Advertisement

அத்தியாயம் – 3

திருமணம் என்னும் நிகழ்வு விச்சிதிரமானது. சிலரின் லாபக் கணக்கின் ஆரம்பம். மீள முடியாத நஷ்டத்தில் தள்ளப்படுகிறார்கள் சிலர். சிலருக்கு அடக்குமுறையிலிருந்து விடுதலை. சிலருக்கு ஆயுள் சிறை. சுயத்தை இழக்கிறார்கள் சிலர். மீட்டெடுக்கிறார்கள் சிலர். சில சமயங்களில் சுயமரியாதையானது தலை நிமிர்ந்து நிற்கிறது. சில சமயங்களில் இருந்த இடம் தெரியாமல் மாயமாக மறைந்து போகிறது. மொதத்தில் ஆண், பெண் இருவரின் வாழ்க்கையில் அதுவரை அவர்கள் பின்பற்றி வந்த விதிகள், கொள்கைகள், நியாயங்களை உடைத்து புதிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வல்லமை படைத்தது திருமணம்.

ஆதவன், உதயன் இருவரும் வள்ளியின் மகன்கள். சகோதரர்கள். ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள். அது தான் அவர்களுக்கிடையே இருந்த ஒற்றுமை. சவீதா, அருந்ததி இருவரும் வள்ளியின் மருமகள்கள். அது மட்டும் தான் அவர்களிடையே இருக்கும் ஒரே ஒற்றுமை. இருவருமே சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வெவ்வேறு பின்னணியை சேர்ந்தவர்கள்ஆதவன், அருந்ததி திருமணம் நடந்திருக்காவிட்டால் சவீதா, அருந்ததியின் சந்திப்பு நிகழ்ந்திருக்காது. அவர்களுக்குள் உறவு என்று ஒன்று ஏற்பட்டிருக்காது. இருவரும் குணத்தில் இரு துருவங்கள். ஓரிடத்தில் இணைந்து இருக்க முடியாது, இழுத்துப் பிடித்து வைக்க முடியாது.

நகரத்தில் வாழந்து கொண்டிருந்தாலும் கிராமத்தில் வசிக்கும் ஆதவனுடன் மனப்பூர்வமாக அவளுடைய வாழ்வை இணைத்துக் கொண்டாள் அருந்ததி. திருமணத்திற்கு முன்பும் சரி அதன் பின்பும் சரி ஒருபோதும் அவனை, அவனது வாழ்க்கை முறையைக் கீழாக எண்ணியதில்லை. மாறாக முடிந்தளவு அவளை அதில் பொருத்திக் கொள்ள அவளாலான முயற்சிகளை செய்தாள்

கிராமத்தான் என்று உதயனைக் கீழாகப் பார்த்த சவீதாவின் எண்ணத்தை மாற்றியது அவளைப் போலவே புது அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள அவனிடம் தெரிந்த ஆர்வம். வெறிஅவனின் முந்தைய அடையாளத்தை களைந்து சென்னைவாசி என்ற புது அடையாளத்தை அவனதாக்கிக் கொண்டவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது சவீதாவுக்கு. அவளும் சென்னையை சேர்ந்தவள் தானென்றாலும் விடுதியில் தங்கி வேலைக்குச் சென்று வந்தாள். அவளது வீட்டு முகவரியை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. காரணம் அது ஒரு சிலுவை.  

சென்னையின் ஒவ்வொரு ஏரியாவிற்கும் தனி தனி அந்தஸ்த்து, அங்கீகாரம் இருக்கிறது. சில முகவரிகள் முகத்தில் மலர்ச்சியை வரவழைக்கும். சிலது முகச் சுளிப்பை ஏற்படுத்தும். சென்னையில் பிறந்து வளர்ந்தகளுக்கு தான் வட சென்னை, தென் சென்னைவாசிகளுக்கு இடையே இருக்கும் பாகுபாடு புரியும். அடுத்தடுத்து இருந்தாலும் மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிப்பவர்கள் இடையே இருக்கும் வித்தியாசம் விளங்கும். சைதாப்பேட்டைக்கும் சௌக்கார் பேட்டைக்கும் சம்மந்தமேயில்லை என்று புரியும். கிழக்கு அண்ணா நகருக்கும் மேற்கு அண்ணா நகருக்கும் இடையே இருக்கும் இடைவெளி. கடலளவு, கடக்க முடியாதது என்று சத்தியம் செய்ய முடியும்.

சவீதா, உதயன் இருவரும் அவர்களின் பின்னணியைத் தூக்கி எறிந்து விட்டு  புது பின்கோட் மூலம் புது அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள பாடுபடும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் நோக்கத்தில் தவறெதுமில்லை ஆனால் அதைச் சாதிக்க இந்த இருவர் பயணம் செய்த பாதை தான் தவறாகிப் போனது. அதற்கு அவர்களின் பெற்றோர்களும் ஒரு காரணம். மூத்த மருமகளை உதாசீனப்படுத்திய சின்ன மருமகளை வள்ளி கண்டிக்கவில்லை. அவளுக்கு பின்னே திருமணமாகி வந்திருந்தாலும் அவள் தான் மூத்தவள், மரியாதை கொடுக்க வேண்டும் என்று சவீதாவின் அன்னையும் அவளுக்கு அறிவுரை அளிக்கவில்லை

எனவே, பூவைத் தொடுக்க ஆள் கிடைத்தவுடன் தடைப்பட்ட தூக்கத்தை தொடர அவளது அறைக்குச் சென்று விட்டாள் சவீதா. ‘இந்த நேரத்தில் ஆதவனால் எங்கே போக முடியும்? வாசலில் தான் அமர்ந்திருப்பான்என்று எண்ணியதால் ஆதவனைத் தேடிச் செல்லாமல் மனைவியைத் தொடர்ந்து சென்று விட்டான் உதயன்.

கணவன் அருகே அமர்ந்திருந்த அருந்ததியின் மனது படபடத்து கொண்டிருந்தது. கணவனை அவமதித்த உதயனின் சட்டையைப் பிடிக்கும் அளவிற்கு அவளுள் ஆத்திரம் பொங்கிக் எழுந்தது. கஷ்டப்பட்டு அந்த உணர்வை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவனுக்காக தான் மனைவி வருந்துகிறாளென்று உணராமல் சவீதாவின் வார்த்தைக்காக வருந்துகிறாளென்று நினைத்து அவளது கையை அழுத்தமாகப் பற்றி ஆறுதல் அளித்தான் ஆதவன். அடுத்த சில நிமிடங்களில் அமைதியில் கழிய, கணவன், மனைவி இருவருக்கும் அடுத்து என்ன என்று புரியவில்லை. படியில் அவன் உட்கார்ந்திருந்ததை விட அவனுடன் அருந்ததியும் உட்கார்ந்திருந்தது ஆதவனின் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருந்தது

அவனது பையின் கதியைப் பார்த்தவுடன் அவனுக்காக எந்த ஏற்பாடு செய்யப்படவில்லை என்று புரிந்து போக, பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான். வாசலில், நாற்காலியில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்த உறவினர்கள் போல் அவனும் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாமென்று தான் நினைத்தான். ஆனால் உதயன் அவனைப் பேசியது அதன் பின் அருந்ததியைச் சவீதா பேசியது, இரண்டையும் கேட்டு கீழே செல்லும் படிக்கட்டுக்களை நோக்கி அவனது கால்கள் தானாக சென்றன. இரண்டு படிகள் இறங்கிய பின் தான் வீட்டினுள்ளே அருந்ததி இருப்பதை உணர்ந்து, கஷ்டப்பட்டு அவனது கால்களை மேல் மாடி நோக்கித் திருப்பினான் ஆதவன். மேலே சென்ற மாடிப்படிகளில் அவன் அமர்ந்த சில நொடிகளில் அருந்ததியும் அவனருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் முன் நடந்த அனைத்தும் தினமும் நடக்கும் விஷயம் போல் அருந்ததி தொடுத்து வைத்திருந்த பூவை ஈரத் துணியில் சுற்றி ஃப்ரிஜில் இடம் தேடி வைத்துக் கொண்டிருந்தார் வள்ளி

பூவைத் தொடுக்க ஆரம்பித்திருந்த பெண்மணி,”ஆத்தா எப்படி இருக்குது அண்ணி?” என்று பூவோடு வம்பையும் சேர்த்து தொடுக்க ஆரம்பித்தார்.

இருக்குது..இப்போவோ அப்பவோன்னு.” என்று பதிலளித்தார் வள்ளி.

இதே பதிலை தான் மூணு வருஷம் முன்னாடி உதயன் கல்யாணம் போது சொன்னீங்க..மூணு மாசம் முன்னாடி ஆதவன் கல்யாணம் போது சொன்னீங்க..இப்போவும் சொல்றீங்க.” என்றார் அந்தப் பெண்மணி.

என்கிட்டே அவங்க சொன்னதை தானே நான் சொல்ல முடியும்..நான் எங்கே நேர்லே போய் பார்த்தேன்..இங்கே உதயனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் வேலை நேரம்னு ஒண்ணு கிடையவே கிடையாது..ராத்திரி, பகல்ன்னு மாறி மாறி வேலைக்குப் போகறாங்கதூக்கம், சாப்பாடு எல்லாம் பார்த்து பார்த்து சொல்றது செய்யறது நான் தான்..நான் இல்லைன்னா இங்கே ஒண்ணும் ஓடாது..என்னை பெத்தவ உயிரோட இருந்தும் பிறந்த வீட்லே சீராடற பாக்கியம் எனக்கில்லை.” என்று ஆதங்கம், பெருமை இரண்டும் கலந்து இருந்தது வள்ளியின் பதிலில்.

ரொம்ப சரியா சொன்னீங்க.அறுபதாம் கல்யாணம் ஆன பிறகும் அக்கா, தங்கையைத் தாங்கற அண்ணன் தம்பி கிடைக்கறது வரம்.” என்று சொல்லி விட்டு அமைதியாகப் பூவைக் கட்டினார் அந்தப் பெண்மணி.

உங்க அண்ணன் மக எல்லாத்துக்கும் வந்திட்டு தானே இருக்கா?” என்றார் டி வி பார்த்துக் கொண்டிருந்தவர். அப்படியே,”நாளைக்கு வருவா தானே வள்ளி அக்கா?” என்று விசாரித்தார்.

அண்ணன் மகளை அழக்கவில்லை. ஆதவனை அழைக்கவே பிரச்சனை செய்தான் உதயன் என்று சவீதாவின் அன்னையின் முன்னால் சொல்ல விரும்பவில்லை வள்ளி. எனவே,

ஃபோன்லே பேசினேன்..அவ புருஷன் ஷிஃப்ட்லே வேலை செய்யறவன்..வர வசதிப்படாது..அவ இருக்கறது மணலி அங்கேயிருந்து இங்கே தனியா வந்து போகறது கஷ்டம்..இன்னொரு நாள் எல்லாரும் வரோம்னு சொல்லிட்டா.” என்று பொய் சொன்னார் வள்ளி.

நம்ம ஜனத்திலே சொந்தமா சென்னைலே மொத மொத உதயன் தான் வீடு கட்டியிருக்கான்..வீட்டுக்குப் பெரியவங்க ஆயா..இவன் போய் அழைச்சிட்டு வந்திருக்கலாம்.ஒரு நாள் தானேநாமெல்லாம் இருக்கறோமே பார்த்துக்க மாட்டோமா.” என்றார் முதலில் பேசியவர்.

அவர் சொன்னதில் முதல் பாதியைப் பிடித்துக் கொண்ட வள்ளி,“கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் ஆகிடுச்சு..ஃபோன்லேயே தொழில் செய்யறவன், பக்கத்திலே இருக்கறவன் ஆயாகிட்டே ஆசிர்வாதம் வாங்க நேரமில்லைன்னு சொல்றான். இங்கே .சென்னைலே ஏழு நாளும் ஆபிஸுக்கு போய் வேலை பார்க்கறவனுக்கு தொட்டியம் போக எங்கே நேரம் கிடைக்கும்.” என்று எப்போதும் போல் ஆதவனை வெட்டி ஆளாக உதயனை பெரிய ஆபிஸர் போல் சித்தரித்தார் வள்ளி.

Advertisement