொண்டு வந்து சூசகமாக கேட்டாள் வனஜா.  

உதயனைத் தான் கேட்கணும்..இங்கே வரப் போறோம்னு நேத்துவரை எனக்கு தெரியாது..நேத்து சாயங்காலம் சவீதாவுக்கு துணையா அவங்க அம்மாவை வரச் சொல்லிட்டு என்னையும் உன்னோட மாமாவையும் கார்லே ஏத்திட்டு இங்கே வந்திட்டான்.” என்று சொன்னவருக்கு நிஜமாகவே எதற்காக இந்தப் பயணமென்று தெரியவில்லை.

ஆறுமுகத்திற்கு தெரிந்திருந்தாலும் மனைவியிடம் அந்தக் காரணத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை. அவரும் உதயனும் தான் ஊருக்குப் போகப் போகிறார்களென்று அவர் எண்ணியிருக்க வள்ளியையும் உடனழைத்து வந்தது எதற்கென்று அவருக்குப் புரியவில்லை. ஒருவேளை அம்மா மூலம் ஆதவனிடம் உதவி கேட்க இருக்காலமென்று அவர் எண்ண, ஆதவன் ஊரில் இல்லாததால் அவரது அந்த யுகம் சரியா தவறாயென்று அவருக்கு தெரியவில்லை

மதியத்திலிருந்து இப்போது வரை அப்பாவும் மகனும் ஐந்தாறு பேரை சந்தித்து விட்டார்கள். அவர்களுக்குச் சாதகமாக விஷயம் நடக்குமென்ற நம்பிக்கை மறைந்து போயிருந்தது. நாளை எப்படியும் ஆதவன் வந்து விடுவான் அவனுடன் வந்தால் அவர்கள் வந்த காரியம் வெற்றியடையலாம் என்று ஆறுமுகம் ஆலோசனை சொன்னவுடன்

அவன் ஊர்லே இருந்திருந்தாலும் அவனை அழைச்சிட்டு வந்திருக்க மாட்டேன்..நீங்களும் நானும் தான் வந்திருப்போம்..அவன் தான் வந்து என்னை அறிமுகம் செய்து வைக்கணுமா? உங்களையும் என்னையும் இங்கே யாருக்கும் தெரியாதா? மூணு வருஷம் முன்னாடி வரை நீங்க இங்கே தான் சுத்திட்டு இருந்தீங்க..இப்போ தான் சில வருஷமா நான் சென்னைலே இருக்கேன்..என்னோட சொந்த ஊர்லே எனக்கு யாருடைய சிபாரிசும் தேவையில்லை.” என்று கோபப்பட்டான்.

இப்போது சொந்த ஊர் என்று அவன் கொண்டாடும் ஊரின் சாயல் மொத்தத்தையும் துறந்து, சென்னையின் நிறத்தை முழுவதுமாகப் பூசிக் கொண்டிருந்தவனைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டனர் அனைவரும். காரில் வந்து கடன் கேட்டால் அவனது மதிப்பு உயரும், அவன் கேட்பதைக் கொடுப்பார்களென்று நினைத்து தான் சென்னையிலிருந்து சொந்தக் காரில் வந்திருந்தான். அவனுடைய படிப்பு, வேலை, சொந்த வீடு, கார் என்று எதுவுமே இந்த விஷயத்தில் அவனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவை அனைத்துமே அனைவராலும் மாத தவணையில் வாங்கப்படுகிறது என்பது ஊரறிந்த ரகசியமாயிற்றே. பின் இருபதுகளில் வீட்டுக் கடன் வாங்குபவர்கள் கடைசி கடன் தவணையைக் கட்டி முடிக்கும் போது நடுத்தர வயதை தாண்டி விடுகிறார்கள். காரின் கடைசி தவணையைக் கட்டி முடிக்கும் முன் அது காயலான் கடை பயணத்திற்குத் தயாராகி விடுகிறது. இந்த உண்மையை அறிந்திருந்தாலும் ஆடம்பர வாழ்க்கையின் ஆதிக்கத்தில், சுழற்சியில் சிக்கிக் கொள்கிறார்கள் இளைய தலைமுறையினர்.

சவீதா, உதயன் இருவருமே அவர்களைச் சுற்றி இருந்தவர்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து, அதிசயித்து, அதைப் பிரதிபலிக்க நினைத்து, விலையுர்ந்த கைக்கடிகாரத்தில் ஆரம்பித்து வீடு, வாகனம் வரை அனைத்தையும் எம் ஐயில் வாங்க பழகிக் கொண்டனர். ஒரு பொருளிற்கான கடைசி தவணை முடியும் முன்னரே அந்த இடத்தைக் கைப்பற்ற அடுத்த பொருள் தயாராக இருந்தது. கணவன், மனைவி இருவரும் லட்சக் கணக்கில் சம்பாதித்ததால் ஆயிரக் கணக்கில் வீணாக செலவு செய்வதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. கொரோனா என்றொரு நிகழ்வு ஏற்படும் வரை பெரிய பொருளாதாரப் பின்னடைவு எதுவுமில்லாமல் சீராகச் சென்றது அவர்களின் வாழ்க்கை.  

புது வீட்டில் குடியேறியதும் தான் அந்த வீட்டின் குறை, நிறைகள் அவர்களைத் தாக்கின. அமைதியான சூழ் நிலையில் வீடு இருந்தது மனத்திற்கு அமைதி அளித்தாலும் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆன்லைனை தான் நம்ப வேண்டியிருந்தது. அவசரத்திற்கு ஆட்டோ பிடிக்க மெயின் ரோட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. மழை நாள்களில், அந்தச் சாலையில் பைக்கில் செல்வது மரணப் பயத்தை அளித்தது. ஆறு மாதங்கள் போல் தினமும் கஷ்டப்பட்டு அலுவலகம் சென்று வந்த தம்பதியர், ஒரு நல்ல நாளில் காரில் வாங்கினர்அடுத்து வந்த நாள்களில் அதன் பராமரிப்பு, பெட் ரோல் செலவு என்று  மாதாந்திரச் செலவுகள் அதிகரித்தன. கடன் பளுவைச் சமாளிக்க, வேறு வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தனர் தம்பதியர். உதயனை விட சவீதாவிற்கு தான் நேர்காணலுக்கான வாய்ப்புகள் அதிகம் வந்தன. பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. புது வேலையில் சேர்ந்த சில மாதங்களில் அலுவலக விஷயமாக வெளிநாட்டிற்கு சென்றாள் சவீதா

உதயனின் வாழ்க்கை தரம், முறை மேலும் மேலும் உயர்வதைப் பார்த்து அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார் வள்ளி. அருந்ததியின் வளைக்காப்பிற்கு தேதி குறித்த பின் அதையொட்டி சவீதாவைக் காண உதயன் வெளிநாடு செல்லத் திட்டமிட்டப் போது, அவனது செய்கை தவறானது என்று அவர் கண்டிக்கவில்லைஅதற்காக வனைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவனிடம் பயணத்தைத் தள்ளிப் போடச் சொல்லவில்லை. அவர்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் வருகை அவனுக்குமே ஒரு சந்தோஷமான நிகழ்வு தான் என்று எடுத்துச் சொல்லவில்லை

பணமில்லாதவர்களின் ஆறுதல், அரவணைப்பிற்கு மதிப்பில்லை என்ற தரப்பைச் சேர்ந்தவர்கள் வள்ளியும் ஆறுமுகமும். காசிருந்தால் எதையும் விலைக்கு வாங்கி விடலாமென்ற தரப்பைச் சேர்ந்தவர்கள் உதயனும் சவீதாவும். அமெரிக்க, ஆஸ்த்ரேலிய டாலரில் சம்பாதித்தாலும், எத்தனை விலை கொடுத்தாலும், அக்மார்க் ஆறுதல், அரவணைப்பு இரண்டையும் விலைக்கு வாங்க முடியாது. இயல்பாக வர வேண்டியது, பெற வேண்டியது. அது ஒரு வரப்பிரசாதம்.

ஒவ்வொரு தலைமுறையிலும் தேவைகள், நியாயங்கள், இயல்புகளின் எல்லைகள் (new normal) மாறிப் போவது, குப்பை முதல் குடும்பம் வரையிலான வர்ணனையும் வரையறையும் புதிதாக செதுக்கப்படுவது, புதியது பழைசாகிப் போவது, பழையது புதிய அவதாரம் எடுப்பது என்று அனைத்து மாற்றங்களும் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

நாளை என்பது நிஜமா? நிழலா? நிஜம் என்று எண்ணுபவர்கள் இன்றைக்குப் பல திட்டங்களைத் தீட்டி, சில தியாகங்களை செய்து, அந்த நொடியை அனுபவிக்காமல் அதைநாளைக்குஎன்று ஒத்திப் போடுவார்கள். நிழல் என்று எண்ணுபவர்கள் நொடிக்கு நொடி அவர்களின் வாழ்க்கையைப் பூர்ணமாக அனுபவித்து, வாழ்ந்து, கடைசி காலத்தில் பட்டினியாக மாய்ந்து போகக் கூடத் தயாராக இருப்பார்கள். சில சமயங்களில் ஆசைகள், சபலங்கள் வெற்றி பெறுகின்றன. பல சமயங்களில் நிச்சயமில்லா வாழ்க்கையைப் பற்றிய அச்சமானது வெற்றிநடை போடுகிறது

அடுத்த வேளைக்கு என்ன? என்று தெரியாமல் அதைப் பற்றிய பயத்தில் வாழ் நாள்களைக் கடத்தி பழக்கப்பட்டிருந்த வள்ளி, ஆறுமுகத்திற்கு வேறு விதமாக வாழ துணிவு இருக்கவில்லை. சவீதா, உதயனின் வாழ்க்கைமுறை அவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. அவர்களை நினைத்து பெருமை அடைந்தனர். சில நேரங்களில் அவர்களின் தடாலடி நடவடிக்கைகள் பயத்தைக் கிளப்பின. அதைப் பகிர்ந்து கொண்ட பின்னும் இருவரிடமும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்றைய வருவாயை நாளைக்கு என்று சேமிக்காமல் நாளைய வருமானத்தையும் இன்றைக்கே செலவு செய்து, அவர்களின்  எதிர்காலத்தை அடமானம் வைத்து நிகழ்காலத்தில் அமோகமாக வாழ்ந்து கொண்டிருந்தனர் உதயனும் சவீதாவும். நிதானமில்லாமல் வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த இளைய தலைமுறையினருக்கு ஆலோசனை அளிக்க நிதானமாக வாழ்க்கைப் பயணத்தைக் கையாண்ட மூத்த தலைமுறையினர் தகுதியற்றவர்களாக தெரிந்தனர். அவர்களின் அறிவுரை அர்த்தமற்றதாக தோன்றியது. ‘இது உங்கள் பயணமில்லை எங்களுடையதுஎன்று அடாவடியாக பதில் அளித்தனர்.

பிறந்த ஊர், உறவுகளிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து விட்டதாக நினைத்த உதயனை ஒரேயொரு நிகழ்வு மீண்டும் அவனது வாழ்க்கை ஆரம்பித்த இடத்திற்கே அனுப்பி வைத்தது. கொரோனாவினால் சவீதாவிற்கு வேலை போனது. புதிய அலுவலகத்தில் பழைய ஊழியர்களை நிறுத்திக் கொள்ள, புதிதாக சேர்ந்தவர்களை நிர்தாட்சண்யமாக வேலையிலிருந்து தூக்கினார்கள். ஒரேயொரு மின்னஞ்சலில் அவளது கணக்கை முடித்தார்கள். வெளிநாட்டில் சம்பாதித்ததில் பெரும்பான்மை பகுதியை அங்கேயே செலவழித்து இருந்ததால் சவீதாவின் சேமிப்பு கணக்கில் கணிசமாக எதுவுமில்லை. அவர்கள் துறையில் இது போல் நடப்பது சகஜம் என்றாலும் இதுவரை அவர்களுக்கு நடந்திராததால் கணவன், மனைவி இருவருக்கும் வேலை நீக்கம் பேரதிர்ச்சியாக இருந்தது. அதை நினைத்து வருந்த கூட நேரமில்லாமல் அடுத்த வேலைக்கு முயற்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டாள் சவீதா. வீட்டு கடன், வாகனக் கடன், குடும்பச் செலவு என்று மாதச் செலவுகள் அனைத்தையும் உதயனின் சம்பளத்தில் சமாளிப்பதற்குள் மூச்சு முட்டிப் போனது

வீடு நிறைய பொருள்கள் இருந்தாலும் எந்தப் பொருளும் மறுவிற்பனைக்கு ஏற்றதாக இல்லை. சுவரை நிறைத்த அரை லகர எல் டி டிவியும் வாசல் வராண்டாவை அடைத்துக் கொண்டிருந்த டிரெட்மில்லையும் சேர்த்து ஜோடியாக ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு கேட்ட போது தான் உதயனுக்கு நிதர்சனம் உரைக்க ஆரம்பித்தது. குழந்தை என்று ஓர் உறவு ஏற்பட்டிருந்தால் அதற்காக சேமித்திருப்பார்களோ என்னவோ. திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆகியிருந்த நிலையில், வருமானத்தை மீறி செலவு செய்ததில் அவர்களின் பொருளாதார நிலை அபாயக் கட்டத்தில் இருந்தது

எப்படியாவது, யாரிடமாவது கடன் வாங்கி வங்கிக் கடனைக் குறைக்கும் முயற்சியில் இறங்கினான் உதயன். உடன் வேலை செய்பவர்கள் அனைவரும் அவனைப் போலவே தத்தளித்துக் கொண்டிருந்ததால், சென்னையில், சவீதாவின் குடும்பத்தைத் தவிர வேறு யாருடனும் உறவு வைத்துக் கொள்ளாததால், அவனை நம்பி கடன் கொடுக்க ஆள் இல்லாததால், அவர்கள் குடும்பத்தை அறிந்த, தெரிந்த இடத்திற்கு உதவி தேடி வந்திருந்தான் உதயன்.

கடன், கைம்மாத்து கொடுக்க தயாராக இருந்தவர்கள் யாரும் உதயனின் படிப்பு, வேலை பற்றி கேட்கவில்லை. வீடு, வாகனத்தின் மதிப்பை விசாரிக்கவில்லை. ‘ஆதவன் எங்கே? ஏன் அவரை அழைச்சிட்டு வரலை? கூட்டிட்டு வந்திருந்தா கையோட வாங்கிட்டுப் போயிருக்கலாமேஎன்று ஒரு சிலரும், ‘கொரோனா போது எல்லாத்துக்கும் ஆதவன் தான்.. மருந்திலேர்ந்து மாஸ்க் வரை எந்த மூலைலேர்ந்தும் வரவழைச்சுக் கொடுத்து எத்தனை உயிரைக் காப்பாத்திக் கொடுத்திருக்கான்..என் தம்பிக்குன்னு அவன் கேட்டா உதவி செய்ய மாட்டோமா?’ என்று வேறு சிலரும் ஆதவன் மீது அவர்களுக்கு இருந்த பெருமதிப்பை வெளிப்படுத்தி உதயனுக்கு அவனுடைய பெறுமானத்தை உணர்த்தினர்

ஆதவனுக்கு இருந்த மதிப்பு, மரியாதையை உதயனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் ஆதவனை நினைத்து ஆறுமுகம் பெருமையாக உணர்ந்தாலும் அதை உதயனிடம் அவர் வெளிப்படுத்தவில்லை. இளைய மகனின் பிரச்சனைகள் அவரை கவலைக்கு உள்ளாக்கி, அவரது தூக்கம் பறித்திருந்தது. அவரால் முடிந்தது இதுதான். அவனுக்கு துணையாக, ஆதரவாக அவனோடு எல்லா இடத்திற்கும் வந்தார். எப்படியாவது குறைந்த வட்டியில் ரொக்கம் ஏற்பாடு செய்து அவனது கடன் சுமையைக் குறைக்க நினைத்தார். இங்கே வந்த பிறகு தான் ஆதவனின் உத்திரவாதமில்லாமல் ஒரு பைசா கிடைக்காது என்று புரிந்தது. மூத்தவனின் உதவியை நாட இளையவன் விரும்ப மாட்டான் என்பதால் விதி விட்ட வழி என்று மனத்தை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தவரிடம்

நேரே வீட்டுக்குப் போய் அம்மாவையும் அழைச்சிட்டு உடனே புறப்பட்டோம்னா நள்ளிரவுலே நம்ம வீட்டுக்குப் போய் சேர்ந்திடலாம்.” என்று அவனது அடுத்த திட்டத்தை வெளிப்படுத்தி அவரது யுகத்தை மெய்யாக்கினான் உதயன்.

ஓர் இரவாவது பேத்தியுடன் இருக்க வேண்டுமென்ற ஆசையில்,  

இன்னைக்கு இராத்திரி தங்கிட்டு நாளைக்கு விடியற்காலைலே கிளம்பிடலாம் டா.” என்றார்.

எதுக்கு? வந்த வேலை தான் முடிஞ்சிடுச்சே..சவீதாவும் அவங்க அம்மாவும் தனியா இருக்கறாங்க..ஆத்திர அவசரத்திற்கு பக்கத்திலே கூட யாருமில்லை.” என்று பதில் சொன்னவனின் மனத்தில் பலவிதமான யோசனைகள்.

கொரோனாவிற்கு முன் கிடுகிடுவென்று விரிவடைந்து கொண்டிருந்த ஏரியா இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. பாதியில் கைவிடப்பட்ட வீடுகள், அடுக்குமாடிக் கட்டிடங்கள், மண் சாலைகள், செயல்படாத தெரு விளக்குகள் என்று மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருந்தது. அனைத்து தேவைகளுக்கும் மெயின் ரோட் செல்ல வேண்டியிருந்ததால் மூன்று வருடங்களில் ஆறுமுகத்தை விட உதயனின் வயது தான் வேகமாக கூடியிருந்தது. ஒரு சம்பாதியத்தில் அனைத்தையும் சமாளிக்க மகள் அல்லாடுவதைப் பார்த்து,‘வீட்டை வித்து வங்கிக் கடனை அடைச்சிட்டு சில வருஷத்துக்கு சின்ன ஃபிளாட்டிக்கு குடி போயிடு.’ என்று சவீதாவின் தயார் அவளுக்குத் தீர்வு சொல்ல, அவரைக் கோபித்துக் கொண்டாள் சவீதா. பணிச் சந்தையின் சரிவு ஏற்றமெல்லாம் இயல்பானது தான் என்று வாதிட்டு, வீட்டை விற்க முடியாதென்ற அவளது முடிவில் திடமாக இருந்தாள்

இது விஷயமாக கணவன், மனைவி இருவரும் அடிக்கடி முட்டிக் கொண்டனர். சமரசம் செய்ய, இறுகிப் பிடித்து வைக்க குழந்தையும் இல்லாததால் காதல் வாழ்க்கை கை நழுவிப் போவதை உணர்ந்த உதயன், அதை மீட்க எடுத்த முயற்சி தான் இது. அனைவரையும் முந்திக் கொண்டு சென்று வாழ்க்கைப் பந்தயத்தில் வெற்றி பெற்று விட்டோமென்ற இறுமாப்பில் இருந்த உதயனுக்கு ஆதவன் ஆராதனையைக் கேட்டதிலிருந்து வாழ்க்கை என்பது போட்டி இல்லை நம்மோடு பயணம் செய்பவர்கள் யாரும் சக போட்டியாளர்கள் இல்லை சகப்பயணிகள் (margabandu) என்ற சூட்சமம் விளங்கியது.

>>>>>>>

அடுத்தது கடைசி அத்தியாயமாக இருக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக் கொண்டு இந்த அத்தியாயத்தைப் பதிவு செய்யறேன்.

Advertisement