Advertisement

அதைக் கேட்டு தொடர்ந்து அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தவளுக்குக் கோபம் வந்தாலும் அமைதியாக சமையலறைக்குச் சென்றாள். தகவல் ஏதும் கொடுக்காமல் இன்று காலையில் திடீரென்று வீட்டிற்கு வந்திருந்தனர் மாமனார், மாமியார், கொழுந்தன் மூவரும். ஆதவன் பெங்களூர் சென்றிருப்பது மாமியார், மாமனார் இருவருக்கும் ஏமாற்றத்தை அளிக்க, அண்ணன் இல்லாததைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை உதயன். பதினொரு மணி வரை படுத்துறங்கி விட்டு, மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளியே சென்ற ஆண்கள் இருவரும் மாலை நான்கு மணியாகியும் திரும்பி வந்தபாடில்லை

அவருடைய வீட்டில் அவருடைய அம்மாவிற்கு மூத்த மகன், மருமகள் செய்யும் சேவையைப் பார்த்து வள்ளியின் மனது கொதித்தது. சில மாதங்கள் முன்பு வரை அவருடைய அண்ணிக்கும் சேர்த்து சேவகம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த வீட்டை இப்போதும் அவருடைய வீடு என்று நினைப்பது, சொல்வது தவறென்று தெரிந்தாலும் அதையே தான் செய்து கொண்டிருந்தார் வள்ளிஉதயன் வீட்டில் அவருக்கு பங்கு இருந்தாலும் ஒரு நாளும் ஒரு பொழுதும் இது போல் பேசியதில்லை. பேச முடியாது. ஆனால் இந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் உரிமை கொடி தூக்கிக் கொண்டிருக்கிறார். அது எங்கே போய் முடியப் போகிறதோ என்று ஆறுமுகம் அவரது கவலையை மனைவியிடம் தெரிவித்திருந்தாலும் வள்ளியின் காதுகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை

அருந்ததி காப்பி போட்டுக் கொண்டிருந்த போது வாசலில் பைக் சத்தம் கேட்க, அவளது இடுப்பிலிருந்து வேகமாக இறங்கி,

அப்பா..அப்பாஎன்று கூச்சலிட்டபடி முன்வாசலுக்குச் சென்று லேசாக சாத்தியிருந்த கதவைத் திறந்தாள் மது.

பார்த்து..பார்த்து..அது உங்கப்பா இல்லை டீ கண்ணு.” என்றார் காளியம்மா.

வாசலில் வனஜாவைப் பார்த்ததும் மதுவின் முகத்தில் ஏமாற்றம். கண்களில் கண்ணீர். ஒரு கையில் அவளைத் தூக்கிக் கொண்டு இன்னொரு கையில் பெரிய பையோடு பின்வாசலில் அமர்ந்திருந்த காளியம்மாவை நோக்கி வந்த வனஜாவிடம்,”பஜார்லேர்ந்தா வர்ற?” என்று கேட்டார் அவரருகே அமர்ந்திருந்த வள்ளி.

வாசலிருந்து பார்த்த போது ஆயா மட்டும் தான் அவள் கண்களுக்கு தெரிந்தார். அத்தையை அவள் எதிர்பார்க்கவில்லை. அவளது அதிர்ச்சியை அழகாக மறைத்துக் கொண்டு,“இல்லை அத்தை..பாண்டமங்கலத்திலிருந்து நேரே வரோம்.” என்றாள்.

அவளின் குரல் கேட்டு சமையலறையிலிருந்து வந்த அருந்ததி,”வாங்க அக்கா,” என்று வனஜாவை வரவேற்று அவள் பின்னால் வந்த அவளுடைய கணவன் கனகராஜிடம்,” உட்காருங்க மாமா..காப்பி கொண்டு வரேன்.” என்றாள்.

மனைவியின் கையிலிருந்த பையை அருந்ததியிடம் கொடுத்து,”காய்கறி உனக்கு..வெத்தலை ஆயாக்கு.” என்றான் கனகராஜ். இரண்டும் அவன் தோட்டத்தில் விளைந்தது. அவனைப் போன்றவர்களுக்கு கொரோனாவின் ஆட்சியில், ஒரே பாஷை, ஒரே உணவு, ஓவர் நைட் பயணம் என்று நானூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தமிழ்நாட்டின் தலைநகரம் கூட அன்னிய மண்ணாகிப் போனது. நம்ம ஊர், நம்ம காற்று, நம்ம தண்ணீர், நம்ம மண்ணு, நம்ம மனுஷங்க என்று சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டான் கனகராஜ்இல்லை விதி அவனை வரவழைத்து விட்டது என்று கூட சொல்லலாம்

வீடு திரும்பிய சில மாதங்களில் தந்தை, தம்பி இருவரையும் பறி கொடுத்து விட்டு புத்தி பிழன்று கிடந்தவனுக்குத் துணையாக இருந்தது ஆதவன் தான். இந்தப் பக்கம் வனஜாவின் தந்தை, அந்தப் பக்கம் கனகராஜின் அப்பா, தம்பி என்று வீட்டு ஆண்களின் திடீர் மறைவில் அடுத்து என்னயென்ற நினைப்பே அனைவருக்கும் பெரும் பீதியைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே அருந்ததியும் அவளுடைய அன்னையை இழந்தாள். பக்கத்தில் இருந்த மாமாவின் இழப்பிற்கு போவதற்கே பல நடைமுறை சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது ஆதவனால் அவளை சென்னைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அரைமணி நேரப் பயணத்தில் இருந்த தொட்டியமும் நாமக்கலும் வேறு வேறு மாவட்டங்களாகிப் போனதால்  மாமி, ஆயா இருவரையும் அவனுடைய வீட்டிற்கு அழைத்து வர அவனுக்கு நாள் கணக்கானதுபரிசோதனை முடிவுகள், அனுமதி படிவங்கள் என்று தேவையானவற்றை செய்து முடித்து அவர்களை அவனோடு அழைத்து வந்த பின் தான் ஆதவனுக்கு ஓரளவிற்கு மனஅமைதி கிடைத்தது

இனி மகளோடு அவளது மாமியார் வீட்டில் இருக்கப் போவதை நினைத்து சங்கடப்பட்டாலும் நிரந்தரமாக ஆதவன் வீட்டில் தங்க விரும்பவில்லை வனஜாவின் அன்னை. அதைப் புரிந்து கொண்டு அருந்ததி, மது இருவருக்காக என்று சொல்லி பல மாதங்கள் வரை அவரை அவன் வீட்டில் தான் வைத்திருந்தான் ஆதவன். சில மாதங்களுக்கு முன்பு தான் நிரந்தரமாக பாண்டமங்கலத்திற்கு அழைத்துச் சென்றிருந்தாள் வனஜா. மகளுக்குப் பாரமாக இருக்கக் கூடாதென்று நினைத்து வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் செய்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது அவருக்கு.

உங்கம்மா எப்படி இருக்கா டீ?” என்று பேத்தியிடம் அவருடைய மருமகளைப் பற்றி விசாரித்தார் காளியம்மாள்.

கட்டு பிரிக்க ஒரு வாரம் ஆகும் ஆயா.” என்றாள் வனஜா.

அதற்கு,“நான் கல்லாட்டாம் உட்கார்ந்திருக்கேன்..அவ காலை ஒடிச்சிட்டு உட்கார்ந்திருக்கா.” என்றார் காளியம்மா.

கவனமில்லாம இருந்தா அப்படித் தான் ஆகும்..எத்தனை அவசரமா இருந்தாலும் நான் கவனமா தான் வேலை செய்வேன்.” என்ற வள்ளியின் கூற்றில் எரிச்சலடைந்த வனஜா சமையலறைக்கு செல்ல, வீட்டு வாயிலுக்குச் சென்றான் அவளுடைய கணவன் கனகராஜ்.

அருந்ததியைப் பார்த்தவுடன்,”அம்மா..அம்மாஎன்று அவளிடம் தாவ முயன்றாள் மது

உங்கம்மா தான் யாரு இல்லைன்னு சொன்னா..கொஞ்ச நேரம் பெரியம்மாவோட இரு.” என்று மதுவை இடுப்பில் அடக்கிக் கொண்டாள் வனஜா.

அக்கா, காப்பி குடிச்சிட்டு ஒரு பத்து நிமிஷம் வீட்லே இருக்க முடியுமா?” என்று விசாரித்தாள் அருந்ததி.

ஆர்டர் டெலிவரி செய்யணுமா..வாசனை பலமா வருது.” என்றாள் வனஜா.

ஆமாம் க்கா..பக்கத்திலே தான் போகணும்..லக்ஷ்மி டீச்சர் வீட்லே டியுஷன் பிள்ளைகளோட பார்ட்டி..பூரி, சன்னா ஆர்டர் கொடுத்திருந்தாங்க.” என்றாள்.

நீ போய் கொடுத்திட்டு வா..நான் இவளைப் பார்த்துக்கறேன்..ஆதவன் எப்போ வரான்?”

நாளைக்கு காலைலே வந்திடுவாங்க..ஒரு நாளைக்கு தான் போயிருக்காங்க.”

என்ன திடீர்னு?”

காப்பியைத் தயாரித்தபடி,“ஜி எஸ் டி விஷயமா டீலரோட ஆடிட்டர்  கூப்பிட்டு விட்டாங்க.” என்றாள் அருந்ததி.

அதற்குள் வனஜாவின் இடுப்பிலிருந்து நழுவி அருந்ததியின் கால்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு,”போன், போன்என்று அழுதாள் மது.

என்ன ஆச்சு இவளுக்கு? எதுக்கு இத்தனை அழுகை?”

அவங்க அப்பா நியாபகம் வந்திடுச்சு..மதியத்திலிருந்து அப்பாக்கு ஃபோன் போட்டுக் கொடுன்னு கேட்கறா..எனக்கு நேரம் கிடைக்கலை..எங்களுக்கு ஃபோன் போட்டு பேச அவருக்கும் நேரம் கிடைக்கலை போல.” என்றாள்.

அத்தை எப்போ வந்திச்சு?” என்று கேட்டாள் வனஜா.

காலைலே..மாமாவும் சின்னவரும் வந்திருக்காங்க.” என்றாள் அருந்ததி.

மெல்லிய குரலில்,“ஆதவனுக்குத் தெரியுமா? என்ன விஷயமா வந்திருக்காங்க?அவங்க இரண்டு பேரும்  எங்கே போயிருக்காங்க?” என்று ஒரே மூச்சில் அனைத்தையும் கேட்டு முடித்தாள்.

அவங்களுக்குத் தெரியாது..எதுக்குன்னு தெரியலை..மதியம் போனவங்க இன்னும் வரலை..இராத்திரி கிளம்பறாங்களா இல்லை அவங்க வர்றத்துக்கு காத்திருப்பாங்களான்னு தெரியலை..நீங்க தான் கேட்டுச் சொல்லணும்..நான் கேட்டா சரியா பதில் வராது.” என்று காலையிலிருந்து அவளுள் சுற்றி வந்து கொண்டிருந்த எண்ணங்களை வனஜாவுடன் பகிர்ந்து கொண்டாள் அருந்ததி.

அதற்கு வனஜா பதில் சொல்லுமுன்,”வனஜாஎன்று காளியம்மா குரல் கொடுக்க, வனஜாவின் கையில் காப்பியைக் கொடுத்து அனுப்பினாள் அருந்ததி. அப்படியே மதுவுடன் பின்பக்கம் சென்றவள் அவளை இடுப்பில் வைத்தபடி சமைத்த உணவுகளை பேக் செய்ய ஆரம்பித்தாள். வீட்டினுள்ளே நடக்கும் பேச்சுக்கள் காதில் விழுந்தாலும் அதை மனத்தில் போட்டுக் கொள்ளவில்லை அருந்ததி.

திருமணமாகி முழுதாக மூன்று வருடங்கள் ஓடி விட்டன. கடந்த மூன்று வருடங்களில் வாழ்க்கையானது அவர்களை அதன் விளிம்பிற்கு கொண்டு சென்றிருந்தது. சந்தோஷம் துக்கம் இரண்டையும் முழுமையாக உணர வைத்த தருணங்கள் ஒவ்வொன்றும் அவர்கள் இருவரையும் முழுமையாக மாற்றியிருந்தது. கடந்து போனவகளை நினைக்கும் போதெல்லாம் அவளுடைய அம்மாவின் நினைவில் இப்போதும் அவளது கண்கள் கலங்கின.  

குடும்பத்தினர், தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர், ஒன்று விட்ட சொந்தங்கள், தூரத்து சொந்தங்கள், எதிர் வீடு, பக்கத்து வீடு என்று எண்ணிலடங்கா இழப்புக்களைப் பற்றி நினைத்தால் இப்போதும் நெஞ்சம் படபடக்கிறது, சுவாசமானது ஒழுங்கற்று பிசிர் பிசிராக வெளியேறுகிறது

***********************

Garam – Famous street food of Karur. அதிலே சேர்க்கற பொருள்களை வைச்சு நிறைய வேரியேஷன்ஸ் இருக்கு.

**********************

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஏற்படும் சமுதாய மாற்றங்கள், நிகழ்வுகள், பல தலைமுறைகளைப் பாதிக்கும் விளைவுகள் பற்றி அந்தக் காலக்கட்டத்தைச் சார்ந்த படைப்புகள்லே அதனோட தாக்கம், குறிப்பு, பிரதிபலிப்பு கண்டிப்பா இருக்கும். படைப்பாளிகளும்  அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தானே. கொரோனா போதும் நான் கதை எழுதிட்டு இருந்தேன்ஆனா அதைப் பற்றி இப்போவரை ஒரு வரி கூட எழுதவேயில்லை. இன்னும் கொஞ்சம் காலம் கடந்த பின், தூரம் சென்ற பின் இன்னும் ஆழமா எழுத முடியுமா இல்லை மொத்தமா மறந்து போயிடுவேனான்னு குழப்பமா இருந்திச்சு. அதான் இந்தக் கதை மூலம் அந்த்க காலக்கட்டத்திலே நடந்ததை கொஞ்சம் போல எழுதி என்னுடைய அலைபுறுதலுக்கு ஒரு வடிகால் தேடிக்கிட்டேன்

**************

இந்தப் பதிவு பெரிசா போனதாலே அடுத்த பதிவு கதையோட கடைசி பதிவு.

Advertisement