Advertisement

கணவரிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஆளுக்கொரு பை என்று பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு உதயன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு வண்டிகளில் விருந்தினர்களோடு புறப்பட்டுப் போய்விட்டார் வள்ளி. ஏதாவது ஒன்றில் அருந்ததியையும் அழைத்துச் சென்றிருக்கலாம். அவளை அவருடன் அழைத்து செல்வது அத்தனை முக்கியமாக அவருக்கு படவில்லை. எனவே மூத்த மகன், மருமகள், கணவன் மூவரும் ஒன்றாக வரட்டும் என்று அவராக முடிவு செய்து அதைக் கட்டளையாக கணவருக்குத் தெரியப்படுத்தினார். அவரது உடலானது ஏகப்பட்ட பதற்றத்தில் இருந்ததாலும் மூளையின் எச்சரிக்கையை மதித்து மாடிப்படியில் அமர்ந்திருந்த மூத்த மகனின் புறம் பார்வையைத் திருப்பாமல் தப்பித்துப் போய் விட்டார் வள்ளி. எதுவாக இருந்தாலும் விழா முடிந்து தானென்று ஒத்திப் போட்ட வள்ளி அறியவில்லை மூத்த மகன், மருமகள் இருவரையும் இதற்கு பின் சந்திக்கவே போவதில்லையென்று

நேற்றிரவு முழுவதும் மூத்த மகன் வெளியே, மாடிப்படியில் அமர்ந்திருந்தது ஆறுமுகத்திற்குத் தெரியாது. காலையில் தெரிய வந்த போது மின்சாரம் போய் விட்டதால் வெளியே அமர்ந்திருக்கான் என்று நினைத்துக் கொண்டார். நேற்று நடந்ததைக் கேள்விப்பட்டிருந்தால் கூட, இப்போது, வெட்டியாக, வண்டிக்காக காத்திருந்த நேரத்தில் மூத்த மகனையும் மருமகளையும் எப்படியாவது சமாதானம் செய்திருப்பார்மனைவியின் செய்கைக்கு மன்னிப்பு கேட்டிருப்பார். அவரைப் பொறுத்த வரை அவருடைய மனைவியின் செய்கைக்கு அவர் பொறுப்பு. அதே போல் சவீதாவின் செய்கைக்கு உதயனும் அருந்ததியின் செய்கைகளுக்கு ஆதவனும் பொறுப்பு. வீட்டுப் பெண்கள் தவறாக நடந்து கொண்டால் அந்த தவறை சரி செய்வது வீட்டு ஆண்களின் கடமை. மாமனாரின் கொள்கை பற்றி அருந்தத்திக்கு தெரிந்திருந்தால்.’உங்க சின்ன மகன் சொன்னதுக்கு நீங்கதானே பொறுப்பு..சொந்த அண்ணனை அவமரியாதையா பேசலாமா?’ என்று நேற்றே அவரிடம் நியாயம் கேட்டிருப்பாள். எதுவுமே நடக்காதது போல் அவளுடைய மாமியார் நேற்றிரவு நடந்து கொண்டது அவளது நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்தது.

சவீதாவின் அம்மாவுடன் வீட்டினுள்ளே நுழைந்த மூத்த மருமகளிடம்,”அவன் எங்கே?” என்று விசாரித்தார் வள்ளி.

அவரின் முகத்தைப் பார்க்கக் கூட பிடிக்கவில்லை. ‘நீங்களே வெளியே போய் பாருங்க..அவங்கிட்டே பேசுங்கஎன்று பதில் கொடுக்க தோன்றினாலும்,”படிலே உட்கார்ந்திருக்காங்க.” என்று பதில் அளித்தாள் அருந்ததி.

அதற்கு வள்ளி எதிர்வினை ஆற்றும் முன்,”உங்க மூத்த மகனை அவங்க அப்பாவோட படுத்துக்கச் சொன்னேன்..வேணாம்னு சொல்லிட்டார்.” என்றார் சவீதாவின் தாயார்.

அதில்என் வீட்லே நீ என்ன நாட்டாமைஎன்ற உரிமை உணர்வு பொங்கி எழ,“இருக்கறது இரண்டு அறை..ஒண்ணு உதயனோடது..இன்னொன்னு எங்களோடது..எங்களோட அறைலே அவருக்கே இடமில்லை.. பூஜை சாமான், பரிசுப் பொருள்ன்னு எக்கசக்கமா வாங்கி வைச்சிருக்கு..சமையல் சாமானும் அங்கே தான் இருந்திச்சு..நாளைக்கு நம்மளோட தூக்கிட்டுப் போனா டிஃபன் செய்ய லேட்டாகிடும்னு சமையல் ஆள் சொன்னதாலே உதயன் அப்பாகிட்டே சொல்லி ஒரு வண்டி பிடிச்சு அதை மட்டும் அனுப்பி வைச்சிட்டோம்.” என்று சொன்னவர்க்கு தெரியவில்லை வண்டி ஏற்பாடு செய்தது கணவரில்லை மூத்த மகன் தானென்று

ஆறுமுகத்திற்கு சென்னை பழக்கமாகி விட்டது. ஓரிருமுறை தனியாக உறவினர் வீட்டிற்குச் சென்று வந்திருக்கார். தனியாக ஊருக்குக் கூட போய் வந்திருக்கார். அவர்கள் வசிக்கும் ஏரியாவில் இருக்கும் பலசரக்குக் கடை, பால் டிப்போ, தையல் கடை, செருப்புக் கடை, துணிக் கடை, ஆட்டோ ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் என்று அனைத்தும் அவருக்கு நன்கு பரிச்சயம். சென்னையின் எந்தத் திசையிலிருந்தும் வீட்டிற்கு வர வழித் தெரியும். வள்ளிக்கு வீட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விரும்பினாலும் அதை நிறைவேற்றிக் கொள்ள அவரிடம் நேரம் இருக்கவில்லை. அவரது பொழுதுகள் எல்லாம் வீட்டு நிர்வாகத்தில் கழிந்தன. தொட்டியத்திற்கு தனியாகப் போய் பழக்கப்பட்டவர், சென்னையில் தனியாக வீட்டு வாசப்படியைக் கூட தாண்டியதில்லை. கணவன் இல்லை மகனோடு தான் வெளியே செல்வார். அதுவும் கோவில், மார்கெட் போன்ற இடங்களுக்கு தான். இதுவரை அவர்கள் நால்வரும் சேர்ந்து குடும்பமாக எங்கேயும் சென்றதில்லை

உதயன், சவீதா இருவரும் சேர்ந்து விடுமுறையில் இருப்பதே அரிது. அப்படி ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் அன்றைக்கு வீட்டிலேயே இருக்க மாட்டார்கள் இருவரும். அன்று வீட்டு வேலையிலிருந்து வள்ளிக்கு விடுமுறை அளிக்க வெளியிலிருந்து உணவு ஆர்டர் செய்து விடுவான் உதயன். அதை வாங்குவது, சரி பார்ப்பது. உணவு வரத் தாமதமானால் அந்த இலக்கிற்கு அழைத்து எங்கே இருக்கிறான் என்று விசாரிப்பது என்று சகலமும் செய்வது ஆறுமுகம் தான். சொந்த வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்து ஆறுமுகத்தின் உதவியை அதிகமாக நாடினான் உதயன். சில வேலைகளை அவரின் பொறுப்பில் விட்டிருந்தான். அவருடைய பணமும் உதயனின் புது வீட்டில் போட்டிருந்ததால் கொடுத்த வேலைகளைப் பொறுப்பாக செய்து முடித்தார் ஆறுமுகம்அந்த வழக்கத்தில் தான் சமையல் சாமானை புது வீட்டில் சேர்ப்பிக்கும் பொறுப்பை அவனுடைய அப்பாவிடம் ஒப்படைத்திருந்தான் உதயன்.  

ஓர் ஆட்டோவில் அத்துணையும் வந்து விடுமென்பது அவனது எண்ணம். சமையல் செய்பவர் கொடுத்த லிஸ்ட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்தது சவீதா. வீட்டில் டெலிவரி எடுத்தது அவனுடைய தந்தை. ஒரு ட்ரிப்பில் சாமானைக் கொண்டு செல்ல முடியாது இரண்டு டிர்ப் அடிக்க வேண்டும் என்று டெம்போவிற்கான கூலியைக் கேட்டனர் ஆட்டோகாரர்கள். பெரிய வண்டி எங்கே கிடைக்குமென்று எப்படி ஏற்பாடு செய்ய வேண்டுமென்று ஆறுமுகத்திற்குத் தெரியவில்லை. சரக்கு போக்குவரத்து தொழிலில் ஆதவன் இருப்பதால் அவனது உதவியை நாடினார் ஆறுமுகம்

இப்போதும் அதே போல் அவனுக்கு தெரிந்தவர்களிடம் காருக்கு ஏற்பாடு செய்வான் ஆதவன் என்று நினைத்து தான் அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். ஆதவனின் அமைதி அவரை யோசனையில் ஆழ்த்தியது. மூத்தவனிடம் ஏதோ சரியில்லை என்று சரியாக கண்டு பிடித்தவர் அப்போதே அவனைத் தனியாக அழைத்துச் சென்று என்ன, ஏதுயென்று விசாரித்திருக்கலாம். ஏதுவாக இருந்தாலும் விழா முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாமென்று மனைவியைப் போலவே யோசித்து, உதயனின் கிருஹப்பிரவேசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்

சில நிமிடங்கள் கழித்து,வேறு வழியில்லாமல், பூஜையில் அமர்ந்திருந்த உதயனை கைப்பேசியில் அழைத்து, அவன் அனுப்பி வைத்த வண்டி இன்னமும் வந்து சேரவில்லை என்று சொல்ல, அவன் அதற்குப் பதில் சொல்ல.”பத்து நிமிஷமா? எவ்வளவு பத்து நிமிஷம்..மொத்தமா இப்போவே சொல்லிடு.” என்று அவர் சிடுசிடுக்க, அதற்கு உதயன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை அதைக் கேட்டு கோபமடைந்த ஆறுமுகம்,

ஆட்டோகாரங்களை தான் கேட்டேன்..இரண்டு தரம் போகணு டெம்போக்க் கொடுக்கறதை கொடுங்கண்ணு கேட்டாங்க.. அதான் ஆதவன்கிட்டே ஏற்பாடு செய்யச் சொன்னேன்..ஆள் யார்னு எனக்கு தெரியாதுஆதவனுக்கு தெரிஞ்சவங்க.” என்று பதில் அளித்தார். அவன் பெயர் அடிபட, தலையை உயர்த்தி ஆறுமுகத்தைப் பார்த்தான் ஆதவன். ஆறுமுகத்திடம் ஆறு முகத்திற்கான கலவரம்.

எந்தப் பக்கம் டா? நீ பார்த்தேயா? ” என்று உதயனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். சில நொடிகள் கழித்து,”இராத்திரி நேரம்..நம்ம சுவர்லே இன்னும் விளக்கு பொருத்தலை..தெரு விளக்கும் கிடையாது..அதான் இருட்டிலே இடிச்சிருக்கும்..விடு.” என்றார். ஆனால் உதயன் விடுவதாக இல்லை. அது புரிந்து போக, நேரில் பேசிக் கொள்ளலாமென்று எண்ணி அழைப்பைத் துண்டித்து விட்ட ஆறுமுகம் அவரெதிரே அமர்ந்திருந்த மூத்த மகனிடமாவது நடந்ததைப் பற்றி விசாரித்திருக்கலாம். இப்போதும் கிருஹப்பிரவேச விழா தான் அவருக்கு முதன்மையாகத் தெரிந்தது. இது போன்ற செயல்களால் தான் அண்ணன் தம்பி என்ற உறவை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்த பெற்றோர்களே பங்காளி, பகையாளியாக அவர்களின் பிள்ளைகள் உணரக் காரணமாகி விடுகிறார்கள்.

நடுத்தரவர்க்கதினர் சொந்த வீடு கட்டி குடியேறுவது என்பது ஒரு பகீரதப் பிரயத்தனத்தின் பலனில்லை பல பகீரப் பிரயத்தனங்களின் பலன். வீடு கட்ட துவங்கும் போது வரவேற்பறையில் மர ஊஞ்சல், சாமி அறை, பெரிய சமையல் அறை, தோட்டம் என்று ஆரம்பிக்கும் அழகான கனவுகள் காலப் போக்கில் சிமெண்ட் மூட்டை, ஒரு வண்டி தண்ணீர், முழு லோட மணல், ஜல்லி என்று மாறிப் போகும். வழக்கமாகச் செய்யும் செலவுகள் கூட விரயமானதாகத் தெரியும். மூச்சு விட முடியாதபடி செலவுகளை இறுகிப் பிடித்து சேமித்தாலும் அர்ஜண்ட்டில் அரை லிட்டர் பெயிண்டிற்கான பணம் கூட கையில் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் பெற்றவர்களின் பங்கை வாங்கி அவனது வீட்டில் போட்டிருந்தான் உதயன்

Advertisement