Advertisement

அத்தியாயம் – 5

அவர்களைப் போல் உடல் உழைப்பை மட்டும் நம்பி இருக்காமல், ஆதவனைப் போல சொந்த ஊரிலேயே உழன்று கொண்டிருக்காமல், பெரிய படிப்பு படித்து, வெளியூருக்குச் சென்று, பெரிய வேலையில் அமர்ந்துபொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து. சொந்த வீடு கட்டி சமூகம் மெச்சும்படி அவனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்த உதயனை நினைத்து பெருமையாக உணர்ந்தனர் ஆறுமுகம் தம்பதியர். எனவே தான் அவனுக்குப் பணப் பிரச்சனை வந்த போது அவர்களின் பங்கைக் கொடுத்து, இளைப்பாற வேண்டிய வயதில் அவர்களின் உழைப்பையும் அவனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

வீட்டை விற்ற போது அவர்களுக்கு கிடைத்த பங்குப் பணத்தை அவர்களுக்காக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமே அவர்கள் இருவருக்கும் வரவில்லை. இரண்டு குழந்தைகள், இருவரும் மகன்கள் என்பதால் அவர்களின் முதுமை காலத்தைப் பற்றி யோசனை செய்ததேயில்லை. பிள்ளைகள் இருவருக்குமிடையே உறவு உடைந்து போகும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் வள்ளி. அதற்கு முக்கியக் காரணம் மூத்தவன் ஆதவன். என்ன நடந்தாலும் அவர்கள் பேச்சை அவன் கேட்பானென்று அசைக்க முடியாத நம்பிக்கை ஆறுமுகம் தம்பதியருக்கு. எனவே தான் பல லட்சங்களை இளையவனுக்கு கொடுத்த போது சில ஆயிரங்களைக் கூட மூத்தவனுக்கு கொடுக்கத் தோன்றவில்லை. ஆதவனைப் பற்றி ஆறுமுகம், வள்ளியின் கணிப்பு சரியாக தான் இருந்தது. நம் குடும்பம் இது என்று நினைத்ததால் தான் அவனின் பங்கிற்காக முரண்டு பிடிக்கவில்லை, கொடுக்கவில்லை என்று முறுக்கிக் கொண்டு போகவில்லை. எதிர்காலத்தில் கொடுத்து விட வேண்டுமென்று எழுதி வாங்கிக் கொள்ளவில்லை.

எந்தச் சூழ்நிலையிலும் இது என் குடும்பம் என்ற உணர்வு உயிரோடு இருக்க வேண்டுமானால் அந்த குடும்ப உறுப்பினர்கள் சுயநலமாக நடக்கக் கூடாது, சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நியாயத்தை மாற்றக் கூடாது. அன்று, உதயனின் கிருஹப்பிரவேச தினத்தன்று, அம்மா, அப்பா என்ற ஸ்தானத்திற்கு உரிய கடமையை உதயனுக்குச் சரியாக செய்தவர்கள், பிரச்சனை வருமென்று சுயநலமாக யோசித்து, ஆதவனுக்கு நியாயம் செய்யத் தவறி விட்டனர். முக்கியமாக, ஆறுமுகம், வள்ளி இருவருமே அன்று சவீதாவின் மாமனார், மாமியாராக யோசித்து நடந்து கொண்டனர்அருந்ததியின் மாமனார், மாமியாராக அவர்கள் கடமையைச் சரியாக ஆற்றவில்லை. நம் குடும்பத்தினர் என்ற உணர்வு மரித்த பின் எத்தனை முயன்றாலும் அதை மீட்டெடுக்க முடியாது.

வங்கியில் வாங்கியிருந்த வீட்டுக் கடனைச் செலுத்திய பின்,’அடுத்ததாக, நீங்க கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கறேன்.’ என்று பெற்றவர்கள் கொடுத்து பணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டுவீடு என்னுடையதுஎன்று உரிமை கொண்டாடினால் என்ன செய்வோம்? அடுத்து எங்கே செல்வோமென்று வள்ளி, ஆறுமுகம் இருவரும் யோசிக்கவே இல்லை. மூத்த மகனின் வீட்டிற்கு செல்லும் உரிமையை இழந்து விட்டோமென்று அவர்கள் இருவரும் உணரவேயில்லை.

நேற்றிரவிலிருந்து ஆழமாக யோசிக்க ஆரம்பித்திருந்தான் ஆதவன். இந்த வீடாக இருக்கட்டும் இல்லை புது வீடாக இருக்கட்டும், உதயன் எத்தனை வீடு வாங்கினாலும் அதில் அவனுக்கு இடமில்லை என்று புரிந்து விட்டது. அது அவனுடைய அப்பா, அம்மாக்கு புரிந்ததா, புரிந்த பின்னும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களென்று அவனுக்கு சிறிது குழப்பமாக இருந்தது. அவனுடைய அப்பாவிற்கும் தம்பிக்கும் இடையே நடந்த உரையாடலை அவனது குழப்பத்தை தெளிய வைத்தது

சுவரில் ஏற்பட்டிருந்த சேதத்தை கவனிக்காமல் விட்ட அவனது முட்டாள்தனத்தை நொந்து கொண்டான். நேற்றிரவே வண்டி ஓனரிடம் நடந்ததை ஒப்பித்திருப்பார் ஓட்டுநர். அது தான் வழக்கம். சிறியதோ பெரியதோ விபத்து நடந்தவுடன் ஓனருக்குத் தெரிவிக்க வேண்டியது ஓட்டுநரின் கடமை. அவர் உயிரோடு இல்லாத பட்சத்தில் தான் அந்தச் சறுக்கல் மன்னிக்கப்படும். இதுவரை வண்டியின் ஓனரிடமிருந்து ஆதவனுக்கு அழைப்பு வரவில்லை. வண்டியின் ஓனர் அந்த விஷயத்தைப் பெரிது படுத்தவில்லை என்று புரிந்து கொண்டான். அந்த விஷயத்தை வைத்து அவனுடைய தம்பி அவனைக் கேவலப்படுத்தப் போகிறானென்று ஏதாவது அறிகுறி தெரிந்திருந்தால் ஊரைப் பார்க்க சென்றிருப்பான் ஆதவன். இனி உதயனின் வீட்டிற்கு அவளை அழைத்து வரக் கூடாதென்ற அருந்ததியின் கோரிக்கை சிறிது நேரத்தில் நிறைவேறப் போகிறது என்று லேசாக சந்தேகம் வந்திருந்தாலும் உடனடியாக வீட்டிற்குக் கிளம்பியிருப்பான். ஆயுளுக்கும் மறக்க முடியாத நிகழ்வு நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை

சில நிமிடங்கள் கழித்து ஆறுமுகத்தின் கைப்பேசி ஒலி எழுப்ப, அழைப்பை ஏற்றவர்,”மூணாவது மாடி..கொஞ்சம் சாமானும் ஏத்தணும்..மேலே வாங்க.” என்று அழைத்தார்.

டிரைவர்கள் வீட்டினுள்ளே நுழைந்தவுடன் அவர்களுக்கு வழி விட்டு அருந்ததியோடு ஜன்னல் அருகே நின்று கொண்டான் ஆதவன்.  

சீக்கிரம், சீக்கிரம்.” என்று அவர்களை விரட்டி பரிசுப் பொருள்களை வண்டியில் ஏற்றினார் ஆறுமுகம். சாமானை ஏற்றிய பின்,“கிளம்பலாம் டா..” என்று ஆதவனிடம் சொல்ல, அருந்ததியோடு வெளியே சென்றான் ஆதவன். வரவேற்பறையின் மின்விசிறையை அணைத்து விட்டு சமையலறை, இரண்டு படுக்கையறை என்று ஒருமுறை வீடு முழுவதையும் சரி பார்த்து விட்டு பூட்டிக் கொண்டு புறப்பட்டார்.

அவருக்காக வீட்டு வாசலில் காத்திருந்த ஆதவன் கையில் அவனுடைய பை இருந்தது. அது அவனுடையது என்று அவருக்குத் தெரியவில்லை. காரணம் அது அருந்ததியின் பை. வேலை விஷயமாக அவள் வெளியூர் செல்லும் போது இந்தப் பையை தான் எடுத்துச் செல்வாள். இரண்டு நாள்களுக்கு தேவையான உடை, அத்தியாவசியப் பொருள்கள், விசேஷத்திலிருந்து திரும்பி வரும் போது கிடைக்கும் மிச்ச, மீதி பொருள்கள், பரிசு பொருள்கள் என்று அனைத்தும் அதில் அடங்கி விடும்

என்ன பை டா இதுஉதயன் மறந்திட்டு போயிட்டானா?” என்று ஆதவனிடம் அவர் கேட்க,

எங்களோடது.” என்று சொன்னவன் அதைத் தொடர்ந்து,”அங்கேயிருந்து நேரே ஊருக்குப் போகறதா இருக்கேன் ப்பா.” என்று அவனது பயணத் திட்டத்தை வெளியிட்டான். அதைக் கேட்டு வெகு நிம்மதியாக உணர்ந்தாள் அருந்ததி.

அப்போ இவன் இங்கே திரும்பி வரப் போகறதில்லையா?’ என்று மனத்தில் தோன்றிய கேள்வியை மகனிடம் கேட்டிருக்கலாம் ஆறுமுகம். கேட்கவில்லை. ‘வள்ளிகிட்டே சொல்றேன்..அவ விசாரிக்கட்டும்.’ என்று அதையும் ஒத்திப் போட்டார்.

ஓட்டுநருக்கு அருகே இருந்த இருக்கையில் ஆறுமுகம் அமர்ந்து கொள்ள, ஆதவன், அருந்ததி இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்குத் துணையாக, இணையாக வண்ண வண்ண காகிதம் சுற்றப்பட்ட பரிசுப் பொருள்கள். வீட்டிலிருந்து புறப்பட்ட போது இரண்டு வண்டியும் ஒன்றாக தான் புறப்பட்டன. இன்னொரு வண்டியின் ஓட்டுநர், வாகன நெரிசலில் அவரது வண்டியை இரண்டு சக்கர வாகனம் போல் வளைந்து வளைந்து ஓட்டி இவர்கள் வண்டியை முந்திக் கொண்டு சென்று விட்டார்

நிதனாமாக மேடு பள்ளங்களைக் கையாண்டு ஒரே வேகத்தில் அழகாக செல்ல, மிதமான ஏஸி இதமாக இருக்க, ஆதவனருகே நெருக்கமாக அமர்ந்து அவனது தோள் மீது தலையைச் சாய்ந்து கொண்டாள் அருந்ததி. உடனே,

என்ன ஆச்சு?” என்று மனைவியிடம் மெல்லிய குரலில் விசாரித்தான் ஆதவன்.

களைப்பா இருக்குஎன்றாள் அருந்ததி.

காலை வேளையில் அவளைக் களைப்பாகவே பார்த்ததில்லை. உறக்கமில்லாத இரவு தான் காரணமென்று நினைத்து,”சரி..நீ தூங்கு..வீடு வந்ததும் எழுப்பறேன்.” என்று அவள் சாய்ந்து கொள்ள வாகாக அமர்ந்து கொண்டான்.

வீட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது,“அந்த வண்டி அடுத்த ட் ரிப்புக்குப் போயிடுச்சு..நாம இன்னும் போய்ச் சேரவே இல்லை..டிஃபனே முடிஞ்சிடும் போல..வேகமாகப் போ ப்பா.” என்று டிரைவரிடம் ஆறுமுகம் கோபப்பட்டதில் விழித்தெழுந்தாள் அருந்ததி

நல்லவேளை எழுந்திரிச்சிட்டே..இதுக்கு அப்புறம் ரோட் கிடையாது..ஜாக்கிரதை.” என்று எச்சரிக்கை செய்தான் ஆதவன்.

கிட்டதட்ட பத்து நிமிடங்கள் கழித்து, வண்டியின் குலுக்கலில் பரிசுப் பொருள்களெல்லாம் இடம் மாறியிருக்க ஒருவாறு உதயனின் வீட்டை அடைந்தனர்.

இன்று அந்த ஏரியாவில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதாக தோன்றியது ஆதவனுக்கு. நேற்று மதியம் இது போல் இருக்கவில்லை. மாலை வேளையில் மொத்தமாக ஆள் ஆரவாரம் அடங்கிப் போய் விட்டது. அந்தத் தெருவை யோசனையோடு ஆதவன் பார்த்துக் கொண்டிருந்த போது அவர்கள் வண்டியைக கடந்து அந்தத் தெருவியின் கோடிக்குச் சென்றது ஓர் ஆட்டோ

வீட்டின் எதிர் திசையில் வண்டியை நிறுத்தினார் ஓட்டுநர். அவளது காலடியில் விழுந்து கிடந்த பரிசுப் பொருள்களை இருக்கை மீது வைத்து விட்டு அருந்ததி இறங்குவதற்கு சிறிது நேரமானது. அதற்குள் ஆறுமுகமும் ஆதவனும் வண்டியிலிருந்து இறங்கி இருந்தனர். வாயில் கேட் திறந்திருந்தாலும் விருந்தாளிகள் யாரும் தென்படவில்லை

பரிசுப் பொருள்களை உள்ளே எடுத்துச் செல்லும்படி ஓட்டுநருக்கு கட்டளையிட்டார் ஆறுமுகம். கையில் அவன் பையுடன் மெதுவாக வீட்டை நோக்கி சென்ற ஆதவன், உள்ளே செல்லாமல், நேற்று இரவு டெம்ப்போவை நிறுத்திய இடத்திற்கு சென்றான். கேட்டை பொருத்தியிருந்த பில்லரின் ஓரம் சேதமடைந்திருந்தது. வண்ணப்பூச்சு போய், சிமெண்ட் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. பெரிய சேதாரமில்லை ஆனால் இரத்தக் காயம் போல் கண்களை உறுத்தியது. அவனைத் தொடர்ந்து வந்த ஆறுமுகம்,

இதுக்கு தான் அப்படி கோபப்பட்டிருக்கான்..நான் என்னவோ பெரிசா உடைஞ்சிடுச்சுன்னு நினைச்சேன்.” என்றார்.

பெரிசு இல்லைன்னாலும் உடனே சரி செய்யணும் ப்பா….கேட் பக்கத்திலே இருக்குபளிச்சுன்னு இது தான் கண்ணுலே படும்..இராத்திரியே நான் கவனிச்சிருக்கணும்.” என்றான்.

வண்டி ஓட்டிட்டு வந்தவன் ஜாக்கிரதையா இருந்திருக்கணும்..அவன் என்ன செய்வான்? சுவர்லே லைட் பொருத்தியிருக்கணும் உதயன்..தப்பு நம்ம பேர்லே தான்..ஹெட்லைட்லே  குத்துமதிப்பா தான் தெரியும்.” என்றார் ஆறுமுகம்.

எல்லோர் கண்ணும் அங்கே தான் போகும் ப்பா..அதை மட்டும் திரும்பப் பூசினாத் தனியா தெரியும்..அந்தப் பக்கம் மொத்தத்தையும் உடைச்சு எடுத்திட்டு பூசினா தான் சரியா இருக்கும்..நேத்து வண்டி ஓட்டிட்டு வந்த அண்ணகிட்டே பேசறேன்..கட்டுமானப் பொருள் ஏத்திட்டு போறதுனாலே கொத்தனார் யாரையாவது தெரிஞ்சிருக்கும் அவருக்கு..இன்னைக்கே இதைச் சரி செய்திடலாம்..நான் கிளம்பறத்துக்குள்ளே வரச் சொல்றேன்..இல்லை உங்க நம்பர் கொடுத்திடறேன்..நீங்கெல்லாம் இங்கே தானே இருப்பீங்க.” என்றபடி உடனேயே சட்டைப் பேக்கெட்டிலிருந்து அவனது கைப்பேசியை வெளியே எடுத்தான் ஆதவன்.

கணவன், மாமனார் உரையாடலைக் கேட்டபடி அவர்களருகே வந்து நின்றிருந்தாள் அருந்ததி.

அப்போது வீட்டினுள்ளேயிருந்து உதயனும் சில விருந்தினர்களும் வந்தனர். அவர்களை தொடர்ந்து அவர்கள் வந்த வண்டியின் டிரைவர் வந்தார். ஆறுமுகத்தைக் கடந்து சென்ற போது,”இங்கேயே இருங்க..இவங்களை அனுப்பி வைச்சிட்டு வரேன்.” என்று சொல்லி விட்டுச் சென்றான் உதயன்.

அது ஆதவனின் காதுகளில் விழுந்தாலும் அவனது கவனம் முழுவதும் அவனது கைப்பேசியில் இருந்தது. அவன் அழைத்துக் கொண்டிருந்த இலக்கு அந்தச் சமயத்தில் பிஸியாக இருந்தால்,‘நாம கிளம்பறத்துக்குள்ளே அவர் வந்தா பேசி முடிச்சிரலாம்னு நினைச்சா..நம்பர் கிடைக்கவே மாட்டேங்குது.’ என்று எண்ணியபடி, மீண்டும் அழைப்பு விடுக்க அவன் விழைந்த போது, விருந்தினரை வழியனுப்பி விட்டு வேகமாக அவனருகே வந்த உதயன், ஆறுமுகம் இருப்பை ஒதுக்கி விட்டு, அருந்ததியின் இருப்பை கருத்தில் கொள்ளாமல்,

உன்னை நம்பி வீட்டை விட்டிட்டுப் போனேன் பார் என்னைச் சொல்லணும்காலைலேர்ந்து எல்லோரும்என்ன வெளிச்சுவர் இப்படிச் சேதமாயிடுச்சுன்னு துக்கம் விசாரிக்கறாங்க..காசுக்கு வேலை பார்க்கறவங்களுக்கு எப்படி நம்ம உழைப்போட அருமை தெரியும்.. உறவுக்காரங்க யார்கிட்டேயாவது வீட்டு மேற்பார்வையை ஒப்படைச்சு இருக்கணும்னுஅட்வைஸ் கொடுக்கறாங்க..அண்ணன்கிட்டே தான் ஒப்படைச்சேன்னு அவங்கிட்டே சொன்னா உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க.. நான் தான் சரியில்லை..எனக்கு தான் பொறுப்பு இல்லைன்னு சொல்வாங்க..

நான் சரியில்லை தான்..எனக்கு தான் பொறுப்பில்லை..உனக்கு என்ன தெரியும், என்ன செய்ய வரும்னு எனக்குத் தெரியும் தானே..சொந்தமா எதையும் யோசிச்சு செய்யற தகுதி உனக்கு இல்லைங்கறது தெரிஞ்சும் உன்கிட்டே பொறுப்பை ஒப்படைச்சது என்னோட தப்பு தான்..சொந்த உழைப்புலே ஒரு வீட்டைக் கட்டி கிருஹப்பிரவேசம் செய்யறது பெருமைக்குரிய விஷயம்னு உனக்கு எப்படிப் புரியும்? இதுவரை நாங்க பெருமைப்படற மாதிரி ஏதாவது ஒரு விஷயம் செய்திருக்கேயா நீ? என்று ஆதவன் மீது வன்சொல்லை வாறியிறைத்த உதயனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் ஆறுமுகமும் அருந்ததியும்.

ஒரு விஷயமில்லை..நிறைய விஷயம் செய்திருக்கேன்.. நீங்க யாரும் பட்டினியைப் பார்க்காதது, பசியை உணராதது பெருமைக்குரிய விஷயம் தானே..எல்லோரையும் போல மட்டன் சாப்பிட்டு, புதுசு போட்டுகிட்டு பட்டாசு வெடிச்சு பந்தாவா தீபாவளியைக்  கொண்டாடினது பெருமைக்குரிய விஷயம் தானே..உன்னோட படிப்பு, வேலை, கௌரவம் எல்லாம் என் மூலமா உனக்குக் கிடைச்சிருக்கறது பெருமைக்குரிய விஷயம் தானே..என்னோட உழைப்புலே காது குத்துலேர்ந்து கல்யாணம் வரை மொய் எழுதி இருக்கேன்.. சடங்கு, சாவுன்னு சுக துக்கத்துக்கு செலவழிச்சிருக்கேன்..உறவுக்காரங்க முன்னாடி நம்ம குடும்பத்தோட கௌரவத்தை நான் ஒருத்தனா தூக்கி பிடிச்சிட்டு இருக்கறது பெருமைக்குரிய விஷயம் தானேஎன்று அந்த நொடியே உதயன் மறக்க முடியாத அளவுக்குப் பதிலடி கொடுத்திருக்கலாம் ஆதவன். ஆனால் கொடுக்கவில்லை

அப்பா, மகன், அண்ணன், தம்பி, கணவன் யாராக இருந்தாலும், எந்த ஸ்தானத்திலும் ஓர் ஆண்மகனின் கௌரவம் அவன் ஆற்றும் கடமையிலும் அவனது உடமையிலும் இருக்கிறது. அவனைச் சுற்றியிருக்கும் பெண்களின் பவுஷுவினால் அவனது அந்தஸ்து நிர்ணயக்கப்படுகிறது. புகுந்த வீட்டில் அக்காவைப் பார்க்கப் போகும் தம்பி கட்டாயமாக அவளுக்காக எதையாவது கொண்டு செல்ல வேண்டும். அவன் அண்ணனில்லை அவளுடைய தம்பி தான் என்று அவனுக்குத் தளர்வு கிடைக்காது. சமூகத்தின் கண்களில், ஜான்பிள்ளையானாலும் அவன் ஆண்பிள்ளை, பிறந்த வீட்டின் பிரதிநிதிஅண்ணன், அப்பா ஸ்தானத்தில் இருக்கும் ஆண்மக்களுக்கு அல்சைமர் (Alzheimer) வந்தால் தான் அவர்கள் கடமையிலிருந்து விடிமோசனம் கிடைக்கும். பெரும்பாலான சமயங்களில், கணவன், மகன் ஸ்தானத்தில் இருக்கும் ஆண்மகனின் கௌரவம் அவன் ஆற்றும் கடமைவிட அவனது உடமைகளில் தான் இருக்கிறது

ஆண்மகனாக இருந்தாலும் அக்கா, தங்கையுடன் பிறக்கவில்லை உதயன். வீட்டின் கடைக்குட்டி. வீட்டுப் பொறுப்புக்களிருந்து ஆதவன் மூலம் விடுதலை கிடைத்ததால் தான் இன்று அவன் ஒரு வீட்டிற்குச் சொந்தக்காரன் . அவனது கௌரவத்தை அண்ணன் தான் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறானென்று தெரியவில்லை. அவனுடைய அகந்தையின் விளைவாக, வளைக்க முடியாத, தளர்த்த முடியாத, உடைக்க முடியாத, களைய முடியாத, கரைக்க முடியாத தடையை அவர்களிடையே உருவாக்கி, இனி அவனது குடும்பம் அவனுடைய மனைவி மட்டும் தான் என்று ஆதவனைப் பூரணமாக உணர வைத்திருந்தான் உதயன்

உதயனின் வசைச்சொல்லை உள்வாங்கியவன், அமைதியாக, சேதமடைந்திருந்த சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கவனத்தைக் கலைத்தது தெருக் கோடியிலிருந்த வந்து கொண்டிருந்த ஆட்டோ. காலி ஆட்டோவை நோக்கி கை அசைத்த ஆதவன்,”அந்த டெம்ப்போ அண்ணன்கிட்டே உங்க நம்பரைக் கொடுக்கறேன் ப்பாசுவரையே இடிச்சு புதுசாக் கட்டிக்கோங்க..செலவு என்னோடது.” என்று ஆறுமுகத்திடம் சொல்லி விட்டு, சிலையாக நின்றிருந்த அருந்ததியின் கையைப் பற்றி இழுத்து,”வாஎன்று அவளையும் அழைத்துக் கொண்டு அவர்களெதிரே நின்ற ஆட்டோவில் ஏறிச் சென்று விட்டான்.

Advertisement