Advertisement

அத்தியாயம் – 8

வீட்டின் பின்வாசலில் அமர்ந்திருந்த காளியம்மாவின் பல் இல்லாத வாயை அவளுடைய பிஞ்சு விரல்களால் திறந்து அவருக்கு பொரி ஊட்ட முயற்சி கொண்டிருந்தாள் அவருடைய கொள்ளுப் பேத்தி மதுரா.

உனக்கு எதுக்கு டா இந்தச் சிரமம்..நீ சாப்பிடு ஆத்தா.” என்று அவர் மறுப்பு தெரிவித்ததைப் பொருட்படுத்தாமால்,

.. காத்து..” என்று அவளுடைய அம்மா அவளுக்குச் சோறு ஊட்டும் போது கொடுக்கும் அதே ஓசையை சிறிதும் பிசகாமல் கொடுத்தபடி பொரியைக் கொள்ளுப்பாட்டியின் வாயில் பேத்தி திணிக்க, அவளது கொஞ்சம் மொழியில் நெஞ்சமானது இனிக்க, ஆசையாக ஒருவாய் முழுங்க, தொண்டையில் காரம் இறங்க, காளியம்மாவின் கண்களில் நீர் பெருக, தொடர் இருமல் துவங்க, ‘அருந்ததிஎன்று அவர் அபாய அழைப்பு கொடுக்கும் முன், அவள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படி போட்டு விட்டு மாவு கையோடு ஓடி வந்தவள் அவரது கையில் தண்ணீர் குவளையைக் கொடுத்து விட்டு,“வா டீ இங்கே.” மகளைக் கிண்ணத்தோடு இழுத்து, தூக்கி இடுப்பில் வைத்து கொண்டாள் அருந்ததி.

அவருடைய தாயாரின் இருமல் சத்தத்தைக் கேட்டு, முன்வாயில் பக்கம் இருந்த அறையில் இளைப்பாறிக் கொண்டிருந்த வள்ளி, அரக்கப்பரக்க ஓடி வந்து, தாயின் அருகில் அமர்ந்து, அச்சத்தோடு

என்னம்மா செய்யுது?” என்று விசாரிக்க,

கொஞ்சம் போல் தண்ணீரைக் குடித்து முடித்து விட்டு,”இந்தக் கிழவிக்கு ஆசையா கரம் (garam) ஊட்டி விட்டிச்சு சிட்டு..அது தொண்டைலே மாட்டிக்கிச்சு.” என்று சொல்லி அவரது பொக்கை வாயைத் திறந்து பெரிதாகச் சிரித்தார்.

என்னவோ ஏதோன்னு பயந்து ஓடியாந்தா நீ இளிச்சிட்டு இருக்க.” என்று அவருடைய அம்மாவிடம் கோபப்பட்டார் வள்ளி.

அதற்கு, சிறிது கூட அலட்டிக் கொள்ளாமல்,”எத்தனை முறை இப்பவோ அப்பவோன்னு கிடந்தேன்..எவ்வளவு வியாதிங்க வந்தே வழியே வெறுங்கையா ஓடிப் போயிடுச்சு..கடைசியா வந்த கொரோனாவும் என்னை விட்டிட்டு என் மகனைத் தூக்கிட்டு போயிடுச்சு..இந்தக் குட்டியோட குட்டி கையாலே கரம் சாப்பிடம்னு என் தலைலே எழுதியிருக்குது..எல்லாம் ஆத்தா மதுரகாளியோட வேலை..குட்டியை இங்கே விட்டிட்டு நீ போய் உன் வேலையைப் பாரும்மா.” என்று வள்ளியிடம் ஆரம்பித்து அருந்ததியிடம் முடித்தார் காளியம்மாள்

மாமியாரிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவருடைய அம்மாவிடம் மகளை ஒப்படைத்து விட்டு பாதியில் விட்டிருந்த வேலையைத் தொடர பின்பக்கம் சென்றாள் அருந்ததி.

வீட்டின் பின்பக்கத்தில், கடைக்கோடியில் கிணறு இருந்ததது. அதை ஒட்டி, பக்கவாட்டில் துவைக்கும் கல். அதற்கும் வீட்டிற்கும் இடையே இருந்த வெற்று இடத்தில், வீட்டிலிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு, மூன்று புறமும் மூன்றடி உயரத்தில் தடுப்பு சுவர் எழுப்பி, அதன் மீது ஜாலி வைத்து, டின்ஷீட் மேற்கூரை வேய்து, பிவிஸி கதவு பொருத்தி தனி அறை போல் எடுத்துக் கட்டியிருந்தான் ஆதவன். இரவு நேரத்தில் வேலை செய்ய வசதியாக வீட்டிலிருந்து மின்சார இணைப்பும் கொடுத்திருந்தான். அந்த அறையின் ஒரு பக்கத்தில் பெரிய கேஸ் அடுப்பு, இண்டக்ஷன் ஸ்ட்வ், போர்டபில் ஸ்டவ் வைத்து சமைக்க ஏதுவாக கல் மேடை இருந்தது. இன்னொரு பக்கத்தில் மிக்ஸி, கிரைண்டர், தண்ணீர் டிரம் வைக்க சிமெண்ட் மேடை. அதன் அருகே இருந்த இரும்பு பீரோவில் மளிகைச் சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன. ஓர் ஓரத்தில் பெரிய பிளாஸ்டிக் டப்பில் பெரிய, சிறிய கேஸ்ரோல், ஹாட்பேக் கழுவி வைக்கப்பட்டிருந்தன. காற்று, வெளிச்சம் இரண்டிற்கும் குறைவில்லாமல் இருந்த அந்தச் சமையலறையிலிருந்து அமோகமாக வாசனை வந்து கொண்டிருந்தது

காளியம்மா அருகே அமர்ந்தபடி கரம் இருந்த கிண்ணத்தில் கையை விட்டு துழாவிக் கொண்டிருந்த மகள் மீது ஒரு கண் வைத்தபடி பூரி பொரித்துக் கொண்டிருந்தாள் அருந்ததி. கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பங்களுக்கு உதவ, உணவு சமைத்துக் கொடுக்க, சிறிய அளவில் ஆரம்பித்த இந்த வேலை, இப்போது, கொரோனாவுக்கு பின்னர் அவளது சொந்த வியாபாரமாக மாறியிருந்தது. வாரத்தில் மூன்று ஆர்டர்கள் என்று மூன்று தினங்களுக்கு மட்டும் வேலை செய்தாள் அருந்ததி. மற்ற நாள்களில் காளியம்மா, மகள், கணவன் என்று அவர்களோடு பொழுது சரியாக இருந்தது. குணத்தில் அவளுடைய மாமியாருக்கும் அவரின் அம்மாவிற்கும் இருந்த வேறுபாட்டை நினைத்தபடி அருந்ததி வேலை செய்ய, அவளைப் போலவே அவரையும் அவருடைய அம்மாவையும் அருந்ததி நடத்தும் விதத்தில் இருந்த வேறுபாட்டைச் சிந்தித்தபடி அமர்ந்திருந்தார் வள்ளி

அவர்களுக்கிடையே இருந்த இணக்கத்தை வள்ளியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கரத்தைக் (garam) கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பேத்தியைப் பார்த்து கரமானவர், (கரம் (ஹிந்தி) – சூடு)

கிண்ணத்திலே விரலை விட்டு விளையாடிட்டு இருக்கா..அதே விரலைக் கண்ணுலே வைச்சுக்கிட்டா அவ்வளவு தான்..முதல்லே பிள்ளையோட கையைக் கழுவி விட்டிட்டு கிண்ணத்தை கொண்டு போ.. அதைச் செய்யாம உன் வேலையைப் பார்க்க போயிட்டருசியா, காரசாரமா உன் வாய் கேட்டா நீ செய்து சாப்பிட வேண்டியது தானே..எதுக்கு அதைக் குழந்தைக்கு கொடுக்கற.” என்று அருந்ததியைக் கோபித்துக் கொண்டார்.

உடனே,”அவங்க அம்மா வயத்திலே இருக்கும் போதே இதைத் தான் விரும்பிச் சாப்பிடும் இந்தத் தங்கம்..எப்படி செய்யறதுன்னு கத்துக்கிட்டு வந்து ஒரு சாமான் விட்டுப் போகாம இவளோட அம்மாக்கு செய்து கொடுப்பான் இவ அப்பன்..குட்டி விளையாடலை டீ..மாங்காஇஞ்சியைத் தேடிட்டு இருக்கு..இவளுக்காக சின்னதா அரிஞ்சு போடுவான் ஆதவன்..அவ அம்மா செய்தா மோர் மிளகாய் தான் போடுவா..அதை எடுத்திட்டு தான் இவளுக்குக் கொடுப்பா..பாவம் பிள்ளை தேடி தேடி ஏமாந்து போகுது..இந்தக் கரம் வேணாம் கண்ணு..கையைக் கழுவிக்கோ டா..உங்கப்பன் வந்ததும் செய்து உனக்குப் பிடிச்ச மாதிரி செய்து தரச் சொல்றேன் தங்கம்.” என்று மதுவைக் கொஞ்சியபடி தம்பளரில் இருந்த தண்ணீரைக் கொண்டு கொள்ளுப்பேத்தியின் கையைக் கழுவி விட்டு அந்தக் கிண்ணத்தை அவருக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டார் காளியம்மா.

ஆதவன் அவன் கையால் செய்து கொடுத்தான் என்பதை காதில் போட்டுக் கொள்ளாமல்,“வாய் கேட்குதுன்னு கர்ப்பக் காலத்திலே கண்ட கண்டதையும் வாங்கிக் கொடுத்திருக்கான்நான் வரேன்னு சொன்னேன்..வேணாம்னு சொல்லிட்டான்..நல்லவேளை..” என்று ஆரம்பித்தவரை இடைமறித்து.

நீயும் தானே இட்லிக்கு ஊற வைச்ச அரிசியைத் திருட்டுத்தனமா அள்ளிப் போட்டுக்கிட்டு வயித்து வலின்னு அழுவ..அதுக்கு உங்கப்பாரு என்னை தான் வைவாரு..’பிள்ளைத்தாச்சி வாய்க்கு ஈர மண்ணு கூட ருசியா தெரியும்..அதைத் தின்ன கூட ஆசை வரும்..எத்தனை தின்னாலும் பசி ஆறாதுன்னுஅவருக்குப் பதில் கொடுப்பேன்..அருந்ததிக்குப் பிடிச்சதை செய்து கொடுக்க நானும் உன் அண்ணியும் மாசத்திலே பாதி நாள் இங்கேதானே இருந்தோம்..நாங்க யாரும் கண்டதையும் செய்து கொடுக்கலை.” என்று இத்தனை வயதிலும் எதையும் மறக்காமல் அருந்ததி முன் அவரது விஷயங்களை எடுத்து விட்ட அம்மாவைப் பார்த்து கடுப்பானது வள்ளிக்கு. ஆனால் அதற்கு மேல் அவரைக் கடிந்து கொள்ள முடியவில்லை. கொரோனாவில் அவருடைய ஒரே மகனை இழந்த அன்னையிடம் சண்டையிட்டு,’கரம்லே என்ன இருக்குது..எல்லாத்தையும் பச்சையா போடுறாங்க..நல்லதில்லைன்னு நான் சொன்னது தான் சரிஎன்று அடித்துச் சொல்ல வள்ளி விரும்பவில்லை. அப்படியே ஏதாவது பேசிவிட்டால், அம்மா என்று கூட பார்க்காமல்,’ஆயா என் வீட்லே என்னோட பொறுப்புலே இருக்காங்க..அவங்களை ஏதாவது பேசினீங்க அவ்வளவு தான்..கிளம்புங்க.’ என்று அவரைத் துரத்தி விடுவான் ஆதவன்.

கரம் இருந்த கிண்ணத்தைத் தேடி பின்பக்கம் போகயிருந்த கொள்ளுப்பேத்தியை மடியில் வைத்துக் கொண்டு காளியம்மா விளையாடிக் கொண்டிருக்க அதில் கலந்து கொள்ளாமல் ஏதோ யோசனை செய்தபடி அமர்ந்திருந்தார் வள்ளி. சில நிமிடங்கள் கழித்து சூடான பூரி, உருளைக் கிழங்கு மசாலாவை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு வந்து காளியம்மாவின் முன்னால் வைத்து,”சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஆயா.” என்றாள் அருந்ததி.

அவள் எது சமைத்தாலும் முதலில் காளியம்மாவிற்கு என்ற வழக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள். பெற்ற மகனை இழந்து, விதியை நொந்து, வாழ்க்கையை வெறுத்து, தாரை தாரையாக கண்ணீர் விட்டபடி பிடிவாதமாகப் பட்டினியாக கிடந்தவரை கஷ்டப்பட்டு மீட்டு எடுத்து வந்திருந்தனர் ஆதவன் குடும்பத்தினர். அதில் மது குட்டிக்கு பெரும் பங்கு இருந்தது. கொள்ளுப்பாட்டி அருகே படுத்துக் கொண்டு, மழலையில் அவரோடு உரையாடியபடி அரைகுறை உயிரோடு ஊசலாடிக் கொண்டிருந்தவரை கெட்டியாக பிடித்து வைத்திருந்தது அவள் தான். மீண்டும் உடலும் மனமும் ஒரே போல் இடிந்து போகும் புள்ளிக்கு அவர் போனால் பிழைக்க மாட்டாரென்று தெரியும். எனவே தான் குழந்தையின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து, அவளது தொழிலில் அவரை இழுத்துக் கொண்டு, அவரது வாழ்க்கையை சுவையாக சுவாரஸ்யமாக மாற்றிக் கொண்டிருந்தனர் ஆதவனும் அருந்ததியும்.

பூரியைக் காளியம்மா அவர் கையில் எடுக்கும் முன் அதை எடுக்க கை நீட்டிய மதுவைத் தூக்கிக் கொண்ட அருந்ததி,”அது ஆயாக்கு டா..உனக்கு குட்டி பூரி செய்து கொடுக்கறேன் டா செல்லம்.” என்றாள்.

எனக்கு ஒண்ணு போதும்..இந்தா நீ சாப்பிடு.” என்று தட்டை அவருடைய மகளருகே தள்ளி வைத்தார் காளியம்மா.

அவருக்குத் தனியாக கொடுக்கமால்நீங்களும் சாப்பிடுங்கஎன்று வார்த்தைக்காக கூட அருந்ததி விருந்தோம்பல் செய்யாதது வருத்தத்தை அளித்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,’மதியச் சமையல் சாதாரணமா தானே இருந்திச்சு..வெளி ஆளுங்களுக்கு அப்படி என்ன தான் செய்து கொடுக்கறா எல்லோரும் இப்படி விழுந்து விழுந்து ஆர்டர் கொடுக்கறாங்கஎன்ற கேள்விக்கு விடையைக் கண்டுபிடிக்க பூரியைப் பிட்டு மசாலாவுடன் சேர்த்து வாயில் போட்டுக் கோண்டார் வள்ளி. அடுத்தடுத்து என்று ஒரு பூரியை ஒரே நொடியில் அவர் சாப்பிட்டு முடிக்க, அவரது பூரியை மசாலாவின் ஊற வைத்துக் கொண்டிருந்தார் காளியம்மா.

இன்னொரு பூரி சாப்பிட ஆசை எழுந்தாலும் கேட்டு வாங்கிச் சாப்பிட ஈகோ இடம் கொடுக்காததால்,“ஸ்ட் ராங்கா ஒரு காப்பி போட்டு எடுத்திட்டு வா..போனவங்க ஒரு ஃபோன் கூட போடலை..என்ன ஆச்சுன்னு யோசிச்சு யோசிச்சு தலை வலிக்குது.” என்று அவரது மனக்கவலையை வெளியிட்டு மாமியாராக மருமகளை வேலையும் வாங்கினார் வள்ளி.

Advertisement