Advertisement

ஆதவன் எங்கே?” என்று அவருடைய அண்ணன் மகள் கேட்ட போது வள்ளியினால் அதை ஒதுக்கி தள்ள முடியவில்லை.

பூஜை அறையில் வனஜாவோடு அமர்ந்திருந்தனர் ஆறுமுகமும் வள்ளியும். சவீதாவும் உதயனும் ஒரு படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருக்க அவளது குடும்பத்தினர் இன்னொரு படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். வனஜாவின் கணவனும் குழந்தைகளும் வரவேற்பறையில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். வனஜாவின் கேள்விக்குப் பதிலாக அன்று காலையில், வீட்டு வாயிலில் நடந்ததை ஆறுமுகம் சொல்லஅதைக் கேட்டு வள்ளிக்கு திக்கென்றானது

என்னால் வர முடியாது, வரச் சௌகர்யப்படாதுஎன்று சொல்லியிருந்த அவருடைய அண்ணன் மகள் வனஜா, மதியத்திற்கு மேல் குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள். ஆதவன், உதயன் இருவருமே அவளை விட வயதில் சிறியவர்கள். உடன்பிறந்த அக்காவைப் போல் தான் அவளுடன் உறவாடுவான் ஆதவன். சென்னையில் உதயன் தனியாக இருந்த போதும் சரி திருமணமான பின்னும் சரி வனஜாவுடன் அவன் உறவு பாராட்டியதில்லை. உதயன் வீட்டோடு அத்தையும் மாமாவும் வந்த பின், நேரம் கிடைக்கும் போது வள்ளி மட்டும் அவளுடன் கைப்பேசியில் உரையாடுவார், ஒரேயொரு முறை ஆறுமுகம் அவளுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார். இதுவரை சவீதா அவளிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை. இன்றும் அந்தப் பழக்கத்தை பின்பற்றியிருந்தாள்

உதயன் வீட்டு கிருஹப்பிரவேசமாக இருந்தாலும் அவளுடைய அத்தை, மாமாவிற்காக அதில் பங்கேற்க முடிவு செய்தாள் வனஜா. எப்படியும் ஆதவனும் அவன் மனைவியும் மாலை வரை அங்கே தான் இருப்பார்கள் என்று எண்ணித் தான் அவளுடைய கணவனின் வேலை நேரத்தை மாற்றிக் கொண்டு, இரண்டு குழந்தைகளையும் இழுத்துக் கொண்டு புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்ள வந்திருந்தாள் வனஜா

வீட்டைச் சுற்றிப் பார்த்த போது ஆதவன் அவர்களுக்கு தென்படவில்லை. விருந்தை உண்டு முடித்த பின்னரும் அவர்கள் கண்ணில் அவன் படவில்லை. ஒருவேளை ஊருக்குக் கிளம்பிப் போய் விட்டானோ என்று சந்தேகம் வர, பூஜை அறைக்கு அவளை அழைத்து வந்த போது,

மாமா, ஆதவன் எங்கே..கண்ணுலே படவேயில்லை..ஊருக்குப் போயிட்டானா? இராத்திரி தான் கிளம்புவேன்னு சொல்லியிருந்தான்.” என்று ஆறுமுகத்திடம் விசாரிக்க

அதுதான் சாக்கு என்று காலையிலிருந்து மனத்தில் அடைத்து வைத்திருந்ததை அவளிடம் கொட்டி,”அந்த வீட்டுச் சாவி என்கிட்டே தான் இருக்கு..எங்கே போனான்னு தெரியலை.” என்று முடித்தார் ஆறுமுகம்.

அவனும் உங்க பையன் தானே..வீடு வரை வந்திட்டு வாசலோட போயிருக்கான்..எங்கே போனான்னு தெரியலைன்னு சொல்றீங்க..ஒரு ஃபோன் போட்டு விசாரிக்க மாட்டீங்களா?” என்று வனஜா கோபப்பட,

இல்லை ம்மா..இப்போ தான் விருந்தாளிங்க எல்லோரும் கிளம்பிப் போனாங்க..அவனோட மாமியார் வீடும்..” என்ற அவரின் விளக்கத்தை இடையிட்டு,

அவனோட மாமியார் வீட்டை அழைக்கலைன்னு தெரியுமில்லே..அங்கே எப்படி போவான்? அந்த ஆட்டோவை ஏன் மாமா நீங்க மறிக்கலை?” என்று வனஜா ஆத்திரப்பட, ஆறுமுகத்திடம் அதற்குப் பதிலில்லை.

சில நொடிகள் கழித்து,“அந்தச் சுவரைப் பார்க்க ஆள் வந்திருந்தான்..அதைச் சொல்ல அவனுக்கு ஃபோன் போட்டேன்..ஆனா அவன் என் ஃபோனை எடுக்கலை.”என்ற சொன்ன போது அவரது குரல் கரகரத்தது.

நீங்க செய்தது நியாயமா இருந்தா ஏன்  வருத்தப்படுறீங்க மாமா.” என்று சரியான கேள்வியோடு வந்தாள் வனஜா.

அப்போ நான் என்ன பேசியிருந்தாலும் எடுபட்டிருக்காதுஇனியும் எடுபடாது..உதயன் தான் அவன்கிட்டே பேசணும்.” என்று அவர் சொல்ல,

அவன் செய்தது தப்புன்னு நீங்க அவன்கிட்டே சொன்னீங்களா?” என்று அவள் கேட்க,

ஆறுமுகத்தின் அமைதியே அந்தக் கேள்விக்கான பதிலாகிப் போனது. அவரருகே அமர்ந்திருந்த வள்ளியின் புறம் திரும்பி,

ஆதவன் வேணாமா அத்தை..அண்ணன் உறவு வேணாமா உதயனுக்கு?” என்ற வனஜாவின் கேள்விக்கு வள்ளியிடம் பதிலில்லை.

உங்கண்ணன் வேணாமா உனக்கு?” என்று அருந்ததியிடம் கேட்டான் ஆதவன்.

வேணாம்..யாரும் வேணாம்..எங்கேயும் போக வேணாம்.” என்றாள் அருந்ததி.

இப்படித் தான் அவன் எது சொன்னாலும் அவனை எதிர்த்து, மறுத்துப் பேசிக் கொண்டிருந்தாள் அருந்ததி. காலையில் உதயன் வீட்டிலிருந்து புறப்பட்டு மெயின் ரோட் வந்து சேருமுன்,’தலையைச் சுத்துது..வயிற் என்னவோ செய்யுது..வண்டியை நிறுத்தச் சொல்லுங்கஎன்று அவனிடம் சொல்ல, மெயின் ரோட் வரை தான் ஆட்டோ பேசியிருந்ததால்,’கொஞ்சம் பொறு..மெயின் ரோட் வந்திடும்.’ என்று அவளைப் பொறுத்துக் கொள்ளச் சொல்ல,’முடியாது..இப்போ..இங்கேயே நிறுத்தணும்என்று அவள் பிடிவாதமாகச் சொல்ல, ஆதவன் மறுக்கும் முன், வண்டி பாழாகி விடப் போகிறது என்ற பயத்தில் ஓட்டுநர் ஆட்டோவை ஓரம் கட்ட, வண்டியிலிருந்து இறங்கி சிறிது தூரம் சென்று, சாலையின் விளிம்பில் தலையைக் கையில் ஏந்தியபடி அமர்ந்து, மூச்சை இழுத்து விட்டு அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் அருந்ததி. அவளைப் பின் தொடர்ந்து வந்த ஆதவன் அவளிடம் எதையும் கேட்கும் முன், திடமானக் குரலில்,

இப்போவே நம்ம வீட்டுக்குப் போகணும்.” என்றாள்.

அவளைப் போலவே தான் அவனும் யோசித்திருந்தான். ஆனால் அவள் வாயிலிருந்து அதே கருத்து வெளி வந்த போது ஏனோ அதைச் செயல்படுத்த அவன் விரும்பவில்லை. எனவே,

முதல்லே இங்கேயிருந்து போகலாம்.” என்றவன் அதன் பின் வீட்டிற்குப் போகலாமென்று உறுதி கொடுக்கவில்லை.

அங்கேயிருந்து கிளம்பினால் தானே அவள் விரும்பியபடி வீட்டுக்குச் செல்ல முடியும் என்பதால் அவனிடம் வாக்கு வாதம் செய்யாமல் ஆட்டோவில் ஏறிக் கொண்டாள் அருந்ததி. மெயின் ரோடு வரும் வரை அமைதியாக பயணம் செய்தனர். அங்கேயிருந்து வேறொரு ஆட்டோ மூலம் நெடுஞ்சாலையில் இருந்த பெரிய உணவகத்திற்குச் சென்றனர். அவளது உடல் நலக் குறைவிற்கு பசி தான் காரணமென்று நினைத்தான் ஆதவன். அவளின் கோபம் அவனை தூர நிறுத்தியது. அதனால் அமைதியாக உணவருந்தியபடி அவன் கைப்பேசியோடு உறவாடிக் கொண்டிருந்தான் ஆதவன்.

காலை உணவை முடித்துக் கொண்டு ஊருக்குப் போகப் போகிறோமென்று அருந்ததி எண்ணியிருக்க, சாப்பிட்டு முடித்த பின் சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் அங்கேயே காத்திருந்ததில் மீண்டும் தம்பி வீட்டிற்கு அழைத்துச் செல்லப் போகிறானோ என்று அவளுக்குச் சந்தேகம் வந்தது. அதை களைந்து கொள்ள நினைத்த போது சுவரை சரி செய்ய அவன் சிபாரிசு செய்த நபரிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது ஆதவனுக்கு. அந்த உரையாடலிருந்து உதயன் வீட்டிற்குப் போகப் போவதில்லை என்று தெளிவாகப் புரிய,

எதுக்கு இங்கே காத்திருக்கோம்.” என்று ஆதவனிடம் கேட்டாள்.

வண்டிக்காகஎன்றான்.

யாரோட வண்டி?” என்ற கேள்விக்கு,

தெரிஞ்சவங்க.” என்று ஒரு வார்த்தையில் விளக்கத்தை நிறுத்திக் கொண்டான் ஆதவன். மேலும் பத்து நிமிடங்கள் கழிய, மீண்டும் கைப்பேசி அழைப்பு வந்தது ஆதவனுக்கு. அந்த அழைப்பை ஏற்று, உணவகத்திலிருந்து அருந்ததியோடு வெளியே வந்தவன், சிறிது தொலைவில் காத்திருந்த சாம்பல் நிற இனோவா வண்டியை அவளிடம் காட்டி,”அந்த வண்டி தான் நம்மளை அழைச்சிட்டுப் போக வந்திருக்கு.” என்றான்.

எங்கே? ஊருக்கா?” என்று அவள் வியப்பாக,

இல்லை..தி நகர் போறோம்..அங்கே கெஸ்ட் ஹவுஸ்லே ரூம் ஏற்பாடு செய்திருக்கு..ரெஸ்ட் எடுத்திட்டு இராத்திரி ஊருக்குக் கிளம்பிப் போயிடலாம்.” என்றான்.

உறக்கத்திற்கு ஏங்கி கொண்டிருந்தது அவளது தேகத்திற்கு அந்தத் திட்டம் பிடித்திருந்தது. எனவே, ‘சரிஎன்று தலையசைவில் ஒப்புதல் கொடுத்தாள். அவர்கள் தி நகருக்குப் பயணித்துக் கொண்டிருந்த போது ஆறுமுகத்திடமிருந்து அழைப்பு வர அதை ஏற்கவில்லை ஆதவன்.

தி நகருக்குப் பலமுறை போயிருந்தாலும் இது போன்றொரு இடமிருப்பதை அருந்ததி அறியவில்லை. உஸ்மான் ரோட்டின் பின்பக்கம், ஒரு பெரிய வீட்டு வாசலில் வண்டி நின்றது. வண்டியிலிருந்து இறங்கியவர்களை வரவேற்ற நபரிடம் சில நிமிடங்களுக்கு ராஜபாளையம், திருப்பூர், சூரத், லூதியானாவைப் பற்றி உரையாடினான் ஆதவன். அதன் பின் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்து சென்று, வேறு உதவி ஏதாவது தேவைப்பட்டால் அவரைத் தான் அழைக்க வேண்டுமென்ற வேண்டுதலோடு விடைபெற்றுக் கொண்டார் அந்த நபர்.

விசாலமான சி அறையைக் கண்களால் சுற்றி வந்தபடி,“தி நகர்லே இந்த மாதிரி ஓர் இடமிருக்குன்னு இன்னைக்குத் தான் எனக்குத் தெரியுது.” என்றாள் அருந்ததி

அதற்கு, பிரபலமான கடை ஒன்றின் பெயரைச் சொல்லி,”அவங்களோட கெஸ்ட் அவுஸ் இது.” என்றான் ஆதவன்.

கண்களை விரித்து,“அவங்களோட வியாபாரம் செய்யறீங்களா?” என்று அவளது அதிர்ச்சியை வெளியிட்டாள் அருந்ததி.

அப்போது அவர்கள் இருவரும் கட்டிலில் அமர்ந்திருந்தனர், மனைவியின் அறியாமையில் மனது லேசாகிப் போக, உதடு புன்னகைக்க, மென்மையாக அவளது கன்னத்தைக் கிள்ளி,”அவங்க மட்டுமில்லை..இங்கே இருக்கற எல்லோரோடேயும் செய்யறேன்.” என்றான்.

அந்தப் பதிலில் அவளது மனமும் லேசாகிப் போக, அவனோடு ஒன்றியபடி,”அப்போ நேத்தே நாம இங்கே வந்திருக்கலாமில்லே.” என்றாள்.

அது மரியாதை இல்லை..அங்கே தங்கறது தான் மரியாதை.” என்ற அவனது பதிலில் காணாமல் போயிருந்த அவளது கோபம் தலை தூக்க,

உங்களுக்கு மூளையேயில்லை..அதான் மனுஷங்களைப் புரிஞ்சுக்க முடியலை.” என்று கணவனிடம் கோபமாக உரைத்து விட்டு போர்வையைப் போத்திக் கொண்டு படுத்து விட்டாள் அருந்ததி.

Advertisement