Advertisement

அத்தியாயம் – 6

மொழி, உடை, மருத்துவம், பலவகை வாகனம், தொலைத்தொடர்புச் சாதனம் என்று பல கண்டுபிடிப்புகள் மூலம் மனிதனின் வாழ்க்கை முறை மேம்பட்டிருந்தாலும் அத்தனை கண்டுபிடிப்புகளும் உபயோகமற்று போகும் சூழ்நிலைகளைக் கொண்டது தான் மனித வாழ்க்கை. அவமரியாதை, அலட்சியம், அவதூறு, இகழ்ச்சி, பரிகாசம், புறக்கணிப்பு, ஏளனம், ஏமாற்றம், வெற்றி, தோல்வி, பிறப்பு, இறப்பு என்று சிறிதும் பெரிதுமாக தினந்தோறும் பல நிகழ்வுகளை மனிதன் எதிர்கொள்ள நேரிடுகிறது. சம்பவம், அசம்பாவிதம் இரண்டையும் சரியான முறையில் கையாள, சேதாரமில்லாமல் அதிலிருந்து வெளி வர ஓர் உன்னதனமான கண்டுபிடிப்பு உதவுகிறது. தலைமுறை தலைமுறையாக நடைமுறையில், உபயோகத்தில் இருக்கிறது. விதி, தலைவிதி, ஊழ்வினை, முன்வினைப் பயன், கர்மா என்னும் கருத்தியல் (theory, philosophy) தான் அது

கற்பனைக்கு எட்டாத உயரத்தில், அதிகாரத்தில் அமர்ந்திருப்பது எப்படிச் சாத்தியமானது? ஊரையே விலைக்கு வாங்கும் அந்தஸ்த்திலிருந்து தடக்கென்று வீதியில் விழுந்தது எப்படி? குப்பையிலிருந்து கோபுரத்திற்குக் குடிபெயர்ந்தது எப்படி? கோர விபத்தில் குடும்பத்தை இழந்து ஒற்றையாக உயிர் பிழைத்தது ஏன்? நமக்கு மட்டும் ஏன் இப்படி? என்று பெரிய, ஆழமான விளக்கத்தை வேண்டி நிற்கும் கேள்விகளுக்கு ஒரேயொரு வார்த்தை தான் சரியான விடையாகிறதுவினைப்பயன். கடவுள் நம்பிக்கை மாய்ந்து போகும் தருணங்களில் கூட கர்மா உயிர் பிழைத்து விடுகிறது. மனித வாழ்வின் நியாயமற்ற முரண்பாடுகளை, அநியாயமான ஏற்றத் தாழ்வுகளை, ஏற்றுக் கொள்ள முடியாத சுக, துக்கங்களை தலைகீழாய்ப் புரட்டிப் போடும் நிகழ்வுகளை, வாழ்க்கை என்னும் மலையை, கடலை, வனத்தை, பாலைவனத்தை கடக்க உதவி செய்யும் கழி, கம்பு, துடுப்பு, மத்து, கத்தி, கானல் நீர் தான் கர்மா.

ஒரு வினைக்கு (செயல்) விடையாக அதைப் போன்றே ஓர் எதிர்வினையை உடனே ஆற்ற வேண்டுமென்ற அவசியமில்லை. அதே அளவு தாக்கத்தை இல்லை அதைவிட அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தக் கூடிய, முற்றிலும் வேறான எதிர்வினையை ஆற்றுவது தான் புத்திசாலித்தனம். அவனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்திற்காக வீட்டு வாயிலில் அவனை அவமதித்த தம்பியிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவனுடைய அப்பாவிடம் மட்டும் சில கட்டளைகளைப் பிறப்பித்து விட்டுப் புறப்பட்டுச் சென்ற அண்ணனின் செயல் ஏற்படுத்திய தாக்கம் மெதுவாக தான் தம்பிக்குப் புரிந்தது. உறவில் விழுந்த விரிசல் தம்பியின் உள்ளத்திற்குப் போய்ச் சேர வருடக் கணக்கானது

ஆதவன் புறப்பட்டுப் போனவுடன் ஆறுமுகத்தின் மனத்தில் இருந்த சந்தோஷம், நிறைவு காணாமல் போனது. புது வீட்டின் வாயிலில் நின்றிருந்தவரின் மனத்தில் சஞ்சலம் குடியேறியது. மூத்தவன் இல்லாமல் வீட்டினுள் செல்ல மனத்திற்கு வலுவில்லை. உறவுகளை எதிர்கொள்ள அச்சமாக இருந்தது. எப்படியாவது ஆதவனை சமாதானம் செய்திட வேண்டுமென்று முடிவு செய்து, தூரத்தில் சென்று கொண்டிருந்த ஆட்டோவைக் காட்டி, உதயனிடம்,

அவனுக்கு ஃபோன் போடு….அவன் எங்கேன்னு எல்லோரும் கேட்பாங்க.” என்று சொன்னவர் அந்த நேரத்திலும் அவன் செய்தது தவறு என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை.

ஆதவன் இப்படியொரு முடிவெடுப்பானென்று உதயனும் எதிர்பார்க்கவில்லை. வாயிலோடு புறப்பட்டுச் செல்வானென்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவனுடைய அப்பா சொன்னதைச் செயல்படுத்த அவனது அகங்காரம் அனுமதிக்கவில்லை. ‘என் வீட்டு கிருஹப்பிரவேசம்..அவன் இல்லைன்னா என்ன ஆகிடும்?’ என்று ஆணவமாக யோசித்தான்

இப்படித் தான் என் கல்யாணம் போதும் ஆதவனுக்குச் செய்யாம எப்படி எனக்குச் செய்யறீங்கண்ணு எல்லோரும் கேள்வி கேட்பாங்க, வம்பு பேசுவாங்கண்ணு கவலைப்பட்டீங்க..யாரும் வாயைத் திறக்கலை..எதுவும் பேசலை..மூணு வேளை சாப்டிட்டு ஆசீர்வாதம் செய்திட்டுப் போனாங்க.” என்று அலட்சியமாகப் பதில் கொடுத்தவன் உணரவில்லை எப்போதும் போல் அன்றும் ஆதவன் வளைய வந்ததால் தான் யாருக்கும் எதையும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லையென்று.

அதற்கு மேல் அங்கே நின்று கொண்டு நடந்ததை அலசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை உதயன். வேறு யாரும் வெளியே வருமுன் உள்ளே  செல்ல நினைத்தவன்,

உள்ளே போகலாம்..வாங்க.” என்று ஆறுமுகத்தை அழைக்க அவரிடம் அதற்கு எதிரொலி இல்லை

உங்க இஷ்டம்.” என்று சொல்லி விட்டு வீடு நோக்கி செல்லயிருந்தவனை டாக்ஸி சத்தம் நிறுத்தியது. யாரென்று திரும்பிப் பார்த்தவன், டாக்ஸியிலிருந்து இறங்கிய ஜோடியைக் கண்டவுடன் அவர்களை நோக்கி வேகமாகச் சென்று,

வா டா..வா டா ரமேஷ்.” என்று அவனுடைய நண்பனையும், “வாங்க மிஸஸ் ரமேஷ்.” அந்தப் பெண்ணையும் வரவேற்றான்.

வாயிலில் நின்றிருந்த ஆறுமுகத்தை,”என் அப்பா.” என்று அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, அவர்களும் அவருக்கு வணக்கம் சொல்ல, ஒருமுறை தெருக்கோடியைப் பார்த்து பெருமூச்சு விட்ட ஆறுமுகம் வேறு வழியில்லாமல் விருந்தினர்களோடு வீட்டினுள் சென்றார்.

பூஜை அறையில் தான் ஹோமம் வளர்த்திருந்தனர். வரவேற்பறை ஜன்னல்களை மூடி வைத்திருந்ததால் ஹோமப் புகையானது வெளியே செல்ல  வழியில்லாமல் வீட்டினுள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது. வரவேற்பறை தரையில் அமர்ந்தபடி நேற்று இரவு அருந்ததி தொடு வைத்திருந்த பூவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தாம்பூலத்தில் கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் வள்ளி. ரமேஷையும் அவனுடைய மனைவியையும் வள்ளிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் உதயன். உடனே அந்தப் பெண்ணின் கையில் பூவைக் கொடுத்து,”வைச்சுக்க ம்மா.” என்றார் வள்ளி.

நண்பனின் மனைவியை அவன் மனைவியிடம் ஒப்படைக்க நினைத்த உதயன்,“சவீதா எங்கே ம்மா?” என்று விசாரித்தான்.

இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தா..இப்போ தான் பின்பக்கம் போனா.” என்றார் வள்ளி.

டிஃபன் பந்தியைக் கவனிக்க போயிருப்பாள் என்று சரியாக யுகித்த உதயன்,“பின்பக்கம் தான் பந்தல் போட்டு சாப்பாடு ஏற்பாடு செய்திருக்கோம்..வீட்டைப் பார்த்திட்டு டிஃபன் சாப்பிடப் போகலாம்..வாங்கஎன்று விருந்தினர்களுக்கு வீட்டைக் காட்ட அழைத்துச் சென்றான் உதயன்.

ஹோமப் புகையினால் தலை பாரமாக இருந்தது வள்ளிக்கு. அதைப் பொருட்படுத்தாமல் அவரால் முடிந்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். காலையில் நடந்த கூத்தில் அவர் வந்து சேர தாமதமானதால் முக்கியமான பொறுப்புக்களை சவீதாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருந்தான் உதயன்.

 ஏதோ யோசனையில் அவரருகே நின்றிருந்த கணவரிடம்,“எங்கே ஆதவன்?” என்று கேட்டார் வள்ளி.

அந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல்,“அந்தப் பிள்ளை அருந்ததியை நீ ஏன் உன்கூட அழைச்சிட்டு வரலை?” என்று காலம் கடந்து அனைத்தும் நடந்து முடிந்த பின் மனைவியிடம் காரணத்தைக் கேட்டார் ஆறுமுகம்.

அவ எப்போ வந்தா என்ன?” என்று பதில் கேள்வி கேட்டார் வள்ளி.

அதானே அவ வராமலேயே போனா என்ன ஆகப் போகுது?” என்று கோபத்துடன் ஆறுமுகம் கேட்ட போது தான் விஷயத்தின் வீர்யம் வள்ளியைச் சென்றடைந்தது

அவ எங்கே? அவன் எங்கே? என்ன ஆச்சு? என்ற அவரது கேள்விகளுக்கு, “சின்னவனைக் கேட்டுக்கோ.’”என்று பதிலளித்தார் ஆறுமுகம்

இளையவனிடம் எதையும் கேட்கவில்லை வள்ளி. வீட்டில் உறவுகள் கூடியிருக்கும் வேளையில், எது நடந்திருந்தாலும் அவரை விட்டுக் கொடுக்க மாட்டான் மூத்தவன், விழாவிற்கு வந்திடுவான் என்று திண்ணமாக எண்ணினார். எனவே,

அடுத்த வந்த நிமிடங்களில் அவர் கேட்டதை போலவே ஒருவர் மாற்றி ஒருவர்ஆதவன் எங்கே?” என்று வள்ளியிடம் கேட்ட போது, ’வந்திடுவான்..வந்திடுவான்.’ என்று சமாளித்தவர் நேரம் ஆக ஆக ஆதவன் மீது கோபமானார். ஒரு கட்டத்தில் அதை வெளிப்படையாக விருந்தினர்களிடம் காட்டவும் செய்தார். உதயன் கல்யாணத்தின் போது முகம் சுணங்காமல் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்த ஆதவன், நேற்று கூட இந்த விசேஷத்திற்காக அதே போல் வேலை செய்த ஆதவன், இன்று அவர்கள் கண்ணில் படவில்லை என்றவுடன் ஏதோ சரியில்லை என்று உறவுகளுக்குப் புரிந்து போக, மேலும் விவரம் கேட்டால் வள்ளியின் வாயில் விழுந்து ஏழ வேண்டுமென்பதால் அதன்பின் யாரும் வாயைத் திறக்கவில்லை

மதியம் போல் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கிளம்பிப் போய் விட, எஞ்சியிருந்தது சவீதாவின் குடும்பம் மட்டும் தான். ஆதவன், அருந்ததிக்கு என்ன ஆயிற்று என்று சவீதாவின் அன்னைக்குத் தெரிய வேண்டியிருந்தது. மறைமுகமாக மகளிடம் விசாரிக்க, மகளோ,’கேட் வரை வந்திட்டு வேணும்னே வீட்டுக்குள்ளே வராமப் போனா வான்னு கெஞ்சிட்டு அவங்க பின்னாடியே நாங்க போகணுமா.’ என்று உதயனின் பாஷையில், பார்வையில் நடந்ததை சொல்ல, ஆதவன், அருந்ததி இருவரும் அப்படி எதிர்பார்க்க வாய்ப்பேயில்லை மகள் தான் ஏதோ உளறுகிறாளென்று நினைத்தார்.

Advertisement