Advertisement

அத்தியாயம் – 4

வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்த ஆறுமுகம் அவரது கைப்பேசியைப் பார்த்தபடி,“என்ன டா அப்போவே அனுப்பி வைக்கறேன்னு உதயன் சொன்னான்..இன்னும் வண்டியைக் காணும்..பரிசுப் பொருளையெல்லாம் ஏத்திட்டுப் போகணும்….ஏற்கனவே பூஜைக்கு லேட்டாகிடுச்சே டா.” என்றார்.

வாசல் கதவருகே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஆதவனிடமிருந்து அதற்கு பதில் வரவில்லைஅவனருகே நின்றபடி  ஜன்னல் வழியாக சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி. அவள் காலடியில் அவர்களின் பை இருந்தது. நேற்றைய நிகழ்வுகள் அவர்களைப் புத்திசாலியாக மாற்றியிருந்தன. கணவன் மனைவி இருவரும் அவர்களையும் அவர்களின் பையையும் கண் பார்வையிலேயே வைத்திருந்தார்கள். வெளிர் நீல நிறத்தில் சன்னமாக கறுப்பு கட்டம் போட்ட முழுக்கைச் சட்டை, அதே வெளிர் நீலத்தில் பார்டர் போட்ட ஃபேன்ஸி வேஷ்டியில் தம்பியின் புதுமனை புகுவிழாவிற்குத் தயாராகி இருந்தான் ஆதவன். அவனது சட்டையும் வேஷ்டியும் சில இடங்களில் கசங்கியிருந்தாலும் அவனது தோற்றம் மதிப்பாக தான் இருந்தது. அருந்ததியின் மாம்பழ நிறக் கிரேப் சில்க் சேலையின் பிங்க முந்தானை வெகுவாகக் கசங்கியிருந்தது. அதை மறைக்க அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை

சவீதாவைப் போல் சேலைக்கு ஏற்றார் போல் கழுத்து, காது, கைகளில் மேட்சிங்காக எதையும் அணிந்திருக்கவில்லை. அவள் பின்னலில் பூ கூட இல்லை. தொடர்ந்து இரண்டு இரவுகள் உறக்கம் சரியாக இல்லாததால் அவளது முகமும் சோர்ந்து இருக்க, விசேஷத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பியவள் போல் இருந்தது அவளது தோற்றம். நல்லவேளை சற்றுமுன் அவளுடைய கணவன் வாங்கி வந்த டீ, வாழைப்பழம் உபயத்தில் சிறிது தெம்பாக உணர்ந்ததால் தான் ஜன்னல் கம்பியைப் பற்றியபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள் இல்லையென்றால் எப்போதோ மூலையில் சுருண்டு படுத்திருப்பாள்

முதல் நாள் மதியத்திலிருந்து உணவு அருந்தாததால் மனைவியை விட மோசமான நிலையில் இருந்தான் ஆதவன். பசியில் வயிற் வலிக்க ஆரம்பித்திருந்தது. அவனுடைய அப்பாவின் உதவியை நாடாமல் தானாகவே டீ கடையைத் தேடி சென்றான். ஒரு பாலிதீன் கவரில் மூன்று பேருக்கும் டீ வாங்கியவன் டிஃபன் ஐட்டம் ஏதாவது கிடைக்குமா என்று தேட எதுவும் தயாராக இல்லை. அந்த நேரத்தில் கடை திறந்திருந்ததே பெரிய விஷயம் என்பதால் டீயுடன் ஒரு டஜன் வாழைப்பழத்தை வாங்கிக் கொண்டு வந்தான். அந்த டீயும் வாழைப்பழமும் வயிற்றினுள் போய் முக்கால்மணி நேரத்திற்கு மேலாகியிருந்தது. அவர்களை அழைத்துச் செல்ல வேண்டிய வண்டி இன்னமும் வந்தபாடில்லை

இன்றைய பொழுது உதயன், சவீதா திட்டமிட்டபடி ஆரம்பிக்கவில்லை. இனி எப்படியோ என்ற கவலை, பயத்தில் தான் ஆதவனிடம் ஆறுதலைத் தேடினார் ஆறுமுகம்.

விடிவதற்கு முன்பே வீட்டில் கரெண்ட் போய் விட்டதால் விவகாரமாய் விடிந்தது அந்தத் தினம். காப்பி கூட குடிக்க நேரமில்லாமல் அவசரமாகக் கிளம்பிப் போயினர் அனைவரும். மின்வெட்டு ஏற்பட்டிருந்தாலும் இன்வர்ட்டரின் உபயத்தில் மின்விசிறியும் மின்விளக்கும் செயல்பட்டதால் இருட்டில் தடுமாற வேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்படவில்லை. ஒவ்வொருத்தராக பாத்ரூமை உபயோகிக்க, குழாயில் தண்ணீர் வரவு குறைந்த போக, உதயனுள் ஆபாய மணி ஒலித்தது, சூழ்நிலையின் விபரீதம் அவனைத் தாக்கியது.

அந்தக் குடியிருப்பில் இரண்டு தண்ணீர்த் தொட்டிகள் இருந்தன. ஒரு தொட்டியின் வால்வ்  எப்போதும் முடியே இருக்கும். அவசரக் காலத்தில் உபயோகிப்பதற்காக அந்தத் தொட்டியைக் அமைத்திருந்தனர். அந்த தொட்டியோடு இணைக்கப் பட்டிருந்த குழாய ஒவ்வொரு வீட்டின் சமையலறையில் மட்டும் இருந்தது . இன்னொரு தொட்டி தினசரி உபயோகத்திற்கு. அதிலிருந்து வந்த தண்ணீர் தான் சகல இடத்திலும் கிடைத்தது. கீழே பார்க்கிங்க அமைக்கப்பட்டு இருந்த சம்ப்பிலிருந்து அந்தத் தொட்டிக்கு தண்ணீரை ஏற்ற தினமும் காலையில் ஆறு மணிக்கு மோட்டரை இயக்குவது வாட்ச்மேனின் வேலை. மேல் தொட்டியில் தண்ணீர் அளவு குறைந்து விட்டது என்று உணர்ந்த உதயனுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. ஐந்து மணிக்கு அவனது புது வீட்டில் அவன் இருக்க வேண்டும். அவசரக்கால டேங்கின் வால்வைத் திறக்க கமிட்டியின் ஒப்புதல் தேவை. விடிவதற்கு முன்பு கமிட்டியைக் கூட்டுவது இயலாத காரியமென்பதால் செயலாளருக்கு ஃபோன் செய்தான் உதயன். அந்த முயற்சி தோல்வியில் முடிய எக்கசக்கமாகப் கோபமடைந்தாள் சவீதா.

இந்த மாதிரி பிரச்சனைக்கு தான் சொந்தமா வீடு இருக்கணும்னு சொன்னேன்..இந்த வயசிலே சொந்த வீடான்னு கேட்டவங்களுக்கு இப்போ பதில் கிடைச்சிருக்கும்.” என்று மறைமுகமாக விருந்தினர்களைத் தாக்க, அதுவரை பேசிக் கொண்டிருந்த அத்தனை பேரும் கப்சிப். யாரையும் அழைக்காமல் கிருஹப்பிரவேசம் செய்தால் அவளது அந்தஸ்து உயர்ந்ததைப் பற்றி எப்படி மற்றவர்களுக்கு தெரிய வரும். எனவே தான் அவளுடைய உறவினர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உதயனின் உறவினர்களில் சிலர் என்று கிட்டதட்ட நூறு பேருக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.

அனைவரும் அமைதியாகிப் போக,”ஒவ்வொரு மூலைக்கு ஒரு போர் வெல் போட்டுக் காட்டறேன்..மாசா மாசம் முழுசா மெயிண்டனன்ஸை வாங்கிக்கிட்டு நமக்காக எதுவும் செய்ய மாட்டோம்னு சட்டமா சொல்றாங்க..இந்த மாதிரி ஓர் அவசரத்துக்கு தானே இன்னொரு தொட்டி வைச்சிருக்கு..அதைத் திறந்து விட்டா என்ன? ஏழு மணி வரை கரெண்ட் வரலைன்னா என்ன செய்வாங்க? பாத் ரூம் போகாம இருப்பாங்களா எல்லோரும்?.” என்று கோபத்தில் கத்தித் தீர்த்தாள் சவீதா. அவளது கோபத்தில் நியாயம் இருந்தாலும் அதை வாய் விட்டுச் சொல்லி அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள அவளுடைய அம்மா கூட தயாராக இல்லை.

அந்த இக்கட்டைச் சமாளிக்க ஓர் உடனடி தீர்வோடு வந்தார் வள்ளி. அதன்படி ஒரு பக்கெட் தண்ணீரில் உதயன், சவீதா இருவர் மட்டும் குளித்துத் தயாராகி புது வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்று அரை மணி நேரம் கடந்த பின்னும் மின்சாரம் வருவதற்கான அறிகுறி இல்லாததால் டாக்ஸியை வரவழைத்து அவருடைய வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்று விட்டார் சவீதாவின் தாயார். அவருடன் விருந்தாளிகளில் சிலரை அழைத்துச் சென்றிருக்கலாம் ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஏன் வள்ளியைக் கூட அழைத்துச் செல்லவில்லை.

 ‘எங்க வீட்டுக்குப் போயிட்டு அங்கேயிருந்து எல்லோரட சேர்ந்து நேரே புது வீட்டுக்கு வந்திடறேன்.’ என்று தகவல் சொல்லி விட்டு சென்று விட்டார்.

இங்கே கரெண்ட் எப்போ வருமோ? உங்களையாவது கூட அழைச்சிட்டுப் போயிருக்கலாம் அக்கா..நாங்க எப்போ கிளம்பினா என்ன..நீங்க சரியான நேரத்துக்குப் புறப்படணுமில்லே..நீங்க இல்லாம இருந்தா நல்லா இருக்குமா? உங்க சம்மந்தியம்மா செய்தது சரியில்லை.’ என்று கரெண்ட்டை காரணமாகக் காட்டி சரியாகப் பற்ற வைத்தனர் சிலர்

வள்ளிக்கும் சம்மந்தி அம்மாவின் செய்கை பிடிக்கவில்லை. ‘நான் அங்கே இருக்கறது முக்கியமா? இல்லை அவங்க இருக்கறது முக்கியமா?’ என்று எட்டிக்கு போட்டியாக யோசிக்க ஆரம்பித்தார். அவர் இல்லாமல் பூஜையை ஆரம்பிக்க வேண்டாமென்று சொல்ல ஆசையாக தான் இருந்தது. மகன் வீட்டில் அவரும் பணம் போட்டிருக்கிறார் அல்லவா. ஆனால் அப்படிச் சொல்ல முடியவில்லை. அவர் முக்கியம் என்றாலும் அவரை விட முக்கியமானது பூஜைக்காக குறித்துக் கொடுத்திருந்த நல்ல நேரம் தானே. எனவே,

இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா ஏன் உங்களையெல்லாம் இங்கே கூப்பிடப் போறேன்..முகவரியைப் பகிர்ந்துகிட்டு எல்லோரும் தானா வந்து சேருங்கண்ணு சொல்லியிருப்பேனே..தூரத்திலே இருக்கீங்க கஷ்டப்பட வேணாம்னு சொல்லி தான் இங்கே வர வழைச்சேன்..இப்போ இப்படி ஆகிப் போச்சு..நான் போகிறது கூட முக்கியமில்லை..நல்ல நேரத்தை தவற விடக் கூடாது..அதுதான் முக்கியம்..அதான் உதயன், சவீதாவை அனுப்பி வைச்சிட்டேன்..அவங்க பூஜையை ஆரம்பிக்கட்டும்..தண்ணீர் வந்த பிறகு நாம எல்லோரும் கிளம்பலாம்.” என்று அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பிறகு யாரும் வாயைத் திறக்கவில்லை. இன்வர்டரில் மின்விசறி ஓடினாலும் காற்றைக் காணவில்லை. காற்றைக் கண்டுபிடிக்க வாசலுக்குச் சென்றனர் சிலர். அங்கே வெளியே அமர்ந்திருந்தவர்களோடு பேசியபடி மின்சாரம் வருவதற்காகக் காத்திருக்க ஆரம்பித்தனர்

அவருக்கும் சாதகமாக அந்தப் பிரச்சனையை தீர்க்க வள்ளிக்கு வழி கிடைக்கவில்லை. சொந்த ஊராக இருந்திருந்தால் அக்கம் பக்கத்து வீட்டினரை எழுப்பி அவர்கள் வீட்டில் குளித்து, அவர்கள் கையால் காப்பி போட்டுக் குடித்து விட்டுப் புறப்பட்டு இருப்பார். இங்கே யாருடனும் பழக்கமே இல்லை. இன்று எல்லோர் வீட்டிலும் இதே கதி தான் என்பதால் அமைதியாக அமர்ந்திருந்தார். நல்லவேளை அவரது பொறுமையை அதிகமாகச் சோதிக்காமல் சவீதாயின் அன்னை சென்ற கால்மணி நேரத்தில் மின்சாரம் வந்துவிட, உடனே கணவரைக் கீழே அனுப்பி வாட்ச்மேனை எழுப்பி மோட்டரை இயக்க வைத்தார் வள்ளிபத்து நிமிடத்தில் அனைத்துக் குழாயிலும் ழுழு வேகத்துடன் தண்ணீர் வர ஆரம்பிக்க, ஒருவர் மாற்றி ஒருவர் குளித்துத் தயாராகினர்

இத்தனை களேபரத்திலும் அவன் அமர்ந்திருந்த படிக்கட்டை விட்டு அகலவில்லை ஆதவன். வரவேற்பறையின் சுவரில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடி உறங்க முயன்று கொண்டிருந்தாள் அருந்ததி. அவளை எழுப்பி விருந்தினர்களுக்குக் காப்பி போடச் சொல்லாமென்று நினைத்து அவளருகே சென்ற வள்ளி கடைசி நொடியில் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். காப்பி குடித்து விட்டுப் புறப்பட எப்படியும் அரைமணி நேரம் ஆகும் என்பதால் காப்பி என்று யாரும் கேட்கும் முன் அனைவரையும் காருக்கு அழைத்துச் சென்று விட்டார்.

Advertisement