Advertisement

அத்தியாயம் – 07

இருளின் கடைசி வெளிச்சம். இரைச்சலின் கடைசி அமைதி. புழுக்கத்தின் கடைசி மழை. பொறுமையின் (patience) கடைசி சகிப்பு (tolerance). சகிப்பின் கடைசி வெடிப்பு (cleft, crack).

பாசமானது சிறிது மாசடையும் போது, நியாயமானது லேசாக சாயும் போது அதில் சம்மந்தப்பட்டிருப்பவர்கள் அறியாமல் பொறுமையின் தன்மையானது சிறிது சிறிதாக சகிப்புதன்மையாக மாறிப் போகிறது. அந்தத் தன்மை மாற்றமானது எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்க்காத எதிர் விளைவுகள் மூலம் உணரப்படுகிறது. அதை மீட்டு எடுக்கும் காலமும் அதற்குள் கடந்து விடுகிறது

கிருஹப்பிரவேசத்தில் கலந்து கொள்ளாமல் விருட்டென்று கிளம்பி வந்த ஆதவனின் செய்கை அவனுடைய குடும்பத்தினர்க்கு மட்டுமில்லாமல் அவனுக்குமே புதிராக தான் இருந்தது. இத்தனை வருடங்களாக பெற்றோரின் பாரபட்சத்தை, சகோதரனின் உதாசீனத்தை பொறுத்துப் போனவன் இன்று ஏன் பொங்கி எழுந்தான், எந்தப் புள்ளியில் இந்த மாற்றம் அவனுள் வந்தது என்று அவனுக்குமே தெரியவில்லை. அதைப் பற்றிய ஆராய்ச்சியை, இனி என்ன ஆகப் போகிறது, வாழ்க்கை எப்படிப் போகப் போகிறது என்ற யோசனையை மனைவிக்காக தள்ளிப் போட்டிருந்தான். அந்த நேரம் அவனது யோசனை முழுவதும் மனைவியின் கோபத்தைத் தணிப்பதைப் பற்றி ஓவர் டைம் செய்து கொண்டிருந்தது

உதயன் வீட்டிலிருந்து நேரே அவர்கள் வீட்டிற்குப் பயணிப்பது அருந்ததியின் மனநிலைக்குப் பயனளிக்காது என்பதை உணர்ந்து தான் இந்த மாற்று திட்டத்தோடு வந்திருந்தான் ஆதவன்

காலையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் போக்க ஆதவன் எடுத்திருக்கும் முயற்சியைப் புரிந்து கொள்ளாமல், நடந்து முடிந்ததை அவர்களிடையே கொண்டு வந்து அந்த அசம்பாவிதத்திற்கு அவன் தான் காரணம் என்று ஆதவனைக் குற்றவாளி ஆக்கினாள் அருந்ததி.

அவளின் அந்தக் கூற்று அமிலம் போல் ஆதவனைத் தாக்கியது. அதன் எரிச்சலான எதிர்விளைவு அவளை நோக்கிப் பாயுமுன்,

ரூமைப் பூட்டிக்கிட்டு நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்.” என்று ஆதவன் சொல்ல, போர்வையைத் தூக்கிப் போட்டு விட்டு அருந்ததி எழுந்து அமர்வதற்குள் அறையில் ஆதவனில்லை

கணவனின் வெளிநடப்பில் காயமடைந்தவளுக்கு அழுகை வர,’சொல்லறதை சொல்லிட்டு இப்போ எதுக்கு அழற? மூளை இல்லாதவனை எதுக்கு கல்யாணம் செய்தேன்னு அவங்க திரும்ப கேள்வி கேட்டிருந்தா என்ன செய்திருப்ப?’ என்று அவளது மனம் கேள்வி கேட்க, அருந்ததியின் உறக்கம் ஓடிப் போனது.

நன்றாக உறங்கி ஓய்வெடுக்க தான் இங்கே வர ஒப்புக் கொண்டாள். ஆனால் கணவன் போனதும் உறக்கமும் அவளை விட்டுப் போனது. ஒருமணி நேரம் கழித்தும் ஆதவன் வந்தபாடில்லை. ஏனோ அவனைக் கைப்பேசியில் அழைக்க அவளது மனம் உடன்படவில்லை. ‘இப்படித் தான் கோவிச்சுக்கிட்டு புது இடத்திலே என்னைத் தனியா விட்டிட்டு போவாங்களா? இங்கேயிருந்து கிளம்பி நம்ம வீட்டுக்குப் போயிடலாமா? கதவைப் பூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க..எப்படி வெளியே போகறது.’ என்று மனம் போன பாதையில் பயணம் செய்தவளின் கோபம் நேரமாக நேரமாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் கணவனைத் திட்டியபடியே உறங்கிப் போனாள் மனைவி.

திடீரென அருந்ததிக்கு விழிப்பு வர, கண்களைத் திறந்தவளின் காலடியில் அமர்ந்திருந்தான் ஆதவன்

கணவனைக் காலடியில் கண்டதும் அவன் மீதிருந்த கோபமானது மாயமாக மறைந்து போனாலும் அவளது மனக்கலக்கம் மறையவில்லை. அது அவளது முகத்தில் தெரிய,” சரியாத் தூங்கலையா?” என்று விசாரித்தான் ஆதவன்

போர்வையை உதறி விட்டு எழுந்து அமர்ந்தவள், “எப்போ வந்தீங்க?” என்று அவனிடம் கேட்டாள்.

இப்போ தான்..கட்டிலே உட்கார்ந்தேன் நீ கண் விழிச்சிட்டே.” என்றான்.

அடுத்து அவனை ஏதும் கேட்கும் முன்,

முகத்தைக் கழுவிட்டு வா..மதியச் சாப்பாட்டை முடிச்சிட்டு அப்படியே உங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்.” என்றான்.

உறக்கத்திலிருந்து விழித்த போது மாயமாக மறைந்து போயிருந்த கோவம் இப்போது அதே போல் மாயமாக அவளை ஆட்கொண்டது. அது தெரியாமல், கட்டில் அருகே இருந்த அவர்களது  பையை எடுத்து மடியில் வைத்து, ஜிப்பைத் திறந்து உள்ளேயிருந்த சிறு துண்டை வெளியே எடுத்து மனைவியிடம் கொடுத்தான். அடுத்து பையில் இருந்த முந்திரி பேக்கெட்டை எடுத்து மெத்தை மீது வைத்தான்

அவளது கையானது ஆதவனின் கட்டளைக்கு அடிபணிந்து துண்டை வாங்கிக் கொண்டாலும், வாயானது,“எனக்கு எங்கேயும் போக வேணாம்.” என்றது.

அவளுடைய குடும்பத்தினரைச் சந்தித்தால் அவளது மனநிலை மாறும் என்று நினைத்து, அவளுக்காக யோசித்து தான் இந்தத் திட்டத்துடன் வந்திருந்தான் ஆதவன். காலையிலிருந்து அவளுக்காக அவன் செய்யும் முயற்சிகளை முறியடித்துக் கொண்டிருந்த மனைவியின் மீது கோபம் வர,“உங்கண்ணன் வேணா மா உனக்கு?” என்று கேட்டான்.

அவனது கேள்வி காதில் விழுந்தாலும் அவளிடமிருந்து பதில் வரவில்லை. அருந்ததியின் விழிகள் முந்திரி பேக்கெட் மீது நிலைத்திருந்தன. அடுத்த நொடி வேகமாக துண்டை பேக்கெட் மீது தூக்கி எறிந்து,“யாருக்கு அது?” என்று கணவனிடம் கேட்டாள் அருந்ததி.

அந்தச் செய்கையில் சுதாரிக்க வேண்டியவனோ அப்பாவித்தனமாக,”உங்கண்ணன் பிள்ளைங்களுக்கு.” என்று பதில் அளித்தான்.

அதைக் கேட்டு அருந்ததியின் ஆத்திரம் கரையை உடைத்துக் கொண்டு வர, வேகமாக எழுந்து வந்தவள், துண்டை ஆதவன் மீது எறிய அதை அபாரமாக கேட்ச் பிடித்தான். அடுத்து முந்திரி பேக்கெட்டை ஜாக்கிரதையாக பையினுள்ளே வைத்து ஜிப்பை இழுத்து மூடியவள்,”யாருக்கும் கொடுக்க மாட்டேன்.” என்றாள்.

மனைவியின் சிறுபிள்ளைத்தனமான செயலில் எரிச்சலடைந்தவன்,”யோசிக்காம கண்டபடி பேசாத..அவங்க உன் அண்ணனோட பிள்ளைங்க.” என்றான் அழுத்தமாக.

அதை விட அழுத்தத்துடன்,”உங்க பிள்ளைக்காக தான் பத்திரப்படுத்தி வைச்சிருக்கேன்.” என்றாள்.

அவன் செவியில் விழுந்த செய்தியை நம்ப முடியாமல் அருந்ததியின் கையை இறுகப் பற்றி அவனருகே அமர வைத்தவன்

என்ன சொன்ன இப்போ?” என்று அவனுக்கே கேட்காத மென்மையான குரலில் கேட்டான்.

என்ன சொன்னேன்..முந்திரி பருப்பை என் வயத்திலே இருக்கற உங்க பிள்ளை சாப்பிடட்டும்னு சொன்னேன்.” என்று சொல்லி விட்டு, அவளது கரங்களை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டு, ஆதவனிற்கு முதுகை காட்டியபடி படுக்கையில் விழுந்தவளின் கண்ணீர் தலையணையை ஈரம் செய்தது.

அவளது முகத்தை அவன் புறம் திருப்ப, அவளது கண்ணீரில் உருகிய மனத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கடுமையான குரலில்,”இதை ஏன் என்கிட்டே முதலே சொல்லலை?” என்று கேட்டான்

எனக்கு உறுதியா தெரிஞ்சாதானே சொல்ல முடியும்..பத்து பிள்ளையா பெத்துயிருக்கேன்..இதுதான்னு பட்டென்னு சொல்ல.” என்று அவளும் கோபப்பட அதில் அவனின் கோபம் காணாமல் போனது.

அவனோடு அவளை இறுக அணைத்து,”சாரி..சாரி..இப்படின்னு தெரிஞ்சிருந்தா உன்னை அழைச்சிட்டு வந்திருக்க மாட்டேன்என்னாலே தான் உனக்கு அலைச்சல், மன உளைச்சல்..தலை சுத்துதுன்னு நீ சொன்ன போது பசின்னு நினைச்சிட்டேன்..அதான் நேரே ஹோட்டல் அழைச்சிட்டுப் போனேன்..சாரி..சாரிஎன்று தொடர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்டவனின் வாயை அவளது கையால் மூடியவள்,

இப்போ தெரிஞ்சிடுச்சுயில்லே..வேற எங்கேயும் போக வேணாம்..நம்ம வீட்டுக்குப் போகலாம்.” என்று அவளது முடிவில் மாற்றமில்லை என்று அவனுக்குத் தெரியப்படுத்தினாள்

அவளது பிடிவாதம் ஆதவனுக்கு பயத்தை அளித்தது. அவளது நிலை இப்படி என்று முன்பே தெரிந்திருந்தால் இந்தப் பயணத்தை மேற் கொண்டிருக்க மாட்டான். நேற்று அல்லது இன்று காலையில் தெரிய வந்திருந்தால் கூட முதல் காரியமாக அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பான். இப்போது என்ன செய்வது என்று தீவிரமாக யோசனை செய்தவன்

வெளிலே போயிருந்த போது அடுத்த தெருவுலே ஓர் ஆஸ்பத்திரியைப் பார்த்தேன்..அங்கே யாராவது டாக்டர் தெரியுமான்னு அந்த அண்ணன்கிட்டே விசாரிக்கறேன்..சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு நேரே அங்கே போகலாம்.” என்று சொல்ல, அதன் பிறகு என்ன என்று அவன் சொல்லாமல் விட்டதில் உஷாரானவள்,

அப்புறம்?” என்று அவனிடம் கேட்க,

எல்லாம் நல்லா இருக்குன்னு டாக்டர் சொல்லணும்னு எனக்கு கவலையா இருக்கு..நீ என்ன அப்புறம் இப்புறம்னு விசாரணை செய்திட்டு இருக்க..எனக்கு படபடப்பா இருக்குஎன்று அவனது பதற்றமான மனநிலையைத் தெரியப்படுத்த

அவனது அணைப்பிலிருந்து விடுபட்டவள்,”இப்போவே இப்படி பயந்தா எப்படி? இன்னும் எவ்வளவு இருக்கு.” என்றாள்.

ஓர் உயிர் அவனது பொறுப்பில் என்ற நினைப்பே அவனுக்கு பயத்தை ஏற்படுத்தியது. குடும்பத்தினரின் உதவி, வழிகாட்டல் இல்லாமல் பிரசவக் காலத்தை, குழந்தைப் பிறப்பை எப்படிச் சமாளிக்க முடியுமென்று அச்சமானது ஆதவனுக்கு. எனவே

ஆஸ்பத்திரிலேர்ந்து நேரே உங்க வீட்டுக்கு போகலாம்..உங்கம்மாகிட்டே நீ அம்மா ஆகப் போற விஷயத்தை சொல்லலாம்..சந்தோஷப்படுவாங்க.” என்றான் ஆதவன்.

கண்டிப்பா சந்தோஷப்படுவாங்க..அப்புறம் எப்போ வந்தீங்க..இந்த மாதிரி நேரத்திலே எதுக்கு பயணம் செய்தீங்கண்ணு கேள்வி வரும்..ஒரு பொய்யை மறைக்க பல பொய் சொல்ல வேண்டி வரும்..எனக்கு அதிலே விருப்பமில்லை.” என்று மறுத்தாள் அருந்ததி

கொஞ்ச நேரம் முன்னாடி நீயே தானேபத்து பிள்ளையாப் பெத்திருக்கேன்னு சொன்ன’ ..இந்த நேரத்திலே பெரியவங்க யாராவது நம்ம கூட இருக்கறது நல்லதுஅதான் உங்க வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சொல்லிட்டு அப்படியே உங்கம்மாவையும் நம்ம கூட அழைச்சிட்டுப் போகலாம்னு நினைச்சேன்.” என்று அவன் மனத்திலிருந்ததை அவளுடன் பகிர்ந்து கொண்டான்.

அதற்கு,“நீங்க இல்லாம தான் இன்னைக்கு உங்க தம்பி வீட்டு கிருஹப்பிரவேசம் நடந்திருக்கு..நம்ம கூட யார் இருந்தாலும் இல்லைன்னாலும் நடக்கறது நடக்கத் தான் செய்யும்..அது எல்லாத்தையும் சமாளிக்க நாம கத்துக்கணும்.” என்று சொன்னவள் அறிந்திருக்கவில்லை அடுத்து அடுத்து என்று வரிசையாக அவர்கள் வாழ்க்கையில் நேரப் போகும் நிகழ்வுகளை இருவரும் சேர்ந்து துணிவுடன் சந்திக்கப் போகிறார்கள், ஒருவருக்கொருவர் துணையாக இருந்து இடர்களைக் கடக்கப் போகிறாகளென்று.

அந்த உண்மையை மறுக்க முடியாமல் அதே சமயம் முழுமையாக அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் ஆதவனின் மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது.

அவனது அமைதியில் கலவரமடைந்தவள், அவளை வற்புறுத்தி அவள் வீட்டிற்கு அழைத்துச் செல்லக் கூடுமென்று நினைத்து,“இதுக்கு மேலே என்னாலே முடியாதுங்க….எனக்கு யார் வீட்டுக்கும் போக வேணாங்க..நம்ம வீட்டுக்கு போகலாம்ங்க.” என்று அழுகையுடன் சொன்னாள்.

இன்று காலையில் நிகழந்ததை நினைக்கக் கூடாதென்று அவன் ஒத்திப் போட்ட அந்த வேலையை முழு நேர வேலையாக அவனுடைய மனைவி ஏற்றுக் கொண்டிருந்ததைச் சரியாகப் புரிந்து கொண்டவன், இப்போதே அதைப் பற்றி பேசி முடித்து விடவேண்டும் என்று முடிவு செய்து,

பன்னிரெண்டு வயசுலேர்ந்து சம்பாதிக்கறேன்..இப்போவரை யார் வீட்டுக்கும் உதவி கேட்டு போனதில்லை..இனியும் அப்படியொரு  நிலை நமக்கு வர்றாது..வர விடமாட்டேன்..உனக்கு விருப்பமில்லாததை செய்ய வற்புறுத்த மாட்டேன்..நாம யார் வீட்டுக்கும் போக வேணாம் ஆனா நம்ம வீட்டுக்கு யாராவது வந்தா, வரேன்னு சொன்னா அவங்களை வர வேணாம்னு சொல்ல என்னாலே முடியாது.” என்றான்.

அவன் குடும்பத்தினரைப் பற்றி அவனது நிலைப்பாடைத் தெரிவிக்கிறான் கணவன் என்று மனைவிக்கு புரிந்து போக, அவனைப் போலவே அவளும்

வரட்டும்..உங்களுக்காக அவங்களை சகிச்சிட்டுப் போவேன்.” என்று அவளது நிலைப்பாடை  அவனுக்குத் தெரியப்படுத்தினாள்

*********************

அகராதிலே பொறுமை, சகிப்பு இரண்டுக்கும் ஒரே பொருள். ஆனா இரண்டுக்குமிடையே நுண்ணிய வேறுபாடு இருக்கறதா என்னோட அனுபவப் பாடம் சொல்லுது. இரண்டுக்குமே அடித்தளம் அன்பு, மரியாதை, பிடித்தம்னு பொதுவா இருந்தாலும் லேசா, மிக லேசா ஏதாவது ஒண்ணுலே கசப்பு சேர்ந்து பொறுமையானது சகிப்புத்தன்மை ஆகிடுத்துன்னு என்னோட கருத்து. அதனால் தான் முழுமையாக முறிந்து போகாமல் விரிசலோட பல உறவுகள் கடைசி வரை நம்ம கூட வருது. அப்படி இல்லை இரண்டும் ஒண்ணு தான்னு நினைக்கறவாங்க அந்தக் கருத்து வேறுபாட்டை கடந்து கதையைப் படிக்கவும்.

*******************************************

இந்தக் கதை எப்படி வந்ததுன்னா,

ஒத்தைச் சொல்லு (என்) புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது நீ (நான்)

தப்பிச் செல்லக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டது.’

அந்த ஒற்றைச் சொல்மதிப்புந்னு நான் தப்பா நினைச்சிட்டு இருந்திருக்கேன். போன பதிவை எழுதின பிறகு தான் அதுகர்மாந்னு புரிஞ்சது. என் கர்மா என்னை இந்தக் கதை எழுத வைச்சிருக்கு. உங்க கர்மா என்னைப் படிச்சிட்டு இருக்கீங்க.

மேலே குறிப்பிட்டுள்ள வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் யுகபாரதி.

**************************

ஆதரவு அளிக்கும் வாசகர்கள் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள். அடுத்த பதிவுலே கதை முடிஞ்சிடும்னு நினைக்கறேன்..stay blessed readers.

Advertisement